புதன், 22 ஜூன், 2022

அந்த மூன்றாவது பயணி... அமானுஷ்ய சிறுகதை

கதையின் தலைப்பு: அந்த மூன்றாவது பயணி...

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே இருட்டில் வேடிக்கை பார்க்க முடியாவிட்டாலும் இருட்டையே பார்த்துக்கொண்டு பழைய படப் பாடல்களை தனக்குமட்டுமே கேட்கும் வகையில் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இரு பயணிகளும் நல்ல உறக்கத்தில். மணியுர் பேருந்து நிலையம் சென்றடைய இன்னும் மூன்று மணிநேரம் ஆகும் இப்போது மணி இரவு 11:35. கண்டக்டர், தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து பயணசீட்டு வரவுக் கணக்கைப் பார்த்தவண்ணம், நூறு, ஐம்பது, இருபது, பத்து என ரூபாய்த்தாள்களை அடுக்கிக்கொண்டிருந்தார். டிரைவர், சாலையிலிருந்து பார்வையை நகர்த்தவில்லை பேருந்து 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் மரங்கள், கும் இருட்டு, பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் தவிர நிலவு வெளிச்சம் மட்டுமே அந்த சாலைக்குத் துணையாக இருந்தது. பெருந்தினுள்ளும் ஒன்றிரண்டு விளக்குகள் தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.

அந்த மூன்றாவது பயணி ... மீ.மணிகண்டன்
லேசாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒரு விளக்கின் கீழ் இருக்கை ஒன்றில் அமர்ந்து பணத்தை எண்ணி அடுக்கி முடித்த கண்டக்டர், டிரைவர் அருகில் சென்று  சற்று உரையாடலாம் என்ற எண்ணத்தில் எழுந்து நடந்தார், வழியில், விழித்திருக்கும் நவீனைப் பார்த்து "என்ன சார் தூக்கம் வரலையா?", என்றார்.

"இருட்டு நல்லா இருக்கு சார், காத்து குளுகுளுன்னு இதமா இருக்கு, என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்", என்று பதிலளித்தான் நவீன். சிரித்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர். 

டிரைவருக்கு அருகாமையில் அமர்ந்தார் கண்டக்டர். கண்டக்டர் வந்ததைக் கண்ட டிரைவர், "ஏம்பா மாங்குடில நிப்பாட்டி சாப்பிட்டுட்டு போலாமா? மூணு மணி ஆயிடும் மணியூர் போறதுக்கு அதுவரைக்கும் பசி தாக்குப் பிடிக்க முடியாது." என்றார்.

"ஆமா, நானே கேட்கலாம்னுட்டு தான் இருந்தேன், அப்படியே செய்வோம்" என்றார் கண்டக்டர்.

அது ஒரு சாலையோரத்து இரவு உணவு விடுதி அங்கே வேலை பார்க்கும் சிறுவன் ஒருவன் அந்த விடுதியின் முன்னும், சாலை ஓரமாகவும் நின்றுகொண்டு பேருந்தை கைகாட்டி உணவு விடுதியின் அருகாமையில் நிறுத்தும்படி  சைகை காட்டிக்கொண்டிருந்தான். அந்த வழியே போகும் பேருந்துகளை இதுபோல் கைகாட்டி உணவு விடுதிக்கு அழைப்பது அவர்களின் இயல்பான பழக்கம், காரணம், அந்தச் சாலையில் செல்லும் பேருந்து மற்றும் வெகுதூரப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களை மட்டும் நம்பியே அந்த உணவு விடுதி இயங்கி வருகிறது. அந்த இடத்திலிருந்து மாங்குடி ஊருக்குள் செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் அடையாளத்திற்கு, அந்த உணவுவிடுதியை, பயணிகள், மாங்குடி உணவுவிடுதி என்றே அழைப்பது வழக்கம். 

சிறுவன் காட்டிய திசையில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். சிறுவன் பெருந்தினுள் எட்டிப் பார்த்தான், "என்ன சார் பாசெஞ்சர் யாரும் இல்லையா?, ஆளில்லாத பஸ்ஸை நிப்பாட்டினேனான்னு ஓனர் என்னை திட்டப்போறாரு?" என்றான்.

"ஏம்பா, இருக்கவுங்கள பார்த்தா பாசெஞ்சரா தெரியலையா?", என்றார் கண்டக்டர்.

"நாங்க சாப்பிடுறதுக்கு காசு கொடுத்துடுவோம்னு சொல்லு தம்பி, ஓனர் திட்டமாட்டார்," என்று சொல்லிக்கொண்டே எஞ்சினை ஆஃப் செய்தார் டிரைவர்.

விடுதி வாயில் அருகில் இருந்த கேசட் கடையிலிருந்து பழைய பாடல் ரம்யமாக ஒலித்துக்கொண்டிருந்தது.  "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்று T.M.S, வாலியின் வரிகளை உணர்ச்சிப்பூர்வமாக பாடிக்கொண்டிருந்தார்.

நவீன் இன்னும் சன்னலோரப் பார்வையை விலக்கவில்லை. மற்ற இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில். கண்டக்டர் நவீனின் அருகில் சென்றார் ஒருவேளை உறங்கினால் எழுப்பவேண்டாம் விழித்திருந்தால் சாப்பிட அழைக்கலாம் என்ற எண்ணத்தில், சற்று நவீனின் முகத்தை உற்று நோக்கினார். அதே நேரம் டிரைவர் கண்டக்டரிடம் "ஏம்பா சீக்கிரம் எறங்குப்பா பசிக்குது". என்றார். "இதோ வந்துட்டேண்ணே பாசெஞ்சர் யாராவது முழிச்சிருந்தா சாப்பிடுறீங்களான்னு கேட்கலாம்னு வந்தேன்". என்றார் கண்டக்டர். 

"சரி சரி சீக்கிரம் கேளு", என்று சொல்லிவிட்டு "இருக்கது ஒன்னு ரெண்டு டிக்கெட், ஒவ்வொருத்தரையும் பக்கத்துல பொய் கேட்கணுமாக்கும்" என்றார் டிரைவர் தனக்குள்.

நவீன் விழித்திருப்பதை உறுதிசெய்துகொண்ட கண்டக்டர் "சார் சாப்பிட வரலியா?" என்று கேட்க, நவீன் உடன் பதிலளித்தான், "சார் எனக்கு பசி இல்ல நீங்க போயிட்டு வாங்க, T.M.S பாட்டு நல்லா இருக்கு நான் இந்த பாட்ட கேட்டுகிட்டு இங்கே இருக்கேன்" என்றான். "அப்ப சரி, ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்" என்று நவீனிடம் சொல்லிவிட்டு, "அண்ணே வந்துட்டேன்", என்று பேருந்தை விட்டு இறங்கி வேகமாக டிரைவர் அருகில் வந்தார் கன்டக்டர்.

விடுதி வாயில் உட்புறம், கல்லாவில், ஓனர் அமர்ந்திருந்தார், டிரைவரையும் கண்டக்டரையும் பார்த்து "வாங்க வாங்க" என்றார். "உள்ள டேபிள் இருக்கா பார் தம்பி" என்று சிறுவனுக்கு கட்டளை இட்டார் ஓனர். 

"என்ன சார் பாசெஞ்சர் இல்லேன்னா தம்பிய திட்டுவீங்களா?, தம்பிய பயமுறுத்தி வச்சிருக்கீங்களே", என்றார் சிரித்துக்கொண்டே டிரைவர் ஓனரிடம். 

