கவிச்சிறகுகள் இதழுக்கு நன்றி!
மீ.மணிகண்டன்
நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும் ... மீ.மணிகண்டன்
லேபிள்கள்
- அத்தனையும் பச்சை நிறம் (8)
- அமானுஷ்யச் சிறுகதை (1)
- அரேபியக் கதைகள் (4)
- ஆனந்த விகடன் (2)
- ஆனந்தசந்திரிகை (10)
- கட்டுரை (4)
- கவிச்சிறகுகள் (1)
- கவிதை (71)
- கனவு ஆசிரியர் (1)
- காதல் (6)
- குடைக்குள் கங்கா (10)
- சிறுகதை (29)
- நகைச்சுவை (6)
- நாடகம் (6)
- நாம் நகரத்தார் (3)
- பரிசு (9)
- பரிசு பெற்ற கவிதை (7)
- பரிசு பெற்ற சிறுகதை (6)
- பாக்யா (1)
- புத்தகம் (9)
- பேசும் புதிய சக்தி (2)
- மழலை மழைத்துளிகள் (11)
- வெண்பா (6)
- About (1)
- Article (3)
- Austin Tamil Sangam (1)
- Certificates (1)
- FeTNA (2)
- Invitations (1)
- Nagarathar (5)
- NATAWO (1)
- Padaippu (3)
- Post (3)
- SciFi (1)
- Stories (11)
- Thugal (1)
- WriterSCafe (1)
வியாழன், 20 ஆகஸ்ட், 2026
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026
WriterSCafe 2026ல் நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு
WriterSCafe 2026ல் நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு (ஆறுதல் பரிசுகள் வரிசையில் சிறுகதை 'விண்ணப்பம்'). போட்டி நடத்திப் பங்குபெற வாய்ப்பளித்த WriterSCafe குழுமத்தாருக்கு நன்றி.
இன்று தொலைபேசித் தொழில் நுட்பம் வளர்ந்து விரிந்துகிடக்கிறது. அதன் பயனைப் பற்றி நான் பேச வரவில்லை. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், மூச்சுக்காற்று தொட்டுக்கொள்ள முடியாத தூரத்தில் பிரிந்திருந்து வாழும் கணவன் மனைவிக்கு இடையில் உணர்வுகளும் உரையாடல்களும் எப்படி இருந்தது? எதார்த்தக் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அவர்களின் பிரிவிற்கு இடையில் எப்படியான பங்கு வகித்தது? அப்படியான மனிதர்களை... அவர்களின் வாழ்க்கையை... என் அரபு நாள்களில் நான் கண்டு வந்திருக்கின்றேன். அந்த மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் நான் எழுதிய சிறுகதை 'விண்ணப்பம்'.
அன்றைய கணவன், மனைவி, காதல், சமூகம், பொறுப்பு, இவற்றை இன்றைய சமூகம் அறிந்துகொள்ள ஒரு சிறுகதை 'விண்ணப்பம்'.
WriterSCafe பரிசுக் கதைகளை நூலாக்கி வெளியிடும்வரை, எனது 'விண்ணப்ப'த்தை வேறு எங்கும் பதிவிடுவது முறையாகாது. வெளிவரும் நூலில் வாசிக்கக் காத்திருக்க வேண்டுகின்றேன்.
நன்றி.
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026
மேடம் ஜெனி … மீ.மணிகண்டன்
மேடம் ஜெனி
எழுதியவர்: மீ.மணிகண்டன்
இதில் கூறப்பட்டிருக்கும் நிகழ்வை நான் திரு பவா செல்லத்துரை அவர்களிடம் கதையாகக் கூறி பாராட்டுப்பெற்றிருக்கிறேன். கதையாக இது வம்சி புக்ஸ் பதிப்பித்த எனது 'அத்தனையும் பச்சை நிறம்' நூலிலும் பதிவாகியிருக்கிறது. ஆனால் இங்கே குறிப்பிட்டிருக்கும் அந்தப் பழைய நினைவு மட்டும் நான் கடந்துவந்த உண்மை நிகழ்வு.
