சனி, 22 ஏப்ரல், 2023

பரிசுகளும் பாராட்டுகளும்...

மீ.மணிகண்டன் பரிசுகளும் பாராட்டுகளும்...

FeTNA 2023, Sacramento, CA

ஆண்டு 2014. eluthu .com தளத்தில் கவிதைகளுக்குப் பரிசுகள். கொடுக்கப்பட்ட கவிதைத் தலைப்புகள்: கற்றவை பற்றவை, பூக்களோடு ஒரு கைக்குலுக்கல், அழகான வாழ்க்கை ஆனந்தமாய், நாளைய தமிழும் தமிழரும்

ஆண்டு 2015.  'மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது' வழங்கியவர்கள்  'இணையதளப் படைப்பாளிகள் பேரவை', புதுச்சேரி.

ஆண்டு 2017. மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ்மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. சிறுகதை: 'புத்தகம் மூடிய மயிலிறகு'.

ஆண்டு 2018. படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பிற்கான விருது. கவிதை: 'நகராத ஒரு கணம்'

ஆண்டு 2023, குவிகம் மாத இதழ் நடத்திய குறும்புதினப்போட்டியில் பரிசு. குறும்புதினம்: 'முதல் பயணம்'.

ஆண்டு 2023, அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.

ஆண்டு 2023, பண்ணாகம்.கொம் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய பாடல் எழுதும் போட்டியில் பரிசு. 

ஆண்டு 2023, துகள் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'தாய்'. 

ஆண்டு 2023 (01-Jul-2023), கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு. கதை: ஜாஹ்ரா

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'அன்பே செல்வம்'.

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான கவிதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'ஒற்றையடிப் பாதை'.

ஆண்டு 2023 (12-Aug-2023), Nagarathar Writers, கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு, நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பு, கொடுக்கப்பட்ட தலைப்பு: 'நகரத்தார்கள் பெருமைகள்'.

படைப்பு விருது பெற்ற கவிதை

2018ம் ஆண்டு ஜூலைத் திங்கள் படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பு விருது. 