"யாரு... பையன் சொன்னானா? அப்படியெல்லாம் பயமுறுத்த மாட்டோம் சார், அவனா அப்படி நினைச்சுக்கிறான்", என்றார் பதிலுக்கு, சிரித்துக்கொண்டே ஓனர். தொடர்ந்து "போங்க பொய் மொத பசிக்கு என்னவேணும்னு பார்த்து சாப்பிடுங்க" என்றார்.

சிறிது நேரத்தில் பசியாறிய கண்டக்டரும் டிரைவரும் கல்லாவின் அருகில் வந்தனர். ஓனரிடம், "பில் கொடுக்கச் சொன்னா தம்பி உங்கள வந்து பார்க்க சொல்றான்" என்றார் கண்டக்டர். 

"ஆமா சார் உங்ககிட்ட எப்ப நான் பணம் வாங்கியிருக்கேன், நீங்க கிளம்புங்க உங்க டூட்டிய பாருங்க" என்றார் ஓனர்.

"பாசெஞ்சர் இருந்தாலும் பரவால்ல... இன்னிக்கு நம்ம வண்டியில பாசெஞ்சரும் இல்லையே, நீங்க பில்லை  கொடுங்க" என்றார் டிரைவர்.

"அடடா அதல்லாம் கணக்கு இல்ல... நீங்க எப்பவும் நம்ம விருந்தாளிதான், கிளம்புங்க, மீண்டும் சிந்திப்போம்" என்றார் ஓனர். ஓனரின் அன்புக்கு அடிபணிந்த டிரைவரும் கண்டக்டரும் விடைபெற்றுக்கொண்டு தங்களின் பேருந்து நோக்கி நடந்தனர்.

"கடலோரம் வாங்கிய காத்து..." என்று வாலியின் வரிகளை காற்றில் கலந்துகொண்டிருந்தார் T.M.S. 

பேருந்தில் ஏறிய டிரைவர் என்ஜினை ஸ்டார்ட் செய்ய, கண்டக்டர் பின் படிக்கட்டு வழியாக ஏறி எல்லா இருக்கைகளையும் நோட்டம் விட்டார். இன்னும் அந்த இருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், நவீன் விழித்துக்கொண்டுதான் இருந்தான். "என்ன சார், சாப்பிடவும் போகல, இறங்கி யூரின் பாஸ் பண்ணக்கூட போன மாதிரித் தெரியல, உக்காந்த இடத்துல அப்படியே இருக்கீங்க", என்று நவீனிடம் பேச்சைத் தொடர்ந்தார் கண்டக்டர். "நான் கிளம்பும்போதே முட்டை பிரியாணி சாப்பிட்டுத்தான் கிளம்பினேன்" என்றான் நவீன்.

டிரைவர் தலைக்குமேல் இருந்த கண்ணாடியைப் பார்த்தார். தனக்குப் பின்னால், கண்டக்டரும் உறங்கும் மற்ற இரண்டு பயனிகளும் தெரிந்தனர். பேசிக்கொண்டே டிரைவரின் அருகாமையில் இருந்த இருக்கை ஒன்றில் வந்தமர்ந்தார் கண்டக்டர். "யாருகிட்டையா பேசுற? நீயா பேசிக்கிட்டு வர்ற? வேப்பிலை அடிக்கணுமா?" என்று கேட்டுச் சிரித்தார் டிரைவர், "பாசெஞ்சர் கிட்டாதான் வேற யார்கிட்ட", என்று பதிலளித்தார் கண்டக்டர். 

பிறை நிலா வானில், பேருந்து சாலையில். நிலவுக்கு பேருந்து துணை பேருந்திற்கு நிலா துணை எனும் புரிதலில் அந்தச் சாலையின் இருட்டு அமைதியாகக் கடந்துகொண்டிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் சாலையில் இருக்கும் குண்டு குழிகளைத் தெளிவாகக்காட்ட டிரைவர் இடது வலது என ஸ்டேரிங்கை லாவகமாகத்திருப்பி  பேருந்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.

மணியூரின் எல்லை ஆரம்பம் என்பதை அந்த இருபதடி உயர வளைவு கம்பீரமாக உணர்த்திக்கொண்டிருந்தது. வளைவைக்கடந்ததும், "ஏம்பா கோயில் சைடா போலாமா ரோடு வேலை முடிஞ்சுடுச்சா, ஏதாவது தெரியுமா?" என்று கண்டக்டரிடம் வரிசையாக கேள்விகளைத் தொடுத்தார் டிரைவர். சற்று நேரம் பதில் இல்லை திரும்பிப் பார்த்தார், உறக்கத்திலிருந்தார் கண்டக்டர். 

மணியூர் பேரூந்துநிலையம். மணி 2:50 அதிகாலை. அந்த இரண்டு உணவு விடுதிகள் மற்றும் அந்த மூன்று பெட்டிக்கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பெட்டிக்கடைகளின் முன் அன்றைய நாளிதழ்களைப் பரப்பி எடுத்து சிறு சிறு கட்டுகளாக அடுக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் அந்தந்தக் கடைகளில் வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது கடை உரிமையாளர்களாகவோ இருக்கக்கூடும். பயணிகள் சிலர் ஆங்காங்கே விழித்துக்கொண்டும் சிலர் தங்களின் சுமைகளில் சாய்ந்து உறங்கிக்கொண்டும், அதிகாலை வரப்போகும் தங்களின் பெருந்திற்காகக் காத்திருந்தனர். நிறுத்தம் பார்த்து பேருந்தை நிறுத்தினார் டிரைவர், கண்டக்டரும் விழித்துக்கொண்டார், "கொஞ்சம் கண் அசந்துட்டேன்" என்றார் டிரைவரிடம். "பரவால்ல பாசெஞ்சரை எழுப்பு மணியூர் வந்துடுச்சு", என்றார் டிரைவர். "ஆமா.." என்று கொட்டாவி விட்டுக்கொண்டே சொல்லிவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த இருவரை நோக்கி நடந்தார் கண்டக்டர். எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு பேருந்தின் எல்லா விளக்குகளையும் பிரகாசிக்கச்செய்தார் டிரைவர். 

"சார் எழுந்திருங்க மணியூர் வந்துடுச்சு" என்ற கண்டக்டரின் உரத்த குரலைக்கேட்டுத் தட்டுத்தடுமாறி விழித்துக்கொண்டனர் உறங்கிய இரு பயணிகளும். பாசெஞ்சர்களைப் பின்தொடர்ந்து பின்புறப்படிக்கட்டில் இறங்கினார் கண்டக்டர்.  அவர்கள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு பேருந்தின் விளக்குகளை நிறுத்திவிட்டு டிரைவர் சீட் பக்கத்துக் கதவைத்திறந்துகொண்டு வெளியில் குதித்தார் டிரைவர். பேருந்தின் பின்புறமாகச் சுற்றி டிரைவர் அருகில் வந்தார் கண்டக்டர். இருவரும் அந்த பெட்டிக்கடை நோக்கி நடந்தனர்.

"அண்ணே, அந்த 12ம் நம்பர் சீட்ல இருந்தவர் எங்க இறங்கினார் ணே... நான் நல்லாத்தூங்கிட்டேன் போல கவனிக்கல", என்று கேட்டார் கண்டக்டர்.