… மீ.மணிகண்டன்
------------------------------------------------------------------------------------------------------------------------
'டக் டக்'
கதவு தட்டும் ஓசை கேட்டுக் கைத்தடியின் துணையுடன் வந்து கதவைத்திறந்தார் மேடம் ஜெனி. எந்தத் துணையுமின்றி நிமிர்ந்து நடக்கமுடிந்தாலும் முதுமைப் பருவத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே கைத்தடி உபயோகிப்பவர் ஜெனி.
"ஏன் மேடம் ஒரு காலிங் பெல் வைக்கலாமே?" என்றாள் காமிரா சகிதமாக வெளியில் நின்றுகொண்டிருந்த அந்த இளம்வயதுப் பெண்மணி ரிச்சா.
வார்தையேதும் பேசாமல் சிறிய புன்னகையை பதிலாக்கிவிட்டு "உள்ள வாம்மா" என்று ரிச்சாவை வீட்டினுள் வரவேற்றார் ஜெனி.
"எங்க ரைட்டர் மணியும் வந்திருக்கார் நாங்க உள்ள வரலாமா?" என்று மணிக்கும் சேர்த்து அனுமதிகெட்டாள் ரிச்சா. காரைப் பார்க் செய்துவிட்டு வந்த மணிக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வயதிருக்கும்.
"வாங்க."
" மேடம் நாங்க ஒரு யூடியூப் சேனல்ல இருந்து வர்றோம்" என்ற ரிச்சாவின் தன்னிலை விளக்கம் ஜெனிக்கு எந்த மாற்றத்தையும் தரவில்லை.
"உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க" என்று வெளியறையிலிருந்த சோஃபாவைக்காட்டி இருவரையும் இருக்கச்சொன்னார் ஜெனி.
"நாங்க எதுக்காக வந்திருக்கோம்னு நீங்க இன்னும் கேட்கலையே?" என்றார் ரைட்டர் மணி. தொலைக்காட்சியில் ஜெனி பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூன் படம் இன்னும் ஓடிக்கொண்டிருந்தது.
"நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன் அதுவரை டி.வி. பார்த்திட்டிருங்க. சேனல் மாத்தவா?" என்றார் ஜெனி.
"என்ன மேடம் நாங்க வந்ததிலிருந்து எங்க கேள்விக்கு தொடர்பான பதில் சொல்லாம நீங்களே பேசிட்டிருக்கீங்களே?" என்றாள் ரிச்சா.
"இந்தத் தெருவிலேயே இதுதான் பழைய வீடு, நீங்க யூடியூப் சேனல் வச்சிருக்கீங்க, இந்த வீட்டைப் படம் பிடிக்கலாமான்னு கேட்கப்போறீங்க, அதானே? போன வாரந்தான் ஒரு பையன் வந்து எடுத்துட்டுப் போய் அவன் சேனல்ல போட்டான், நிறைய வியூஸ் போயிருக்குன்னு சொல்லி எனக்கு நேத்து வந்து ஸ்வீட் கொடுத்துட்டு போனான். அதுனால நீங்களும் அதுக்குத்தான் வந்திருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்", என்று அனைத்தும் அறிந்த புன்னகையோடு தொடர்ந்தார் ஜெனி "டீ சாப்பிடுவீங்கதானே?" என்று கேட்டுக்கொண்டே சமயலரை நோக்கி அடிவைத்தார்.
"நீங்க சொன்னது பாதி சரி ஆனா மீதி நாங்க சொல்லாம உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை" என்று பாதிப்புதிர் போட்டார் மணி.
