செவ்வாய், 9 ஜூன், 2015

வாழ்க வளமுடன்

வயதொன்று கூட்டியது
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு

பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்

பொறுத்தாளும் புத்திகொண்டு  
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்

வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர

குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி


மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்

புதன், 6 மே, 2015

ஆழியிலே ... M.Manikandan

ஆழியிலே முத்தெடுக்க
  ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
  அனுதினமும் உருக்குலைந்தேன்
 நாழிகைகள் நாட்களாக
  நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
  நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை 
  நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
  நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
  கவலைதனை மறந்திடவோ 
கார்திகேயன் அருளையெண்ணி
   காலமிதைக் கடந்திடவோ

--மீ.மணிகண்டன்

06-May-15

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அவர்களுக்கும் காதல் ... M.Manikandan

பூப்பாதக் கொலுசின்
மணியாக வில்லையாம்
கரைந்து போனது
புல் நுனிப் பனித்துளிகள்
*
அடர் கூந்தலுடன்
நட்பு பேண
விழுது வளர்த்தது ஆலம்
*
அந்திப் பூ
செவ்வந்தியானது
அவளுதட்டு முத்தத்தால்
*
அவளின் கரம்பட்ட
அரளிக்கும் காதல்
உள்ளங்கை ரேகை போல
வேர்கள்
*
குடந்தாங்கும்
இடை தாவ முடியாமல்
கொவ்வை கோபத்தைக்
கொப்பளித்தது கனியாய்
*

By M.Manikandan
07-Apr-15

செவ்வாய், 10 மார்ச், 2015

மனித மந்தையில் தொலைந்த மந்திகள் ... M.Manikandan

அந்த மூவரையும்
காணவில்லையே

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள் விலகுகின்றன

மொழிச் சுதந்திரம்
முதிர்ந்து விட்டதாம்
மூச்சிரைக்க முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின் பரிணாமங்கள்
முளைக்கட்டுக் கூடங்களிலேயே

கேள்வி ஞானம்
கிளைத்து விட்டதாம்
சேர்க்கை சரிதங்கள்
செதாரமறக் கேட்டு ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச் சாலையிலேயே

வயது முதிர்ந்ததோ
வறுமை முறித்ததோ 
அழத் தோன்றுகிறது 
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன் 

by M.Manikandan

11-Mar-15

வியாழன், 5 மார்ச், 2015

வான் காணாப் பிறை ... M.Manikandan

உறையும் பனிக்குளிரில் 
ஓடாமல் நான் குளிக்க 
ஒருபானைத் தண்ணீரை  
அடுப்பேற்ற வேண்டாம் 

சிக்குண்ட தலைமுடிக்கு  
நல்லெண்ணெய் வார்த்துபின்னே 
சீகர்க்காய் தேய்த்துமே 
சீர் படுத்திட வேண்டாம் 

சீப்புக் கொண்டு தலை வாரி 
ரெட்டைப் பின்னல் ரிப்பனிட்டு 
சிங்காரம் செய்துமே 
சிரமங்கள் படவேண்டாம் 

உடை தேடி எனக்குடுத்தி 
ஒழுங்காகப் பையடுக்கி 
பள்ளிக்கூடம் செல்வதற்குப்
பாதி வழி வரவேண்டாம் 

கறுப்புப் பொட்டுவைத்தும் 
கற்பூரம் சுற்றி வைத்தும் 
கண்ணேறு கழித்து நீ 
கவலைகள் படவேண்டாம் 

காரத் துவையலோடு 
கறி சமைத்துச் சோறாக்கி 
உடல் வருத்தி நீ எனக்கு 
ஒரு வாய் ஊட்டிடவும் வேண்டாம் 

ஏங்கி நான் அழுகும் 
இன்னல் பொழுதுகளில் 
அருகே நீ இருந்தால் 
அது போதும் ஆறுதலாய் 

அம்மா நீ யாரோ ...... ?


by M.Manikandan
05-May-15

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உறங்கும் சுவைக்கட்டி ... M.Manikandan


சிந்தனையும் மொழியும்
கலவிக்க
எண்ணத்தில் கருவானவள் நான் !