நகராத ஒரு கணம்
~~~~~~~~~~~~~~~~~~~~
* ஞாபகங்களின் காவலர்கள் 
சட்டச் சிறைக்குள்ளே

* மங்கிய மலர்ச்சியை 
மறுக்காமல் சொல்கிறது 
பழைய புகைப்படங்கள்

* வாசம் மறந்துபோனது 
சிரிப்புகள் 
சிறைபட்டுப் போனது

* நகராத ஒரு கணம் 
நாட்களை நகர்த்துகிறது

* வண்ணப் பூக்கள்  
வாடாத தோட்டம்

* ஒடுக்கப்பட்ட 
கருப்பு வெள்ளையில் 
ஒளிந்து கிடக்கிறது 
வண்ணம் 

... மீ.மணிகண்டன் 
#மணிமீ 
07/21/2018



முதற்பரிசுக் கவிதை

அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
விழா நாள்: April-05-2023

பெண்ணவள் இன்றிப் பேரெழில் குடும்பம்
பிறப்பதும் அன்று பிழைப்பதும் அன்று;
பெண்ணே குடும்பப் பின்னணி இயக்கம்
பெருமை சேர்த்திடப் பிறந்தவள் அவளும்;

அடுப்படி சமையல் அவளின் பங்கா?
அலுவல் ஒன்றே ஆற்றுதல் பங்கா?
அத்தை அம்மான் அன்புடன் மழலை
அனைவரைக் காப்பது அவளின் பங்கா?

கொண்டவ னுக்கோர் குலமகள் ஆகிறாள்;
குழந்தைக ளுக்கோர் தாயும் ஆகிறாள்;
கோடிப் பொருள்கள் குவிந்திடு மாறு
கொள்கைப் பிடிப்புடன் கோலோச் சுகிறாள்;

இதுதான் பெண்மை ஏற்கும் பங்கு
என்றே பிறிக்க இல்லை குடும்பம்;
எதுவும் அவளே என்கிற பாங்கு
இருந்திடும் வீட்டில் இன்பம் தங்கும்;

M.பானுமதி

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

கொரோனாவின் தொடக்க காலத்தில் எழுதிய நகைச்சுவைக் கதை. நாடகமாக்கிட ஏதுவாக அதிகம் உரையாடலாக எழுதிய கதையிது.

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

சிறுகதை எழுதியவர் மீ.மணிகண்டன் 

எழுதிய நாள்: Feb-04-2020

கொக்கரக்கோ

"என்ன இது..." 

"இன்னைக்கு சண்டே..." 

"தெரியும் சண்டே ... இது என்ன..." 

"சிக்கன்..." 

விடுவிடுவென சமயலறைக்குள் நுழைந்தாள் ப்ரேமி, "ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" என்றாள் அடுப்பிலிருந்து வெந்த இட்டலியை 

இறக்கி வைத்துக்கொண்டே.

"எந்த ஊர்ல..."

"ம்… நாம எந்த ஊர்ல இருக்கோம்..."

"அம்மாடி... புரியுற மாதிரி ஏதாவது சொல்லுறியா..."

"டி.வி. பாக்கறீங்க... யூடியூப் பாக்கறீங்க... எதுவுமே தெரியாத மாதிரி என்னைக் கேட்கறீங்க..." என அடுப்புச்சூட்டில் பொரிந்தாள்.

"ஸ்... அப்பா... தலை வலிக்குது... கொஞ்சம் காபி போட்டுத் தருவியா?"

"அம்மாடி… தலை வலியா... இதோட ஆரம்பம் தலை வலின்னு எந்த யூடியூப் லையோ சொன்ன மாதிரி இருக்கே... கடவுளே மறுபடி அதைப் பார்க்கலாம்னா 

எந்த சேனல் ன்னு அவசரத்துல ஞாபகம் வரமாட்டேங்குதே..." பயமும் கவலையும் கலந்துகட்ட, படபடத்தாள்.

"சரிதான்... காபியும் இல்லையா... பரவால்ல நான் வெளில போய் கடையில சாப்பிட்டுக்கறேன்..."

"போகும்போது நீங்க வாங்கிட்டு வந்ததை ஓபன் பண்ணாம எடுத்துட்டு போய் குப்பைல போடுங்க..."

"அடிப் பாவி... சிக்கன் விக்கற விலைக்கு... அப்படியே தூக்கி ஏறியச் சொல்லுற.. ஓஹோ... சிக்கன்தான் இவ்வளவுக்கும் காரணமா... இப்பப் புரியுது..."

"ம்... புரிஞ்சா சரி..."

"அடியே... அது எங்கயோ... யாருக்கோ கொரோனான்னு நியூஸ்ல சொல்றாங்க அதுக்காக நம்ம ஊர் சிக்கன் என்னடி பண்ணுச்சு?" என்று. கோழி சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கிறங்கினான் பிரகாஷ்.  

வாசற்கதவு தட்டும் ஓசை கேட்க, பிரகாஷ் சாளரம் வழியே எட்டிப்பார்த்தான், வெளியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு நின்றார்கள். நின்றவர் மீண்டும் கதவைத்தட்டினார், 

"யாரது..."

"நான்தான்..."

ப்ரகாஷிற்கு வெளியே நிற்பவர் "நான்தான்" என்று சொல்வது புரிகிறது அதனைத்தொடர்ந்து அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை. ஒருவேளை 

அவர் முகத்தை மூடாமல் பேசினால் புரியும்.