"என்னப்பா சொல்ற... மாங்குடில கெளப்புன வண்டி எங்கயும் நிக்கல... ரெண்டுபேர நீதானே இப்போ இறக்கிவிட்ட" என்றார் டிரைவர்.

"இல்லண்ணே மாங்குடில கூட நாம சாப்பிடுறதுக்கு இறங்கினோம் ஆனா அவர் பசிக்கலன்னு சொல்லிட்டு பஸ்லையே இருந்தாரே... அவரு" என்றார் கண்டக்டர்.

"யோவ்... என்ன கனவா? மாங்குடிக்கு முன்னால அரியானூர்ல இருந்தே ரெண்டு பாசெஞ்சர்தான்.." என்றார் டிரைவர்.

சற்றே அதிர்ந்த கண்டக்டர், திரும்பி பேருந்தை நோக்கி நடந்தார். "எதுக்கு இப்போ பஸ்ஸுக்கு போறே?" என்று கேட்டார் டிரைவர்.

"நில்லுங்கண்ணே, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நான் அவர்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தேன், வேற சீட்ல படுத்து தூங்குறாரான்னு பார்த்துட்டு வறேன்", என்று விரைந்தார் கண்டக்டர்.

பேருந்தின் பின் படிக்கட்டு வழியே ஏறி சற்று நேரத்தில் முன் படிக்கட்டு வழியே இறங்கினார் கண்டக்டர். 

"என்னாயா... தூங்குறாரா உன் பாசேஞ்சர்?" என்று நையாண்டியாகச் சிரித்தார் டிரைவர்.

சற்றே முகம் வேர்த்திருந்தது கண்டக்டருக்கு. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, "பஸ்ல யாரும் இல்லண்ணே" என்றார் மெதுவாக. சொன்னவர் தொடர்ந்து, "அண்ணே டீ சாப்பிடுவோமோ?" என்றார்.

"ஓ... போலாமே, போய் மொத முகத்த கழுவு தூக்கம் போகும்." என்றார் டிரைவர். அந்தச் சிறிய உணவு விடுதி நோக்கி நடையைத்திருப்பினர் கண்டக்டரும் டிரைவரும். டீக்கடையில் இருந்த ஆடியோ செட் வழியாக T.M.S.

"கண்ணே கனியே முத்தே மணியே... என்று கண்ணதாசன் வரிகளை ரகசிய போலீஸ் 115க்காக அழைத்துக்கொண்டிருந்தார்."

"தலைவா, சூடா ஒரு மால்டோவா, ஒரு டீ" என்றார் டிரைவர் கடைக்காரிடம். "உள்ளே உட்காருங்க சார், கொண்டுவந்து தாரேன்" என்று உள்ளே இருக்கை காட்டி இருவரையும் இருக்கச்சொன்னார் கடைக்காரர். டிரைவர் ஒரு இருக்கையில் அமர்ந்தார். "அண்ணே மொகத்தைக் கழுவிட்டு வந்துடறேன்", என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு, கடைக்காரரிடம், "முகங்கழுவ தண்ணி தறீங்களா", என்று கேட்டார் கண்டக்டர். 

"இதோ டாப் இருக்கு, இங்க கழுவிக்குங்க", என்று கடையின் வெளிப்புறத்தில் தண்ணீர் வரும் குழாய் இருந்த திசை நோக்கிக் கைகாட்டினார் கடைக்காரர்.

முகத்தைக் கழுவும் அதேநேரம் கடைக்கிறார் அங்கு யாருடனோ பேசிக்கொண்டிருந்தது கண்டக்டரின் காதுகளில் சுத்தமாக ஒலித்தது.

"என்ன தலைவா, எவ்வளவு புதுப் பாட்டு வந்திருக்கு, இன்னும் நீ T.M.S. பாட்டையே மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு இருக்க", என்றவரின் கேள்விக்கு பதிலளித்தார் கடைக்காரர், "நான் இங்க பாட்டு போடுறதே என் பையனுக்காகத்தான், சுனாமி அன்னிக்கு என் பையன்தான் கடைல இருந்தான், கடைய சாத்திட்டு வீட்டுக்கு வந்துடுவான்னு நினைச்சோம், அடுத்தநாள் காலைல தண்ணி வடியுற வரைக்கும் அவன் வீட்டுக்கு வரல, சரி கடைல எங்கயாவது இருப்பான்னு வந்து பார்த்தோம் ஆனா கடை திறந்திருந்துச்சு, மத்த கடைங்க மாதிரியே நம்ம கடையிலையும் பொருளெல்லாம் தண்ணில அடிச்சுக்கிட்டு போயிடுச்சு, பையன தேட ஆரம்பிச்சோம் ஒரு நாள் ரெண்டுநாள் போயி வாரம் ஆச்சு, மாதம் ஆச்சு, இப்போ வருஷங்கள் போயிடுச்சு. இருந்தாலும் T.M.S. பாட்ட கேட்டு எம்புள்ள திரும்பி வருவான்னு மனசு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கு".

அடுத்த கேள்வியை தொடுத்தார் அந்த நபர், "ஓ... உங்க பையனுக்கு பழைய பாட்டுதான் பிடிக்குமா?"

"அவன் மாடர்னா இருக்கணும்னு 'நவீன்'னு பேர் வச்சேன், ஆனா அவனுக்கு ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரெண்டு விஷயம்தான், ஒன்னு T.M.S. பாட்டு இன்னொன்னு முட்டை பிரியாணி". என்ற கடைக்காரரின் வார்த்தைகளை உள்வாங்கிய கண்டக்டருக்கு சடக்கென பேருந்தில் நடந்த உரையாடல்கள் மின்னலாய் வந்துபோனது.

முகத்தைத் துடைத்துக்கொண்டு டிரைவரை நோக்கி வேகமாக விரைந்தார் கண்டக்டர். கடைக்காரர் மால்டோவையும் டீயையும் டிரைவரின் முன், மேசைமீது வைத்தார். டிரைவரின் அருகில் வந்து அமர்ந்த கண்டக்டர், "அண்ணே விடிஞ்சதும் கெளம்புறதுக்கு முன்னாடி எனக்கு வேப்பிலை அடிக்கணும், இங்க பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்கண்ணே", என்றார் முகத்தில் முத்து முத்தாய் வெளியேறிய வியர்வையைத் துடைத்துக்கொன்டே.

மீ.மணிகண்டன்


வியாழன், 16 ஜூன், 2022

மேப்பிள் மனசு ... மீ.மணிகண்டன்

ஒரு போட்டியில் இருபது சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது 'மேப்பிள் மனசு'

மேப்பிள் மனசு ... மீ.மணிகண்டன்


வணக்கம் அன்பு நண்பர்களே,

"மேப்பிள் மனசு", இது அமெரிக்க நிகழ்வுகளைக் கலந்து நான் சித்தரித்த ஒரு சிறுகதை. அமெரிக்கா வந்துபோகும் ஒரு தமிழகத்துத்தாயின் மனசு இந்த "மேப்பிள் மனசு". படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
...மீ.மணிகண்டன் 

சிறுகதையின் தலைப்பு: "மேப்பிள் மனசு"
ஆசிரியர்: மீ.மணிகண்டன்
எழுதிய நாள் - March-08-2022
இடம்: ஆஸ்டின், டெக்சாஸ்

சூரியன் வெளியே வர நாணும் நவம்பர் மாதக் காலை, சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து வெளியேற, வெள்ளை ஹாண்டா சிவிக் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது, தன்னகத்தே ஐம்பது வயது மதிக்கத்தக்க மேகலாவையும், மேகலாவின் மருமகன் பிரகாஷையும் புகுத்திக்கொண்டு இரண்டுமணி நேரப் பிரயாணமாக ஃபால்சம் நோக்கி விரையத் துவங்கியது. மேகலாவின் இந்த அமெரிக்கப் பயணம் அவளுக்கு விருப்பமில்லாத பயணம். மகளின் வற்புறுத்தலின் பேரில் இன்று இங்கிருக்கிறாள். 