கருவுற்ற சிறு பொழுதுகளில்
கற்பனையால் வளர்க்கப்படும்
சிசு நான் !

எண்ணம் புடைக்க வளர்ந்து
கை விரல் மருத்துவத்தில்
மைக்கருவி ஆயுதத்தால்
பிரசவிக்கப்பட்டு
காகிதத் தொட்டிலில்
தவழ விடப்பட்டது என் பிறப்பு !

அங்கமெங்கும் அடுக்கப்பட்ட
அலங்கார வார்த்தைகளின்
அணிவகுப்பு என் அழகு !

இலக்கணத் தெளிவுகொண்டு
எல்லோரையும் வியக்க வைக்கும்
அறிவு எனது !

எதுகை மோனையோடு
யாப்பு பூசிய என்னை
எடுத்துக் கொஞ்சுபவருக்கு
என்னால் நிழல் தர இயலும் !

இங்கே என்னைப்போல்
நாகரீகம், பொதுவுடைமை
அன்பு, அறிவு,
ஒழுக்கம், உயர்வு என
இன்னும் இன்னும் எத்தனையோ
எங்கள் தோழமைகள் !

எம்மைப் பிரசிவக்க
மும்முரமாக இயங்குவோர்
ஏனோ எடுத்துக் கொஞ்ச
முன் வருவதில்லை.

இப்படித்தான்
பெருக்கிக் கிடக்கிறோம்
எழுதப்பட்ட அனாதைகளாய் !

By M.Manikandan
28-Feb-15

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

அழகுப் பிள்ளை யார் ... M.Manikandan



பல விகற்ப இன்னிசை வெண்பா

மஞ்சள் அரைத்திட மாலைக் கதிரவன்
கொஞ்சி வணங்கிட குட்டியம் மூசிகம்
கண்டு கிளைக்குள் கிளையாய் இருந்திடும்
குண்டழ குப்பிள்ளை யார்  

by M.Manikandan
22-Feb-15

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே ... M.Manikandan

நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
Title by eluthu com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !

தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !

உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !

ஆன்மீக அருமையினை அடகுவைக்கும் காலிகளால்,
தன்னுள்இறை உணராமல் தள்ளிநிற்கும் மாந்தர்கள் !
...துள்ளிவரும் மழலையினைத் தூக்கிதினம் கொஞ்சாமல்
...அள்ளிவந்து பொருள்குவிக்க அலைந்துநோகும் பெற்றோர்கள் !

பணவேட்டை ஒன்றுமட்டும் பார்வாழ்கை என்றாக
குணம்குன்றி குவலயமும் குற்றுயிராய்ச் சாகுதம்மா !
...பழசாகிப் போனதனால் பந்தபாசம் இற்றதனால்
...நிழல்காற்று இல்லாமல் நெஞ்சுநொந்து அழுகுதம்மா !

By M.Manikandan
08-Feb-15


புதன், 28 ஜனவரி, 2015

பொய் சொல்லும் போட்டி ... M.Manikandan

கவிதைப் போட்டி
‘கற்பனை’ - தலைப்பு
‘பொய்’ என முடி – நிபந்தனை

‘கற்பனையில் கரையும்
போட்டிக்கு
கவிதையென்று பெயர்
தலை முதல்
கால் வரை
மெய்யே பொய்’

by M.Manikandan

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

தரைச் சீட்டு ... M.Manikandan

சிறுகதையின் தலைப்பு: தரைச்சீட்டு

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

“நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..”
பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை நீக்கிக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தான் அது வாத்தியார் அசோகன். அவரிடம்தான் நடேசன் ஆறு முதல் எட்டு வரை படித்தான் ஆனால் படிப்பில் மனம் இல்லை எட்டுக்குமேல் பள்ளிப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. உழைத்துப் பெற்றோரைக் காக்க வேண்டும் என்று பதினைந்து வயதில் இந்த அருண் மிதிவண்டி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தான் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது தனியே கடை போடவேண்டும் என்ற தைரியம் இன்னும் வரவில்லை. முதலாளிக்கு நம்பிக்கையான வேலைக்காரன். “போகணும் ஐயா, இந்த ஒரு வண்டிய முடிச்சிட்டு கெளம்பனும்..”.

