செவ்வாய், 2 மே, 2023

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்

 எக்ஸிபிஷன் சிறுகதை … மீ.மணிகண்டன்

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்
பள்ளிக்கூடப் பைக்கட்டோடு பேருந்தில் ஏறினான் கதிரேசு. கண்டக்டரிடம் தனது பஸ் பாசை காண்பித்துவிட்டு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கிறதா என்று முதல் இருக்கை தொடங்கி கடைசி இருக்கை வரை நோட்டம் விட்டான், எதுவும் காலியாக இல்லை. 'இன்று நிற்கவேண்டியதுதானா', என்று மனதினுள் எண்ணிக்கொண்டே சற்று முன்னே நடந்து தலைக்குமேல் தொங்கிய கைப்பிடியை எட்டிப் பிடித்து பக்கவாட்டில் தூண்போல் இருக்கும் கம்பியில் சாய்ந்துகொண்டு பேருந்தின் வெளியே வேடிக்கை பார்க்கத்துவங்கினான். பள்ளிக்கூடம் முதல் அவன் வீடு இருக்கும் இடம் வரை சுமார் இருபத்தைந்து நிமிடப் பேருந்துப் பயணம்.

"மார்க்கெட் இறங்கலாம், டிக்கட் எடுக்காதவுங்க இருந்தா எடுத்துடுங்க, அடுத்தது ஸ்டேஜ்", என்று கண்டக்டர் தனது வழக்கமான வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். அடுத்த ஸ்டாப்பிங் கதிரேசு இறங்கவேண்டிய இடம், இறங்குவதற்குத் தயாராக வாசலருகே வந்து நின்றுகொண்டான். கதிரேசு இறங்கியதும் கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பணிந்த பேருந்தின் ஓட்டுநர், அடுத்த இலக்கை நோக்கி பேருந்தைப் பறக்கவிட்டார். கதிரேசு பள்ளிக்கூடச் சிந்தனையிலேயே வீடு நோக்கி நடந்தான். எக்ஸிபிஷன் போக பெயர் பதிவு செய்ய நாளை வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள். சனிக்கிழமை பாலன் சார் தலைமையில் தனது வகுப்பு மாணவர்கள் எக்ஸிபிஷன் செல்கிறார்கள். ராமு, குமரவேல், வாசு எல்லோரும் பணம் கட்டிப் பெயர் பதிந்துவிட்டார்கள். தான் செல்ல முடியுமா முடியாதா என்ற சந்தேகம் கதிரேசுவிற்கு வலுவாக இருந்தது. காரணம் கதிரேசு, தான்தான் சென்ற ஞாயிறன்று பால்காரர் வீட்டிற்குப் பால் வாங்கச்சென்றான், அப்போது பால்கார அண்ணனிடம், தனது தாய் சொன்னதுபோல, 'அடுத்தமாதம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறோம் அப்பா குவாரிக்கு இரண்டு வாரமாகப் போகவில்லை புது காண்ட்ராக்டர் இன்னும் இரண்டு வாரம் பொறுத்துத்தான் வரச்சொல்லியிருக்கிறார்', என்று சொல்லியிருந்தான். இந்தச் சூழ்நிலையில் அம்மாவிடமோ அப்பாவிடமோ இருபது ரூபாய் கேட்பது சற்றும் நியாயம் இல்லை என்று அவனது உள்மனம் உரைத்தது.

மெளனமாக வீட்டை அடைந்தான் கதிரேசு.

"என்னடா என்ன நினைப்பு, செருப்போட வீட்டுக்குள்ள வர்ற", அம்மாவின் குரல் சிந்தனையைக் கலைக்க தன் தவறை உணர்ந்து. "இல்லம்மா, இன்னிக்கு இங்கிலிஷ் பேப்பர் குடுத்தாங்களா, ராமுவைவிட நான் ரெண்டு மார்க் அதிகம் வாங்கியிருந்தனா, அந்த யோசனைதான்", என்று சமாளித்தவாறே செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்று வாசல் அருகே ஓரமாக வைத்தான்.