Pic: Thanks Pixabay
காருக்குள் கதகதப்பு வெளியே குளிர். நவம்பரில் சிவந்திருந்த மேப்பிள் மரங்கள் சாலையை அழகு படுத்தியிருந்தது. அங்கே அந்த மரத்தின் அருகில் நின்று ஒரு இளஞ்சோடி தங்களை செல்ஃபீ எடுத்துக்கொண்டும் கதைத்துக்கொண்டுமிருப்பதை மகிழுந்திலிருந்து மேகலா பார்த்துக்கொண்டே கடந்தாள். இந்த மனிதன்தான் எத்தனை சுயநலக்காரன், மரத்தின் வேதனையைப் புரிந்துகொள்ள மனமில்லாமல் அதனை அழகு என்று ஆராதனை செய்கிறானே? இந்த மரங்கள் என்ன மருதாணி பூசி திருவிழா கொண்டாடுகின்றனவா அல்லது கோபாவேசத்தில் சிவந்தெழுந்து நிற்கின்றனவா? இரண்டும் இல்லை குளிர் நிறைந்த இந்த மாதத்தில் பகல் நேரத்தின் நீளம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக இலைகள் தங்கள் உணவை உருவாக்கும் செயல்முறையை நிறுத்துகின்றன ஒருவகையில் இலைகள் பசியில் துவளுவதாகவே தோன்றியது மேகலாவிற்கு, பசியால் துவண்டிருக்கும் இலைகளின் சோகத்தை மனிதன் சொர்கமாகக் காண்கிறானே என்று இயற்கையின்பால் கரிசனம் பூத்தாள் மேகலா.

மேகலாவின் நினைவைக் கலைத்தான் பிரகாஷ், "அத்தை ரொம்ப அமைதியா இருக்கீங்க, வீட்டுக்குப் போனதும் குளிச்சு டிஃபன் சாப்பிட்டுட்டு நல்லா தூங்குங்க ஜெட் லாக் சரியாயிடும், மாமாவும் வந்திருக்கலாம்... ரொம்பப் பிடிவாதமா வரமாட்டேன்னுட்டார்", சொல்லிக்கொண்டே தனது மகிழுந்தை வழியில் தென்பட்ட ஸ்டார்பக்ஸ் நோக்கித்திருப்பி ட்ரைவ் இன் வரிசையில் நின்றிருந்த வாகனங்களுடன் வரிசையில் நிறுத்தினான். "அத்தை, ஒரு ரெண்டு நிமிடம்.., எனக்குத் தெரியும் உங்களுக்கு இங்க எதுவும் பிடிக்காது அதான் பிரேமி காஃபி போட்டு ஃபிளாஸ்க்ல கொடுத்துட்டா", ஃபிளாஸ்கை மேகலாவிடம் நீட்டினான், "எனக்கு ஒரு மோக்கா மட்டும் வாங்கிட்டு கிளம்பிடுவோம், வீட்டுல பிரேமி டிபன் ரெடி பண்ணியிருப்பாள், ஆனா எனக்கு நேரம் இல்ல, உங்கள வீட்டுல விட்டுட்டு அப்படியே ஆஃபீஸ் கெளம்பணும்".  'பிரேமி டிஃபன் ரெடி பண்ணியிருப்பாள்' அப்படியென்ன செய்துவிடப் போகிறாள்? ஊற்றிய முட்டையையும் ஒருபக்கம் வேகாத ரொட்டியையும் மேகலாவின் மனத்திரை பிளாஷ்பேக் போட்டுக் காண்பித்தது. மேகலாவின் கண்கள் வரிசையில் நின்றிருந்த வாகனங்களின் மீது படர்ந்தது, இந்த ஸ்டார்பக்ஸ் வாசலில் காலையில் வாகனங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் மேகலாவுக்கு வழக்கமாக ஒரு கேள்வி எழும், இப்பொழுதும் எழுந்தது, பால் என்று சொல்லப்பட்டு எதோ ஒரு திரவத்தினில் காஃபி என்ற பெயரில் எதையோ அவர்கள் கலந்து கொடுக்க அதையும் குளிர் வெயிலென்று பாராமல் வாகனங்களில் தவமிருந்து வாங்கிச்செல்லும் இந்த மனிதர்கள், மாடுகளைக் குளிப்பாட்டி மடியில் பால்கறந்து மணக்க மணக்கப் போடும் காஃபியை என்னவென்று சொல்வார்கள்? 

சன்னலோரமாக நடந்துசெல்லும் அந்தக் கிழவர் மேகலாவின் எண்ண அலைகளைத் தன்வசமாக்கினார். அவர் தலைக்கு அணிந்திருந்த தொப்பிக்குக் கட்டுப்பட மாட்டேன் என பறந்துகொண்டிருந்தது பரட்டைத் தலைமுடி, வெள்ளைக் கன்னங்களில் செம்பட்டைத் தாடியும் தாடியைத் தொட்டுத்தொங்கும் மீசையும் சவரக்கத்திகண்டு பலவாரங்கள் ஆனதை உணர்த்தியது. கொஞ்சம் இளைத்த உடல், நிறைய நாள்கள் படிந்த சாலையோரத்துத் தூசி அவரின் உடை நிறத்தை சுமார் கருப்பு நிறத்திற்கு மாற்றியிருந்தது, தோளில் அவர் சுமந்திருந்த பை சற்று பருமனாக இருந்தது உள்ளே மாற்று உடை வைத்திருப்பாரோ? இல்லை தான் உடுத்தியிருக்கும் அழுக்கைவிடவும் மிகையான அழுக்கைச் சுமந்திருப்பாரோ? அவர் தன் இடது கரத்தில் ஓரடிக்கு ஓரடி அளவிலான அட்டைப் பேட்டியின் ஒரு பக்கத்து அட்டையைப் பதாகைபோல் ஆக்கிப் பிடித்திருந்தார் அதில் 'ஹோம்லெஸ்!!! ப்ளீஸ் ஹெல்ப்!!! காட் ப்ளேஸ்!!! என்ற ஆங்கில வாசகங்கள் அவரை வீடில்லாதவர் என்று பறைசாற்றிக்கொண்டும் மனித மனத்தின் ஈரத்தைச் சோதிப்பதாகவும் காட்சியளித்தது. அங்கே அந்தக் மகிழுந்தில் ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ஒருவர் இடது பக்கக் கண்ணாடியை இறக்கித் தனது இடது கரத்தால் ஏதோ நீட்டுகிறார் அந்தக் கிழவரும் பெற்றுக்கொள்கிறார். என்ன, ஒன்றிரண்டு டாலர்களாக இருக்கும், இன்னும் ஒன்றிரண்டு வாகனங்களைக் கடக்கும் முன் ஒருவேளை அவருக்கு ஒரு வேளை காஃபி குடிக்க தேவையான காசு கிடைக்கக்கூடும். அவருக்கும் தனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தோன்றியது மேகலாவிற்கு, அவர் கிடைக்குமிடத்தில் தங்கவேண்டும் கிடைப்பதை உண்ணவேண்டும். தனக்கு வீடு இருந்தாலும் தானும் விரும்பிய இடத்தில இருக்க முடியாது இதோ உதாரணத்திற்கு இப்பொழுது அமெரிக்கா, பிரேமிக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறையோ இருமுறையோ இங்கே வந்து போக வேண்டும், மகள் சொல்லுக்கு இணங்கவேண்டும். பிரகாஷும் மாமியாரின் மீது பாசமிருப்பதுபோல பிரேமியோடு சேர்ந்து நாடகமாடிவிடுவான் என்பது மேகலா நன்கறிந்தவொன்று. பிடிக்காமல் ஓரிரு மாதங்களைக் கடத்துவது என்பது காற்றடிக்கும் திசைக்கு  எதிர்த்திசையில் பலம்கொண்ட மட்டும் கடலுக்குள் துடுப்புப் போட்டுப் படகைச் செலுத்துவதற்குச் சமம் அதனால் இந்தமுறை எதிர்த்திசையில் துடுப்புப் போடத் தயாராக இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் மேகலாவின் கணவரும் பிரகாஷின் மாமனாருமான சந்திரன். 

