ஞாயிறு, 17 டிசம்பர், 2023

நேற்றுவரை



நேற்றுவரை 
நினைத்திருந்தேன் 
ஜன்னலில் காற்று வரும்
இன்று புரிந்துகொண்டேன் 
ஜன்னலில் காதல் வரும்.
...மணிமீ  
Dec/17/2023

சனி, 16 டிசம்பர், 2023

பறந்து கொண்டிருக்கும் ... மீ.மணிகண்டன்

பறந்து கொண்டிருக்கும் ... மீ.மணிகண்டன் 

     பறந்து கொண்டிருக்கும் 
     அந்தக் குருவியிடமிருந்து 
     அனுமதிபெறாமல் உதிர்ந்த 
     ஒற்றை இறகில்தான் நான் 
     கவிதை எழுதிக் 
     கொண்டிருக்கின்றேன் 
     உரிமம் கோரித் 
     திருமுப்புவதற்கு முன் 
     ஒரு முறை வாசித்துவிடுங்கள்... 

#மணிமீ 
16-Dec-2023


வியாழன், 14 டிசம்பர், 2023

பாரதி பாரதி பாரதி ...மீ.மணிகண்டன்

பாரதி பாரதி பாரதி ...மீ.மணிகண்டன்

பாரதி பாரதி பாரதி 
பக்கம் எங்கும் பாரதி 
பதினொன்று டிசம்பர் என்றால் 
பளபளப் பாவான் பாரதி 

       எழுதிவிட் டால்அது போதுமா?
       ஏழையை விடியல் நாடுமா?
       பழுதுபட் டிருக்கும் மானிடா
       பாடுவ தால் பசி நீங்குமா?
       
ஓரிரு வரிகள் எழுதி  
ஒற்றுமை என்றால் போதுமா?
பேரிருள் நீக்கிட அவன்போல்
பிறர்க்கென வாழ்ந்திடத் தெரியுமா?

       காக்கை குருவியைக் கண்டு 
       காதல் சொன்னான் என்று  
       கவிதையை எடுத்துக் கொண்டாய் 
       கருத்தினைக் காற்றில் விட்டாய்?
       
சாதிகள் இல்லை என்றான் 
சமநிலை கொண்டிடு என்றான் 
சாதிகள் தீர்த்தே உன்னால்
சரித்திரம் காண முடியுமா?

       ஆண்டுகள் தோறும் சிலைக்கு 
       அழகிய மாலை எதற்கு?
       தொண்டுகள் செய்திட மறந்து 
       தோற்றது உந்தன் கணக்கு 
       
சிந்தனை முழுதும் நஞ்சடா 
சிரிக்கும் அற்ப மானிடா 
வந்தனை எதற்குச் செய்கிறாய்?
வஞ்சனை உந்தன் குணமடா

       பாரதி பெயரைச் சொல்லி 
       பாரில் அரசியல் நடக்கும் 
       பாரதி சொன்ன அரசியல் 
       பாழுங் கிணற்றில் கிடக்கும் 
       
அழுது புலம்பி நடிப்பாய்  
அரசியல் லாபம் செய்வாய்  
எழுது முடிந்தால் உன்னையும் 
எழுத முடிந்தால் உண்மையும்

       மீண்டும் டிசம்பர் பிறக்கும் 
       பதினொன் றதிலே இருக்கும் 
       வேண்டும் என்றால் திருந்து 
       வேண்டாம் என்றால் வருந்து
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 7 செப்டம்பர், 2023

முதல் பயணம் ... மீ.மணிகண்டன்


2022 ம் ஆண்டு குவிகம் நடத்திய குறும்புதினப் போட்டியில் தேர்வான குறும்புதினம். முதல் பயணம். எழுதியவர்: மீ.மணிகண்டன்

 




 




























சனி, 12 ஆகஸ்ட், 2023

நகரத்தார் எழுத்தாளர்கள் பரிசுக்கவிதை: நகரத்தார் பெருமைகள்

நகரத்தார் எழுத்தாளர்கள் பரிசுக்கவிதை

கொடுத்த தலைப்பு: நகரத்தார் பெருமைகள்
கவிதை எழுதியவர்: மீ.மணிகண்டன் 

நகரத்தார்கள் பெருமைகள்... மீ.மணிகண்டன்

ஆயிரங்கள் ஆண்டுகண்ட ஆதிவர லாறுஇது;
தூயவர்கள் தோற்றுவித்த தொன்மைவர லாறுஇது;
தாயபிள்ளை யாயிவர்கள் தாண்டிவந்த காலம்பல;
பாயும்நதி போலிவர்கள் போகும்தூரம் இன்னும்பல;

வணிகத்தில் கணக்கெழுதும் வழிகண்டு சொன்னவர்கள்;
குலதெய்வத் துணையோடு கொண்டுவிற்று வென்றவர்கள்;
ஒர்கடவுள் முருகனென்ற உண்மைதனை அறிந்தவர்கள்;
ஓயாமல் என்றுமென்றும் ஓமுறைக்கும் உத்தமர்கள்;

மன்னனுக்கு அறிவுசொல்லும் மாமேதை இனத்தவர்கள்;
மாறுகின்ற காலத்திலும் மாறாமல் இருப்பதற்கு
புள்ளிஎன்ற கணக்குச்சொன்ன புத்திசாலி மானிடர்கள்;
புகழ்பெறுவார் இன்னுமின்னும் பூமிக்கொரு பகலவன்போல்!

...மீ.மணிகண்டன் 

நிகழ்ச்சிக் காணொளி மற்றும் படங்கள்:




திங்கள், 17 ஜூலை, 2023

யாருக்கு இன்டெர்வியூ? … மீ.மணிகண்டன்

நாடகமாக்குவதற்காக எழுதப்பட்ட கதை.

இக்கதையின் நிறைவு, இப்படியும் நடக்குமா? என்று logic கேட்பீர்களேயானால் உங்களுக்காக சொல்லிக்கொள்கிறேன், இது எனது கற்பனையில் நான் நகைச்சுவைக்காக எழுதியது. நன்றி. ...மீ.மணிகண்டன்

யாருக்கு இன்டெர்வியூ?

சிறுகதை: மீ.மணிகண்டன்

நாள்: 02-Dec-2019

இடம்: U.S.A.

யாருக்கு இன்டெர்வியூ? … மீ.மணிகண்டன்
சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியூவிற்கு நன்றாகத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கிச்சென்று கொண்டிருந்தான், எதிர்பாராத விதமாக எதிரில் நண்பன் சினேகன் வரவைப்பார்த்து "வாடா இப்பதான் வறியா ?"

"ஆமா... "சற்று நிதானித்துத் தொடர்ந்தான், "சொல்லவே இல்ல ..." என்றான் சினேகன்.

"என்னடா.."

"நாளைக்கு இன்டெர்வியூவாம்..."

"யாரு சொன்னா...?", கேட்டான் பிரகாஷ்.

"அம்மாதான்... நேற்று வீட்டிற்கு வந்திருந்தாங்க... அப்ப... சொன்னாங்க..."

"முதல்ல உட்காரு..." என்று சினேகனை உட்காரச்சொல்லிவிட்டு தானும் சோஃபாவில் அமர்ந்தான். "இதென்ன முதல் இன்டெர்வியூவா... எத்தனை இடத்துக்குப் போய் வந்தாச்சு..." அலுத்துக்கொண்டான் பிரகாஷ்.

"யு டோன்ட் ஒர்ரி டா, இப்பதான் சனி திசை மாறுது இல்ல.... உனக்கு எல்லாமே நல்லா நடக்கும்.."

"இது யாரு சொன்னா..?"ஆச்சர்யமாக கேட்டான் பிரகாஷ்.

"ம்... அம்மாதான்..."

"ஏண்டா.. அம்மா உங்க வீட்டுக்கு வந்தது என்னப்பத்தி எல்லாத்தையும் சொல்றதுக்குத்தானா... வரட்டும் வச்சுக்கறேன்..."

"அதிருக்கட்டும்... இப்ப எங்க இருக்காங்க அம்மா..."

"ம்... அக்கா வீட்டுக்குப் போயிருக்காங்க நாளைக்குத்தான் வருவாங்க..." என்று பதிலளித்தான் பிரகாஷ்.

"ஒ... அப்ப தனியாத்தான் இருக்க... சரி விடு...  இந்தத்தடவை நீ பாஸ் பண்ற... அத நாம கொண்டாடுறோம்.... கிளம்பு..." என்று எழுந்து பிரகாஷ் கையைப் பிடித்து எழச்சொன்னான் சினேகன்.