அன்றைய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான் கதிரேசு. அம்மா அழைக்க, அப்பாவும் தானும் ஒன்றாக அமர்ந்து, அம்மா மண்ணெண்ணை அடுப்பில் சுட்டு வைக்கும் சப்பாத்திகளை ஆளுக்கு இரண்டாகச் சுவைத்தார்கள் தொட்டுக்கொள்ள அம்மாவின் மாவடு ஊறுகாய் சப்பாத்தியின் சுவையைக் கூட்டியிருந்தது.

உணவு முடிந்ததும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றிருந்தபொழுது வாங்கிவந்த அந்த காந்தச்சக்கரத்தை எடுத்து சற்று நேரம் விளையாடினான், இங்கும் அங்குமாக இரண்டு கம்பிகளுக்கிடையே உருளும் காந்தச்சக்கரம் பழைய ஞாபகங்களை சிந்தனையில் உருட்டியது, மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் தன் நண்பர்களும் அந்த சிரிப்புக் கண்ணாடிகளின் முன் நின்றுகொண்டு அடித்த லூட்டி இப்பொழுதும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது, மகேஷ் ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு "பாருடா என் வயிறு மட்டும் குண்டா இருக்கு" என்றான், ராமு ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, "டேய் என் தலையைப் பாருடா சப்பாத்தி மாவை அழுத்திவச்ச மாதிரி சப்பையா இருக்கு", என்றான், குமரவேல், "என்னை பாருங்கடா எவ்வளவு ஒல்லியா உயரமா இருக்கேன், வானத்தையே தொட்டுவிடுவேன்" என்றான், கதிரேசுவோ ஒரு கண்ணாடியின் முன் நின்று, "எனக்கு பல்லு மட்டும் வாயைவிட பெரிசா இருக்குடா, அஹ்ஹ் ஹஹ் ஹா..." என்று எல்லோரும் கூடிச்சிரித்த நிகழ்வு ஏக்கத்தை வரவழைத்தது கதிரேசுவிற்கு.

ஓரிடத்தில் கடல்வாழ் உயிரினங்களின் காட்சி வைக்கப்பட்டிருந்தது, அங்கே இருந்த வண்ண வண்ண மீன்கள், பல வகையான அளவுகளில், அகலமாக, நீளமாக இருந்தவற்றையெல்லாம் கண்டு மாணவர்கள், "டேய் அது கெளுத்தி", "இல்லடா அது கலர் மீன், கெளுத்தி இல்ல", "இல்லடா அது விரால் மீன்", "போடா அது சின்ன சைஸ் சுறா", என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த பெயர்களைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதும் கதிரேசுவுக்கு நேற்று நடந்ததுபோல் இருந்தது. சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றது வரலாற்று ஆசிரியர் அருணாச்சலம் சார் தலைமையில்தான். எல்லா மாணவர்களும் சீருடையில் தான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்.  அருணாச்சலம் சாருக்கு அசிஸ்டென்டாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் சார் வந்திருந்தார்.