தனது முறை வந்ததும் மோக்காவை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி விண்டோ நோக்கிக் மகிழுந்தை நகர்த்தினான் பிரகாஷ். காஃபியை வாங்கித் தனது இருக்கைக்கு அருகில் கப் ஹோல்டரில் வைக்க, ஸ்டார்பக்ஸ் வளாகத்தை விட்டு வெள்ளை ஹாண்டா தனது ஃபால்சம் பயணத்தைத் தொடர வெளியேறியது. அந்த ஹோம்லெஸ் கிழவர் இப்போது கையில் ஸ்டார்பக்ஸ் குவளையோடு அங்கே பாதையோரமாக அமர்ந்திருந்தார். 

சாலையோரத்து மரங்கள் பச்சை மஞ்சள் பிரவுன் என்ற நிறங்களில் இலைகள் தாங்கி வரிசையாக அணிவகுத்து நின்றிருந்தது என்னவோ முக்கியப் புள்ளியை வரவேற்கும் ராணுவ அணிவகுப்புப்போலக் காட்சிதந்தாலும் தானொன்றும் அத்தனை முக்கியமானவள் அல்ல நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் என்பதுபோல அந்த மரங்களின்மீது பதித்துக் கடந்துகொண்டிருந்தது மேகலாவின் பார்வை. இருபுறமும் அடர்ந்த கானகத்தின் இடையில் நீண்ட தார்ச்சாலையில் நிதானமாகப் பயணித்துக்கொண்டிருந்தது பிரகாஷின் மகிழுந்து. பயணத்தின் மௌனத்தைக் கரைக்க 'செவ்வந்திப் பூவெடுத்தேன்...' எனப் பழனிபாரதியின் பாடலை பி. சுசீலா, சிற்பியின் இசையில் வசீகரித்துக்கொண்டிருந்தார். இளம் சூரியனை அவ்வப்பொழுது கடந்துகொண்டிருந்த மேகப் பஞ்சுகள் குட்டிக்குட்டியாகப் பழைய நிகழ்வுகளை மேகலாவின் மனதில் மீட்டுக் கொடுத்து மிதந்துகொண்டிருந்தன. அன்று அந்த பூச்செடியை மான் மேய்ந்து விட்டுச் சென்றுவிட்டதென எத்தனை கோபத்தைக் கொட்டினாள், தாய் என்றுகூடப் பாராமல் எத்தனை வசவு... மான்கள் அங்கே இருள்சூழ்ந்த மாலையில் வரும் என்று சொல்லக் கேட்டதுண்டு ஆனால் மேகலாவோ ஒருமுறைகூட மான்கள் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து பார்த்ததில்லை.  "நான்தான் காரிலிருந்து இறங்கியதும் அந்தப் பூத்தொட்டியை வெளியில் தரையில வச்சுட்டு கதவு திறக்க வந்துவிட்டேன் அதன்பிறகு அப்படியே மறந்துட்டேன், நீ சும்மாதானே என் பின்னால வந்த... ஞாபகமா தொட்டியை வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கலாமில்ல? எல்லாம் போக காலைலதான் எனக்கு ஞாபகம் வந்தது வெளியில பொய் பார்த்தா தொட்டி இருக்குது செடியக் காணோம், அட போம்மா...", என்று பிரேமி தொடுத்த வசவுச் சொற்களைத்தாங்கிக்கொண்டு மேகலா எப்படி மௌனமாகக் கடந்தாள் என்பது அந்த மேகத்திற்குப் புரியும். ஆனால் முடியாது இந்தமுறை பிரேமி என்ன பேசினாலும் எதிர்த்துப் பேசிவிடவேண்டும், 'நான் அவளுக்குத்தாயா... இல்லை அவள் எனக்குத்தாயா?' என்று மனம் கொதித்தெழுந்து அடங்கியது.