"கொண்டாட்டம் எல்லாம் இன்டெர்வியூவிற்கு அப்பறம்..." என்று மறுத்த பிரகாஷ் தொடர்ந்தான், எனக்கு வேற சனி திசை ஆரம்பிக்குதாம் இன்னிலேருந்து ரொம்ப கவனமா இருக்கணும், அவசியம் இல்லாம நான் வெளியில வர்றதா இல்ல..." என்று தீர்மானமாகச்சொன்னான் பிரகாஷ்.

"அது நீயா தனியா போகும்போது பாத்துக்கோ, இப்ப என் கூடத்தான் வரப்போறே... சோ  டோன்ட் ஒர்ரி..." என்றான் சினேகன்.

"இப்ப எங்க என்ன இவ்வளவு அவசரமா கூப்புடுற..." என்று சற்று வேகமானான் பிரகாஷ்

"பிரகா..ஷ், நீயும் தனியாத்தான் இருக்க வா ரெஸ்டாரெண்ட் போயிட்டு டின்னர் முடிச்சுட்டு வருவோம்..." என்றான் சினேகன்

சட்டென சனியின் நினைவு வந்தது பிரகாஷிற்கு, 'அச்சச்சோ.... சனி ஸ்டார்டிங்... வெளில வந்தா ஒண்ணுக்கு ரெண்டா செலவாயிடும்.... நோ நோ... நான் வரல..."

"பிரகாஷா.... " சற்று யோசித்தான் சினேகன், பின் தொடர்ந்தான், "சரி இப்படி வச்சுக்குவோம்..."

"என்ன...?"

"நான் சாப்பிடறதுக்கு நான் பில் பெ பண்றேன்.... உன் சாப்பாட்டுக்கு நீ பெ பண்ணு... ஓகே ?" என்று கேள்வி தொடுத்தான் சினேகன்.

நண்பனின் வற்புறுத்தலை தவிர்க்கமுடியாமல் பிரகாஷும் யோசித்தான், 'சரி நான் சாப்பிடறதுக்கு நான்தானே பெ பண்ணப் போறேன்... ஓகே சொல்லுவோம்', என்று சிந்தித்தபடி சினேகனுக்கு பதிலளிக்கத்தொடங்கினான், "சரி... ஆனா வெஜ் ரெஸ்டாரெண்ட் தான் போகணும்... அப்பனா வறேன்..."

பிரகாஷின் சம்மதம் கிடைத்ததே பெரிய சங்கதி என்று எண்ணிக்கொண்டு, "சரி", என்றான் சினேகன்.

ரெஸ்டாரண்ட் சென்ற இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து மெனுவை வாசிக்கத்தொடங்கினர். உணவு பரிமாறுபவர் அருகில் வந்து "என்ன சாப்பிடறீங்க..." என்றார் பிரகாஷைப் பார்த்து.

"அவனைக் கேளுங்க அதுக்குள்ளே நான் கொஞ்சம் மெனு பார்த்துக்கறேன்.." என்றான் பிரகாஷ்.

"சார் என்ன சாப்பிடறீங்க..." என்றார் சினேகனைப் பார்த்து

"காபேஜ் கட்லெட் இரண்டு, ஆனியன் ரவா கீ அதிகமா போட்டு ஒண்ணு, அப்பறம் மினி இட்லி வித் சாம்பார்..." என்று தன் ஆர்டரை முடித்தான் சினேகன்

ஆர்டர் எடுத்துக்கொண்ட அவரும் மீண்டும் பிரகாஷிடம் வந்து, "சார் ரெடியா..." என்றார்

சனியின் நினைவு வரவே ஏதும் வில்லங்கத்தில் மாட்டிவிடக் கூடாது என்று எண்ணி தன் பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தான் பிரகாஷ், வாலெட் இருந்தது. மெனுவை மூடி வைத்துவிட்டு, "ம்..." என்றான் பிரகாஷ்.

"சொல்லுங்க..."

சற்று யோசனைக்குப் பிறகு, "ஒரு… மசால் தோசை..." என்றான் பிரகாஷ்

"வேற..." என்றார் ஆர்டர் எடுத்தவர்.

"ம்.." அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "மசால் தோசை..." என்று சொல்லிவிட்டு அவ்வளவுதான் எண்பதுபோலத் தலையசைத்தான் பிரகாஷ்.

"ஓகே சார்... வேற..." என்றார் ஆர்டர் எடுப்பவர் மும்முரமாக கையில் டச் பேடில் ஆர்டர் குறித்துக்கொண்டே...

தான் தலையசைத்தது இவருக்குப் புரியவில்லையோ என்ற நினைப்பில், "மசால் தோசை அவ்வளவுதான் சார்.." என்று முழுதாகச்சொல்லி முடித்தான் பிரகாஷ்.

"ஓகே... சார்.." என்று நகர்ந்தார் ஆர்டர் எடுத்தவர்.

ஆர்டர் எடுப்பவர் சென்றதும், சினேகனைப் பார்த்துக் கேட்டான் பிரகாஷ், "ஏண்டா காலைல இருந்து ஏதும் விரதமா..."

"ஏண்டா..."

"இல்ல... வரிசையா ஆர்டர் பண்றியே.. அதான்..."

"வர்றது எப்பவோ ஒரு தடவை... வரும்போது என்ஜாய் பண்ணனும்... அதான் இத்தனை ஆர்டர்..."

"ஓகே ஓகே..." என்று சினேகனுக்கு பதில் சொன்னாலும் மனதுக்குள் நினைத்துக்கொண்டான் 'நீ சாப்பிடறதுக்கு நீதானே பெ பண்ணப்போற'. பிரகாஷின் கை ஒரு முறை பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்துக்கொண்டது.

சற்று நேரத்தில் அவர்கள் ஆர்டர் மேசைக்கு வந்தது.

"சார் கேபேஜ் கட்லெட்.." என்றார் பரிமாறுபவர்

"அங்க வைங்க.." என்று எதிர்பக்கத்தைக் காட்டி சினேகனிடம் வைக்கச்சொன்னான் பிரகாஷ்,

"ஆனியன் ரவா..."

"அதுவும் அங்கே வைங்க..." என்று எதிர் திசையைக் காட்டினான் பிரகாஷ்.

"இது மினி இட்லி..."

"அதுவும் அங்கே தான்..." என்றான் புன்னகையோடு பிரகாஷ்.

சினேகனின் ஆர்டரை பரிமாறி முடித்த அவர், மூன்று தனித்தனி தட்டுகளில் மூன்று மசால் தோசைகளை பிரகாஷின் முன் வைத்தார் சிப்பந்தி.

"என்னது மூணு..." என்று சந்தேகமாகக் கேள்வி தொடுத்தான் பிரகாஷ்.

"உங்க ஆர்டர் சார்.." என்றார் புன்னகையோடு சிப்பந்தி.

"நான் மசால் தோசை ஒண்ணுதானே கேட்டேன்..." என்று அப்பாவியாகக்கேட்டான் பிரகாஷ்.

"சார் நல்லா யோசிச்சுப் பாருங்க... நான் வேற வேற ன்னு கேட்டபோதெல்லாம் நீங்க மசால் தோசைதான் ஆர்டர் பண்ணீங்க, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... மூணாவது மசால் தோசை சொல்லும்போதுதான் நீங்க அவ்வளவுதான்னு சொன்னீங்க... சந்தோசமா சாப்பிடுங்க சார்..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சிப்பந்தி.

பிரகாஷிற்கு அசரீரி ஒலித்தது, "சனி ஆரம்பம் ஆகுது, வாய் வார்த்தையிலே கவனமா இருக்கணும்", சனி இப்படியும் வேலையைக் காட்டுமா என்று அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.

****

அழைப்பு மணி ஓசை கேட்டு உறக்கம் களைந்து எழுந்தான் பிரகாஷ். வாசல் நோக்கி நடந்தான், கதவைத்திறந்தான் வெளியில் அம்மா. "என்னம்மா, காலைலயே வந்துட்ட, அக்கா வெரட்டி விட்டுடுச்சா.." என்றான் பிரகாஷ் வாசலில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து.

"டேய் உன்ன இன்டெர்வியூவுக்கு அனுப்பணுமில்ல, அதான் சீக்கிரமா வந்துட்டேன்", என்று சொல்லிக்கொண்டே கையில் பையுடன் உள்ளே நுழைந்தவர் வேகமாகச் சமையல் அறைக்குச் சென்றார், "சீக்கிறம் குளிச்சுட்டு கிளம்புடா, அக்கா வீட்டுல இருந்து டிஃபன் கொண்டு வந்துட்டேன், நீ குளிச்சு முடிச்சு வந்த உடனே சாப்பிட்டுட்டு கிளம்பலாம்" என்றாள் அம்மா.

