சனி, 27 ஆகஸ்ட், 2022

நாடகமாக்குவதற்காக எழுதிய சிறுகதை. கதையின் தலைப்பு: கவிதை சொன்னா காதல் வரும்!

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

நாள்: Sep-26-2019

கவிதை சொன்னா காதல் வரும் ... மீ.மணிகண்டன்
பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான்.

 "என்னடா..."

 "டேய்.. எனக்கு உடனடியா... ஒரு கவிதை எழுதணும்..."

 "என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற.."

 "எப்படி வேண்ணா வச்சுக்க.... பட் ஐ நீட் கவிதை அர்ஜென்ட்.."

 "என்ன விஷயம்.."

 "உனக்கே தெரியும் எனக்கு பிரேமி மேல ஒரு இதுன்னு.."

 "அதுக்கென்ன.."

 "அவகிட்ட என்னோட லவ்வ சொன்னேன்.."

 "வாவ்... கங்கிராட்ஸ்..."

 "இல்லடா.. அவ சொல்றா... இப்படியா ப்ரபோஸ் பண்ணுவ.. டீசெண்டா... ரொமான்டிக்கா... ஒரு கவிதை சொல்லி ப்ரபோஸ் பண்ணுவேன்னு நெனைச்சேன்னா ..."

 "சரி நீ எப்படி ப்ரபோஸ் பண்ண.."

 --- Flashback ---

கேன்டீனில் இருவரும் தேநீர் பருகிக்கொண்டிருக்கும் வேளையில்... "ப்ரேமி ... ரொம்பநாளா மனசுக்குள்ளையே இருக்கு... இப்போ சொல்லணும்னு தோணுது..."

 "வாவ்.. என்னது.."

 "வந்து.... ஐ லவ் யு..." பட்டென பிரகாஷ் சொல்லிமுடித்ததும் சற்றே ஆடிப்போன ப்ரேமி தட்டுத் தடுமாறி தேநீர் கோப்பையை தன்மீது கவிழ்த்துக்கொள்ள... அவளது ஆடை அதிகமாகவே தேநீர் பருகிவிட்டிருந்தது... "கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... ஏண்டா லவ் சொல்ற லொகேஷனா இது... எங்க உக்காந்திருக்கோம்.... சட்டுன்னு என்னமோ சாப்பாட்டுல உப்பில்லைங்கிற மாதிரி சொல்லுற..."

 "ஏன்... இதுக்காக செட் போட்டு... வைட் டிரஸ் தேவதைங்க ஆறு பேர வரச்சொல்லி சொல்லவா..."

 "அவ்வளவு மெனக்கெட வேண்டாம்..."

 "தென் வாட்.."

 "சி... ரோமியோ ஜூலியட்... அம்பிகாபதி அமராவதி.... அந்தமாதிரி இமாஜினேஷன்ல.... ஒரு ரம்யமான சிச்சுவேஷன்ல என் கை விரல பிடிச்சுக்கிட்டே...

அழகா ஒரு கவிதை சொல்லி... ப்ரபோஸ் பண்ணுவேன்னு நினைச்சிருந்தேன்... என் நினைப்புல டீய கொட்டிட்டியே.." சொல்லிவிட்டு கோபமாக விடுவிடுவென எழுந்து நடந்தாள்... பின்னாலேயே வேகமாகத் தொடர்ந்த பிரகாஷ், "அவ்வளவுதானே நாளைக்கே ஒரு கவிதை எழுதிட்டு வரேன்... இதே கான்டீன்ல... ப்ரபோஸ் பண்றேன்..."

 "பார்த்தியா மறுபடி இதே கான்டீன்... நீ எல்லாம்..."

 "சரி வேற லொகேஷன்.... பார்க்..."

 "பாக்கலாம்...பாக்கலாம்..."

 "சார் பில்ல பெ பண்ணிட்டு போங்க..."  கான்டீன் சிப்பந்தி பிரகாஷை தொடர்ந்தார்.

 --- Flashback over ---

 பிரவீனிடம் தொடர்ந்தான் பிரகாஷ்.. "இப்போ சொல்லு..."

 "என்ன சொல்ல.."

 "கவிதை..."

 "அதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்ல.. டாப் ப தொறந்து ஒடனே தண்ணி வர்றதுக்கு... கிவ் மீ சம் டைம்..."

 "போடா.... நானே எழுதிக்கிறேன்...." போனை வைத்துவிட்டு கவிதை எழுத சிந்தனையில் அமர்ந்தான் பிரவீன்.

 "ம்ம்ம்... என்ன சொல்லி ஆரம்பிக்கிறது..... 'நான் உன்ன நினைச்சேன்...' ம்ஹூம்... இத ஏற்கனவே எழுதிட்டாங்க... 'வான் நிலா நிலா அல்ல...'

இல்லையே இதைக்கூட ஏற்கனவே எழுதின மாதிரி இருக்கே... ம்.... பேசாம யுடியூபை பார்க்கிறோம்... ஒரு கவிதையை பிக்கப் பண்றோம்... மொபைல் எடுத்து யூடியூபை திறந்தான் பிரவீன்.