சமையலரைப்பக்கம் போக எத்தனித்த ஜெனி இதுவரை தனக்கு எல்லாம் தெரியும் என்று நிமிர்ந்து நடந்துகொண்டிருந்தார் இப்போது சட்டெனத்திரும்பி மணியை நோக்கினார். புருவங்களிரண்டும் கேள்விக்குறிகளாக நெளிந்தன. பார்வையில் கவனம் கூடியது. யானைக்கும் அடிசறுக்கும் என்ற பாடம் மனதில் தைத்தது.
மணி தொடர்ந்தார். “நாங்க உங்களைத்தான் படம்பிடிக்கப் போறோம். உங்க வீட்டை நீங்க சொன்ன அந்தப் படத்தில பார்த்தேன். பழைய வீட்டில வசிக்கும் நீங்க பழமையை விரும்புறதா ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்க. எனக்கும் பழமையின்மீது விருப்பம் அதிகம். உங்களின் பழைய நாட்களில் இந்த நிலம் எப்படி இருந்தது? இந்த மனிதர்கள் எப்படி இருந்தாங்க? இன்றைய மனிதர்களோடு உங்களால ஒத்துப்போக முடியுதா? இப்படிப்பல கேள்விகள் என்னிடம் இருக்கு. உங்களுக்கு சம்மதம்னா உங்களிடம் பேசிப் பேட்டி எடுக்கணும்னு தோணுச்சு அதான் வந்தோம்."
இப்போது அவர்களின் வருகைக்கான காரணத்தை முழுவதுமாக அறிந்துகொண்ட ஜெனி, "இது எனக்குப் புதுசுதான். நான் ஒரு பிரபலமோ இல்ல ஒரு சாதனையாளரோ இல்லை, இருந்தாலும் நீங்க சொன்ன அந்த பழமை காரணம் எனக்கு மிகவும் நெருக்கமா இருக்கு அதனால நான் இதுக்கு சம்மதிக்கிறேன், கொஞ்சம் இருங்க டீ கொண்டு வந்துடறேன் பிறகு பேசுவோம்" என்று கூறிவிட்டு சமையலறைக்குத் தொடர்ந்தார் ஜெனி.
சுடச்சுட ஆவி பறக்கும் தேநீரை மூன்று கோப்பைகளிலும், உடன் பிஸ்கட்டுகளுடனும், சமையலறையிலிருந்து திரும்பினார் ஜெனி. மணி மற்றும் ரிச்சா அமர்ந்திருந்த சோஃபாவின் எதிர் டீபாயில் வைத்துவிட்டு "எடுத்துக்குங்க" என்று விருந்தோம்பிய பின்னர் தானும் எதிரிலிருந்த தனிநபர் சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.
ரிச்சா காமிராவைத் தொடங்கி மூவரும் திரையில் பதியும் வண்ணம் சற்று தூரத்தில் நிறுத்திவைத்தாள். சோஃபாவில் முன்னர் இருந்த அதே இடத்தில வந்து அமர்ந்துகொண்டாள்.
"ஏன் மேடம் நீங்க தனியாத்தான் இருக்கீங்களா?" என்றாள் ரிச்சா.
"ம்..." சற்று யோசித்துவிட்டு "ஆமா ரெண்டு வருஷமா நான் தனியாத்தான் இருக்கேன்" என்று ஜெனி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "மீ… ம்..." என்று மெலிதாகவும் செல்லமாகவும் சிணுங்கிக்கொண்டு ஒரு வெள்ளைப் பூனை ஜெனியின் மடியில் தாவி அமர்ந்தது. "ஓ... மன்னிக்கணும்... பார்த்தீங்களா நான் தனியா இருக்கேன்னு சொன்ன உடனே இவளுக்கு கோபம் வந்துடுச்சு" என்று கூறி அந்தப் பூனையின் முதுகில் தடவிக்கொடுத்தார் ஜெனி. "நான் தனியா இல்ல, இதோ இந்த ரோசியோட தான் இருக்கேன்" என்று வெள்ளைப் பூனையின்மீது பார்வையைச் செலுத்தினார் ஜெனி.