"அது ஒரு உப்பில்லாத உப்புமா கிண்டியிருக்கும், அத மாமா வேணும்னா தலையெழுத்தேண்ணு சாப்பிடலாம், இத வேற நீ பத்து ஊருக்கு கேட்குறமாதிரி அக்கா வீட்டு டிஃபன்னு பெருமையடிச்சுக்கற"

"ம்... உனக்கும் ஒருத்தி பொண்டாட்டியா வருவாள்ல, அப்ப அவ இதையாவது கிண்டுறாளான்னு பாக்குறேன்" என்றாள் அம்மா கோபமாக.

"ஆமா… முன்னாடி என்ன சொன்ன இன்டெர்வியூவா... ஆ... இன்னிக்கு இன்டெர்வியூ... அச்சச்சோ.. மறந்தேபோச்சு..." அவசரமானான். மனதுக்குள் எண்ணிக் கொண்டான், "ம்... மூணு மசால் தோசையை மொத்தமா தின்னா தூக்கம் வராம என்ன வரும்"

குளித்து விட்டு வந்த பிரகாஷ் அவசரம் அவசரமாகத் தன் அறைக்குச்சென்று அலமாரியில் இருந்து தேடி அயன் செய்த சட்டை பாண்டை எடுத்தான். உடையணிந்தவன் வேகம் வேகமாக பாலிஷ் செய்து வைத்திருந்த ஷூவை அணிந்தான்.

"டேய்... டிஃபன்..." என்றாள் அம்மா

"அந்த ரவையை நீயே சுவை, நான் இன்டெர்வியூ சக்ஸஸா முடிச்சுட்டு வெளில விருந்தே சாப்டுக்கறேன்" என்று பதில் அளித்தான் பிரகாஷ்.

"கண்ணா இந்தா விபூதி சாமிய நல்லா மனசில நினைச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டே பயபக்தியுடன் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பிரகாஷின் நெற்றியில் பூசிவிட்டார்.

"இத பூசிக்கிட்டா வேலை கன்பார்ம் ஆயிடுமா", நக்கலாகக் கேட்டான்.

"டேய் பேசாம சொல்றத கேளு, போன இன்டெர்வியூ நான் சொன்னதை நீ கேட்கல, இப்ப சனி திசைவேற ஆரம்பிச்சிருக்கு"

"இப்படி செஞ்சா சனி பயந்துடுமா?" என்று கேட்டான் பதிலுக்கு

"அப்படி இல்லடா ஒரு பாசிடிவ் வைப்ரஷன், அதுக்குதான் இதெல்லாம்"

"சரி சரி... நான் கிளம்பறேன்" அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.

****

வேகவேகமாக தனக்கான இன்டெர்வியூ அலுவலகம் வந்தடைந்தான் சரியான நேரத்திற்கு வந்துவிட்டோமா என்று ஒரு முறை கைக்கடிகாரத்தை சரி பார்த்தான். 'அம்மா நீ கொஞ்சம் முன்னாடி வந்து என்ன எழுப்பிவிட்டிருந்தா இப்ப இப்படி லேட்டா வந்திருக்கமாட்டேனெ..' மனதுக்குள் எண்ணியவாறே ரிசெப்ஷன் சென்று அங்கிருந்த பணிப்பெண்ணிடம், "ஹை ஐ அம் பிரகாஷ், ஐ ஹேவ் அன் இன்டெர்வியூ அப்பாயின்ட்மென்ட் டுடே" என்றான் அவசரமாகவும், மெதுவாகவும், அதேவேளை புன்னகை கூட்டிய முகத்தோடும். மனதினுள் எண்ணிக்கொண்டான், 'இவ்ளோ அழகா இருக்காளே கடலை போடுறதுக்குக் கொஞ்சம் கூட நேரமில்லையே...'

பணிப்பெண்ணும் புன்னகை தவழும் முகத்தோடு பதில் தந்தாள், 'ப்ளீஸ் உட்காருங்க, வீ வில் கால் யு'

சற்று நேரத்தில் அழைப்பு வர இன்டெர்வியூ அறைக் கதவைத் தட்டினான், "மே ஐ கம் இன்.."

"எஸ் ப்ளீஸ்..." உள்ளிருந்து பனியுருகும் குரலொன்று அழைக்க, அழைத்தவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தேவிட்டான் பிரகாஷ், 'வாவ் வாட் எ பியூட்டி' மனதினுள் நினைத்தவன் மின்னல் வேகத்தில் எண்ண அலைகளில் அவளுக்கு காதல் தூது விட்டான், 'எப்படியும் இன்டெர்வியூ பாஸ் பண்றோம் இவள லவ் பண்றோம்' முடிவுடன் உள்ளே நுழைந்த பிரகாஷ் வாய் திறந்தான், "தேங்க்ஸ்..."

"ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட்...' என்று தனக்கு எதிர் இருக்கையைக்காட்டி இருக்கச்சொன்னாள் அவள்.

"ஐ அம் ப்ரேமி, இங்க ஐ டி டிவிசனுக்கு நான் தான் ஹெட், கேன் வீ ஸ்டார்ட்?" என்று அடுக்கிக்கொண்டே போனாள் அந்த ஐ டி ஹெட்

உறைந்திருந்த பிரகாஷ் சற்று சுதாரித்து, "சாரி..?" என்று வினவினான்

"ஐ மீன்.. இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா..." என்றாள்

"ஷுர்..."

ஒரு முறை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்ட அவள் தொடர்ந்தாள், "இன்டெர்வியூவிற்கே இவ்வளவு லேட்டா வர்ற நீங்க எப்படி தினமும் வேலைக்கு கரெக்ட் டைமுக்கு வருவீங்க?"

"அச்சச்சோ, அப்படி இல்ல... நீங்க வேலை மட்டும் குடுத்துப் பாருங்க நான் வீட்டுக்கே போகமாட்டேன்." என்று பவ்யமாக பதிலளித்தான் பிரகாஷ்.

"கடிகாரத்துல எத்தனை முள் இருக்கு ?" என்று கேட்டாள் ஐ டி ஹெட்

"இது இன்டர்வ்யூ கொஸ்டியனா?" என்று கேட்டான் பிரகாஷ்

"என்ன பதில் சொல்லாம கேள்வி கேட்கறீங்க..." என்றாள் சற்று வேகமாக

"இல்ல...புரோகிராமர் வேலைக்கும் கடிகார முள்ளுக்கும் என்ன ரிலேஷன்னு யோசிச்சுப் பார்த்தேன்..." என்று மெதுவாக பதிலளித்தான் பிரகாஷ்

"இப்பவே கொஸ்டியன் பண்றீங்க... உங்க சீனியர் ஒரு ஜாப் கொடுத்தா அதையும் இப்படித்தான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பீங்க இல்லையா.."

அசரீரி ஒலித்தது "சனி ஆரம்பம் ஆகுது வாய் வார்த்தைல ஜாக்கிரதையா இருக்கணும்". எங்கே வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவசரமாக, "மேம்... அப்படியெல்லாம் இல்ல... இனிமே நான் வாயே தொறக்க மாட்டேன்" என்று சரண்டர் ஆனான் பிரகாஷ்

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு அறையின் கதவு தட்டப்பட்டது. 

"எஸ் கம் இன்..." என்றாள் பிரேமி

உள்ளே நுழைந்தவர் பெரிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பதை அவர் உடையிலேயே உணர்ந்துகொண்டான் பிரகாஷ். உள்ளே நுழைந்த அந்த அதிகாரி ப்ரேமி இருக்குமிடம் சென்று அவளைப் பாராட்டிக் கைகுலுக்கினார், "எக்ஸலண்ட் பெர்ஃபார்மென்ஸ்... அப்ரஸியேடட்... நாங்க எதிர் பார்த்ததுக்கு மேலயே நீங்க பெர்ஃபார்ம் பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மெயில் பண்ணச் சொல்லியிருக்கேன்..." என்று சொல்லிக்கொண்டே போனார் அந்த அதிகாரி.

அவளும் புன்னகை மாறாமல் எழுந்து நின்று பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு, "தேங்க்ஸ் சார்" என்றாள் பணிவுடன்.

நடப்பது என்னவென்று புரியாமல் சந்தேகப் பார்வையுடன் எழுந்தான் பிரகாஷ், அதிகாரியிடம், "சார், நீங்க எனக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரணும், தேங்க்ஸ் சோ மச்... நான் தான் இன்டெர்வியூ கேண்டிடேட்", என்று தனது டையை சரிசெய்துகொண்டு பவ்யமாக நின்றான்.

