ஞாயிறு, 30 மார்ச், 2014

நானும் நீயும் மீதமினி

என்னை உன்னை நம்பித்தான்
எல்லாம் இங்கே நடக்குதடா.
எனக்கும் உனக்கும் தேவையெனில்
எல்லாம் மறைந்தே போகுதடா !

ஐந்தே மாதங்கள் நமை நாடும்
ஐந்தாம் அறிவுத் தெருக்கூத்து.
ஐந்து ஆண்டுகள் நாம் தேட‌
அழிந்தே மறையும் வெறுங்காத்து !

விட‌லைக ளில்லை நாமுமினி
வெறுங்கை முழத்தை நம்புதற்கு,
வேட்டை களாடி உரிமைபெற‌
வேங்கை என்பதை நிலைனிறுத்து !

மயக்க நிலையில் நாமில்லை
மாயா ஜாலம் பார்த்திருக்க‌,
வியற்க்க உழைக்கும் மாந்தர் நாம் !
விடியல் கொடுக்கும் வெளிச்சம் நாம் !

இனியொரு காந்தி வரமாட்டார்
இன்னொரு சுதந்திரம் பெறுதற்கு,
மற்றொரு பாரதி வரமாட்டார்
மறுபடி புரட்ச்சி பாடுதற்கு.

உண்மை எங்கும் நிலைப்பதற்கு
உரிமை என்றும் கிடைப்பதற்கு
நானும் நீயும் மீதமினி
நல்லொரு தீர்ப்பை வழங்குதற்கு !


By M.Manikandan

சனி, 29 மார்ச், 2014

எழுதவொரு வார்தையில்ல ... M.Manikandan

தொட்டபெட்டா அட்டகட்டி
    தொட்டுத் தின்ன வெல்லக்கட்டி
பொட்டு வச்சுக் கிட்ட வந்தா
    பட்டுச்சேல ஒண்ணக்கட்டி

மங்கை இந்த சொக்கியிண்ணு
    மங்கலமாச் சொன்னாங்க
அங்கேயே கரைஞ்சு போனேன்
    அங்கமெங்கும் ஆசையோட

சங்கு நெத்தி காந்தமாச்சு
    தங்கம் வெள்ளி தள்ளிப் போச்சு
திங்கள் வெள்ளி நாளையேண்ணி
    அங்க இங்க ஓடியாச்சு

வாச மாலை கட்டிப்போட்டு
    மாசி மாசம் பூசை போட்டு
ஆசி கேட்டு சாமிக்கிட்ட
    பேசி வரம் வாங்கியாச்சு

ஆத்துப் பக்கம் காத்திருக்க
    காத்து வர வேர்த்திருக்க
ராத்திரிக்குப் பூத்திரிய
    ஏத்திவச்சுப் பாத்திருக்க

இந்த சுகம் போலவொரு
    சொந்த சுகம் வேற இல்ல
எந்த நாளும் பொத்திவைக்க
    எழுதவொரு வார்தையில்ல !


Written by M.Manikandan

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ - M.Manikandan

எங்கே எங்கே எங்களின் நாட்கள்
எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

விடிந்திடும் காலையின் கீற்று வெளிச்சம்
வடிந்துகொண் டிருக்கும் இரவின் மிச்சம்
குளிர்ந்தனல் காற்றை சுவாசம் சுகிக்கும்
தெளிந்தநீ ரோடையில் தேகம் குளிக்கும்

ஆன்றோர் அளந்த நல் அறிவுரை கொண்டு
சான்றோர் உவந்த நல் தெளிவுரை கொண்டு
பெற்றோர் வாழ்த்திட ஆசான் உரைத்திட‌
கற்றுவளர் ந்த பொன் நாட்களும் வருமோ

"வா"வென ந‌ண்பர்கள் வழினின் றழைத்திட
வாடாமுக மாய்க் கை கோர்த்தி ணைந்திட
கலைபல பயின்றதும் கவலைம றந்ததும்
வலைத்தள தலைமுறை வழங்கிடத் தகுமோ

பெண்மான் ஒருத்தியை கனவில் வடித்ததும்
கண்மாய்க் கரைகளில் கவிதை புனைந்ததும்
நீண்டு நிறைந்த பனித்துளி நாட்களை
மீண்டும் கணினிக் காலம் தருமோ

மலர்ந்த நன் நாட்களின் ஞாபகக் கூட்டம்
உலர்ந்த இன் நாட்களில் விழிகளைப் பனிக்கும்
"மானுடம்" என்பதும் மாறிடு மென்றால்
ஊனுடல்வ ளர்க்குமிம் மாற்றமும் மெதற்கோ ?

ஆக்கம்:  மீ.மணிகண்டன்