சமையலறை விட்டு வெளியே வந்த ப்ரேமி, “கதவைத் திறந்துதான் பேசுங்களேன்..." என்று கதவைத்திறக்க அடி எடுத்து வைத்தாள்.

"ஏய்... நில்லு... அவர் முகத்தை மூடி இருக்கார்... யாராவது முகமூடித் திருடனா இருக்கப் போகுது..."

கதவு மீண்டும் தட்டப்பட்டு, "நான்தான்..." என்றுவிட்டு இன்னும் எதோ சொல்கிறார்...

சற்று உன்னிப்பாகக் கேட்ட ப்ரேமி சிரித்துக்கொண்டே, "அப்பா..." என்றாள். 

"என்னது உங்க அப்பாவா?"

"ஹையே... ஆமாங்க... உங்களுக்கு அப்பாவோட குரல் தெரியலையா?"

கதவைத்திறந்தாள் ப்ரேமி, "வாங்க அப்பா... என்ன இது முகமூடி?" 

"வாங்க மாமா, என்ன ஒரு போன் கூட பண்ணல..."

முகத்தை மூடியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, " அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று மூச்சை இழுத்துவிட்டுச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சண்டே.. சும்மாதானே இருப்பீங்கன்னு அப்டியே கிளம்பி வந்துட்டேன் மாப்ள..."

"சரி இதென்ன கெட்டப்?"

"அட நீங்க வேற... ஏதோ கொரோல்லா வாமே அதுக்கு பயந்துதான்..."

"மாமா... அது கொரோல்லா இல்ல... கொரோனா…"

"எதோ ஒண்ணு... அத விடுங்க இன்னைக்கு என்ன சமையல்? யார் சமையல்?" 

"என்னப்பா சண்டே இங்க வந்தா கொக்கரக்கோ சாப்பிடலாம்னு வந்துட்டீங்களா..."

"அதென்ன கொக்கரக்கோ... சிக்கன்னு செல்லமா சொல்லக்கூடாதா..."

"ஆண்டவா... ஆண்டவா... அந்தப்பேரை சொன்னாக்கக்கூட சைனால இருக்கறது சைதாப்பேட்டைக்கு சட்டுன்னு வந்துடுதாம்... காத்துல அவ்வளவு வேகமாப் பரவுதாம்... அதான் அந்தப் பேரைக்கூடச் சொல்லமாட்டேன்." எச்சரிக்கைக் கொடி பிடித்தாள் ப்ரேமி.

"அடடா... நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டே ப்ரேமி... சிக்கனுக்கும் கொரோல்லாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல..."

"மாமா... அது கொரோனா..." மாமனாரை மீண்டும் திருத்தினான் பிரகாஷ்.

"விடுங்க மாப்ள... எனக்கு அப்படித்தான் வருது... சரி மாப்ள நீங்க இன்னும் சிக்கன் வாங்க கடைக்குப் போகலையா?"

"மாமா... அதெல்லாம் ஆச்சு... இப்போ இந்த சிக்கன் குப்பைக்குப் போகணுங்கறதுதான் ப்ரேமியோட போராட்டம்... இந்தப் போராட்டத்துக்கு நீங்கதான் சமாதானக் கொடி கட்டணும்..."

"அம்மாடி... உங்க அம்மா சைவமா இருந்துக்கிட்டு எப்பவுமே வெஜ்தான்... உனக்கு தெரியாதா... எப்பவோ ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை சிக்கன் சாப்பிடுறதுக்காக நாலு தெரு தள்ளி உங்க வீட்டுக்கு வறேன்... ஏமாத்திடாதடா கண்ணு..." என்று மகளைக் கெஞ்சினார் அப்பா.

"மாமா நீங்க தலை கீழ நின்னாலும் சரி... இன்னிக்கு இட்லி சாம்பார்தான்..."

"ஆமா... இப்ப இட்லி ரெடியா இருக்கு ரெண்டு பெரும் வாங்க மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் இருக்கு... மதியானத்துக்கு கொக்கரக்கோ மாதிரியே உங்களுக்கு காலிபிளவர் பொரியல் செஞ்சு தரேன்..."

"பாத்தீங்களா... மாமா... நான்... சொன்னது சரியா..."

இவர்களின் உரையாடலுக்கு நடுவே உள்ளே எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த பப்பு வெளியில் ஓடிவந்தான், "தாத்தா க்ரோனா என்ன…"

"அட உனக்கும் இது தெரிஞ்சுடுச்சா... அது எதோ கண்ணுக்குத் தெரியாத பூச்சியாம்..." பேரனுக்குப் பாடம் சொன்னார் தாத்தா.

"அடடா... மாமா கொஞ்சம் நிதானமா... குட்டிப் பையன குழப்பிடாதீங்க... அவன் கேட்கறது கொரோனா இல்ல... க்ரோனா என்ன? அதாவது C R O W க்ரோ அப்படின்னா என்ன?

"ஓஹோ... அதானே பார்த்தேன்... இதக் கண்டுபுடிச்சே ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா ப்ரீ கே ஜி க்கு பாடமா வந்ததுன்னு…" என்று இழுத்துச் சமாளித்தார் தாத்தா.