"ஹா ஹா... தாங்ஸ் மிஸ்டர் பிரகாஷ், இன் ஃபாக்ட் இன்னிக்கு பிரேமிதான் கேண்டிடேட், அவங்களுக்குத்தான் இன்டெர்வியூ, எங்க ஹெச் ஆர் ல ஒரு பொசிஷனுக்கு அப்ளை பண்ணியிருந்தாங்க, ஒரு புது கேண்டிடேட்டை அவங்க எப்படி இன்டெர்வியூ பண்றாங்கன்னு நாங்க பக்கத்து ரூம்ல இருந்து மானிட்டர் பண்ணிட்டிருந்தோம், ஷி டிட் வெல். பை தி வே ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஜாப் செர்ச்". என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.

"சனி எந்த நேரத்துல எந்த ரூபத்துல வருமுன்னு யாராலையும் சொல்லமுடியாது" அசரீரி ஒலித்தது ப்ரகாஷிற்கு.

மீ.மணிகண்டன்

சனி, 8 ஜூலை, 2023

செவ்வாய், 4 ஜூலை, 2023

FeTNA 2023 நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா  இவ்வாண்டு (2023) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை இது.

FeTNA நிகழ்வு நாள்கள்: From 30/Jun/2023 till 03/Jul/2023

இடம்: Sacramento, CA, USA

குறிப்பு: FeTNA என்பது  வட அமெரிக்காவின் 67 தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு.