தரைச் சீட்டு ... மீ.மணிகண்டன்
ஒட்டி முடித்து மென் சக்கரத்திற்கு முழுவதுமாக காற்றை நிறப்பிவிட்டு அருகில் இருந்த தண்ணீர் நிறப்பிய சற்று ஆழமான பாத்திரத்தில் மென் சக்கரத்தின் ஒட்டப்பட்ட பகுதியை இட்டுப் பார்த்தான் காற்று கசிகிறதா என்று. இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு பின் காற்றை மென் சக்கரத்திலிருந்து வெளியாக்கினான். பின்னர் சக்கரத்தில் பொறுத்தி காற்றைச் செலுத்தி முழுமையாக்கி முருகனிடம், “முருகா வண்டி தயார்..” என்றான். முருகன் ஒரு ருபாய் ஐம்பது காசுகள் கொடுக்க அதை வாங்கி கடைக்குள் சென்று சுவரோரம் வைக்கப்பட்டிருந்த மேசையில் மேலரையைத் திறந்து ரூபாய்களோடு ஒற்றை ரூபாயை அடுக்கிவிட்டு அதனருகில் இருந்த டப்பாவில் ஐம்பது பைசாவைப் போட்டுவிட்டு வெளியில் வந்தான் நடேசன், முருகன் நன்றி சொல்லி விட்டு தன் வியாபாரம் பார்க்கப் புறப்பட்டான்.

நடேசனும் முதலாளியின் வருகைக்காக இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று தூரத்தில் TVS 50 யில் அவர் வருகை தென்பட்டது. நேற்றே சொல்லியிருந்தார் முதலாளி, இன்று பக்கத்து நகரத்திற்குச் சென்று தேவையான உதிரிப் பக்கங்கள் மற்றும் வேலைக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கி வரும்படி. எனவே கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட முதலாளியின் வரவை எதிர்பார்த்திருந்தான் நடேசன் முதலாளியும் வந்துவிட்டார். TVS 50 யைக் கடைக்குமுன் நிறுத்தி இறங்கி சற்று ஓரமாக நகர்த்தி நிற்பியின் உதவியால் வண்டியை நிலைப் படுத்துவிட்டு பின் தன் சட்டைப் பையிலிருந்து சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நடேசனிடம், “நடேசா இந்தா பிடி..” என்றார் அதைப் பெற்றுக் கொண்ட நடேசன் அதில் ஐந்நூறு ரூபாய்கள் இருந்ததை உறுதி செய்துகொண்டான். “அண்ணே வண்டி எண் மூணும் பதினாலும் மரக்கடை சேகர் சொல்லி எடுத்துக் கொடுத்திருக்கான் புத்தகத்தில குறிச்சு வச்சிருக்கேன். அப்புறம் போகும்போது பள்ளிக்கூடத்துல வாக்குச் செலுத்தீட்டுப் போயிடறேன்.. “

“சரி எங்கேயும் நேரம் எடுக்காதே ஆறு மணிக்குள்ள வந்துடனும் எனக்கு வெளில வேலை இருக்கு...” என்ற முதலாளிக்கு சம்மதம் சொல்லிவிட்டு வரிசையில் நின்ற பின் இருக்கை வைத்த மிதிவண்டி ஒன்றை வரிசையிலிருந்து வெளியில் எடுத்துப் புறப்பட்டான் பள்ளிக்கூடம் நோக்கி.

மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தான் எதிரில் வந்த மோட்டார் வாகனத்திற்கு இடம் கொடுத்து கொஞ்சம் ஓரமாக ஒதுங்கினான் மிதிவண்டியின் முன் சக்கரம் ‘தடக்’ சாலைப் பள்ளத்தில் குதித்து எழுந்தது அருகில் நடந்து சென்ற யாரோ சொன்னார்கள் ‘மிதிவண்டி ஓட்டைய நீக்க நீ இருக்க சாலை ஓட்டைய நீக்க யார் இருக்கா’ திரும்பிப் பார்த்தான் முகம் தெரியவில்லை இருந்தாலும் அதிக கவனம் செலுத்தாமல் பள்ளிக்கூடப் பயணத்தில் மும்முரமாக வண்டியை மிதித்தான்.

