வெள்ளி, 6 ஜூன், 2014

சுற்றி யாவும் சூட்சுமமே ... M.Manikandan

இலக்கணம் சொன்னது தமிழ்
எழுதுகிறேன்
இனிப்பைச்சொன்னது தேன்
சுவைக்கிறேன்

கவிதை சொன்னது மழை
ரசிக்கிறேன்
கதைகள் சொன்னது பழமை
வியக்கிறேன்

வாசம் சொன்னது பூ
சுகிக்கிறேன்
வண்ணம் சொன்னது வானம்
நம்புகிறேன்

நட்பைச் சொன்னது பறவை
நெகிழ்கிறேன்
நடக்கச் சொன்னது நதி
உழைக்கிறேன்

நேசம் சொன்னது நிலம்
திளைக்கிறேன்
நிசத்தைச் சொன்னது தீ
நிமிர்கிறேன்

மென்மை சொன்னது தென்றல்
லயிக்கிறேன்
மயங்கச் சொன்னது இரவு
உறங்குகிறேன்

சேர்க்கை சொன்னது விலங்கு
சிரிக்கிறேன்
சீற்றம் சொன்னது புயல்
சிந்திக்கிறேன்

மதிக்கச் சொன்னார் முன்னோர்
வணங்குகிறேன்
உதிக்கச் சொன்னான் சூரியன்
வாழ்கிறேன்

by M.Manikandan

வியாழன், 5 ஜூன், 2014

கழிவு நீர்க் கடையாலே

எங்க சாமி மனுக் கொடுக்க
எங்க வாழ்கை தொலஞ்சு போச்சு
ஏச்சுப் பொழைக்கும் இனங்க ளுக்கெ
ஏக கால மாகிப் போச்சு

தாலி தந்த கணவனிங்கே
தவிச்ச வாய்க்கு தண்ணிதல்ல‌
கூலி செஞ்ச காசையெல்லாம்
குடும்பத்துக்குத் தருவதில்ல‌

வருத்தமில்ல பிள்ளகுட்டி
வளருவதும் கருத்திலில்ல‌
தெருத் தெருவாத் திரிபவன‌
திருத்த வொரு பேருமில்ல‌

பெத்தவளக் கேட்டாக்கப்
பொறுத்திருந்து போகச்சொன்னா
வித்தையில்ல விடியுமுன்னே
விடைதெரிய வென்றுசொன்னா

அவரவர் பழவினைன்னு
ஆடிச்சொன்னர் பூசாரி
வெவரங் கெட்டவ நான்
வேறயென்ன எதிர்பாக்க‌

தரங்கெட்ட அரசாங்கம்
தம்பட்ட மடிச்சுக்குது
தன்னலமே இல்லையிண்ணு
தைரியமாப் புழுகுது

இட்டிலிய சோத்தத் திண்ணா
ஏழ சனம் ஒசந்துடுமா
பட்டியெல்லாம் டாஸ்மாக்
பல்லிளிச்சுக் கொல்லுதம்மா

சாதிவாழும் மண்ணிலே
சமுதாய மத்தியிலே
நாதியத்த சனங்களா
நாங்க‌ளுமே மனுசதான்


by M.Mnaikandan