"சரி என்னோட பழமையை நீங்க தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி பழமைக்கு நீங்க எவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும், சரியா?" என்று ரிச்சா மற்றும் மணி எதிர்பாராத கேள்வி ஒன்றைத் தொடுத்தார் ஜெனி.
"மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம், நாங்க எந்த உள்நோக்கத்துடனும் இங்கே வரலை உங்க கனிவான முகம் மட்டும்தான் எங்களை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கு, எனவே நீங்க எதைக் கேட்டாலும் நாங்க உண்மையைத்தான் சொல்லப் போறோம் பயமில்லை" என்று மிகவும் திறந்தமனமாக பதிலளித்தார் மணி.
"உங்களோட பள்ளிக்கூட நாட்களை என்னோட பகிர்ந்துக்க முடியுமா? "
சற்றே ஆவல் மிக, பதிலுக்கு ஜெனியிடம் எதிர்க்கேள்வி தொடுத்தாள் ரிச்சா, "பழமையில எவ்வளவோ இருக்கும்போது, அது ஏன் பள்ளிக்கூடம்னு குறிப்பா சொல்றீங்க?"
"பொதுவா எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான நாட்கள்னா அது விவரம் புரியாம இருந்த அந்த பள்ளிக்கூட நாட்களா மட்டுந்தான் இருக்க முடியும். இது என்னோட அபிப்ராயம். நான் ஸ்கூல் போன நாட்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால" என்றார் ஜெனி.
இப்போது ரிச்சா மற்றும் மணி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினர். அவர்களுக்குள் யார் தொடங்குவது என்ற குழப்பம் அவர்களின் பார்வையிலிருந்தது. சட்டென மணியின் முகத்தில் ஒளி பூத்தது.
"நானே சொல்றேன்" என்று தொடங்கினார் மணி. "அது 70களின் பிற்பகுதி அல்லது 80ன் தொடக்கமா இருக்கலாம். அப்போ சென்னைல, நான் அந்தப் பள்ளிக்கூடத்தில பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ நான் பார்க்கிறதுக்கு குண்டா அமுல் பேபி மாதிரி இருப்பேன்னு சொல்லுவாங்க. பனிமூட்டமா எனக்கு அந்த ஞாபகங்கள் இன்னும் இருக்கு. அந்த வகுப்பு மிஸ்ஸுக்கு நான் என்றால் கொள்ளைப் பிரியம். அவங்க அப்ப இருபதுகளில் இருந்திருப்பாங்கன்னு இப்பத் தோணுது. அப்ப அவங்க வயசைக் கணிக்கிற பருவம் எனக்கு இல்லை. வகுப்பு எடுத்து முடிஞ்ச பிறகு என்னை அவுங்க மேசை அருகே அழைப்பாங்க. என்ன சாப்பிட்டே? என்று விசாரிப்பாங்க நான் என்னவோ சொல்லியிருப்பேன் அது சரியா ஞாபகம் இல்லை.
ஒரு சில நாட்கள் எங்க மிஸ்ஸை சந்திக்க ஒரு வாலிபர் வருவார். அவருக்கு மெல்லிசா மீசை இருக்கும். அவரைப் பார்த்து எனக்கு மீசை இருந்தா எப்படி இருக்கும்னு எனக்கு நானே ஆள்காட்டி விரலை என் மேலுதட்டுக்கு மேல மீசை மாதிரி வச்சுப் பார்த்துக்குவேன்.” லேசான நாணப் புன்னகையுடன் தொடர்ந்தார் மணி, “வகுப்பில் நுழையும் வாசல் கதவோரம் அவர் வந்து நிற்பார், அவரை பார்த்துட்டு மிஸ் வராண்டாவுக்கு போய் அவரோட ஓரிரு வார்த்தைகள் பேசுவாங்க. பிறகு அந்த வாலிபர் போயிடுவார். அவங்க என்ன பேசுவாங்க? வந்தவர் யார்? என்பதெல்லாம் எனக்கு தெரிஞ்சுக்கத் தோணாத வயசு.