மாணவர்களும் ஆசிரியர்களும் எக்ஸிபிஷனில் நிறைய காட்சிப் பரப்புகளைக் கண்டுவந்தனர், மாலை இருட்டிக்கொண்டு வந்தது, பொருட்காட்சித் திடல் எங்கிலும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தது, இராட்டினங்களில் பலவகை, பெரிதும் சிறிதும், அங்கும் இங்குமாக வைக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேகமாகவும் மெதுவாகவும் இயங்கிகொண்டு பார்ப்பவர்களை வசீகரித்துக்கொண்டிருந்தது. சிறுவர் பெரியோர் எனப் பேதம் இல்லாமல் எல்லோரையும் ஈர்க்க பலவித விளையாட்டுப் பொருட்களின் கடைகள் கண்கவர் விளக்குகளால் வலைவீசிக்கொண்டிருந்தன. சுடச்சுட டெல்லி அப்பளம், சுவை மிக்க பானி பூரி, மசாலா மணக்கும் பொரித்த மீன், சலசலவென சத்தத்தோடு எண்ணையில் பொரிந்துகொண்டிருக்கும் முட்டை போண்டாக்கள், காரம் மிக்க மிளகாய் பஜ்ஜிகள், கைகள் கொள்ளாத அளவுகளில் பல வண்ணங்களில் பஞ்சு மிட்டாய்கள் எனப் பல வகையான தின்பண்டக் கடைகள் சுற்றிலுமாக அடுத்தடுத்தாக நிறுவப்பட்டிருக்க, பொருட்காட்சியை சுற்றிக் களித்தவர்கள் பசியில் ருசிதேடி, மீன் வாங்குவோமா, பஜ்ஜி வாங்குவோமா, அப்பளம் வாங்குவோமா, ஐஸ் கிரீம் வாங்குவோமா என்ற குழப்பத்தில் அனைத்துவகைக் கடைகளையும் நாடினர்.

மாணவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்த அருணாச்சலம் சார், "தம்பிகளா இங்கதான் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் கடையெல்லாம் இருக்கு எல்லோரும் போயிட்டு வேணுங்கறத வாங்கிட்டு சரியா இந்த புக் ஸ்டால் கிட்ட வந்துடனும்", என்று அருகில் இருந்த புத்தக நிலையத்தை அடையாளம் காட்டினார், "கரெக்ட்டா பதினஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ளே இங்க திரும்ப அசம்பிள் ஆயிடனும், அப்படி வரலைன்னா நாங்க விட்டுட்டுப் போயிடுவோம்", என்றார். மாணவர்கள் அனைவரும் இதற்காகவே காத்திருந்ததுபோல ஹூய் என்ற ஆரவாரத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொருதிசையில் சிட்டாகப் பறந்தனர்.

கதிரேசுவிற்குக் குழப்பம், முதலில் விளையாட்டுப் பொருள் வாங்கப் போவதா அல்லது தின்பண்டக் கடையை நாடுவதா? பதினைந்து நிமிடங்களுக்குள் எதைச்செய்ய முடியும் இந்த சார் ஒரு அரை மணிநேரமாவது கொடுக்கக் கூடாதா... என்று மனதினுள் நினைத்துக்கொண்டே, முதலில் பொம்மைக் கடைக்குப் போவோம் தின்பண்டம் கைகளில் மீதம் இருந்தாலும் அதைப்  போகும்போதோ அல்லது வீட்டிற்குப் பொய்க்கூட உண்ணலாம் ஆனால் பொம்மைக் கடை அப்படி அல்ல என்று முடிவெடுத்து பொம்மைக் கடைகளில் தனது ஆசைப் பொருளான காந்தச்சக்கரத்தைத் தேடினான், தங்கைக்கோர் கீதம் படம் பார்த்ததிலிருந்தே அந்த காந்தச்சக்கரத்தின் மீது ஆசை, ஆம் அந்தப் படத்தில் செந்தாமரை அவ்வப்பொழுது தனது கையில் சிவப்புநிற காந்தச்சக்கரத்தை கம்பிகளின் ஊடாக உருட்டிக்கொண்டு வசனம் பேசுவதே ஒரு தனி அழகு. அப்படித்தானும் காந்தச்சக்கரம் உருட்ட வேண்டும் வசனம் பேசவேண்டும் என்பது கதிரேசுவின் ஆசைகளில் ஒன்று. அங்கே இங்கே தேடி ஒரு கடையில் வரிசையாகத்தொங்க விடப்பட்டிருந்த காந்தச்சக்கரங்களைக் கண்டுவிட்டான். மஞ்சள் பச்சை சிவப்பு நீலம் எனப் பல நிறங்களில் சக்கரம் இருந்தது ஆனால் கதிரேசு குறிப்பாக கடைக்காரரிடம் சிவப்பு நிறம் கேட்டு வாங்கினான், என்ன விலை என்ற கதிரேசுவின் கேள்விக்கு பதினைந்து ரூபாய் எனப் பதிலளித்தார் கடைக்காரர். அதே காந்தச்சக்கரம் தான் இதோ இப்பொது கதிரேசு கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருப்பது.