வீடுகளின் முன்னால் மேயும் மான்கள்

மகிழுந்தில் இப்போது இளையராஜா 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...' பாடிக்கொண்டிருந்தார், பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது மேகலாவின் மனது பாடலில் லயிக்கவில்லை எனினும் அவளையும் அறியாமல் பாடல் வரிகள் அவள் காதுகளில் புகுந்து அந்த கல்யாண நாள் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தது. அது பிரேமியின் தோழி நளினியின் திருமணம் முதல் ஆண்டு நிறைவு விழா. திருமணம் இந்தியாவில் நடந்தேறியதால் அமெரிக்காவில் அந்த நேரத்தில் அழைப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யவில்லை ஆதலால் முதல் ஆண்டு நிறைவு விழாவை தனது நட்புறவுகளை அழைத்து வீட்டிலேயே விமரிசையாகக் கொண்டாடினாள் நளினி. அந்தக் கூடிமகிழும் விழாவிற்குத் தனது தோழியின் தாயார் எனும் முறையில் மேகலாவையும் அழைத்திருந்தாள் நளினி. அந்த விழா வீட்டில்தான் தனக்கு எத்தனை அவமரியாதையை ஏற்படுத்திவிட்டாள் பிரேமி?! வந்தவர்கள் எல்லோரும் சின்னச்சின்னக் குழுவாக மகிழ்ந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும்வேளை நாவறட்சியால் நீர் அருந்தவேண்டி மேகலா சமையலரைப் பக்கம் சென்றுபார்த்தாள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்தநீரை நேரிடையாகப் பிடித்து அருந்தும் பழக்கம் மேகலாவிற்குத் தெரிந்திருந்த காரணத்தால் அக்கம்பக்கத்தில் ஒரு குவளையைமட்டும் தேடினாள் அருகில் ஒரு மேசையில் பழரசம் நிறைத்த புட்டிகளும் சில காகிதக் குவளைகளும் இருப்பதைக் கண்டாள். அதிலிருந்து ஒரு குவளையை எடுத்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீரைப் பிடித்து அருந்தி முடித்ததுதான் தாமதம், அருகில் வந்த ஒரு சிறுமி, "ஏய்..ஆன்டி என் கப்பை யூஸ் பண்ணிட்டாங்க" என்று தன் குரலை உயர்த்த, இதைக் கேட்டு அதிர்ந்து என்னவோ எதோ என்று ஒரு சிறு கூட்டம் அங்கு கூடிவிட, தான் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தாள் மேகலா, கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு தாயின் அருகில் வந்த பிரேமி, "ஏம்மா கப்பில் பேர் எழுதியிருக்கிறதுகூட தெரியாதா? படிக்கத்தெரியாத தற்குறியா நீ?" என்று அத்தனைபேர் மத்தியிலும் பகிரங்கமாகக் கேட்க, தனது சுயகௌரவம் அங்கு கூடியிருந்த அத்தனை பார்வைகளாலும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மேகலாவின் கண்கள் பனித்தன. தன் கையில் இருந்த பேப்பர் குவளையைத் திருப்பிப் பார்த்தாள் நீல மார்க்கர் பேனாவால் ஆங்கிலத்தில் 'நேஹா' என்று எழுதியிருந்த பெயரை அப்பொழுதான் உணர்ந்தாள். பின்னர் அந்த மேசையைப் பார்க்கும்பொழுது அத்தனை குவளைகளிலும் பெயர்கள் எழுதப்பட்டிருப்பது மேகலாவின் கண்களுக்குப் புலப்பட்டது. சிறுமியைச் சமாதனப் படுத்தி வேறு குவளையை கொடுத்துவிட்டு தன் தாயிடம் திரும்பிய பிரேமி, "அம்மா தெரியாத இடத்துல நீபாட்டுக்கு எதையாவது பண்ணி வைக்காத, ஏதாவது வேணும்னா என்னைக்கேளு, இப்படி என் மானத்தை வாங்காதே" என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லிவிட்டு நகர்ந்தாள். கலங்கிய கண்களுடன் கட்டாய புன்னகை வரவழைத்து அந்தக் கூட்டத்திலிருந்து நகர்ந்ததை நினைத்தபொழுது இப்பொழுதும் மேனி புல்லரித்தது மேகலாவிற்கு. இந்தமுறை அதுபோல் பிரேமி பேச முனைந்தால் "வாயை மூடு நீ ஒண்ணும் எனக்கு அறிவுரை சொல்லவேண்டாம்" என்று அவள் வாயை அடைக்க வேண்டும். 'அவள் எனக்குப் பிறந்தாளா.... நான் அவளுக்குப் பிறந்தேனா?' என்று தனக்குள் சூளுரைத்துக்கொண்டாள் மேகலா. இளையராஜா 'ஒரு கணம் ஒரு யுகமாக...' என்று தொடர மகிழுந்து ஒரு சிறு மலைப் பகுதியைக் கடந்துகொண்டிருந்தது.  

காடுகள் மலைகள் நதிகளையெல்லாம் தாண்டி விரைந்துகொண்டிருந்த மகிழுந்து தற்காலிமாக ஒரு சிறிய டவுன் போன்ற பகுதியை அடைய அங்கே இருந்த சாலைவிதிப் பதாகை 'இது பள்ளிக்கூடப் பகுதி, காலை பள்ளிக்கூட நேரம்' என்று விதியைச் சொல்ல சாலைவிதிக்குக் கட்டுப்பட்டு வேகமாகச் செலுத்திவந்த மகிழுந்தை இருபத்தைந்து மைல் வேகத்திற்குக் குறைத்து மெதுவாகச் செலுத்தினான். ஆங்காங்கே சாலையோரத்தில் சிறுவர் சிறுமியர் தனியாகவும் உடன் பெற்றோர் மற்றோருடனும் புத்தகப் பைகள் சகிதமாக நடந்துசென்றுகொண்டிருந்தனர். புள்ளினங்கள் கூடுதாண்டிப் பறக்கும் வேளை, பிள்ளைகள் வீடுதாண்டிப் புறப்படும் காலை, புள்ளினங்களின் தேடல் உணவு, பிள்ளைகளின் தேடல் அறிவு. மேகலாவிற்கு அந்த மழலைகளைப் பார்க்கும்பொழுது பறவைகளாகத்தான் தெரிந்தார்கள், பறவைகளில் பல நிறம், இந்தப் பச்சிளம் பிள்ளைகளின் தோல்நிறங்களிலும் கருப்பு, சிவப்பு, மாநிறம் என்று பல நிறங்கள், இருந்தாலும் ஒற்றுமையாகப் பேசிச்சிரித்துக் கடந்தனர். சிறுமிகளில் சிலர் தலை பின்னியிருந்தனர் சிலர் வகிடெடுத்து இரண்டு குதிரைவல்கள் போட்டிருந்தனர், அந்தக் குழந்தை சற்று வித்தியாசமாக தலையில் குட்டிக் குட்டியாக ஏகப்பட்ட சடைகால்கள் பின்னியிருந்தாள், சற்று தள்ளி அங்கொரு சிறுமி தன்தலைமுடிக்கு சுதந்திரம் கொடுத்திருந்தாள். 'பிரேமிக்கும் என்றாவது ஒருநாள் குழந்தையொன்று பிறந்து வளரும்பொழுது இப்படிப் பள்ளிக்குச் செல்லும் நாள்களில் தன்னை இங்கு வரச்சொல்லுவாள் அந்தக் குழந்தையை கவனிக்கும் பொறுப்பையும் தன்னிடமே தள்ளிவிடுவாள் மேற்கொண்டு அது சரியில்லை இது முறையில்லை என்று தனக்கே பாடம் எடுப்பாள் முடியாது அப்படியொரு நாள் வரும்பொழுது திட்டவட்டமாக வரமுடியாது என்று சொல்லி ஊரிலேயே இருந்துவிட வேண்டியதுதான். எனக்கு ஒரு பயமும் இல்லை, என்னை அவள் பெற்றாளா.... நான் அவளைப் பெற்றேனா?' மனம் மீண்டுமொருமுறை விண்ணைத்தொட்டுத் திரும்பியது..

பள்ளிக்கூடப் பகுதியைக் கடந்ததும் மகிழுந்து தனது பழையவேகத்தை எட்டிக்கொண்டிருந்தது. கோவையில் தன் கணவனோடு இருக்கும் நாள்கள்தான் எத்தனை ஆனந்தம். தனக்கும் அவருக்குமான சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொண்டு முடிந்ததை முடிந்த நேரத்தில் சமைத்து உண்டு வீண்பொழுதாகாமல் விபரம் அறிந்துகொள்ளப் புத்தகங்கள் படித்துக்கொண்டு முப்பொழுதும் இறைவனை தியானித்துக் கொண்டு மாலை நேரங்களில் நல்ல காற்றை சுவாசித்து நறுமண மலர்கள் பூத்த பூங்காக்களில் நடை பயில்வது என வரமாக நாள்கள் பறந்துபோகும். அதற்கு நேரெதிர்ப் போராட்டமாக அமெரிக்காவில் மகள் வீட்டில் நாள்களைக் கடத்தவேண்டும். மகளின் ஆடம்பரம் மகளுக்கானது மகளாகிப்போன காரணத்தால் அந்த ஆடம்பர அனலில் அவ்வப்போது வந்து வெந்து திரும்புவது வலிமிகுந்தது. தான் இங்கிருக்கும் நாள்களெல்லாம் சமையலறைக்குச் சொந்தக்காரியாகத்தான் செயல்படவேண்டியிருக்கும். தான் இல்லாதபொழுது மகள் சமைப்பாளா இல்லையா என்ற கேள்வி மேகலா மனத்தில் எப்போதும் இருக்கும். சமையல் பாத்திரங்கள் கழுவி எடுக்க டிஷ் வாஷர் இருந்தாலும் பாத்திரங்களை டிஷ் வாஷரில் இடும்முன் ஒருமுறை தண்ணீரில் மேலோட்டமாகச் சுத்தம் செய்துவிட்டு இடவேண்டும் அப்படிச் செய்தபோதும் சில பாத்திரங்கள் சரியாகச் சுத்தமாகாமல் இருக்கும் இந்தக்காரணங்களால் டிஷ் வாஷரை முழுவதுமாக நிராகரித்திருந்தாள் பிரேமி. சில நேரங்களில் பாத்திரங்கள் நிறைந்துவிட மகள் உதவிக்கு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டிருப்பாள், பொறுமையிழந்துபோவாள், ச்செய்... இப்படியொரு இரக்கமற்றவளையா நான் பெற்றேன் என்று தன் வயிற்றைத் தானே நொந்துகொள்வாள். வாயிலிருக்கும் வார்த்தைதானே இந்தமுறை நானொரு வேலை செய்தால் நீயொரு வேலை செய் எனக் கட்டளை இடவேண்டும் என்ற சிந்தனையோட்டத்தைச்  செதுக்கிக்கொண்டிருந்த மேகலாவிடம், "அத்தை இன்னும் அஞ்சே நிமிடம்… உங்க மகளைப் பார்க்கத் தயாராகுங்க", என்று புன்னகைதான் பிரகாஷ்.