நல்ல தண்ணீர் குழாயடியைக் கடந்து செல்கையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணின் குரல் காதில் விழுந்தது ‘இந்த ஒரு குழாய் தான் மூணு தெருவுக்கும் ஒரு நேரம் போலையா இருக்கு இன்னொரு குழாய் போட்டுத்தர யாருக்கும் அக்கறை இல்ல’.

சின்னத்தாயம்மன் கோவிலைக் கடந்து செல்கையில் தன்னையுமறியாமல் கன்னத்திற்குச் சென்று மீண்டும் மிதிவண்டியைப் பிடித்தது நடேசனின் வலது கை.

பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான் மிதிவண்டி நிறுத்தத்தில் தான் மிதித்து வந்த வண்டியை நிறுத்திவிட்டு தான் வசிக்கும் பகுதி எண் எழுதப்பட்டு இருந்த வகுப்பறை தேடிச் சென்றான். வரிசையில் அதிகம் நபர்கள் இல்லை அதிகபட்சம் பத்துப் பேர். பலரும் வெய்யிலுக்கு முன்னதாகவே வந்து வாக்களித்துச் சென்றிருந்தார்கள். வரிசையில் நிற்கும்போது தனக்கு முன்னால் சென்றவர்கள் எந்த மேசைக்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று மனதில் வாங்கிக்கொண்டிருந்தான். தனது முறை வந்தது உள்ளே சென்றான் நடேசன். தனது பெயரையும் முகவரியையும் சொல்ல அந்த அதிகாரி ஏட்டில் சரி பார்த்தார். பின்னர் அடுத்த நபரிடம் இடது கை ஆள்காட்டி விரலைக் காட்டினான் நடேசன் அவர் இட்ட மையைப் பெற்றுக்கொண்டு சற்று தொலைவில் தடுப்புகள் மறைவில் வைக்கப்பட்டிருந்த மேசைக்குச் சென்றான் வாக்குச் சீட்டில் அசோகன் வாத்தியார் சொல்லியிருந்த சின்னத்தைத் தேடினான் கிடைத்துவிட அந்தச் சின்னத்திற்கு நேராக முத்திரையிட்டு சீட்டை மடித்து வாக்குப் பெட்டிக்குள் இட்டான்.

வெளியில் வந்து மிதிவண்டியை எடுத்துப் புறப்பட்டான் பேருந்து நிலையம் நோக்கி. இன்னும் சற்று நேரத்தில் பேருந்து ஏறினால் நகரத்திற்குச் சென்று பொருட்கள் வாங்கித் திரும்பிவிடலாம் முதலாளி சொன்ன நேரத்திற்குள்.

மிதிவண்டியை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு நிறுத்த மேற்பார்வையாளரிடம்  ரசீது பெற்றுக் கொண்டு திரும்புகையில் எதிரில் இருந்த பெட்டிக் கடை வாசலில் கைகளில் இன்றைய செய்தித் தாள்களுடன் இருவர், சில தெருக்களுக்கு தெருவிளக்கு இல்லாமல் சிரமமாக இருப்பதைப் பேசிக் கொண்டிருந்தனர். 

அருகில் இருந்த அந்தக் கட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மகிழுந்துகள் வருவதும் சிலர் அலுவலகத்திற்குள் செல்வதும் வெளியில் வருவதுமாக. அந்தப் பெட்டிக்கடைக்கு வந்த அந்தக் கட்சி அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் சட்டைப்பையில் வைத்திருந்த ஒரே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார்.