"என்னடா இன்னும் தூங்கலையா" அப்பாவின் குரல் கேட்டு தன்னிலைக்கு வந்தான் கதிரேசு.

மறுநாள் எந்த நினைப்பும் இல்லாமல், நாளை பார்க்காவிட்டால் அடுத்த ஆண்டு பொருட்காட்சி பார்த்துக்கொள்ளலாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இறைவனை வணங்கிவிட்டு பள்ளிக்கூடம் புறப்பட்டான். வழக்கத்திற்கு மாறாக பேருந்து இன்று மிகுந்த கூட்ட நெரிசலுடன் வந்தது. ஓட்டுநர் சரியாக நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று தள்ளிச்சென்று நிறுத்தினார். கதிரேசு ஓடிச்சென்று பேருந்தில் பின்பக்கப் படிக்கட்டில் தொற்றிக்கொண்டான்.

"யாரப்பா அது, சார் சின்னப்ப பசங்கள படில நிக்காம கொஞ்சம் உள்ள விடுங்க சார்", என்றார் கண்டக்டர். முண்டியடித்துக்கொண்டு ஏறிய கதிரேசுவையும் இன்னும் ஒன்றிரண்டு பள்ளிக்கூட மாணவர்களையும் உள்ளே போகச்சொல்லி மிகுந்த சிரமத்திற்கிடையே ஒதுங்கி... இல்லை இல்லை ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு வழிவிட்டனர் மற்ற சக பயணியர். அந்தக்கூட்டத்திலும் சிறுவர்கள் தங்களின் பஸ் பாசை எடுத்து கைகளை உயர்த்தி கண்டக்டரிடம் நீட்டினர். பார்த்தும் பார்க்காமலும் "சரிசரி... நகரு நகரு…" என்று ஸ்டேஜை நிறைவு செய்வதில் மும்முரமாக இருந்தார் கண்டக்டர். எல்லோரும் கிட்டத்தட்ட அடுத்தவர்களின் பூட்ஸ் மற்றும் செருப்புக் கால்களை அரைகுறையாக மிதித்துக்கொண்டுதான் நின்றிருந்தார்கள் இருந்தாலும் கூட்ட நெரிசல் காலை வேளை என்பதைப் புரிந்துகொண்ட அனைவரும் அடுத்தவர் மீது கோபப்படாமல் பயணித்துக்கொண்டிருந்தனர்.