அந்த நூற்றி இருப்பது வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட் வாயில் கதவு பிரகாஷின் வெள்ளை ஹாண்டாவிற்கு தனது எல்லைக் கதவைத் திறந்து வழிவிட்டது. சுமார் நூறடி தூரம் ஐந்து மைல் வேகத்தினும் குறைவாக மெதுவாக மகிழுந்தைச் செலுத்தினான் பிரகாஷ். சிவப்பு மஞ்சள் இளஞ்சிவப்பு என ஓரங்களில் வரிசையாக ரோஜாச்செடிகள் நிறைந்திருந்த அப்பகுதியில் தனது வீட்டு எண் எழுதப்பட்டிருந்த மகிழுந்து நிறுத்துமிடத்தில் ஹாண்டாவை நிறுத்தி இறங்கினான். பின்பக்கமாக வந்து "அத்தை இறங்குங்க", என்று பின்கதவைத் திறந்தான். மெல்ல இறங்கிய மேகலாவின் கரங்களையும் கன்னங்களையும் ஃபால்சம் பனிக்காற்று கொஞ்சமாகத் தீண்டிப் பார்த்தது. "நீங்க மேல படியில ஏறுங்க அத்தை நான் பேக்கை எடுத்துட்டு வரேன்", என்று முதல்மாடியிலிருந்த தன் வீட்டிற்கு மேகலாவைப் போகச்சொன்னான் பிரகாஷ். பலவிதமான மனக்குமுறல்களோடு படியேறினாள் மேகலா. மாடிப்படி அருகில் நின்ற மேப்பிள் மரம் இன்னொரு துளிர்ப்பிற்கு ஆயத்தமாக இலைகளை உதிர்த்து நின்றது. 

அழைப்புமணி ஓசை கேட்டு மெல்ல நடந்துவந்த பிரேமி கதவருகே இருக்கும் சன்னல் வழி எட்டிப்பார்த்தாள், "அம்மா..." என்று ஆரவாரமாகவும் மெதுவாகவும் நடந்துவந்து கதவைத்திருந்தாள். திறந்த கதவின் உள்ளே நின்ற பிரேமியின் நிலை... மேகலா சற்றும் எதிர்பார்க்காத ஒன்று, அந்த நிலையில் மகளைப் பார்த்த அடுத்த நொடி மேகலாவின் கண்கள் குளமாக... குரல் தழுதழுக்க... இத்தனை நேரம் தனக்குள் உழன்றுகொண்டிருந்த அத்தனை மனக்குமுறல்களையும் கடந்த ஒரு நொடி அபகரித்துக்கொண்டு ஓடிவிட..., "பிரேமி, ஏண்டா கண்ணு ஒரு வார்த்தை கூட சொல்லல, இத்தனை நாள் நீயா தனியா எப்படி சமாளிச்ச? நான் வந்துட்டேன் இனி நீ உட்கார்ந்த இடத்த விட்டு எழக்கூடாது", என்று வீட்டினுள் நுழைந்த மேகலா மகளைக் கட்டியணைக்க முயற்சி செய்து பின் முடியாமல் தன் நெஞ்சோடு தலைசாய்த்து சற்றே பெரிதாகியிருந்த மகளின் குட்டி வயிற்றைத் தடவி வாழ்த்தினாள், தாயின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்த பிரேமி, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் முன்னால சொல்லல", என்று கண்ணடித்தாள். அத்தையையும் மனைவியையும் கடந்து வீட்டினுள் வந்து, அத்தையின் பயணப் பையை அறைக்குள் வைத்துவிட்டு, அன்னைக்கும் மகளுக்குமான அந்த ஆனந்த நொடிகளை இடையூறு செய்ய மனமில்லாமல் மெதுவாக வெளியேறி அலுவலக அழைப்பைத் தொலைபேசியில் அணுகிக்கொண்டே விடுவிடுவெனப் படியிறங்கினான் பிரகாஷ். விழிகள் தாண்டிய நீரை விரல்கள் கொண்டு துடைக்க மறந்து மகளுக்கு ஆதரவாக அவளின் கன்னங்களை வருடிக்கொண்டிருந்தாள் அன்னை மேகலா.

மீ.மணிகண்டன் 


திங்கள், 13 ஜூன், 2022

புத்தகம் மூடிய மயிலிறகு

சிறுகதையின் தலைப்பு: புத்தகம் மூடிய மயிலிறகு

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

சிறுகதை இடம்பெற்ற புத்தகமும் பரிசும் ... மணிமீ 

(குறிப்பு: 2017ம் ஆண்டு மலேசிய தமிழ்மணி மன்றமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை


களைப்பாக வீடு வந்து சேர்ந்த எனக்கு சுடச்சுடத் தேநீர் கொடுத்த என் தாய், "ஏண்டா, வேற வேலை தேடக்கூடாதா... இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் சிறமப்படுவே...", என்று விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரியும் என்னிடம் பாசத்தோடும், மகன் உடல் நோக அலைகிறானே என்ற கவலையோடும் கேட்டாள். "நானும் தேடாமல் இல்லையே, நல்ல வேலை கிடைக்கிற வரை சிறமப்பட வேண்டியதுதான்". நான் பருகி முடித்த தேநீர்க் குவளையை எடுத்துக்கொண்டு அடுக்களை நோக்கிச் செல்லுகையில் "சிவா, உன் பேருக்கு திருமணப் பத்திரிகை ஒண்ணு வந்திருக்கு... தொலைக்காட்சிப் பெட்டி மேலே வச்சிருக்கேன் பாரு ..." என்றாள்.

ஒரு சின்னக் குளியல் முடித்துவிட்டு தொலைக்காட்சியின் அருகே வந்தேன்… அழைப்பிதழை எடுத்துக்கொண்டு மின்விசிறியை முழுமூச்சாகச் சுழலவிட்டு வெற்றுத்தரையில் ஓய்வாக அமர்ந்தேன்.

மணமகன் "சிரஞ்சீவி. இரா.பத்மநாபன்" மணமகள் "சௌபாக்யவதி. வி. ரேவதி".

