செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இயற்கை வாழ்க ... M.Manikandan

குட்டிக் குட்டி மழைத்துளிகள்
கொட்டிக் களித்திடும் மேகம் வேண்டும்.
குளுகுளுக் காற்றை எனக்காக‌
கொண்டு வந்திடும் சோலை வேண்டும்.

வனங்கள் உயர்ந்திட வேண்டும்
வரங்கள் வழங்கிட வேண்டும்
மனங்கள் செழித்திட வேண்டும்
மரங்கள் வாழ மனிதம் வேண்டும் !

இயற்கை வாழ்க

ஆக்கம்: மீ.மணிகண்டன்

ஆசான்கள் ... M.Manikandan

வள்ளுவனார் தெள்ளமிழ்தால்
    ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
    சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
    யாரடி கொண்டார்
ப‌ள்ளியோடு மெள்ளமரந்
    தாரடி முறையோ ?

வண்ணமிகுத் தோரணையில்
    பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்து தனைப்
    “பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
    காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
    யாரதை ஏற்றார் ?

வெள்ளையுடைத் தாரகையும்
    வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
    கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
    தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
    தொண்டு புரிந்தார் !

வல்ல குறிக் கோளடையும்
    மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்ல விவே
    கானந்தர் வந்தார் !
நல்ல றிவாய் உள்ளுறைந்து
    ஆனதிரு தீ -அதை
எல்லார்க்கும் வள்ளலாரும்
    காண வகுத்தார் !

நாசுக்காய் நல்லவைகள்
    தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
    வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
    ஏங்கி நலிந்தே
காசுக்காய் கெட்டழிந்து
    தேங்குதல் முறையோ !

by M.Manikandan

சனி, 5 ஏப்ரல், 2014

ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் ... M.Manikandan

மறந்த உறவுச்சொற்களை
ம‌னதில் ஏற்ற‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

என்றும் பழமை பழுதில்லை
என்று உரைக்க‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

புலன்காணும் உணர்ச்சிகள்
பொய் யென்றே ஓத‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

உழைப்பிற்கு உண்மையொன்றே
ஊதியம் என்றுணர்த்த‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

பழங்களும் கீரையுமே
பசிக்குணவு எனப் பாட‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

ஒரே சிந்தனை ஒன்றே போதும்
என்றே சொல்லித்தர‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !



ஆக்கம்: மீ.மணிகண்டன்

புதன், 2 ஏப்ரல், 2014

தண்ணீர்ப் பயணம் ... M.Manikandan

கருமுகிலில் நீரெடுக்க‌
விருப்பமது பெருகிவிட‌
பருவக்கணக் கறிந்திடா
சிறுகுருவி வென்றகதை !

நிழலுக் குள்ளே நிற்கும்போது
    நீள வுயரம் கணிக்க‌வில்லை
மழலைச் சிறகு விரிந்தபோது
    மலையின் தூரம் கன‌க்கவில்லை !

வழிகள் முழுதும் வலிகள்ளென்றே
    வண்ணக் குருவி அறிய‌வில்லை
விழிகள் தொட்ட தூரம்பெரிதென
    விளங்கிக்கொள்ளத் தெரியவில்லை !

நின்று நிமிர்ந்து பறந்து கொஞ்சம்
    நீளமூச்சு வாங்கித்தான்
ஒன்றி நிழலில் ஓடி மலையில்
    ஒவ்வொரு கல்லாய்த் தாவியது !

ஒற்றை உயிராய்த் தொடங்கிய பயணம்
    பற்றியதொருகண ம‌ச்சம்
பற்றிய லட்சியம் பற்றியவெண்ணம்
    மாற்றிய தச்சம் மறுகணம் !

நிச்சயமென்று நினைவில் நிறுத்தி
    நீண்ட தவமாய் நிலையாக்கி
உச்சியைத் தொட்டு உயரப் பறந்து
    லட்சியம் தொட்ட பயணமிது !

ஒருமனப் பயணம் உயரியவெண்ண‌ம்
    உன்னதமாம் தந்த ஜெயம்
இருந்தும் உண்மையை எண்ணுகையில்
    இயற்கை கொஞ்சம் கடினம் !

Written by M.Manikandan