2023 FeTNA & Sacramento Tamil Sangam, USA

போட்டிக்கதைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "அன்பே செல்வம்". கொடுக்கப்பட்ட வார்த்தை வரம்பிற்குள், நேரத்திற்குள் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விரிந்த தகவல்.

~~~

நேற்று போக்குவரத்து சிக்கனலின் சிவப்பிற்காக நின்றபொழுது, எப்படியும் புதுமையான ஒரு கட்டுரை எழுதி அதை இந்தவாரப் பதிவில் வெளிவரும்படிச் செய்யவேண்டும், கடந்த இரண்டு மதங்களாகத் தனது பதிவு எதுவும் வெளியாகவில்லை என்ற ஏக்கமும் வேகமும் ரவியின் சிந்தனையை ஆட்கொண்டிருந்தது. சிந்தனையைத் திசைதிருப்பியது அந்த ஹோம்லெஸ் தாடிக்காரன் கையில் பிடித்திருந்த பதாகை. 'ப்ளீஸ் ஹெல்ப் மீ.' என்ற பதாகை வாசகத்தால் இரக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு, அந்த தாடிக்காரனுக்கு உதவி செய்யும் நோக்கில் காருக்குள் இருந்தபடியே கண்ணாடியை இறக்கிவிட்டு, அவனைத் தன்னருகில் அழைத்தான் ரவி. டேஷ் போர்டில் கிடந்த நாணயங்களை தனது வலதுகரத்தால் கொத்தாக அள்ளினான், எண்ணிப்பார்க்கவில்லை, ஒருவேளை எண்ணுவது நாணயம் அல்ல என்று எண்ணியிருக்கலாம், அப்படியே தாடிக்காரனிடம் நீட்டினான். தாடிக்காரன் அதனைப் பெற்றுக்கொண்டு தனது கறைபடிந்த பற்கள் வெளிப்படப் புன்னகைத்து ரவிக்கு நன்றி தெரிவித்தான். காரில் ப்ளூடூத்தில் 'தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்' என்று டி எம் எஸ் பாடிக்கொண்டிருந்தார். எத்தனை காலம் கடந்தாலும் ரவிக்கு பழைய பாடல்களின் மேலிருந்த மோகம் இன்னும் குறையவில்லை. அமேரிக்கா வந்தது பொருளீட்டதான் மற்றபடி பழக்கவழக்கங்கள் பண்டிகைகள் பண்பாடுகளை மறப்பதற்கல்ல என்ற கருத்தில் உறுதியாக இருப்பவன் ரவி. சிக்கினல் பச்சையை உதிர்த்தது.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு தனது அலுவலை நிறைவேற்றிக்கொண்டு அதே சாலையில் திரும்பிக்கொண்டிருந்த ரவிக்கு அவன் எதிர்பாராத நிகழ்வொன்று காத்திருந்தது. அது, ஒரு பாலத்தின் அடியில் தன்னிடம் உதவிபெற்றுக்கொண்ட அந்த தாடிக்காரன் இப்பொழுது கையில் சிகரெட் ஒன்றை வைத்துக்கொண்டு போதை உட்கொள்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். மனமிறங்கி உதவி செய்வதை இவன் தவறாகப் பயன்படுத்துகிறானே என்ற மன உறுத்தலோடு பயணத்தைத் தொடர விருப்பமில்லாத ரவி அருகில் இருந்த மால் வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு பாலத்தின் அடியில் தாடிக்காரனை சந்திக்க விரைந்தான்.

தன்னருகில் யாரோ நிற்பதை உணர்ந்த தாடிக்காரன் நிமிர்ந்து பார்த்தான். தலைமுடிகள் சிக்குண்டு திரிந்து எல்லாத்திசைகளையும் அடையாளம் காட்ட, கண்களிரண்டைச்சுற்றி கார் டயர்போன்ற அழுக்காக கருவளையங்கள் நெளிய, தாடிக்காரனின் பார்வை ரவியை ஏறிட்டது. சிக்னலின் சிவப்பு தற்பொழுது ரவியின் கண்களில் ஒளிர்ந்தது. பார்வையை இறக்கி அமைதியாக சிகரெட்டை நுகர்வத்தைத் தொடர்ந்தான் தாடிக்காரன். "என்ன செய்கிறாய்?" என்றான் ஆத்திரமாக ரவி.

சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, "இது உனக்கு அவசியமில்லாதது?" என்று அமைதியாகப் பதிலளித்தான் தாடிக்காரன், இந்தமுறை சிகரெட் மீதிருந்த பார்வையைத் திருப்பவில்லை.

"நல்லது எண்ணித்தான் நான் உதவினேன்".

"உன் மீது தவறில்லை என் மீதும் பிழையில்லை", என்று கண்களை மூடி ஞானிபோல் பதிலளித்துவிட்டு  அமைதியைத் தொடர்ந்தான் தாடிக்காரன்.

"நீ செய்வது தகாத செயல்".

"எனக்கு வாழ்க்கை தொலைந்துவிட்டது. கடும் வெய்யிலை கொடும் பனியை வெட்டவெளியில் நீ உணர்ந்திருக்கிறாயா?", என்று மறுபடி ரவியின் முகத்தை ஏறிட்டான் தாடிக்காரன்.

"நீ உடலுழைக்க மறுத்துக் காரணம் தேடுகிறாய்", என்றான் ரவி.

"எனக்குப் பொருளீட்டப் பணி இல்லை, வசிப்பதற்கு இருப்பிடம் இல்லை இதற்கெல்லாம் காரணம் என் கண்ணியம் என்று சொன்னால் நீ நம்பவா போகிறாய்?" என்று கூறிச் சாலையில் கடந்துபோன வாகனங்களின் மீது பார்வையைத் திருப்பினான் தாடிக்காரன்.

இத்தனை நேரம் கோபம் குடிகொண்டிருந்த ரவியின் மனம் சற்று கோபத்தைத் தள்ளிவைத்துத் தாடிக்காரன் கூறப்போகும் காரணத்தை எதிர்பார்த்தது. "என்ன சொல்லப்போகிறாய்?".

தன் வாதத்தை முன்வைக்கத் தொடங்கினான் தாடிக்காரன், "நானும் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு என் நாடு தற்காப்பிற்காக கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது. ஒரு மாலை நான் உணவகத்திலிருந்து என் குடியிருப்பிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன், இருள் சூழ்ந்த நேரம், நான்கு கயவர்கள் என்னை வழி மறித்தார்கள் என்னிடமிருந்த டாலர்களுக்காகத்தான் என்னை வழிமறிக்கிறார்கள் என்று எண்ணி என்னிடமிருந்த சொற்ப டாலர்கள் அனைத்தையும் எடுத்து நீட்டினேன், அவர்களுக்கு அது அவசியமற்றது என்று பின்னர் உணர்ந்தேன், இருளில் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நகர்ந்தார்கள். என்  ஆடைகளைக் களைய வற்புறுத்தினார்கள். நான் மறுத்தேன் என்னைத் தற்காத்துக்கொள்ள நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பயமுறுத்தும் நோக்கில் எடுத்து நீட்டினேன், அதே வேளை அவ்வழி வந்த போக்குவரத்து போலீஸ் வண்டி அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. வண்டியை நிறுத்தி போலீசிடம் நான் அவர்களை மிரட்டுவதாகக் கதைக்கட்டினார்கள். நான் கையில் துப்பாக்கியுடன் நின்றது மேலும் அவர்களுக்குச் சாதகமானது. என்னுடைய வாதம் எடுபடவில்லை அவர்கள் வென்றார்கள், நான்  சிறைக்குச்சென்றேன். ஓராண்டு சிறையிலிருந்துவிட்டுத் திரும்பிய பிறகு எனக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை வேலையும் கிடைக்கவில்லை காரணம் பேக் ரவுண்டு வெரிஃபிகேஷன் நான் கிரிமினல் குற்றத்திற்காக சிறை சென்றவன் என்று அடையாளப்படுத்தியது. இப்போ சொல், கடும் வெய்யிலை கொடும் பனியை வெட்டவெளியில் நீ உணர்ந்திருக்கிறாயா?" என்று கொட்டித்தீர்த்தான் தாடிக்காரன். இதை எதிர்பார்க்கவில்லை ரவி. புயல் அடித்து ஓய்ந்ததுபோல அமைதி. ஜூன் மாத வெயில் உச்சத்தில் தகித்தது.

தொடர்ந்தான் தாடிக்காரன், "இங்கே பணம் இருக்கிறது நான் சந்தித்த மனிதர்களிடம் பண்பு இல்லை. இங்கே அதிகாரம் இருக்கிறது நான் சந்தித்த மனிதர்களிடம் அன்பு இல்லை", என்றவன், "என்னைப்பற்றி உனக்கேன் அக்கறை, நீ யார்?" என்றான் முதல் முறையாக. தன்னைக் கணிப்பொறி வல்லுநன் என்றும் பகுதிநேர எழுத்தாளன் என்றும் அடையாளப் படுத்திக்கொண்டான் ரவி. சற்றும் தாமதிக்காமல் தாடிக்காரன் கூறினான், "அப்படீன்னா எழுது, அமெரிக்கா என்பது அழகும் ஆடம்பரமும் மட்டுமல்ல அநீதியும் அசிங்கமும் கூடக் கலந்தது."

***

வீடு திரும்பிய பின்னரும் ரவியின் மனம் தாடிக்காரனையே சுற்றிச்சுற்றி வந்தது. தன்னை அசுவாசப்படுத்திக்கொள்ள, ஆட்கொண்ட நினைவிலிருந்து தன்னை மீட்டெடுக்க, ஒரு காபி உதவி செய்யும் என்று எண்ணியவன் சமையலறை நோக்கி நடந்தான். ஆம் அவன் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் காரணம், இந்தவாரப் பதிப்பிற்கு அவன் புதிய கட்டுரை ஒன்று எழுதவேண்டும் இரண்டு மாத தாகத்தைத்  தணித்துக்கொள்ளவேண்டும். காபியோடு வந்து ஹாலில் தொலைக்காட்சி ஒருபுறம் மெல்லிய ஒலியுடன் வண்ணங்களை உமிழ்ந்துகொண்டிருக்க சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். சிந்தனையும் முழு நாள் உழைப்பும் அவனை உறக்கத்தில் ஆழ்த்தியது, ஆடைகளை மாற்றவும் மறந்தவன் அப்படியே உறங்கிப்போனான். விடியும்பொழுது புதுத்தெளிவுடன் எழுந்தான். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்தினான். நேற்றைய தாடிக்காரனுடனான சந்திப்பையே ஒரு பக்கக் கட்டுரையாக்கினான். குளித்துமுடித்துப் புதியவனானான் ரவி. கட்டுரைத்தனைக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுப்பிரதி எடுத்துத் தயாராக கையில் எடுத்துக்கொண்டான்.