 ******

 பார்க்கில் அங்கும் இங்கும் தேடி.. அதோ இருக்கிறாள் பிரேமி.... கண்டு பிடித்துவிட்டான். "என்ன லுக் ஓவரா இருக்கு...."

 "உன்னை எப்படி வர்ணிக்கிறதுன்னு... பாக்குறேன்.."

 "அப்டியா... ம்... கேட்டுக்க...." கண்களை மூடிக்கொண்டு ப்ரேமி மெல்லிய குரலில் தொடர்ந்தாள், "நிலாவைப் பாடு அதுல என்னை பத்தி பாடு..."

 "கரெக்ட்டா சொல்லணும்.... நிலாவை பத்தியா... உன்னைப் பத்தியா..."

 "நீயெல்லாம்... அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட..." சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள் பிரேமி...

 "ஏ.... நில்லு...." நிற்கச்சொல்லிவிட்டு கண்களை மூடி சற்று யோசித்தான்... "கேட்டுக்க... நிலா நிலா ஓடிவா... நில்லாமல் ஓடிவா.. மலைமேலே ஏறிவா பிரேமியத்தான் பார்க்க வா..." சொல்லி முடித்துவிட்டு எதோ பெரிய கவி சொல்லிவிட்ட மமதையில், "பார்த்தியா... நிலால ஆரம்பிச்சேன், ப்ரேமி... உன் பெரும் வருது கவிதை எப்புடி.."

 "ம்... நான் ஒன்னும் பாப்பா இல்ல... எனக்கு நீ சோறு ஊட்டுறதுக்கு..." சற்று தூரம் நடந்தாள் ப்ரேமி, தொடர்ந்தான் பிரகாஷ், சட்டென திரும்பினாள் "ஒரு ஷெல்லி மாதிரி கண்ணதாசன் மாதிரி இல்லாட்டியும்.."

 "இல்லாட்டியும்.."

 "ஒரு வாலி மாதிரி வைரமுத்து மாதிரி இல்லாட்டியும்.."

 "இல்லாட்டியும்.."

 "ஒரு பொயட் மாதிரியாவது திங்க் பண்ணேண்டா.."

 முழித்தான் பிரகாஷ்.. தொடர்ந்தாள் பிரேமி... "சரி நான் சொல்றத எழுதிக்காட்டு..."

 "என்ன சொல்லு..."

 "மத்தாப்பு.." எழுதினான் பிரகாஷ், "ம த் த ப் பு" எழுதியத்தைக் காட்டினான் பார்த்த ப்ரேமியின் முகம் சிவந்து கொப்புளித்தது, "தப்பு..." சொல்லிவிட்டு

நடந்தாள் பிரேமி தொடர்ந்தான் பிரகாஷ்... "ப்ரேமி ... ஒன் மோர் சான்ஸ்" நின்றாள், அங்கே கையைக் காட்டி "அங்க என்ன எழுதியிருக்கு படி.."

 "ம்ஹம்... இது.. இத... படிக்க முடியாதா... கிரேட் இன்சல்ட்...." சொல்லிவிட்டு ப்ரேமி காட்டிய இடத்தில் எழுதியிருந்ததை படித்தான் பிரகாஷ். அது ஒரு பழரசம் விற்கும் கடை, மேலே பழமுதிர்ச்சோலை என்று எழுதியிருந்தது, பிரகாஷ் படிக்கத்துவங்கினான், "ப ழ மு தி ர் ச் சே ர லை.".

 "ஆள விடு நான் உன் பக்கமே வரல..." சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள் ப்ரேமி.

 ******

 தன் வீட்டு டெர்ரசில் அமர்ந்திருந்தான் பிரகாஷ்.. பிரவீன் வருகையைப் பார்த்து, "வாடா.."

 "என்னடா சோகமா இருக்க.."

 "பின்ன என்னடா எதுவும் தெரியாத மாதிரி கேட்குற.."

 "அது... எழுதலாம்.... இல்ல வாங்கலாம்... பட்... கொஞ்சம் செலவாகுமே.."

 "எவ்வளவு.."

 "ஹேவ் டு ஸ்பென்ட் சம் லாக்ஸ்.."

 "டேய்... நான் வைரமுத்துக்கிட்ட கவிதை கேட்கல... நீ ஹெல்ப் பண்ணுடான்னு கேட்டேன்..."

 "கவிதை எழுதுறது ரொம்ப சிம்பிள் டா..."

 "அத கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது.."

 "கேளு... இப்போ உனக்கு புடிச்ச பழைய பாட்டு ஒண்ணு சொல்லு.." சற்று யோசித்த பிரகாஷ், தொடர்ந்தான், "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு.."

"ம்... அவ்வளவுதான் 50 மார்க் எடுத்துட்ட..."

 "என்னடா சொல்ற..."

 "இப்போ அத பாட்டா பாடாம அப்டியே படிச்ச பார்த்தியா அவ்வளவுதான், அப்பறம் மெயின் அதாவது அதுல இருக்க பவர்புல் வர்ட எடுத்துட்டு அதுக்கு ஈகுவல் ஆர் ஆப்போசிட் வர்ட் போடு..."