ஒருநாள் மதிய உணவு இடைவேளை சமயம் அவர் வந்தார். க்ளாஸ் முடிஞ்சு எல்லோரும் சாப்பாட்டுக்குப் புறப்பட்டபோது என்னைமட்டும் எங்க மிஸ் அழைச்சு என்னோட சாப்பாட்டை எடுத்துக்கிட்டு அவங்ககூட வரச்சொன்னாங்க. நானும் டிபன் பாக்ஸை எடுத்துக்கிட்டு அவங்களோட போனேன். மிஸ், நான் அப்பறம் அந்த வாலிபர் மூணு பேரும் நடந்து ஸ்கூலுக்குப் பின்புறம் இருக்க தேவாலயத்துக்கு நடந்து போனோம். மதிய வேளை மணல் வெளியில் நடந்து போனோம். மணல் சூடா இருந்திருக்கும் ஆனால் நான் ஷூ போட்டிருந்ததால கால்கள் சுடலை. தேவாலயத்தில இருந்த அந்த நீளமான பெஞ்சில என்னை உட்காரச் சொல்லிட்டு எனக்கு இடப்புறமும் வலப்புறமுமா அவங்க ரெண்டுபேரும் உட்கார்ந்து என்னவோ பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க என்ன பேசுறாங்கன்னு புரிஞ்சுக்கற வயசில்ல எனக்கு. நான் அமைதியா என்ன செய்யுறதுன்னு தெரியாம உட்கார்ந்திருந்தேன். சட்டென மிஸ்ஸுக்கு என் நினைவு வந்திருக்கணும், உடனே என் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடச் சொன்னாங்க. நானும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிஞ்சு காலியான டப்பாவை மூடி பைக்குள்ள வச்சுட்டு கை கழுவ வேணும்னு சொல்லத்தெரியாம உட்கார்ந்திருந்தேன். அவங்க ரெண்டுபேரும் பேசி முடிச்சிட்டாங்கபோல, "வா போகலாம்" அப்படீன்னு என்னை பெஞ்சிலிருந்து எழச்சொன்னாங்க மிஸ். எழுந்தேன், தேவாலயத்தின் வெளிப்புறம் ஒரு இடத்துல தண்ணீர்த்தொட்டி இருக்கும் அந்த இடத்தை காட்டி என்னை “கை கழுவலாம் வா” அப்டீன்னு சொல்லி அழைச்சுட்டு போனாங்க எங்க மிஸ். அப்பறம் மீண்டும் கிளாசுக்கு திரும்பி நடந்தோம், ஆனா இப்போ நானும் மிஸ்ஸும் மட்டும்தான் கிளாசுக்கு நடந்து போனோம், அந்த வாலிபர் வேறு திசையில போயிக்கிட்டிருந்தார். அவர் போறதுக்கு முன்னாடி மிஸ்கிட்ட ஒரு சிறிய பரிசுப் பொருள் ஒன்றை கொடுத்துட்டுப் போனார்.
நானும் மிஸ்ஸும் இப்ப கிளாசுக்கு மீண்டும் அந்த மதிய வெயிலில் சூடான மணலில நடந்துபோயிட்டிருந்தோம். நடந்துகொண்டே மிஸ் அந்த பரிசுப் பொருளைப் பிரிச்சாங்க அதுக்குள்ளே ஒரு சின்னப்பெட்டி இருந்துச்சு அதைத் திறந்து அதிலிருந்து எடுத்த ஒரு சாக்லெட்டை எனக்குத் தந்தாங்க.இவ்வளவுதான் என் நினைவலைல மிதந்துகிட்டிருக்கு. வாலிபர் யார்? மிஸ்ஸுடன் என்ன பேசினார்? மிஸ்ஸுக்கு ஏன் சாக்லேட் கொடுத்தார்? மிஸ் எனக்கு ஏன் சாக்லேட் கொடுத்தாங்க? மிஸ்ஸும் அவரும் தேவாலயம் போகும் சமயம் மிஸ் ஏன் என்னை அழைச்சுட்டு போனாங்க? இதுமாதிரி நிறையக் கேள்விகள் என்னிடத்தில் இருக்கு ஆனா எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.
