புதன், 29 அக்டோபர், 2014

கதிராய் எழுவாய் கதிரேசா ... M.Manikandan

கதிராய் எழுவாய் கதிரேசா

ஆனைமுக நாயகனே அருமருந்தே அற்புதமே
மோனைத்தமிழ் காக்கும் மூவாமுதல் நிலையே
சேனைமண வாளனை சேய்மொழியில் நான்பாட
தானைத் தளபதியே காத்தருள்வாய் கணபதியே

விண்ணாடும் நிலவொளியே வேல்பிடிக்கும் செஞ்சுடரே
என் நாடும் காத்தருளும் எழிற்பழனி வேலவனே
கண்ணான முருகனுனை கவிபாடி நானழைக்க
என்னாசைக் கண்மணியே எழுவாய் இதுசமயம்

தில்லை நடம் புரியும் சிதம்பரனார் புத்திரனே
கிள்ளை மொழி பயிலும் வள்ளி மணம் கொண்டவனே
முள்ளை எடுத்தாலும் முல்லையென மாற்றிவைக்க
பிள்ளை மனத்தரசே எழுவாய் இதுசமயம்

கண்ணுதலான் நல்மணியே கன்னல்மொழி நாயகமே
மண்ணிலத்தார் மன்றாடும் மாழைமயில் வாகனனே
விண்ணப்பித்தேன் என்குறைகள் வேகமாக மாறிடவே
அண்ணல் மலைக்கோவே எழுவாய் இதுசமயம்

பொல்லாத்திசைகளைந்து பொய்கையென வார்த்தருளும்
புல்லார் பகையழிக்கும் புள்ளிமயில் வேலவனே
செல்லாத காசெனவே பிள்ளைனிலை மாறும்முன்னே
வில்லார் வடிவழகா எழுவாய் இதுசமயம்

வானோர்குலம் காக்க வண்ணமயில் ஏரிவந்தாய்
தானவர் திரளழிக்க தற்பரமாய் நீயிருந்தாய்
மானாம் என் மிடிதீர்க்க மன்னவனே தாமதமேன்
தேனாம் தமிழ் தொடுத்தேன் எழுவாய் இதுசமயம்

தாலாட்டும் நேரமிதில் தாயுனை நான் தேடுகிறேன்
பாலூட்டும் வேளைதனில் பதுங்குவதேன் வேலவரே
வேலாட்டம் விழியிரண்டால் வேண்டும் வரம் நீயருள
கோலாட்டம் ஆடியிங்கு எழுவாய் இதுசமயம்

அள்ளிக்கொடுத்ததெல்லாம் ஆர்வலனே மாறியதேன்
சொல்லிக் கொடுத்தாரோ சூட்சுமத்தை நானறியேன்
கள்ளி மலராதோ கார்முகில்தான் பெய்யாதோ
வெள்ளி மயிலேரி எழுவாய் இதுசமயம்

ஆலைக்கரும்பாகி ஆட்டுவிக்கும் என் நிலையை
சோலைக் கதிராக்க சுந்தரனே தாமதமேன்
நாளையென தேதி சொல்லி நாளைக் கடத்தாமல்
வேளை பிறந்ததென்று எழுவாய் இதுசமயம்

ஒப்பேதும் இல்லையென்று உன்னடியை நம்பிவந்து
இப்போதழைப்பதுவும் கேட்டு மனம் மாறலையோ
சிப்பிக்குள் முத்தாகி எத்தனை நாள் அங்கிருப்பாய்
தப்பாமலே இணங்கி எழுவாய் இதுசமயம்

வாடா மலர்க்கரத்து வஞ்சியரின் நாயகனே
பாடாத செந்தமிழே பார்த்தருளும் தாயகமே
தேடி வருவோர்கள் தேம்புதல் உனக்கழகோ
நாடிக் குறை தீர்க்க எழுவாய் இதுசமயம்

சொல்லாத என்னிலையை சொல்லிவிட்டேன் இப்போது
கல்லாய் இருப்பதென்ன கந்தா மனமிறங்கு
இல்லார் நிலை மாற்றும் இன்முகத்துச் செண்பகமே
நல்லார் மனங்குளிர எழுவாய் இதுசமயம்

*** மீ.மணிகண்டன்

வியாழன், 2 அக்டோபர், 2014

அறிவிலி யான் ... M.Manikandan

மகத்துவம் அறியார்க்கு
மருத்துவம் இனியில்லை.
பொருளே புசித்தார்க்கு
புலரும் பொழுதில்லை.
மடியும் மாந்தர்க்கு
மகிழ்ச்சி யென்றில்லை – இதை
அறிந்தும் அறிவிலியான்
அகத்தவம் மேற்கொள்ளேன்.

by M.Manikandan