கதிரேசு நின்றிருந்த இடத்தில் அவனது கால்கள் ஏதன் மீதோ நிற்பது போலத் தோன்றியது. முதலில் யாருடைய காலின்மீதோ தனது வலது கால் இருக்கிறது என்றுதான் நினைத்தான் பின்னர் எதேச்சையாக அழுந்தியபோது பக்கத்தில் நின்றிருந்த யாரும் குரல் தரவில்லை. கண்டிப்பாக அது பிறரின் காலாக இருந்தால் தான் தவறுதலாக மிதித்தது அவர்களுக்கு வலியை கொடுத்திருக்கும் லேசாகவாவது குரல் கொடுத்திருப்பார்கள். இப்போது மீண்டும் தனது வலது காலை அழுத்தினான்... ம்... முடிவு செய்துவிட்டான்... தரையில் எதோ கிடக்கிறது, ஒரு வேளை அது மணிபர்ஸாக இருந்தால்... அதில் பணம் இருந்தால்... அடுத்த வினாடி கதிரேசுவின் கண்கள் பிரகாசித்தது... தானும் நாளை எக்ஸிபிஷன் சென்றுவரலாம். இப்போது காலின் அடியில் இருப்பதை எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டினுள் வைக்க வேண்டும் எப்படி? சிறிதும் தாமதிக்காமல் தலையை நிமிர்த்தி மேலே பார்த்துக்கொண்டு உட்காருவதுபோல தனது வலக்கையை மட்டும் தன் காலின் கீழே செலுத்தி காலில் தட்டுப்பட்டதை கையால் தொட்டுப் பார்த்தான் சந்தேகமே இல்லை அது மணிபர்ஸ்தான், சற்றே கனமான அந்த மணிபர்ஸை எடுத்து கையினால் தடவியபடியே எழுந்து தனது வலப்பக்க பாண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான். பத்து வினாடிகளில் பல நிகழ்வுகள் அவனது மூளைக்குள் பிரவேசித்தது. சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும். யாரும் அந்தப் பர்ஸைத் தேடும்முன் தான் இறங்கி பள்ளிக்கூடம் செல்லவேண்டும். பாலன் சாரிடம் பெயர் பதியவேண்டும். எக்ஸிபிஷன் போக வாய்ப்பு கிடைத்துவிட்டது. இப்படி மூளை வேலை செய்தாலும் அவனது உள் மனம் கேள்வியெழுப்பியது 'இது தவறல்லவா?' 'இல்லை' என்றது வெளி மனம். காரணம் கேட்டது உள் மனம். ‘திருட்டு தவறு, ஆனால் இது திருட்டு இல்லை கீழே கிடந்ததுதானே’ என்றது வெளி மனம். இன்னும் மூன்று நிறுத்தங்கள் கடந்துவிட்டால் போதும் நான்காவது நிறுத்தம் கதிரேசுவின் பள்ளிக்கூட நிறுத்தம். பள்ளிக்கூடத்தில் இறங்கிவிட்டால் பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை.

ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அது நிகழ்ந்தது. பெருந்துக்கூட்டத்தைவிட்டு இறங்கிய ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இறங்கிய ஒன்றிரண்டு வினாடிகளில் பேருந்தின் பக்கச்சுவற்றை வேகமாகத் தட்டிக்கொண்டே "சார் சார் பஸ்ஸை எடுத்திடாதீங்க... எடுத்திடாதீங்க... என்னோட பர்ஸ் உள்ளே விழுந்திடுச்சு..." என்று குரலெழுப்பினார்.

பகீரென்றது கதிரேசுவிற்கு.

"யாரம்மா இது... எல்லாரும் அவசரமாக இருக்க நேரத்தில... பஸ்ஸை நிறுத்தச் சொல்றது..." என்று சற்றே கோபமானார் நடத்துனர்.

"உள்ள தான் எங்கயோ விழுந்திருக்கு கொஞ்சம் யாராவது பாருங்களேன்..." தொடர்ந்து குரலெழுப்பினார் அந்தப் பெண்மணி.

கதிரேசுவிற்கு இப்பொழுது பயம் பதட்டம் உச்சத்தைத் தொட்டது. மூளை முன்னர் போலவே மின்னலாய் செயல்பட்டது. அமைதியாக இருந்திட வேண்டியதுதான். தன்னிடம்தான் பர்ஸ் இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்?

சிலர் அங்கும் இங்கும் கீழே பர்ஸ் எதுவும் தென்படுகிறதா என்று தேடினர். சிலர் அவசரத்தில் நின்று பொறுமையிழந்து கொண்டிருந்தனர். கதிரேசுவின் வெளிமனம் பேசியது. 'சற்று நேரம் தேடிப்பார்ப்பார்கள், கிடைக்காது, கண்டக்டரும் அவசரத்தில் இருக்கிறார், பேருந்தை எடுக்கச் சொல்லிவிடுவார். பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை'. உள்மனம் மீண்டும் வினவியது 'இது சரிதானா?' மற்றவர்கள் பரபரப்பாக இருந்தாலும் அமைதியாக நின்றான் கதிரேசு.

"ஏம்மா நீ பர்ஸை இங்கதான் விட்டேன்னு எப்படி சொல்லுற, வேற எங்கயாவது விட்டிருப்ப..." என்றார் கண்டக்டர்.