மிகுந்த உற்சாகத்துடன் இதழ் அலுவலகம் நோக்கித் தனது காரைச் செலுத்தினான் ரவி. அந்தக் காலையிளம்வெயிலும் காரினுள் லாவெண்டர் மணமும் மகிழ்ச்சியைக்கொடுத்தது ரவிக்கு. வழியில் கடந்து சென்ற கார்களையும் நடந்துசென்ற மாந்தர்களையும் கண்ட பொழுது ரவியின் மனமேடை ஒரு நாடகம் நடத்திக்காட்டியது அதில் வந்த மாந்தர்கள் ரவியினைச் சூழ்ந்துகொண்டு அவனது கட்டுரைக்காக பாராட்டுத் தெரிவித்துக்கொண்டும் ரவியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள அவனது சமூக வலைதள அடையாளங்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தனர், ரவி தனது எழுத்தாளன் என்ற அடையாளம் ஒரு மைல்கல்லைத்  தொட்டுவிட்டதாக பூரித்துக்கொண்டிருந்தான். இந்த ஒரு கட்டுரை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என்று எண்ணினான். சொல்லப்படாத ஒரு நிகழ்வைச் சொல்லப்போகிறது, ஒரு சாமானியனின் பேசப்படாத ஒரு மூலைப்பகுதியை, ஒரு இருட்டுப் பகுதியை இந்தப் பதிவு பேசப்போகிறது என்று எண்ணினான். ஒரு தீக்குச்சி கதிரவனாகப் போகிறது சிறு இலையின் அசைவு பெரும் புயலை உருவாக்கப்போகிறது என்ற ரவியின் சிந்தனையைத் ஏந்திக்கொண்டு கார் இதழ் அலுவலகத்தை அடைந்தது.

தனது கட்டுரையை பதிப்பாசிரியர் டாம் நிச்சயம் அங்கீகரிப்பான் என்ற நம்பிக்கையோடு அலுவலகத்தில் நுழைந்தான் ரவி. மொத்தத்தில் தான் கொண்டு வந்திருக்கும் தகவலில் கனம் இருப்பதாகவே நம்பினான்.

"ஹெலோ ரவி, ஹௌ ஆர் யு டூயிங்? ரொம்ப நாளா உன்னோட பங்களிப்பு இல்லை, இந்தவாரப் பதிப்பிற்காவது ஏதேனும் வித்தியாசமாக தயார் செய்திருக்கிறாயா?", என்ற பதிப்பாசிரியர் டாமின் கேள்விக்கு, வணக்கம் தெரிவித்துவிட்டுத் தொடர்ந்தான் ரவி, "டாம் இந்த முறை என்னுடைய கட்டுரை கண்டிப்பா உனக்குப் பிடிக்கும். நீ கொடுத்த தலைப்பு 'அன்பே செல்வம்' இதற்கு மிகப் பொருத்தமா இருக்கும்" என்றான்.

"எனக்குப் பிடிக்கிறது முக்கியமில்லை ரவி, மக்கள் ரசிக்கிறமாதிரி இருக்கணும், எங்கே காட்டு" என்று கூறி ரவி தயாராகக் கையில் வைத்திருந்த தாளை வாங்கிப் படித்தான். முழுவதுமாகப் படித்து முடித்த டாமின் முகம் மாறியது. "என்ன ரவி இது?, எப்பவும் போல உன் எழுத்து நடை மிக அழகா இருக்கு ஆனா யாரோ ஹோம்லெஸ் தாடிக்காரனுடைய வாழ்க்கைத் தகவல் என்பதெல்லாம் ஜனரஞ்சகமா இல்லயே?" என்று கோபமாகக் கூறிவிட்டு தாளை ரவியிடம் திருப்பினான் டாம்.

டாமின் புரிதலை ஏற்க மனமில்லாமல், இந்தமுறையும் தனது எழுத்து நிராகரிக்கப்படபோகிறதே என்ற வருத்தத்தில் தனது கட்டுரையில் தனது பார்வையை எடுத்துச்சொல்ல முயன்றான் ரவி. "டாம், ஒரு மனிதனின் வலி இன்னொரு மனிதனுக்குப் புரியணும் அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம், பணம் மனித வாழ்க்கைக்கு தேவை ஆனால் பணம் இருந்தும் ஒருவன் பண்பில்லாத அன்பில்லாத மனிதர்களால் வேட்டையாடப்படுவது எப்படி ஜனரஞ்சகமா அமையாதுன்னு சொல்ற?" என்றான். மேசையிலிருந்த மடிக்கணினியின்று பார்வையை நகர்த்தவில்லை டாம்.

டாமின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் மீண்டும் கேள்வி எழுப்பினான் ரவி. "ஒரு சாமானியனின் வாழ்க்கை சில வல்லூறுகளால் திசைதிருப்பப்படுகிறது. வல்லூறுகள் திரைமறைவில் தனது வாழ்க்கையை சேதாரமின்றித் தொடர்ந்துகொண்டிருக்க சாமானியன் வாழ்க்கை இழப்பதை எந்த மன்றமும் வெளிச்சத்தில் காட்டாத பொழுது அதை எழுத்து மட்டும்தான் வெளிக்கொணர இயலும். எழுத்தும் கைகட்டி வாய்பொத்தி நின்றால். எதிர்காலச் சமூகத்திற்கு நல்லது எது தீயது எது என்று யார் எடுத்துச்சொல்வது?"

ரவியின் தொடர்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய டாம், "இங்க பார் ரவி, மக்களுக்குத் தேவை கேளிக்கை, படிச்சு முடிச்சா நல்லா சிரிக்கணும் இன்னும் நாலு பேருக்கு அதைப் பரிந்துரைக்கணும், தினம் தினம் பல சிக்கல்களை அனுபவிச்சுக் கடந்து வர்ற வாசகன் இந்தமாதிரி வலிகளைப் படிக்க விரும்பமாட்டான்", என்று விளக்கமளித்துவிட்டு மடிக்கணினித்திரைமீது மீண்டும் பார்வையைத் திருப்பினான்.

தாளைப் பெற்று மடித்துத் தனது கால்சட்டைப் பைக்குள் நுழைத்துக்கொண்டு டாமின் அறையை விட்டு வெளியேறினான் ரவி. அலுவலகத்தை விட்டு வெளியேறி தனது காரைச் செலுத்திக்கொண்டு அந்த சாலைப் பாலத்தின் அருகாமையில் உள்ள மால் வளாகத்திற்குச் சென்றான். காரை நிறுத்திவிட்டு மால் வளாகத்தில் இருக்கும் துரித உணவுக் கடையிலிருந்து ரொட்டிவகை உணவை வாங்கிக்கொண்டு, தான் நேற்று தாடிக்காரனைச் சந்தித்த பாலத்தின் அடி நிழலுக்குச்சென்றான். அங்கே திறந்த வெளியில் சாலையோரத்தில் அந்த தாடிக்காரன் நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டான், அது இயல்பான உறக்கம் இல்லை ராஜ போதை என்பது ரவிக்குத்தெரியும். இன்னும் சிலமணி நேரங்களுக்கு அந்த சுற்றுச்சூழலில் நடப்பவற்றை தாடிக்காரனால் உணரமுடியாது என்பதும் ரவிக்கு நன்றாகத் தெரியும். கொண்டு வந்த உணவை அவனருகில் பத்திரப்படுத்திவிட்டுத் தனது காருக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் தென்பட்டது ஒரு குப்பைத் தொட்டி, தனது கால்சட்டைப்பைக்குள் இருந்த கட்டுரைத்தாளை எடுத்துக் கிழித்துக் குப்பையில் எறிந்துவிட்டு தனது காரை நோக்கி நடந்தான்.

...மீ.மணிகண்டன்

Comments from readers:








செவ்வாய், 2 மே, 2023

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்

 எக்ஸிபிஷன் சிறுகதை … மீ.மணிகண்டன்

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்
பள்ளிக்கூடப் பைக்கட்டோடு பேருந்தில் ஏறினான் கதிரேசு. கண்டக்டரிடம் தனது பஸ் பாசை காண்பித்துவிட்டு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கிறதா என்று முதல் இருக்கை தொடங்கி கடைசி இருக்கை வரை நோட்டம் விட்டான், எதுவும் காலியாக இல்லை. 'இன்று நிற்கவேண்டியதுதானா', என்று மனதினுள் எண்ணிக்கொண்டே சற்று முன்னே நடந்து தலைக்குமேல் தொங்கிய கைப்பிடியை எட்டிப் பிடித்து பக்கவாட்டில் தூண்போல் இருக்கும் கம்பியில் சாய்ந்துகொண்டு பேருந்தின் வெளியே வேடிக்கை பார்க்கத்துவங்கினான். பள்ளிக்கூடம் முதல் அவன் வீடு இருக்கும் இடம் வரை சுமார் இருபத்தைந்து நிமிடப் பேருந்துப் பயணம்.

"மார்க்கெட் இறங்கலாம், டிக்கட் எடுக்காதவுங்க இருந்தா எடுத்துடுங்க, அடுத்தது ஸ்டேஜ்", என்று கண்டக்டர் தனது வழக்கமான வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். அடுத்த ஸ்டாப்பிங் கதிரேசு இறங்கவேண்டிய இடம், இறங்குவதற்குத் தயாராக வாசலருகே வந்து நின்றுகொண்டான். கதிரேசு இறங்கியதும் கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பணிந்த பேருந்தின் ஓட்டுநர், அடுத்த இலக்கை நோக்கி பேருந்தைப் பறக்கவிட்டார். கதிரேசு பள்ளிக்கூடச் சிந்தனையிலேயே வீடு நோக்கி நடந்தான். எக்ஸிபிஷன் போக பெயர் பதிவு செய்ய நாளை வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள். சனிக்கிழமை பாலன் சார் தலைமையில் தனது வகுப்பு மாணவர்கள் எக்ஸிபிஷன் செல்கிறார்கள். ராமு, குமரவேல், வாசு எல்லோரும் பணம் கட்டிப் பெயர் பதிந்துவிட்டார்கள். தான் செல்ல முடியுமா முடியாதா என்ற சந்தேகம் கதிரேசுவிற்கு வலுவாக இருந்தது. காரணம் கதிரேசு, தான்தான் சென்ற ஞாயிறன்று பால்காரர் வீட்டிற்குப் பால் வாங்கச்சென்றான், அப்போது பால்கார அண்ணனிடம், தனது தாய் சொன்னதுபோல, 'அடுத்தமாதம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறோம் அப்பா குவாரிக்கு இரண்டு வாரமாகப் போகவில்லை புது காண்ட்ராக்டர் இன்னும் இரண்டு வாரம் பொறுத்துத்தான் வரச்சொல்லியிருக்கிறார்', என்று சொல்லியிருந்தான். இந்தச் சூழ்நிலையில் அம்மாவிடமோ அப்பாவிடமோ இருபது ரூபாய் கேட்பது சற்றும் நியாயம் இல்லை என்று அவனது உள்மனம் உரைத்தது.