 "அதெப்படி..."

 "அதுல இருக்க பால ரிமூவ் பண்ணிட்டு மோர் சேத்துக்கோ.... குளிர்ச்சி... லவ்வும் குளு குளுன்னு இருக்கும்... அப்பறம் நிலவ தூக்கிட்டு அதுக்கு பதிலா

சந்திரனை போட்டுக்க... இப்ப சொல்லு..."

 "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா மோர் சந்திரனை கேட்டு..."

 "சி... தட்ஸ் இட்.... இப்ப இது உன்னோட கவிதை...."

 "உன் மூஞ்சி... எப்படி எழுதறதுன்னு கேட்டா... எப்படி எழுதக்கூடாதுன்னு சொல்லித்தர்ற..."

யோசித்தான் பிரவீன், "ஓ.கே.டா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் அவர் சினிமாவுக்கு பாட்டெல்லாம் எழுதுவார் அவர் ஒரு இன்ஸ்டிடியூட் வச்சிருக்கார்... அங்க ஆறு மாசம் ட்ரைனிங் எடு... அப்பறம் பாரு..."

 "அப்பறம்..."

 "அதுக்கப்பறம் ஒரு கவிதை எழுதற..."

 "அப்பறம்..."

 "அத ஒரு பேனர் எழுதி நிறைய பேர் வந்து போற இடத்துல வைக்குற..."

 "அப்பறம் அந்த நிறைய பேர் என்கிட்டே வந்து எதுக்காக அங்க பேனர் வச்சன்னு கேள்வி கேட்கணும்... அதானே..."

 "இல்லடா...இல்லடா..."

 "சரி... மொதல்ல அந்த இன்ஸ்டிடியூட் எங்க இருக்கு..."

 இருவரும் சென்றனர் 'இங்கே கவிதை எழுத கற்றுத்தரப்படும்' என்ற வாசகம் அவர்களை வரவேற்றது.

 ******

 ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரேமியைச் சந்தித்தான் பிரகாஷ் கடற்கரை மணற்பரப்பில் இருவரும் அமர்ந்திருக்க அலைகள் ஓடிவந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரேமி ஆரம்பித்தாள், "பிரகாஷ் எங்க வீட்டில எனக்கு..."

 "வெயிட்...மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டுங்க.... அதான..."

 "மூஞ்சி.... எங்க வீட்டில எனக்கு ரொம்பப்புடிச்ச என்னோட பெட், என்னோட பப்பிக்கு உடம்பு சரியில்ல..."

 "நான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்... சாரி.... இங்க பாரு... நான் முன்னாடி சொன்ன மாதிரி... ஒரு சூப்பர் கவிதையோடு வந்திருக்கேன்... பிளீஸ் அக்செப்ட் மை ஹார்ட்.." கையில் வைத்திருந்த பேப்பரை பிரித்து ப்ரேமியிடம் நீட்டினான். படித்துப்பார்த்த ப்ரேமி சற்று ஆச்சரிமடைந்தாள். "ஐ கான்ட் பிலீவ் இட்.. நீயா எழுதின.... ஸச் அ வொண்டர்புல் போயம்..." மீண்டும் படித்தாள்,

மண்ணில் வந்த பிறை நிலவே

மனதை ஏற்க மாட்டாயா

உன்னில் கரையும் மழைத்துளி நான்

உறவாய் ஏற்க மாட்டாயா !

மனம் மகிழ்ந்த ப்ரேமி சற்று மௌனத்திற்குப் பிறகு "நான் உன்ன ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன் பிரகாஷ்.. ரியலி.. ஐ.. ஐ.."

 துள்ளிக்குதித்தான் பிரகாஷ், "ஐ.."

 சரியாக அதே நேரம் பிரேமின் போன் சிணுங்கலிட எடுத்துக் பார்த்தாள், தோழியிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ், எடுத்து ஓபன் செய்தாள், "ப்ரேமி ஏண்டி போனை எடுக்க மாட்டேங்குற.. அதான் இந்த வாய்ஸ் மெசேஜ்.. சரி கேளு.. நான் சொல்லுவேன்ல என் பிரென்ட்.. அவன் இன்னிக்கு என்கிட்டே வந்து ஒரு கவிதை சொல்லி என்ன ப்ரொபோஸ் பண்ரான்பா.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... பட் கவிதை சூப்பர்.. கேளேன்..."

மண்ணில் வந்த பிறை நிலவே

மனதை ஏற்க மாட்டாயா

உன்னில் கரையும் மழைத்துளி நான்

உறவாய் ஏற்க மாட்டாயா !

 மெசேஜ் நிறைவானது, கேட்டுக்கொண்டிருந்த பிரகாஷ் செய்வதறியாது விழித்தான். கோபம் பொங்கியது பிரேமிக்கு, "கவிதை எழுத ஆரம்பிச்ச உடனே ஒரே நேரத்துல ரெண்டு பேர ப்ரொபோஸ் பண்றியா.. "

 "அச்சோ... அது நா இல்ல..."