சத்தமில்லாமல் சிக்கன் பையை எடுத்து சமையலறையில் ப்ரேமி பார்வை படும்படி வைத்துவிட்டு வந்தான் பிரகாஷ். இதனைக் கண்ட ப்ரேமி, "சொன்னா கேட்க மாட்டீங்க..." என்று ஒரு அதட்டல் போட. "இன்னிக்கு மட்டும்தான்..." என்று கெஞ்சலாகச் சொல்லிவிட்டு மாமனாருடன் உரையாட ஹாலுக்கு வந்தான் பிரகாஷ்.

பின்னாலேயே பையைத்தூக்கிக்கொண்டு ஓடிவந்த ப்ரேமி, "என்னங்க என்ன இது சிக்கன்னு சொல்லி காலிபிளவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க..."

"ஏய் சும்மா சமாளிக்காத... நான் கொண்டு வந்தது சிக்கன்தான்..."

"அட இங்க பாருங்க..." என்று பையை திறந்து காட்டினாள். ப்ரகாஷிற்குப் புரியவில்லை. "நான் சின்னையா கடையிலிருந்து சிக்கன்தானே வாங்கி 

வந்தேன்... அவர் சிக்கன் வெட்டி பையில் போடும்போது பார்த்தேனே..." என்று யோசித்தான். "சரி ஒரு எட்டு அவர் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்," என்று கிளம்பினான்.

"இன்னிக்கு காலிபிளவர் பொரியல்தான்..." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ப்ரேமி.

கடை காலியாக இருந்தது. இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. "ஆஹா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டாரா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். 

"என்ன மாப்ள சிக்கன் கொண்டு வந்துடீங்களா?" என்றார் மாமனார் ஆவலுடன். 

"இல்ல மாமா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டார்…"

"சோ வாட், அவருக்கு ஒரு போன் போடறது..." 

"ஆமா மாமா, நல்ல யோசனை" என்று தனது மொபைல் போனை எடுத்து சின்னையாவிற்கு டையல் செய்தான் பிரகாஷ்.

மறுமுனையில், " ஹலோ…"

"அண்ணே நான்தான் பிரகாஷ் பேசுறேன்..."

"சொல்லுங்க தம்பி..."

"அண்ணே நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்த சிக்கன் வீட்டுக்கு வந்ததும் காலி ப்ளவரா மாறிடுச்சு..." என்று சிரித்தான் 

"அடடே அது நீங்க தானா…"

"என்ன சொல்றீங்க?"

"ஆமா பிரகாஷ் தம்பி, நான் வீட்டுக்கு வாங்கி வச்சிருந்த காலி ப்ளவரை நீங்க மாத்தி எடுத்துட்டு போயிட்டீங்க போல..."

"நான் அந்தப் பையை மாத்தி எடுத்தபோதே சொல்லக்கூடாதா?"

"அட... எனக்கெப்படி தெரியும் நீங்க மாத்தி எடுத்தீங்கன்னு? நான் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ பார்த்தா அந்தப் பையில சிக்கன் இருக்கு. சரி யாரோ மாத்தி எடுத்துட்டு போய்ட்டாங்க கேட்டா சொல்லலாம்னு இருந்தேன். இப்ப தான் தெரியுது நீங்கதான்னு... சரி நாளைக்கு கடைப்பக்கம் 

வரும்போது மறக்காம என்னைப் பாத்து சிக்கன் காசை திரும்ப வாங்கிக்கோங்க... சரியா?" 

"அட அது இருக்கட்டும் அண்ணே, இன்னிக்கு நம்ம சிக்கன் கனவை மொத்தமா கலைச்சுடீங்களே…"

மெளனமாக இருந்தார் சின்னையா 

"சரி அண்ணே உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையா, அதுவும் சொந்தமா கடை வச்சிக்கிட்டு…"

"நமக்கு வெஜ் தான் எப்பவும் ஸ்பெஷல் தம்பி. சிக்கன் நமக்கு தொழில் அவ்வளவுதான்."

"ஆச்சர்யமா இருக்கு..."

"ஆமா... கொஞ்சநாளைக்கு முன்னே யாரோ சொன்னாங்க வெஜ்தான் ஹெல்த்துக்கு நல்லதுண்ணு, அதுலேருந்து நாங்க வீட்டோட வெஜிடேரியனா மாறிட்டோம். சரி தம்பி மணக்க மணக்க வத்தக் குழம்பு என்னைக் கூப்பிடுது நான் இப்போ போனை வைக்கிறேன், நாளைக்கு மறக்காம கடைப்பக்கம் வந்து காசை வாங்கிக்குங்க" என்று போனை வைத்தார் சின்னையா.

"என்ன மாப்ள ரொம்ப நேரமா உரையாடல்..."

"ம்... அது ஒன்னும் இல்ல மாமா... இனிமே நம்ம வீட்டில... வெஜ்தான்..." என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு பிரகாஷ் எழ, மாமனார் "வடை போச்சே..." என்று விழிக்க... 

"ப்ரேமி... காலிப்ளவர் பொரியல் ரெடியா..." என்று சமையலறை நோக்கி அடி எடுத்துவைத்தான் பிரகாஷ்.

... மீ.மணிகண்டன்