நடேசன் பேருந்தில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தான் பல எண்ணங்களோடு ‘வரும் பொழுது இந்த முறை மறக்காம வீட்டு முகப்பு நிலைக்கு ராமா கடைல இருந்து ‘நல்வரவு’ என்று எழுதப்பட்ட வரவேற்பு அலங்கார மணிகளை வாங்க வேண்டும். இன்று முதலாளியிடம் முன்பணமாக நாளைய படிக்காசைக் கேட்கவேண்டும். நகரத் திரையரங்கில் சில மாதங்களுக்கு முன் புதிதாக வெளியாகி சிறப்பாக ஓடிய முத்து திரைப்படம் இப்போ உள்ளூர் வசந்தா திரையரங்கிற்கு வந்திருக்கு வெள்ளையனோடு இரண்டாம் ஆட்டம் செல்ல வேண்டும்’.

by M.Manikandan

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

புதன், 14 ஜனவரி, 2015

தைத்தாய்க்கு வணக்கம் ... M.Manikandan




பழமைதனைப் பறைசாற்றிப் பருதிவொளி யாய்நீண்டு,
விழுதுகளாய் வேரூன்றி வினையழிக்கும் சூல்கொண்டு,
குழுவினராய் ஒன்றாகி, குலங்காக்கும் கற்கண்டு    
உழவர்களைக் காப்பாற்றும் உறுதிதனை உட்கொள்வோம் !

எழுதாத கவிதைகளாய் ஏறுழுது நிலம்காக்க
பொழுதெல்லாம் கண்விழிக்கும் புண்ணியரின் உயிர்காக்க,
புழுதிக்கால் கைகளுக்கு பொன்னாலே அலங்கரிக்க,
பழுதற்ற மனத்தாலே பகிர்ந்திடுவோம் உறுதிமொழி !

அழுகின்ற அவர்கண்கள் ஆனந்தம் பார்த்திடவே
விழுகின்ற வியர்வையிலே வைரங்கள் முளைத்திடவே
உழுதுண்டு வாழ்வதுவே உயர்வென்று காட்டிடவே
எழுந்திட்டோம் இனியென்ன என்றென்றும் நற்பொழுதே !

மழையென்னும் வரந்தரவே மரந்தொட்டு வணங்குகிறேன் !
கழநியிலே பெரியோரின் கால்தொட்டு வணங்குகிறேன் !
ஒழுக்கத்தின் ஒளிப்பிழம்பாம் ஒருஆன்மா வணங்குகிறேன் !
தழலொற்று வாழ்வேற்ற தைத்தாயை வணங்குகிறேன் !

By M.Manikandan

15-Jan-15

ஞாயிறு, 11 ஜனவரி, 2015


நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015”
___________________________________________
எழுத்துத் தளத்தில் அறிவித்திருந்த போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வென்ற படைப்பு இது. பரிசீலித்த மதிப்பிற்குரிய நடுவர்கள்: 

இன்றைய மகாகவி---- 
ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் 

யுகபாரதி - 
திரைப்பட பாடலாசிரியர் 

முனைவர் . பா . ரவிக்குமார் - 
(உலக கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்) 

விழிகள் நடராஜன் 
(எழுத்தாளர்) 
___________________________________________

-------------------- படைப்பு --------------------

முத்தமிழே வரலாற்றில் முந்திய தாகும்
இத்தமிழே இனியெங்கும் பேசிடக் கூடும் !
சத்துமிக்க அரசாங்கம் சங்கம மைக்கும்
இத்தரையோர் இணைந்தேறப் பாலமி ணைக்கும் !

வள்ளலுளப் பொறியாளர் மென்பொருள் கூட்ட
கள்ளமறக் கணினித்த மிழ்மலர் பூக்கும் !
வெள்ளையனார் குடியேற்றத் தேசமென் றாலும் 
வள்ளுவனார் கொடியங்கே பாதைவ குக்கும் !

வங்கிகளில் தமிழெண்ணில் ஐந்தொகை ஏறும்
பொங்குதமிழ் சமிக்ஞைக்குப் பூமியி யங்கும்  !
இங்கிலாந்து கொலுக்கூடம் சங்குமு ழங்கும்
தங்கரதம் தமிழ்த்தாய்க்கு கோவில மைக்கும் !

நாடனைத்தும் தமிழூறும் பள்ளிக ளாகும்
கூடவாங்கி லவிருப்பப் பாடமென் றாகும் !
வீடனைத்தும் குரள்தொட்டே வேளைதொ டங்கும்
மேடைதோறும் கரகாட்டம் மின்னியி ருக்கும் !