 "எது நீ இல்ல..."

 "உன் பிரெண்ட நான் ப்ரொபோஸ் பண்ணல...."

 "நீ சொல்லமாத்தான் அவ எனக்கு இதே கவிதையை படிச்சுக் காட்டுறாளா..."

 "சாத்தியமா... உன்கிட்ட மட்டும்தான் ப்ரொபோஸ் பண்றேன்..."

 "ஆப்ப அவகிட்ட யார் ப்ரொபோஸ் பண்ணது.."

 சற்றே யோசித்து மென்று விழுங்கி.." அது வந்து... வந்து... உண்மைய சொல்லிடறேன் ப்ரேமி, அது என்னோட கவிதை இல்ல... என் பிரென்ட் பிரவீன் அவன் லவ்வருக்கு எழுதி வச்சிருந்ததை அவனுக்கு தெரியாம எடுத்துட்டு வந்து... வந்து... உன்கிட்ட.... குடுத்து...."

 "போடா... உனக்கு கவிதையும் வராது... எனக்கு உன்மேல காதலும் வராது...." சொல்லிவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்தாள்.

 அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ் மணற்பரப்பில் மண்டியிட்டு விழுந்தான், காற்று கொண்டு வந்த பாடல் அவன் காதுகளை நனைத்தது, அவள் பறந்து போனாளே... என்னை மறந்து போனாளே...

...மீ.மணிகண்டன்

Sep-26-2019

சனி, 20 ஆகஸ்ட், 2022

காதல் வானிலே ... மீ.மணிகண்டன்

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்ற கதை

சிறுகதைப் போட்டி – 04

போட்டியின் விதிமுறை: 275 வார்த்தைகள்

நாள்: Nov-22-2021

தலைப்பு: காதல் வானிலே...!

சிறுகதை ஆக்கம்: மீ.மணிகண்டன்


நன்றி அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை
காதல் வானிலே ... மீ.மணிகண்டன்
"ஜெயா, எத்தனை தடவை சொல்லுவேன்? பிடிச்ச பிடியிலேயே நின்னா எப்படி?"

"எனக்கும் புரியாம இல்ல வானதி, இன்னிக்கு கடைசி நாள், இதுக்கப்பறம் நாம சந்திப்போமாங்கறதெல்லாம் இறைவனுக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை."

ஜெயராமனின் பலநாள் பிடிவாதத்தை மறுக்கமுடியாமல், தன்னுடைய பேருந்து அடையாள அட்டையை ஜியோமெட்ரி பெட்டியிலிருந்து எடுத்த வானதி, அதிலிருந்து தன்னுடைய பாஸ்போர்ட் அளவு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை, மிகவும் மெதுவாக, ஆரஞ்சுப் பழத்திலிருந்து தோலை உரிப்பதுபோல அட்டையிலிருந்து தனது புகைப்படத்தை பிரித்து எடுத்தாள், ஜெயராமனிடம் நீட்டினாள், "ஜெயா என் போட்டோ உன்கிட்ட இருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது ப்ளீஸ்".

பொழியவும் இயலாமல் சுமக்கவும் முடியாமல் குட்டி மேகமொன்று ஜெயராமனுக்கும் வானதிக்கும் இடையே உலவிக்கொண்டிருக்க, அந்தப் பள்ளிக்கூட வராண்டா அமைதியின் கனத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. வானதி நீட்டிய அவளது புகைப்படத்தை ஜெயராமன் பெற்றுக்கொள்ளும் வேளை, "ஜெயா உன்னோட போட்டோ ஒண்ணுகூட என்கிட்டே இல்லையே?" சற்றே தழுதழுத்தாள். இதை எதிர்பார்க்காத ஜெயராமன், "வானதி, அப்போ இவ்வளவுநாள் நீ மறுக்கல, உன் உதடுமட்டும்தான் மறுத்திருக்கு". தலையைக் குனிந்து மெளனமாக நின்றாள் வானதி. பிரிவுச் சூழலிலும் கொஞ்சம் மகிழ்ச்சித் தருணம் உணர்ந்தான் ஜெயராமன், தானும் அவள்போலவே பேருந்து அடையாள அட்டையிலிருந்த தனது புகைப்படத்தைப் பிரித்தெடுத்து அவளிடம் நீட்டினான். சுற்றி யாரும் இதனைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு படக்கென அவன் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டாள் வானதி.

"ஜெயா யாருக்கும் தெரியவேண்டாம் ப்ளீஸ்".

"வானதி, மேகத்திலிருந்து பொழியுற மழைத்துளிய, மண்ணுல விழுந்ததுக்கப்பறம் யாராலயும் கண்டுபிடிக்க முடியாது, உன்னிடம் நான் பேசிய பொழுதுகள், உன்னுடைய போட்டோ எல்லாமே எண்ணில் விழுந்த மழைத்துளிகள்."

பள்ளிக்கூட வாயிலில் பூத்திருந்த செம்பருத்திப்பூவிலிருந்து, மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சியொன்று விண்ணை நோக்கிப் பறந்துக்கொண்டிருந்தது.