மெளனமாக வீட்டை அடைந்தான் கதிரேசு.

"என்னடா என்ன நினைப்பு, செருப்போட வீட்டுக்குள்ள வர்ற", அம்மாவின் குரல் சிந்தனையைக் கலைக்க தன் தவறை உணர்ந்து. "இல்லம்மா, இன்னிக்கு இங்கிலிஷ் பேப்பர் குடுத்தாங்களா, ராமுவைவிட நான் ரெண்டு மார்க் அதிகம் வாங்கியிருந்தனா, அந்த யோசனைதான்", என்று சமாளித்தவாறே செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்று வாசல் அருகே ஓரமாக வைத்தான்.

அன்றைய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான் கதிரேசு. அம்மா அழைக்க, அப்பாவும் தானும் ஒன்றாக அமர்ந்து, அம்மா மண்ணெண்ணை அடுப்பில் சுட்டு வைக்கும் சப்பாத்திகளை ஆளுக்கு இரண்டாகச் சுவைத்தார்கள் தொட்டுக்கொள்ள அம்மாவின் மாவடு ஊறுகாய் சப்பாத்தியின் சுவையைக் கூட்டியிருந்தது.

உணவு முடிந்ததும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றிருந்தபொழுது வாங்கிவந்த அந்த காந்தச்சக்கரத்தை எடுத்து சற்று நேரம் விளையாடினான், இங்கும் அங்குமாக இரண்டு கம்பிகளுக்கிடையே உருளும் காந்தச்சக்கரம் பழைய ஞாபகங்களை சிந்தனையில் உருட்டியது, மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் தன் நண்பர்களும் அந்த சிரிப்புக் கண்ணாடிகளின் முன் நின்றுகொண்டு அடித்த லூட்டி இப்பொழுதும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது, மகேஷ் ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு "பாருடா என் வயிறு மட்டும் குண்டா இருக்கு" என்றான், ராமு ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, "டேய் என் தலையைப் பாருடா சப்பாத்தி மாவை அழுத்திவச்ச மாதிரி சப்பையா இருக்கு", என்றான், குமரவேல், "என்னை பாருங்கடா எவ்வளவு ஒல்லியா உயரமா இருக்கேன், வானத்தையே தொட்டுவிடுவேன்" என்றான், கதிரேசுவோ ஒரு கண்ணாடியின் முன் நின்று, "எனக்கு பல்லு மட்டும் வாயைவிட பெரிசா இருக்குடா, அஹ்ஹ் ஹஹ் ஹா..." என்று எல்லோரும் கூடிச்சிரித்த நிகழ்வு ஏக்கத்தை வரவழைத்தது கதிரேசுவிற்கு.

ஓரிடத்தில் கடல்வாழ் உயிரினங்களின் காட்சி வைக்கப்பட்டிருந்தது, அங்கே இருந்த வண்ண வண்ண மீன்கள், பல வகையான அளவுகளில், அகலமாக, நீளமாக இருந்தவற்றையெல்லாம் கண்டு மாணவர்கள், "டேய் அது கெளுத்தி", "இல்லடா அது கலர் மீன், கெளுத்தி இல்ல", "இல்லடா அது விரால் மீன்", "போடா அது சின்ன சைஸ் சுறா", என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த பெயர்களைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதும் கதிரேசுவுக்கு நேற்று நடந்ததுபோல் இருந்தது. சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றது வரலாற்று ஆசிரியர் அருணாச்சலம் சார் தலைமையில்தான். எல்லா மாணவர்களும் சீருடையில் தான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்.  அருணாச்சலம் சாருக்கு அசிஸ்டென்டாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் சார் வந்திருந்தார்.

மாணவர்களும் ஆசிரியர்களும் எக்ஸிபிஷனில் நிறைய காட்சிப் பரப்புகளைக் கண்டுவந்தனர், மாலை இருட்டிக்கொண்டு வந்தது, பொருட்காட்சித் திடல் எங்கிலும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தது, இராட்டினங்களில் பலவகை, பெரிதும் சிறிதும், அங்கும் இங்குமாக வைக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேகமாகவும் மெதுவாகவும் இயங்கிகொண்டு பார்ப்பவர்களை வசீகரித்துக்கொண்டிருந்தது. சிறுவர் பெரியோர் எனப் பேதம் இல்லாமல் எல்லோரையும் ஈர்க்க பலவித விளையாட்டுப் பொருட்களின் கடைகள் கண்கவர் விளக்குகளால் வலைவீசிக்கொண்டிருந்தன. சுடச்சுட டெல்லி அப்பளம், சுவை மிக்க பானி பூரி, மசாலா மணக்கும் பொரித்த மீன், சலசலவென சத்தத்தோடு எண்ணையில் பொரிந்துகொண்டிருக்கும் முட்டை போண்டாக்கள், காரம் மிக்க மிளகாய் பஜ்ஜிகள், கைகள் கொள்ளாத அளவுகளில் பல வண்ணங்களில் பஞ்சு மிட்டாய்கள் எனப் பல வகையான தின்பண்டக் கடைகள் சுற்றிலுமாக அடுத்தடுத்தாக நிறுவப்பட்டிருக்க, பொருட்காட்சியை சுற்றிக் களித்தவர்கள் பசியில் ருசிதேடி, மீன் வாங்குவோமா, பஜ்ஜி வாங்குவோமா, அப்பளம் வாங்குவோமா, ஐஸ் கிரீம் வாங்குவோமா என்ற குழப்பத்தில் அனைத்துவகைக் கடைகளையும் நாடினர்.

மாணவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்த அருணாச்சலம் சார், "தம்பிகளா இங்கதான் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் கடையெல்லாம் இருக்கு எல்லோரும் போயிட்டு வேணுங்கறத வாங்கிட்டு சரியா இந்த புக் ஸ்டால் கிட்ட வந்துடனும்", என்று அருகில் இருந்த புத்தக நிலையத்தை அடையாளம் காட்டினார், "கரெக்ட்டா பதினஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ளே இங்க திரும்ப அசம்பிள் ஆயிடனும், அப்படி வரலைன்னா நாங்க விட்டுட்டுப் போயிடுவோம்", என்றார். மாணவர்கள் அனைவரும் இதற்காகவே காத்திருந்ததுபோல ஹூய் என்ற ஆரவாரத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொருதிசையில் சிட்டாகப் பறந்தனர்.

கதிரேசுவிற்குக் குழப்பம், முதலில் விளையாட்டுப் பொருள் வாங்கப் போவதா அல்லது தின்பண்டக் கடையை நாடுவதா? பதினைந்து நிமிடங்களுக்குள் எதைச்செய்ய முடியும் இந்த சார் ஒரு அரை மணிநேரமாவது கொடுக்கக் கூடாதா... என்று மனதினுள் நினைத்துக்கொண்டே, முதலில் பொம்மைக் கடைக்குப் போவோம் தின்பண்டம் கைகளில் மீதம் இருந்தாலும் அதைப்  போகும்போதோ அல்லது வீட்டிற்குப் பொய்க்கூட உண்ணலாம் ஆனால் பொம்மைக் கடை அப்படி அல்ல என்று முடிவெடுத்து பொம்மைக் கடைகளில் தனது ஆசைப் பொருளான காந்தச்சக்கரத்தைத் தேடினான், தங்கைக்கோர் கீதம் படம் பார்த்ததிலிருந்தே அந்த காந்தச்சக்கரத்தின் மீது ஆசை, ஆம் அந்தப் படத்தில் செந்தாமரை அவ்வப்பொழுது தனது கையில் சிவப்புநிற காந்தச்சக்கரத்தை கம்பிகளின் ஊடாக உருட்டிக்கொண்டு வசனம் பேசுவதே ஒரு தனி அழகு. அப்படித்தானும் காந்தச்சக்கரம் உருட்ட வேண்டும் வசனம் பேசவேண்டும் என்பது கதிரேசுவின் ஆசைகளில் ஒன்று. அங்கே இங்கே தேடி ஒரு கடையில் வரிசையாகத்தொங்க விடப்பட்டிருந்த காந்தச்சக்கரங்களைக் கண்டுவிட்டான். மஞ்சள் பச்சை சிவப்பு நீலம் எனப் பல நிறங்களில் சக்கரம் இருந்தது ஆனால் கதிரேசு குறிப்பாக கடைக்காரரிடம் சிவப்பு நிறம் கேட்டு வாங்கினான், என்ன விலை என்ற கதிரேசுவின் கேள்விக்கு பதினைந்து ரூபாய் எனப் பதிலளித்தார் கடைக்காரர். அதே காந்தச்சக்கரம் தான் இதோ இப்பொது கதிரேசு கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருப்பது.

"என்னடா இன்னும் தூங்கலையா" அப்பாவின் குரல் கேட்டு தன்னிலைக்கு வந்தான் கதிரேசு.

மறுநாள் எந்த நினைப்பும் இல்லாமல், நாளை பார்க்காவிட்டால் அடுத்த ஆண்டு பொருட்காட்சி பார்த்துக்கொள்ளலாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இறைவனை வணங்கிவிட்டு பள்ளிக்கூடம் புறப்பட்டான். வழக்கத்திற்கு மாறாக பேருந்து இன்று மிகுந்த கூட்ட நெரிசலுடன் வந்தது. ஓட்டுநர் சரியாக நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று தள்ளிச்சென்று நிறுத்தினார். கதிரேசு ஓடிச்சென்று பேருந்தில் பின்பக்கப் படிக்கட்டில் தொற்றிக்கொண்டான்.