ஆனால் இன்னிக்கு இதையெல்லாம் தொகுத்து ஒரு சாமானியனா சிந்திச்சுப் பார்க்கும்போது ஒருவேளை அது காதலாக இருந்தால்... ஒன்று மட்டும் எண்ணத்தோணுது, அன்றைய தினம் காதல் எத்தனை கண்ணியமாக புனிதமாக இருந்திருக்கு!
அந்த மிஸ்ஸின் பேரோ முகமோ என் ஞாபகத்தில் இல்லை, ஆனால் இந்த நிகழ்வு மட்டும் ஏன் என்னிடம் தங்கியிருக்கு?"
சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது, ரிச்சா எதிர்பார்க்கவில்லை மணியிடமிருந்து இப்படியொரு காதல் கதை வெளிவருமென்று. பழைய நினைவைச் சொல்லிமுடித்த மணியின் கண்களில் நீர் பனித்திருந்தது.
சூழ்நிலையை மாற்ற எண்ணிய ரிச்சா, "நீங்க சொல்லுங்க மேடம் மணி சொன்னது உங்களுக்கு திருப்தியா?" என்று கேட்டுக்கொண்டே ஜெனியின் பக்கம் திரும்பினாள். ஜெனி கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்திருந்தார். ரோசி ஜெனியைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் மடியிலிருந்து துள்ளிக்குதித்து இறங்கி ஓடியது.
கண்களைத் திறந்த ஜெனி "கொஞ்சம் இருங்க" என்று வீட்டின் உள்ளே சென்றார். சற்று நேரத்தில் மணி மற்றும் ரிச்சாவின் இருப்பிடம் நோக்கித் திரும்பிய ஜெனியின் கைகளில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. கொண்டு வந்து பெட்டியைத் திறந்து மணியிடம் நீட்டினார் ஜெனி.
"உன் பேர் எனக்கு ஞாபகம் இல்ல தம்பி. ஆனா என்னைவிட நீ நல்லா ஞாபகம் வச்சிருக்க" என்று ஜெனி சொல்லிவிட்டு கைக்குட்டையால் தனது விழிகளின் ஓரம் விழாமல் நின்ற நீர்துளியைத் துடைத்துக்கொண்டார்.
பெட்டியைப் பார்த்த மணி சட்டென உடல் புல்லரித்து நிமிர்ந்து அமர்ந்தார். அது அன்று அந்த மிஸ்ஸுக்கு அந்த வாலிபர் பரிசாகக்கொடுத்த சாக்லேட் பெட்டி.
… மீ.மணிகண்டன்
குறிப்பு: வம்சி புக்ஸ் வெளியிட்ட எனது 'அத்தனையும் பச்சை நிறம்' சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்ற கதை.
பிரபலமான இடுகைகள்
-
2022 ம் ஆண்டு குவிகம் நடத்திய குறும்புதினப் போட்டியில் தேர்வான குறும்புதினம். முதல் பயணம் . எழுதியவர்: மீ.மணிகண்டன்
-
சிறுகதையின் தலைப்பு: புத்தகம் மூடிய மயிலிறகு எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ) சிறுகதை இடம்பெற்ற புத்தகமும் பரிசும் ... மணிமீ ...
-
நகரத்தார் எழுத்தாளர்கள் பரிசுக்கவிதை கொடுத்த தலைப்பு: நகரத்தார் பெருமைகள் கவிதை எழுதியவர்: மீ.மணிகண்டன் நகரத்தார்கள் பெருமைகள்... மீ.மணி...

