ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மன நிறை வெனும் மழை ... M.Manikandan


கட்டிய மலர்களும்,பறவை களும்,
கன்றுட னசைமரங் களும்,சா ரலும்,
கற்சிலை, கடற்கரை, மலை,மே கமும்,
கண்டினுங் கரைந்திடா தொருதா கமும்…

எண்ணியே மயங்கிடக் கிளிக்கீச் சுகள்,
எங்கினு மொலிக்கமூங் கிலின்பாட் டுகள்,
எப்பொழு துடன்பாணர் களின்மெட் டுகள்,
என்னிலை யிலுந்தளர்ந் திடாக்கா துகள்…

அற்புத மனமகிழ் மழைவா சனை,
அந்திம லரும்புது மலர்வா சனை,
அத்தரும், புனுகுடன் சுகவா சனை,
அன்றியு மதனினும் ஒருயோ சனை…

உன்னத வகையொடப் பளபா யசம்
உப்புட னறுசுவை யுணவா யிரம்
உச்சியு மிரவுமுண் டுமயங் கியும்
உத்தர விடுங்குடல் பசிமே விடும்...

கட்டுடல் மகிழவும் களைப்பா றவும்
கன்னிம ணவாளனும் பரிமா றவும்
கட்டிலும் தலையணை தினம்மா றியும்
கற்றிடக் கலைவளர் வதுநூ தனம்...

இத்தனை பருகியும் நிறையா தது
இன்னுமெ னதேடுதல் குறையா தது
இன்னுமி தெதற்கென உணரா தது
இன்னலே மிகுமினிப் பிழைதா னது

by M.Manikandan

புதன், 3 செப்டம்பர், 2014

யானோ வணிகன்

கற்பனைச்சுருளில்
படம்பிடித்தேன்
காகிதப் பக்கத்தில்
திரையுமிட்டேன்

...விற்பனை கூவியும்
...வேகமில்லை
...வீங்கிக்கிடக்குது
...வீட்டுகுள்ளே...!

உற்சவ மூர்த்தியை
உருவமைத்தேன்
ஊர்வலம் போய்வரத்
தேரமைத்தேன்

...ஊருக்குச் சொல்லியும்
...ஓசையில்லை
...உறங்கிக் கிடக்குது
...ஓலைக்குள்ளே...!

பொய்யும் புரட்டும்
போகும் பாதையில்
பூவும் பொன்னுமே
மூடிக்கிடக்குது

...புல்லர் அறிந்திட
...வில்லையெனிலோ
...போகட்டுமே ஒரு
...தோல்வி இல்லை...!

by M.Manikandan