எங்கிருந்தோ வந்த மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சி பால்கனிக்குப் பக்கத்தில் பூத்திருந்த செம்பருத்திப்பூவில் அமர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயராமனை, "என்னங்க நாளைக்கு பெரியவன் வரான்ல, சிவாவுக்கு போன் பண்ணி ரயிலடிக்கு சரியான நேரத்துக்குப் போகச்சொல்லிடுங்க" என்று ஜெயராமனின் நினைவைக் கலைத்தாள் ஜனனி,  டீபாயில் காஃபியை வைத்தவள், "என்னோட பழய பெட்டியெல்லாம் மேல இருந்து எடுத்து அறையை சுத்தம் பண்ணிடுறேன், இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அறைதான், காலேஜ் முடிச்சு வரவனுக்கு தனியறை தேவைப்படும்", சொல்லிக்கொண்டே தனது அறைக்குச்சென்று பரணிலிருந்து பழையபெட்டியை இறக்கினாள் ஜனனி.

பெட்டிக்குள்ளிருந்த பழுப்படைந்த சான்றிதழ்கள், புகைப்படங்களை விலக்கி அந்த ப்ரவுன் நிற ஆட்டோகிராப் புத்தகத்தை கையில் எடுத்தாள். அறைக்குள் ஜெயராமனின் வரவை உணர்ந்தவள் ஆட்டோகிராப் புத்தகத்தை உள்ளே நழுவவிட்டு மற்ற புத்தகங்களை அடுக்கினாள். சற்று நேரத்தில் ஜெயராமன் அறையிலிருந்து வெளியேறியதும், மீண்டு ப்ரவுன் ஆட்டோகிராப் புத்தகத்தை வெளியில் எடுத்தாள், படபடவென பக்ககங்களைப் புரட்டினாள் இதயக்கனம் சற்றே அதிகரித்தது, அவள் புரட்டிய அந்தப்பக்கத்தில் இன்னமும் அந்த மைப்பேனாக் கையெழுத்து நிறம்மாறாமல் இருந்தது.

 மீ.மணிகண்டன்




சனி, 13 ஆகஸ்ட், 2022

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

இதயங்கள் இரண்டு பேசிக்கொள்வது காதலா? இருசோடிப் பார்வைகள் சந்தித்துக்கொள்வது காதலா? பார்வையில் பட்டது காதலா? மனத்தைத் தொட்டது காதலா? விடைகாண விழைந்ததன் விளைவு 'இப்படித்தான் மலர்கின்றன ஊதாப்பூக்கள்'. உங்கள் வாசிப்பிற்காகக் கதையின் வரிகள் காத்திருக்கின்றன... உங்கள் கருத்துகளைச் சுவாசிக்க எனது விழிகள் காத்திருக்கின்றன... நன்றி 

சிறுகதையின் தலைப்பு:  இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்

எழுதியவர்: மீ.மணிகண்டன்

"மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்", எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, "நல்ல கனவைக் கலைச்சுட்டியே..., போடா...", மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கவி.

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

கல்லூரி வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சில மாணவர்கள் முதலாண்டு மாணவர்களை, வெற்றுத் தரையில் கொடியேற்றச் சொல்லியும், இரயில் ஓட்டச் சொல்லியும், புற்தரையில் நீச்சல் அடிக்கச் சொல்லியும் ராகிங் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சுடிதார்களையும், தாவணிகளையும் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். இது கல்லூரி ஆரம்ப நாட்களின் கோலாகலம்.

அன்றைய தினம் நண்பர்கள் குழு எதிரே வந்த புதுமுகங்களைக் கமெண்ட் அடித்துக் கொண்டே வகுப்பறைக்குச் சென்றனர், நூலகத்திலிருந்து வெளியே வந்த சேலைகளையும், தாவணிகளையும் சுட்டிக்காட்டிக் கவிதாஞ்சனிடம் ஒவ்வொருவரின் பெயரும் வகுப்பும் சொல்லிக்கொண்டிருந்தான் சேகர், "... அந்தப் பொண்ணு பேரு வந்தனா, B.A. தமிழ், பக்கத்திலிருந்தாளே அவதான் லேகா...", லேகாவின் அழகு யாரையுமே உடன் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு, அவளைக் காணும் காதல் வயப்பட்டவர்களுக்கு பிரம்மனின் கற்பனைக்கு எல்லையே இல்லை என்று கூட நினைக்கத் தூண்டும். அவளைக் கண்டது முதல் கவிக்கு மனம் எதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது. அவள் அழகை அவளிடமே பாராட்ட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

இன்று காலையிலிருந்தே கவியின் மனதில் எதோ ஒரு உறுத்தல், காரணம் காலையில் லேகாவை ஒருவன் பைக்கில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டுச் சென்றான். இந்த நிகழ்ச்சி அவன் மனதை ஏன் சஞ்சலப் படுத்த வேண்டும்?

