சனி, 10 டிசம்பர், 2022

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்!

இன்று (10/Dec/2022) தொல்லியல் ஆய்வாளர் முனைவர் திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரை ஒன்று மெய்நிகராகப் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது. இதனை ஏற்பாடு செய்த FETNA அமைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

FETNA
களப்பிரர் காலம் இருண்ட காலமா? என்ற கேள்விக்கு, யார் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை உணரவேண்டும் என்று அவர் கூறியதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பிள்ளையார்பட்டியில் ஒரு குடவரை கோயில் இருக்கிறது அது முழுமைபெறாமல் உள்ளது என்றும் அங்கே மலையில் ஒரு பிள்ளையார் செதுக்கப்பட்டு அதன் கீழ் அதனைச் செதுக்கியவர் 'எக்காட்டூருக்கோன் பெருந்தசன்' என்று கல்வெட்டு காணப்படுவதாகவும் கூறுகிறார். அந்த எழுத்தின் காலம் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு என்று  ஆதாரத்துடன் விளக்குகிறார். இன்று பிள்ளையார்பட்டியில் வணங்கப்படும் பிள்ளையாரும்  எக்காட்டூருக்கொண் பெருந்தசனால் செதுக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லவா? என்பது எனது ஐயம். பிள்ளையார்பட்டி, நகரத்தார்களின் ஒன்பது கோயில்களில் ஒன்றானது என்பது யாவரும் அறிந்ததே. களப்பிரர்கள் மலையில் பிள்ளையரைச் செதுக்கியபோது அதைக் கடவுளாகச் செதுக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. களப்பிரர்கள் சைவத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். பின்னர் ஏன் அதைச் செதுக்கினார்கள்? என்ற கேள்விக்கு, களப்பிரர்கள் தங்களின் அடையாளமாகவே செதுக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியனுக்கு மீன், சோழனுக்குப் புலி அதுபோல் களப்பிரர்களுக்கு யானைக்குட்டி என்பது திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையிலிருந்து அறிகிறேன். மேலும், களப்பிரர்கள் காலத்து நாணயங்களின் ஒரு புறம், வலப்பக்கம் நோக்கி நிற்கும் யானைச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

from worldtamilforum com

'களபிர' என்ற சொல்லுக்கு 'யானைக்குட்டி' என்ற பொருள் என்பதை அவர் உரையிலிருந்து அறிகிறேன். பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர். கோயில் சிலைகள் பொதுவாகக் கிழக்கு நோக்கி இருக்கும் ஆனால் பிள்ளையார்பட்டி விநாயகர் வடக்கு நோக்கி இருந்தவண்ணம் இருக்கிறது. இதிலிருந்தே களப்பிரர்கள் அவர்களின் அடையாளமான ஒரு யானைச் சின்னத்தையே அங்கே செதுக்கியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் பௌத்த மதத்தை அழித்து சைவத்தை தழைக்கச் செய்தவர்கள் பிள்ளையார்பட்டியில் சிவலிங்கத்தை வைத்திருக்கவேண்டும்.

நகரத்தார்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் பிள்ளையாரைத் தொழுது செயலைத் தொடங்குவது அறிந்த ஒன்று. மேலும் எந்த சமூகமும் கொண்டாடாத ஒரு வழிபாட்டை நகரத்தார்கள் மட்டுமே கடைபிடித்து வருகிறார்கள் என்றால் அது பிள்ளையார் நோன்பு.

Thanks Google
களப்பிரர்கள் காலத்தில் பௌத்தமும் சமணமும் தழைத்திருந்தது. பிள்ளையாருக்கு குண்டு வயிறு பெரிய காதுகள் ஆங்கிலத்தில் Laughing Buddha என்று பௌத்தம் வடிவமைத்த சிரிக்கும் புத்தருக்கும் குண்டு வயிறு பெரிய காதுகள். இந்தத் தொடர்பையும் பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்ததற்கான அடையாளமாகக் காண்கிறேன். 

பூலாங்குறிச்சிக் கல்வெட்டு வைதீகர்களிடமிருந்து சொத்துக்களை விற்று களப்பிரர்களின் கோயிலுக்குத் திருப்பியதாகச் சொல்கிறது. அதாவது மன்னர்களிடமிருந்து வைதீர்கள் பெற்ற சொத்துக்களை, களப்பிரர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் வைதீகர்களிடமிருந்து திருப்பியதாகச் சொல்கிறார் நான் இதை மேலும் ஒருமுறை கெட்டுப் புரிந்துகொண்டேன். பூலாங்குறிச்சி நகரத்தார்கள் ஊர்களில் ஒன்று.

திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையில், களப்பிரர் காலத்தில் ஐயனாரை வணங்கியதையும், 'சாத்தன்' என்கிற பெயரையும் குறிப்பிடுவதைக் காண்கிறேன். நகரத்தார்கள் தமது குலதெய்வங்களாக ஐயனாரை வணங்குவது வழக்கம், மேலும் சில நகரத்தார்கள் தங்கள் குலதெய்வம் 'சாத்தையனார்' என்று கூறுவதைக் காணலாம்.