"இல்ல சார், உங்க கிட்ட இருந்து டிக்கட் வாங்கீட்டு, நீங்க குடுத்த பாக்கியையும் டிக்கட்டையும் உள்ள வச்சு நான் மூடினது நல்லா ஞாபகம் இருக்கு", என்று பதிலளித்தார் அந்தப் பெண்மணி.

வெளியில் நின்ற ஒன்றிரண்டு பயணிகள், 'ஏம்பா நல்லா பாருங்கப்பா, அந்தம்மாதான் இவ்வளவு சொல்றாங்க இல்ல, கண்டிப்பா கீழ எங்கயாவது இருக்கும்' என்று அந்தப் பெண்மணிக்கு ஆதரவாகப் பேச பேருந்தில் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரமானது.

கதிரேசுவின் மனம், ஆசையா?, நீதியா?, நானா?, நீயா?, சரியா?, தவறா? என்று இடைவெளி இல்லாத 'பட' 'பட' துடிப்போசையில் விவாதித்துக்கொண்டிருக்க சட்டென தனது வலது கை பாண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை மின்சார வேகத்தில் எடுத்து மீண்டும் காலுக்குக் கீழே வைத்துவிட்டு, 'இதோ இங்க எதோ இருக்கு இதா பாருங்க' என்று கீழே இருந்து பர்ஸை எடுத்து நீட்டினான் அதை யாரோ ஒருவர் வாங்கி வெளியில் நின்றிருந்த பர்ஸைத் தேடும் பெண்மணியிடம் நீட்டினார். அந்தப் பெண்மணிக்குத் தனது பர்ஸ் மீண்டும் கிடைத்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, எல்லோருக்கும் நன்றி சொன்னார், குறிப்பாக கதிரேசுவிற்கு 'நன்றி தம்பி' என்றார். அருகில் நின்றிருந்த சக பயணி ஒருவர் "அம்மா பர்ஸில் எல்லாம் சரியா இருக்கான்னு திறந்து பார்த்துக்கோங்க" என்றார். அந்தப் பெண்மணியும் சோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு நடத்துனருக்கு ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் பாதையைத்தொடர்ந்தார். கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பேருந்து புறப்பட்டது.

அந்தப் பெண்மணி சொன்ன ‘நன்றி’ கதிரேசுவை எதோ செய்தது. கதிரேசுவின் மனக்குதிரையின் குளம்படிச்சத்தத்தின் டக்... டக்..... டக்...... டக் குகளுக்கு இடைவெளி அதிகமாகிக்கொண்டிருந்தது.

"சின்னப் பையன் அதான் நேர்மையாக் கொடுத்துட்டான்" என்றார் கூட்டத்தில் ஒருவர். "வேற யாருமா இருந்தா பாக்கெட்ல போட்டுக்கிட்டு தெரியாத மாதிரி போயிருப்பாங்க" என்றார் மற்றொருவர். "கள்ளம் கபடமில்லாத பிள்ளை மனசு அதான்" என்றார் பின்னாலிருந்து ஒருவர். கதிரேசு இப்போது ஒரு பேசு பொருளாக, காட்சிப் பொருளாக பேருந்தில் நின்றிருந்தான். சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும் பேருந்தில் இருந்து இறங்கவேண்டும் என்ற உணர்வில் படிகளை நோக்கி அடியெடுத்து வைத்தான் கதிரேசு. அருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கதிரேசுவின் கையைப் பிடிக்க... திரும்பி பாட்டியைப் பார்த்தான் கதிரேசு, "நீயா இருந்ததால குடுத்துட்டே, வேற மனுசனா இருந்தா பாவம் அந்தப் பொண்ணு பணத்தைத் தொலைச்சிருக்கும், நீ நல்லவன், நல்லா இருப்ப" என்று ஆசி கூற, கதிரேசு தான் செய்வதறியாது பாட்டியிடமிருந்து தனது கையை மெதுவாக விடுவித்துக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தான்.

… மீ.மணிகண்டன்

Sep-09-2020

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.