"யாரப்பா அது, சார் சின்னப்ப பசங்கள படில நிக்காம கொஞ்சம் உள்ள விடுங்க சார்", என்றார் கண்டக்டர். முண்டியடித்துக்கொண்டு ஏறிய கதிரேசுவையும் இன்னும் ஒன்றிரண்டு பள்ளிக்கூட மாணவர்களையும் உள்ளே போகச்சொல்லி மிகுந்த சிரமத்திற்கிடையே ஒதுங்கி... இல்லை இல்லை ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு வழிவிட்டனர் மற்ற சக பயணியர். அந்தக்கூட்டத்திலும் சிறுவர்கள் தங்களின் பஸ் பாசை எடுத்து கைகளை உயர்த்தி கண்டக்டரிடம் நீட்டினர். பார்த்தும் பார்க்காமலும் "சரிசரி... நகரு நகரு…" என்று ஸ்டேஜை நிறைவு செய்வதில் மும்முரமாக இருந்தார் கண்டக்டர். எல்லோரும் கிட்டத்தட்ட அடுத்தவர்களின் பூட்ஸ் மற்றும் செருப்புக் கால்களை அரைகுறையாக மிதித்துக்கொண்டுதான் நின்றிருந்தார்கள் இருந்தாலும் கூட்ட நெரிசல் காலை வேளை என்பதைப் புரிந்துகொண்ட அனைவரும் அடுத்தவர் மீது கோபப்படாமல் பயணித்துக்கொண்டிருந்தனர்.

கதிரேசு நின்றிருந்த இடத்தில் அவனது கால்கள் ஏதன் மீதோ நிற்பது போலத் தோன்றியது. முதலில் யாருடைய காலின்மீதோ தனது வலது கால் இருக்கிறது என்றுதான் நினைத்தான் பின்னர் எதேச்சையாக அழுந்தியபோது பக்கத்தில் நின்றிருந்த யாரும் குரல் தரவில்லை. கண்டிப்பாக அது பிறரின் காலாக இருந்தால் தான் தவறுதலாக மிதித்தது அவர்களுக்கு வலியை கொடுத்திருக்கும் லேசாகவாவது குரல் கொடுத்திருப்பார்கள். இப்போது மீண்டும் தனது வலது காலை அழுத்தினான்... ம்... முடிவு செய்துவிட்டான்... தரையில் எதோ கிடக்கிறது, ஒரு வேளை அது மணிபர்ஸாக இருந்தால்... அதில் பணம் இருந்தால்... அடுத்த வினாடி கதிரேசுவின் கண்கள் பிரகாசித்தது... தானும் நாளை எக்ஸிபிஷன் சென்றுவரலாம். இப்போது காலின் அடியில் இருப்பதை எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டினுள் வைக்க வேண்டும் எப்படி? சிறிதும் தாமதிக்காமல் தலையை நிமிர்த்தி மேலே பார்த்துக்கொண்டு உட்காருவதுபோல தனது வலக்கையை மட்டும் தன் காலின் கீழே செலுத்தி காலில் தட்டுப்பட்டதை கையால் தொட்டுப் பார்த்தான் சந்தேகமே இல்லை அது மணிபர்ஸ்தான், சற்றே கனமான அந்த மணிபர்ஸை எடுத்து கையினால் தடவியபடியே எழுந்து தனது வலப்பக்க பாண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான். பத்து வினாடிகளில் பல நிகழ்வுகள் அவனது மூளைக்குள் பிரவேசித்தது. சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும். யாரும் அந்தப் பர்ஸைத் தேடும்முன் தான் இறங்கி பள்ளிக்கூடம் செல்லவேண்டும். பாலன் சாரிடம் பெயர் பதியவேண்டும். எக்ஸிபிஷன் போக வாய்ப்பு கிடைத்துவிட்டது. இப்படி மூளை வேலை செய்தாலும் அவனது உள் மனம் கேள்வியெழுப்பியது 'இது தவறல்லவா?' 'இல்லை' என்றது வெளி மனம். காரணம் கேட்டது உள் மனம். ‘திருட்டு தவறு, ஆனால் இது திருட்டு இல்லை கீழே கிடந்ததுதானே’ என்றது வெளி மனம். இன்னும் மூன்று நிறுத்தங்கள் கடந்துவிட்டால் போதும் நான்காவது நிறுத்தம் கதிரேசுவின் பள்ளிக்கூட நிறுத்தம். பள்ளிக்கூடத்தில் இறங்கிவிட்டால் பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை.

ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அது நிகழ்ந்தது. பெருந்துக்கூட்டத்தைவிட்டு இறங்கிய ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இறங்கிய ஒன்றிரண்டு வினாடிகளில் பேருந்தின் பக்கச்சுவற்றை வேகமாகத் தட்டிக்கொண்டே "சார் சார் பஸ்ஸை எடுத்திடாதீங்க... எடுத்திடாதீங்க... என்னோட பர்ஸ் உள்ளே விழுந்திடுச்சு..." என்று குரலெழுப்பினார்.

பகீரென்றது கதிரேசுவிற்கு.

"யாரம்மா இது... எல்லாரும் அவசரமாக இருக்க நேரத்தில... பஸ்ஸை நிறுத்தச் சொல்றது..." என்று சற்றே கோபமானார் நடத்துனர்.

"உள்ள தான் எங்கயோ விழுந்திருக்கு கொஞ்சம் யாராவது பாருங்களேன்..." தொடர்ந்து குரலெழுப்பினார் அந்தப் பெண்மணி.

கதிரேசுவிற்கு இப்பொழுது பயம் பதட்டம் உச்சத்தைத் தொட்டது. மூளை முன்னர் போலவே மின்னலாய் செயல்பட்டது. அமைதியாக இருந்திட வேண்டியதுதான். தன்னிடம்தான் பர்ஸ் இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்?

சிலர் அங்கும் இங்கும் கீழே பர்ஸ் எதுவும் தென்படுகிறதா என்று தேடினர். சிலர் அவசரத்தில் நின்று பொறுமையிழந்து கொண்டிருந்தனர். கதிரேசுவின் வெளிமனம் பேசியது. 'சற்று நேரம் தேடிப்பார்ப்பார்கள், கிடைக்காது, கண்டக்டரும் அவசரத்தில் இருக்கிறார், பேருந்தை எடுக்கச் சொல்லிவிடுவார். பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை'. உள்மனம் மீண்டும் வினவியது 'இது சரிதானா?' மற்றவர்கள் பரபரப்பாக இருந்தாலும் அமைதியாக நின்றான் கதிரேசு.

"ஏம்மா நீ பர்ஸை இங்கதான் விட்டேன்னு எப்படி சொல்லுற, வேற எங்கயாவது விட்டிருப்ப..." என்றார் கண்டக்டர்.

"இல்ல சார், உங்க கிட்ட இருந்து டிக்கட் வாங்கீட்டு, நீங்க குடுத்த பாக்கியையும் டிக்கட்டையும் உள்ள வச்சு நான் மூடினது நல்லா ஞாபகம் இருக்கு", என்று பதிலளித்தார் அந்தப் பெண்மணி.

வெளியில் நின்ற ஒன்றிரண்டு பயணிகள், 'ஏம்பா நல்லா பாருங்கப்பா, அந்தம்மாதான் இவ்வளவு சொல்றாங்க இல்ல, கண்டிப்பா கீழ எங்கயாவது இருக்கும்' என்று அந்தப் பெண்மணிக்கு ஆதரவாகப் பேச பேருந்தில் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரமானது.

கதிரேசுவின் மனம், ஆசையா?, நீதியா?, நானா?, நீயா?, சரியா?, தவறா? என்று இடைவெளி இல்லாத 'பட' 'பட' துடிப்போசையில் விவாதித்துக்கொண்டிருக்க சட்டென தனது வலது கை பாண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை மின்சார வேகத்தில் எடுத்து மீண்டும் காலுக்குக் கீழே வைத்துவிட்டு, 'இதோ இங்க எதோ இருக்கு இதா பாருங்க' என்று கீழே இருந்து பர்ஸை எடுத்து நீட்டினான் அதை யாரோ ஒருவர் வாங்கி வெளியில் நின்றிருந்த பர்ஸைத் தேடும் பெண்மணியிடம் நீட்டினார். அந்தப் பெண்மணிக்குத் தனது பர்ஸ் மீண்டும் கிடைத்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, எல்லோருக்கும் நன்றி சொன்னார், குறிப்பாக கதிரேசுவிற்கு 'நன்றி தம்பி' என்றார். அருகில் நின்றிருந்த சக பயணி ஒருவர் "அம்மா பர்ஸில் எல்லாம் சரியா இருக்கான்னு திறந்து பார்த்துக்கோங்க" என்றார். அந்தப் பெண்மணியும் சோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு நடத்துனருக்கு ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் பாதையைத்தொடர்ந்தார். கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பேருந்து புறப்பட்டது.

அந்தப் பெண்மணி சொன்ன ‘நன்றி’ கதிரேசுவை எதோ செய்தது. கதிரேசுவின் மனக்குதிரையின் குளம்படிச்சத்தத்தின் டக்... டக்..... டக்...... டக் குகளுக்கு இடைவெளி அதிகமாகிக்கொண்டிருந்தது.

"சின்னப் பையன் அதான் நேர்மையாக் கொடுத்துட்டான்" என்றார் கூட்டத்தில் ஒருவர். "வேற யாருமா இருந்தா பாக்கெட்ல போட்டுக்கிட்டு தெரியாத மாதிரி போயிருப்பாங்க" என்றார் மற்றொருவர். "கள்ளம் கபடமில்லாத பிள்ளை மனசு அதான்" என்றார் பின்னாலிருந்து ஒருவர். கதிரேசு இப்போது ஒரு பேசு பொருளாக, காட்சிப் பொருளாக பேருந்தில் நின்றிருந்தான். சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும் பேருந்தில் இருந்து இறங்கவேண்டும் என்ற உணர்வில் படிகளை நோக்கி அடியெடுத்து வைத்தான் கதிரேசு. அருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கதிரேசுவின் கையைப் பிடிக்க... திரும்பி பாட்டியைப் பார்த்தான் கதிரேசு, "நீயா இருந்ததால குடுத்துட்டே, வேற மனுசனா இருந்தா பாவம் அந்தப் பொண்ணு பணத்தைத் தொலைச்சிருக்கும், நீ நல்லவன், நல்லா இருப்ப" என்று ஆசி கூற, கதிரேசு தான் செய்வதறியாது பாட்டியிடமிருந்து தனது கையை மெதுவாக விடுவித்துக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தான்.

… மீ.மணிகண்டன்

Sep-09-2020

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.