காலை வகுப்புகள் நிறைவு பெற்று மதிய உணவு வேளை, மாணவர்கள் உணவுக் கூடம் செல்வதும், சிலர் வீட்டிற்குச் செல்வதுமாக கல்லூரி வெளி வளாகம் கலகலப்பாக இருந்தது, கவியும் சேகரும் விடுதி மாணவர்கள் தானே, உணவுக் கூடம் விரைந்தனர். உணவைப் பெற்றுக்கொண்டு இருக்கை தேடி நடந்து வருகையில் அருகில் இருவர் பேசிக் கொள்வது தற்செயலாகக் கவியின் காதுகளில் விழுந்தது, "மச்சான் காலேஜ் டாப் ஃபிகர் அல்ரெடி கமிட்டேட் டா, பார்ட்டி பேரு சிவாவாம்", "அட போடா எவ்வளவோ வேலை இருக்கு... இதைப்போய் மெனக்கட்டு வருத்தப்பட்டு சொல்லுற, ரெகார்ட் சப்மிட் பண்ணிட்டியா...". உரையாடும் வாலிபர்களைக் கடந்து இருக்கையில் உணவுடன் அமர்ந்த கவியின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பது கண்ட சேகர், "என்னடா திடீர்னு டௌன் ஆயிட்ட மாதிரி இருக்கு..." செயற்கையாகப் புன்னகையை வரவழைத்த கவி "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..." என்று சமாளித்தான்.

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

விடுதியின் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் லேகாவும், வந்தனாவும் நிற்பதைக் கவி கவனித்தான், பேருந்தில் இருவரும் கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு ஏறுவதையும் கவனித்தான். அடுத்தநாள் எப்படியும் லேகாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் அவனிருந்தான்.

மதிய உணவு நிறைவேறியதும் முதலாண்டு மாணவர்களைக் கிண்டல் செய்யச் சீனியர்கள் அவர்களின் வகுப்பறைக்குள் நுழைவது ஆரம்ப நாட்களின் கொண்டாட்டம். என்றும் இல்லாமல் புதிதாக கவி தன் கூட்டாளிகளிடம், "டேய் நானும் உங்ககூட ஃபர்ஸ்ட் இயர் சாட்டிங் வரேண்டா...", ஆச்சரியமாய்ப் பார்த்தனர் சகாக்கள், "நல்ல முன்னேற்றம் கவி..., லேட் அஸ் ஸ்டார்ட்... "எல்லோரும் முதலாம் ஆண்டு வகுப்பறைகள் நோக்கி மாடி ஏறினர்... கூட்டத்தோடு கலந்த கவி ... வந்தனாவின் வகுப்பறை நோக்கி நகர்ந்தான்... இதயத் துடிப்பு சற்று அதிகமாகவே லப் டப்பியது... இது புதுசுதான் கவிக்கு... கொஞ்சம் பயம்... யாரும் ஏதேனும் சொல்வார்களோ... சே சே எத்தனையோ பேர் நடமாடிப் பேசிக் களிக்கும் இடத்தில் தன்னை மட்டும் யார் குறை சொல்லப்போகிறார்கள்... தன்னைத் தேற்றிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்து... விழிகளை அங்கும் இங்கும் அலையவிட்டு... அதோ.. அங்கே தனியாக அமர்ந்திருக்கிறாள் வந்தனா.... தயங்கித் தயங்கி மெல்ல அவளிருக்கை அருகே சென்றான்... அந்த வகுப்பறையில் பல மாணவர்கள் அங்கும் இங்கும் கூடிப் பேசிக் கேலி செய்து மகிழ்ந்திருக்கும் தருணத்தில் வந்தனா மட்டும் தனியாகப் புத்தகத்தில் விழிகளைப் படரவிட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது கவிக்கு சற்று சாதகமாகவே இருந்தது... லேகாவைப் பற்றி பேசித் தெரிந்துகொள்ள இதுதான் சரியான தருணம்... இன்னும் சற்று முன்னேறினான் கவி... அருகில் யாரோ வருவது கண்டு புத்தகத்தை புரட்டிய பக்கத்தோடு மேசையில் கவிழ்த்து வைத்து தலையை நிமிர்த்தினாள் வந்தனா, மெல்லிய புன்னகையோடும், நேசம் கலந்த பார்வையோடும் "ஹை..."

"ஹெலோ..., என் பேரு கவி.... கவிதாஞ்சன்.... ஃபைனல் இயர் தமிழ்...,"

"கேள்விப் பட்டிருக்கேன்..., நல்லாக் கவிதை எழுதி... பரிசெல்லாம் வாங்குவீங்கன்னு... ப்ரோபெஸர் சரவணன் எங்க கிளாஸ்ல இலக்கியம் நடத்தும் பொழுது அப்பப்ப உங்க வரிகள் எடுத்துக்காட்டா சொல்லுவார்... கிரேட்..."

"நன்றி..."

"இப்போ என்ன பண்றீங்க... அதாவது புதுசா எதாவது எழுதறீங்களான்னு கேட்டேன்.."