சிந்துசம வெளியின்னும் தொன்மைப டைத்த
சந்தமொழி உலகாண்டு ஒற்றுமை காக்கும் !
பந்தமென்றே பலநாடும் சேர்ந்துவ ணங்க 
பைந்தமிழில் உருவாகும் தேசிய கீதம் !

கொள்கையென தமிழ்பேசி நாமுமி ருந்தால்
கொள்ளைபோக இயலாமல் கூடியி ருப்பாள் !
நல்லவிலை கொடுத்தீட்டும் ஆங்கிலம் தீர
வல்லரசாய் தமிழென்றும் வையமி ருப்பாள் !

By M.Manikandan




புதன், 7 ஜனவரி, 2015

சாதி ஒழி மதம் அழி சாதி... M.Manikandan


சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015” (eluthu.com)
--------------------------------------------------------------------------------------------------------------------
அளந்து ஆசான் ஆக்கிய வொன்றை 
  விளங்கி வந்து சூத்திரம் வேறாய்ப்
பிளந்து ஈயப் பின்னவர் போற்றி
  வளர்ந்த தன்றோ பாத்திர மென்று !

குடிசைக் குள்ளே கொட்டிடு மற்கன்
  வடிவம் நூறு வட்டமும் கூரும்
படிக்கச் சொன்னார் பட்டமு மீன்றார்
  கிடுகை நீக்கும் திட்டம தில்லை !

பிழையாய் வேய்ந்த கூரையி னுள்ளே
  பிழைக்க வந்து, பிள்ளைக ளுக்கும்
மழைநீ ரூற்றம் மாற்றிட வொண்ணா
  வழக்க மென்றார் பின்னலி லோட்டை !

இரண்டு வர்ணக் கொம்புக ளோடே
  இரண்டு காளை வண்டியு மோடி
இரண்டு வொற்றைப் பாதைக ளாகி
  இரண்டும் சேரும் வோர்நிலை யாடி !

முளைத்த தண்டு வொன்றெனக் கண்டு
  கிளைத்த கப்பைக் கிள்ளிட நன்றே !
விளையும் கன்றைத் தள்ளுவ தெல்லாம் 
  வளர்ந்து வாழை உய்திட வென்றே !

ஒருநூல் சேலை ஓவியம் நூறு !
  அருகாய் வேர்கள் ஆணிய தொன்று !
பருகத் தண்ணீர் பன்நிலை நீர்க்கு !
  விருப்பம் வீரம் மானுட வேர்க்கு !

* மீ.மணிகண்டன்
* 07-Jan-14

வியாழன், 1 ஜனவரி, 2015

கற்பக விநாயகர் ... M.Manikandan

Karpaga Vinayagar Plllaiyarpatti


இரு விகற்ப நேரிசை வெண்பா

வடக்கினைப் பார்த்திருந் தேவர மீவார்
சுடர்மிகு வாழ்வினை நன்றே - குடவரைக்
கோவிலில் கற்பகப் பட்டியில் நம்குலக்    
கோவவர் நற்பிள்ளை யார் 

வடக்கினைப் பார்த்திருந் தேவரும் பக்தர்க்  
குடனருள் வார்த்திடு வார்பார் – குடவரைக்
கோவிலின் நாயகர் கற்பகப் பட்டியின்
கோவெனும் நம்பிள்ளை யார்

by M.Manikandan

நல்வரவு 2015 ... M.Manikandan

இரு விகற்ப நேரிசை வெண்பா

பல்வளம் வேண்டிடும் மானிட ருய்திட
நெல்நிலம் இல்லம் வசதியுடன் – நல்லொளி
மாதவம் பேறெனக் கூறிட வந்திடு
மேதகு வாங்கிலவாண் டே

பம்பரமாய்ச் சுற்றிநி தம்பலர் நொந்திட
மும்முரமா யீட்டும் பெரும்பணம் – நிம்மதிக்கு
சாதக மாகா தெனுமறி வூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே

மூத்தோர் மதியிற் சிறந்தோர்க் குநெல்பல 
பூத்த நிலத்திலு ரிஞ்சிட - மீத்தேனை 
பாதக மாமென புத்தியி லூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே 


by M.Manikandan