ஐயனாரை வணங்கியதுடன் பிடாரி (அம்மன்) யையும் வணங்கியதாகக் குறிப்பிடுகிறார். அம்மனுக்கு கோயில் எழுப்பி அதனைச்சுற்றி ஊர் அமைக்கும்பொழுது, அதை அம்மனுக்கு தானம் வழங்கியதாகக் குறிப்பிட்டு 'மங்கலம்' என்று குறிப்பிடுவதாகக் கூறுகிறார். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகர் குழு தானம் வழங்கியது ஐந்நூற்றுவர் மங்கலம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறார். நகரத்தார்களின் மாத்தூர் கோயிலில் உள்ள சிவனுக்கு ஐநூற்றீசுவரர் என்ற பெயர். 

wiki

'காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்' என்கிறது ஒரு விக்கிப்பீடியா பதிவு. நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்ததும் முருகனைத் தங்களின் குலதெய்வமாக வணங்கி வருவதும் யாவரும் அறிந்ததே.

களப்பிரர்கள் கடல் வணிகம் செய்தவர்கள். இன்று நாம் அதைத்தான் நகரத்தார்கள் கடல் வழி வணிகம் செய்தவர்கள் எனச்சொல்கிறோமோ?  . 

கண்ணகியும் கோவலனும் நகரத்தார் என்று கூறுகிறோம். அவர்கள் வாழ்ந்த இடம் காவேரிப்பட்டினம் வாழ்ந்த காலமும் களப்பிரர்களின் காலத்தை ஒட்டிய காலமாகவே காண்கிறேன். கோவலனைக் காதலித்த மாதவியும் பௌத்த துறவியாகிறார். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலையும் பௌத்த துறவியாகிறார். நகரத்தார்களின் ஒன்பது கோயில்களுள் கோவலன் பிறந்தது எந்தக்கோயில், கண்ணகி பிறந்தது எந்தக்கோயில் என்று விபரம் நம்மிடம் இருக்கிறதா?


சொ.சொ.மீ ஐயாவின் உரை, அதாவது நகரத்தார்களின் பூர்வீகம் சைவம் அல்ல. 

ஐயா சமணத்தை அடையாளம் காட்டுகிறார், நான் இங்கே சமணம், பௌத்தம் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறேன். மற்றபடி சைவ மாற்றத்திற்கு இரண்டு கரணங்கள் காண்கிறேன், ஒன்று, களப்பிரர்களை ஒரு கூட்டம் வாழவிடாமல் அழிக்கும் காரணத்தால் தங்களுடைய களப்பிரர் அடையாளத்தை மறைப்பதற்காக இருந்திருக்கலாம், அல்லது களப்பிரர்களின் சொத்துகளை அபகரித்து அவர்களை அழிக்க வந்த  கூட்டம் களப்பிரர்களில் 

Thanks Google
சிலரை அழைத்து, உங்களை வாழ வைக்கிறேன் நீங்கள் சைவத்திற்கு மாறுங்கள் என்று நம்பவைத்த நாடகமாகவும் இருக்கலாம்.

பௌத்தம் சொல்லித்தந்த சித்தர்கள் வாழ்வியலைத்தான் பட்டினத்தாரும் காரைக்கால் அம்மையாரும் இயற்பகையும் கடைப்பிடித்திருக்கக்கூடும், காலம் அவர்களை சைவத்திற்குள் அடைத்திருக்கிறதோ என்பது என் ஐயம்.


முருகன் வழிபாட்டை நகரத்தார்கள் பண்டாரத்தைக் கொண்டே நடத்துகிறார்கள், வைதீகர்களைக்கொண்டு பூசைகள் செய்வதில்லை. பழனிப் பாதயாத்திரையில் வேல் கொண்டு முன்செல்வதும், வேலுக்குப் பூசையிடுவதும் பண்டாரமே. பழனி அன்னதானமடத்தில் பூசைகள் பண்டாரங்களைக்கொண்டே நடைபெறுகிறது. இல்லங்களில் முருகனுக்குப் பூசைகளிடும்போது முன்னின்று பூசை இடுவதும் பண்டாரமே. 

Palani Pathayathirai

நகரத்தார் திருமணங்கள், வைதீகர்களைக்கொண்டு நடத்தப்படுவது இல்லை. வயதில் மூத்த நகரத்தார் மக்களே முன்னின்று தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்திவருகிறார்கள். 

இவை ஏன்? என்ற கேள்வி என்னுள் எழும்போது அதற்கு விடையாக, களப்பிரர்களின் அழிவிற்குக் காரணம் வைதீகர்கள், எனவே வைதீகர்கள் என்றென்றும் களப்பிரர்களின் எதிரி என்ற காரணமாக் கூட இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

ஆதிக்காலங்களில் பழனி மலையில் முருகனுக்குப் பூசையிட்டவர்கள் பண்டாரங்கள் என்பதர்க்கு சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள் கொடுக்கும் ஆதாரம்::


     

மேலும் களப்பிரர் ஆதாரங்களை அறிய விரும்புகிறேன். அதற்கு வழிகோலுபவர்களை வரவேற்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

Date: Dec-10-2022

Updated: Dec-29-2022

Updated: Aug-29-2023