"ம்.... அப்பப்ப எதாவது மனசில படும் ஆழமான சம்பவங்களை மைய்யப்படுத்தி கொஞ்சம் ஜோடனை செய்து வாசிக்க வசீகரமா இருக்கணும் இல்லையா... அப்படி எழுதுவது உண்டு... ஆனா இப்போ.... சொல்லும்படியான எதுவும் ஆரம்பிக்கல... ஆரம்பிக்கும்போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன்... நீங்கதான் என் வாசகி ஆயிட்டீங்களே.."

சற்றே புன்னகை கூட்டிய வந்தனா, "நான் அப்படி சொல்லலையே..."

"மன்னிக்கணும்... கொஞ்சம் அவசர பட்டுட்டேன்..."

"அடடா... எதுக்கு மன்னிப்பு... நானும் விளையாட்டாத்தான் சொன்னேன்...."

"நன்றி..."

"ஆனா நீங்க ரொம்ப கூச்ச சுபாவம் உடையவர்ன்னு சரவணன் சார் சொல்லுவார்..., கிளாஸ் முடிஞ்சா கான்டீன் இல்லன்னா ஹாஸ்டல்ன்னு இருப்பீங்க வெளில ரொம்ப பாக்க முடியாதுன்னு சொல்லுவார்..."

"அ...ஆமா.... ஆனா இன்னிக்கு எதோ ஒரு வேகம்... அதான் வந்து உங்கள பாத்து பேசலாம்னு..."

"ஓ... என்னைப் பாக்கத்தான் வந்தீங்களா... என்ன உங்களுக்கு முன்னாடியே தெரியுமா... சொல்லுங்க... என்ன பேசணும்..."

"...இல்ல ஒண்ணு ரெண்டு தடவ நீங்க கிளாஸ் விட்டுப் போகும்போது..., லைப்ரரி கிராஸ் பண்ணும்போது.... பஸ்ஸ்டாண்ட்லன்னு... பாத்திருக்கேன்... உங்களையும் உங்ககூட லேகாவையும்... அவ்வளவுதான் மத்தபடி எதுவும் தெரியாது..."

சிறு புன்னகையுடன் வந்தனா, "… பரவால்ல... கவிஞர் காரணமில்லாம வந்திருக்கமாட்டீங்க... சொல்லுங்க..."

"... வந்து.... லேகா உங்க பிரெண்ட் தானே..."

"ஆமா..."

"... அவுங்க இங்க சேர்றதுக்கு முன்னாடி எங்க படிச்சாங்க....?"

வந்தனா எதிர்பாராத கேள்வி. இருந்தும் கவியின் தேடல் என்ன என்று அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது, "கவி... இத நீங்க லேகாவிடமே கேட்கலாமே...."

"..வந்து.... மன்னிக்கணும்... உங்ககிட்டையே இப்போதான் முதன் முறையாய் பேசுறேன்.... பொதுவா பெண்கள்கிட்ட என்ன பேசுறது எப்படிப் பேசுறதுன்னு எனக்குப் பழக்கமில்லை.... தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்குங்க... நான் கிளம்புறேன்..."

"...ஹெலோ... ஹெலோ.... நில்லுங்க கவி.... நீங்க எதுவும் தப்பா கேட்கல... முன் பின் அனுபவமில்லாமல் நீங்க பேச வர்றது என்னன்னு ஓரளவு புரிஞ்சுக்க முடியுது... சொல்லுங்க... நீங்க லேகாவைப் பத்தி தெரிஞ்சுக்கணுமா...?"

பதட்ட நிலையில் மௌனமானான் கவி, "... "

"... பாருங்க கவி, நீங்க ஒரு சிறந்த படைப்பாளி, சரவணன் சார் முதல் தடவை சொல்லும்போதே எனக்கு உங்ககிட்ட என்னை அறிமுகப் படுத்திக்கணும்ன்னு இருந்துச்சு... இப்படி ஒருத்தர்கிட்ட தன்னை அறிமுகப் படுத்திக்கிறதுக்குக் காரணம் அவங்கமேல உள்ள ஒருவித தனித்தன்மைகொண்ட ஈர்ப்பு... அப்படித்தான் நான் பாக்குறேன்... எனக்கு உங்க படைப்புகளின் மேல் ஈர்ப்பு... உங்களை லேகாவின் தனித்தன்மை எதுவோ ஈர்த்திருக்க வேண்டும்..."

"இல்ல... லேகாவிற்கு சிவான்னு ஒருத்தரோட திருமண நிச்சயம் ஆகியிருப்பதா...."

"கவி... லேகா எனக்கு ஒரு கல்லூரித் தோழி... ஜஸ்ட் ஃபிரண்ட்... அவளோட பர்சனல் பகிர்ந்துக்கற அளவுக்கு இன்னும் நெருங்கிப் பழகல.. மேலும் மத்தவுங்க பர்சனல் தெரிஞ்சுக்கறது நாகரிகம் இல்ல... "தன் தலையைக் குனிந்தவள் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை நிமிர்த்தினாள்... படித்துக்கொண்டிருந்த பக்கம் சரிதானா என்று பக்கத்தின் எண்ணைச் சரிபார்த்தாள் விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடர்வதற்கு...

பட்....டென அறைந்ததுபோல் இருந்தது கவிக்கு. அங்கே இன்னும் சற்று நிற்பதற்குக்கூட அவன் மனது அனுமதிக்க வில்லை.

"நான் கிளம்புறேன் வந்தனா.... நான் வந்து பேசினதை மறந்துடுங்க.... மன்னிக்கணும்..." அவனால் இன்னும் வந்தனாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க இயலவில்லை.

ஒரு எதார்த்த மனிதனின் இயல்பு புரிந்தவள் வந்தனா. கவியின் தடுமாற்ற நிலையை உணர்ந்தாள். பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் வயதில் இளமையாக இருந்தாலும் மனதளவில் முதிர்ந்த தெளிவு பெற்றவர்களாகவே இருப்பது உண்டு. அந்த வகையில் வந்தனாவினால் கவியின் மழலைத்தனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

குனிந்த தலையை நிமிர்த்தாமல் புத்தகத்தில் வைத்த கண்களை எடுக்காமல் வந்தனா தொடர்ந்தாள் "கவிஞரே... நீங்க எதுவும் தப்புப் பண்ணல... நம்மளோட முதல் சந்திப்பு இது.... உங்க படைப்புகளை இன்னும் இன்னும் நாம பேச வேண்டியிருக்கு... நீங்க இன்னும் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டியதிருக்கு.... "அவள் சொல்லிக்கொண்டே தொடர.... கவி சின்னப்ப புன்னகை ஒன்றை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு...

"...என் நிலையைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு மகிழ்ச்சி.... நன்றி.... "என்று கூறி தன் கால்ச்சட்டைப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை உருவி நெற்றி முத்துக்களை ஒற்றி மடித்து மீண்டும் கால்ச்சட்டைப் பைக்குள் நுழைத்துக்கொண்டு வகுப்பறை விட்டு வெளியேறினான்... மீண்டும் தன்னை யாரும் பார்த்துவிடவில்லையே... என்று ஒருவித அச்சம்..... விடுவிடுவென தன் வகுப்பறை நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.... இன்னும் இதயத்தின் லப் டப் வேகத்தடைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் பறக்கும் மோட்டார்வாகனமாகப் பறந்துகொண்டிருந்தது.....

பாடங்களைக் கவனிக்க இயலாமல் எங்கேயோ கத்தும் ஒரு பூனைக்குட்டி அவனது சிந்தையைக் களவாடியது... எந்த மரத்திலிருந்து அந்த மைனா தன் துணையை அழைக்கிறது என்று அவனால் சரியாகக் கணிக்க முடிந்தது... முட்டிக்கொண்ட மேகங்கள் முத்துதிர்க்கும் சத்தம் அவனது மூளைக் கோடுகளில் வயலின் வாசித்ததையும் அவனால் உணரமுடிந்தது ஆனால் ஆசிரியர்கள் வந்துபோனதைத் தவிற பாடக்குறிப்புகளை அவனால் கவனிக்க இயலவில்லை. வகுப்புகள் நிறைவடைந்து விடுதி திரும்பிய கவிதாஞ்சன் ஒரு புது உலகத்தைப் பார்ப்பது போல ஒவ்வொன்றையும் பார்த்தான்.... அவனது விடுதி அறை, பொருட்கள், கண்ணாடி, தலைவாரும் சீப்பு, வெளி வராண்டா, மரங்கள், செடிகள், புல்வெளி, மண்தரைகூட இதுவரை மங்கலாகத் தெரிந்து இப்போது பிரகாசமாகத் தோன்றுவதுபோல் ஒரு பிரமை.... இது ஏன் என்று அவன் சற்று கண்ணை மூடிப் பார்த்த பொது அங்கே வந்தனா அவனது இமைத்திரைகளை ஆக்ரமித்து நின்றாள்...!

சன்னல் வெளியில் நிலவு கவியை அழைத்தது... இரவு உறக்கம் தொலைந்தது... அந்த இரவில் அவனது கவிதைக்குள் மலர்ந்து நின்றவள் வந்தனா...

கவிதாஞ்சனை வாட்டிய வட்ட நிலா வந்தனாவின் கனவுகளையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க மறக்கவில்லை... அவளின் கனவில் கவி ஏன் வந்தான் எப்படி வந்தான் என்பதை அவள் அடுத்தமுறை கவியைச் சந்திக்கும்பொழுது எப்படிக் சொல்வது? என்ற சிந்தனை அவளின் உறக்கத்தைக் கலைத்தது.

அடுத்த முறை வந்தனாவிடம் தன் வளரும் படைப்பினைக் கவி பேசப்போவதையும்... அந்தப் படைப்பின் கரு வந்தனா எனச் சொல்லப்போவதையும்... வந்தனாவின் முகம் இதைக்கேட்டு நாணக் கவி எழுதப்போவதையும்... அன்று அந்த சன்னல் வெளி நிலா அறிந்துவைத்திருந்தது...!

...மீ.மணிகண்டன் 

Aug-19-1996

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.