புத்தகம் மூடிய மயிலிறகு ... மணிமீ

எனக்கு இந்தப் பெயரில் யார் நண்பன்... யோசித்தேன். விலாசம் பார்த்தேன் மிகச் சரியாக என் பெயரும், நான் குடியிருக்கும் வீட்டு விலாசமும். வெளிப் பழக்கம் நிறைய உள்ள எனக்கு இந்தப் பெயரில்... ஆங்... V.S. Electronics உரிமையாளர்... ஆனால் அவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறானே... ஆக அவரில்லை என்ற முடிவில்... திருமணம் எந்த ஊரில் என்று மறுபடியும் அழைப்பிதழைப் புரட்டினேன்... திருச்சியில் திருமணம், நாள் 02-02-1998. என் கல்லூரிக் காலங்கள் கரைந்துபோனதெல்லாம் திருச்சியில்தான். ஒருவேளை கல்லூரி நண்பனாக இருக்குமோ. பட்டப் படிப்பு முடிந்து ஐந்து ஆண்டுகள்தான் கடந்திருக்கிறது. மிகவும் நெருக்கமான ஓரிருவரைத்தவிர மற்றோர்களை எனக்கு மறந்துவிட்டது. அன்றாட வாழ்வின் அவசரங்களிலும், குடும்பப் பொறுப்புகளிலும், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளிலும், முன்னேற்றத்திற்கான புதுப்புது முயற்சிகளிலும் என்னை ஆட்படுத்திக்கொண்டதில் கல்லூரி நண்பர்கள் பலர் என் நினைவிலிருந்து மறைந்துவிட்டார்கள். இன்றளவில் இதுவொன்றும் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால் அந்தக் கல்லூரி நாட்களின் விளிம்பில் நின்றுகொண்டு நட்புக்கள் ஒவ்வொருவரிடமும் Autograph வாங்கிக்கொண்டு பிரியா மனத்துடன் பிரிந்ததை என்னும்பொழுது… இதயக் கனம் சற்று கூடியது... தொண்டைக்குழியை அடைக்க எங்கிருந்தோ ஒரு பந்து உருண்டு வந்து விழுந்தது... பழைய நினைவுகள் சுகமானது... "கண்ணா, சாப்பிட வா..." அம்மா அழைத்தது என் நினைவைக் கலைத்தது. காலையில் அவசரமாகக் கிளம்பி... பகல் முழுதும் அலைந்து... இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வீட்டிற்கு வந்து... இந்த இரவு உணவைத் தாயுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வதுதான் என் அன்றாட வாழ்வின் அலாதி இன்பம்.

படுக்கைக்குச் சென்ற எனக்கு மீண்டும் அந்த அழைப்பிதழின் நினைப்பு யார் அந்த பத்மநாபன்? ஒரு வேளை என் Autograph புத்தகத்தைப் பார்த்தால் நினைவிற்கு வரலாம்... படுக்கையை விட்டு எழுந்தேன்... மேசை அறையைத் திறந்தேன்... பல புத்தகங்கள், குறிப்புகளுக்கு அடியில் இருந்த அதை மிக ஆவலோடு எடுத்தேன். கையில் எடுக்கும்பொழுதே கல்லூரி கொஞ்சம் நினைவிற்கு வந்தது... முதல்பக்கத்தைப் புரட்டியதும்... அப்பப்பா.... புல்லரித்துவிட்டது.

 "நீல வானை நிலம் மறந்தாலும் நிசமான நண்பா நின்னை நான் மறவேன்" - அன்பன் வசந்தன்

ஆம்... வசந்தன்... விளையாட்டாகப் பேசுவதில் வல்லவன். எப்படி இவனை மறந்தேன்? என் வாழ்க்கைச்சூழ்நிலை அப்படி. திரும்பத் திரும்ப என்னுள் எதோ ஒரு ஆதங்கம். பல நண்பர்கள், தோழிகள், ஆசிரியர்கள், பலவிதமான தமிழ் வரிகள், நெஞ்சை நெருடும் வாசகங்கள்.... யாவும் என்னை எதோ செய்தது... இவற்றைப் பார்க்கும்பொழுது கையெழுத்து வாங்காமல் விட்டுப்போன சிலர்கூட நினைவில் வந்தார்கள். இவர்களையெல்லாம் எப்படி என்னால் மறக்க முடிந்தது?! காலம் ரொம்பத்தான் வஞ்சகமானது, தேவைகள் பெருகப்பெருக அந்தத் தேய்ந்துபோன நாட்களில் நண்பர்களாய் வந்து போனவர்களை மறந்துபோவது நியாயம்தானா?

"புதியவர்களின் வரவால் பழையவர்களை மறக்காதே" - அன்புடன், R.பத்மநாபன், B.Sc.,

ஓ... பத்மநாபன், எனக்குப் போட்டியாக அந்நாளில் படிப்பில் முன்னேறுபவன், ஆனால் அளவு கடந்த பாசத்தோடு என்னுடன் பழகியவன், நினைவில் வந்துவிட்டான். சே... இவனைக்கூட மறந்துவிட்டேனே, விதியின் வலிமை இதுதானோ?

நியாயவிலைக்கடையில் சர்க்கரைக்கு வரிசையில் நிற்பதும், மின்கட்டணம் செலுத்துவதற்கு வெயிலில் நிற்பதும், வங்கி நேரம் நிறைவடையும் பொழுதுகளில் அவசரமாக உள்ளே சென்று பணியாளர்களிடம் திட்டு வாங்குவதும், அங்காடித் தெருக்களின் கூட்டத்தில் அன்றாடம் அலைமோதுவதும், பேருந்து நெரிசல்களில் சரியான சில்லறை இல்லாமல் நடத்துனரிடம் வசவு பெறுவதும், இப்படியாகப் பல பதற்றங்களில் என் தினசரி வாழ்க்கை இருக்கலாம், அதற்காக, அந்தக் கல்லூரி நண்பர்களை நான் மறந்துபோனது சரிதானா?... எப்படியும் திருமணத்திற்குச் செல்லவேண்டும் பல நண்பர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் இதைவிட்டால் வேறு ஏது. எனக்குள் மகிழ்ச்சி.

இன்றுதான் பத்மநாபனின் திருமணம். காலை மணி நான்கு. எழுந்துவிட்டேன். இன்றைய என் சுறுசுறுப்பு என்னைப் பெற்றவளுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். நட்பின் சின்னங்களைச் சந்திக்கப் போவதால் என் மனதில் எழுந்த மகிழ்ச்சியை சொல்லால் வெளிப்படுத்த இயலாது. காலை மணி ஐந்து முப்பது. என் தாயிடம் விடை பெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் சென்றேன்.

திருமண மண்டபம் அதோ வந்துவிட்டது… என் பார்வையை எல்லாத் திசைகளிலும் செலுத்தினேன். மனதிற்குள்... பக்...பக்... வேகமாக அடித்துக் கொண்டது இதயம்...மண்டபத்தினுள் நுழைகிறேன்... சிவா என்று யாரோ அழைப்பது போல் ... ம்கூம்... பிரமை.... அங்குமிங்குமாய் மணமக்களின் உறவுக் கூட்டங்கள்... சிறுவர்களின் ஓடிப்பிடித்து விளையாட்டு.... சாப்பாடு தயாரா என்று அங்கே யாரோ யாரிடமோ கேள்வி எழுப்புகிறார்கள்.... அங்குமிங்கும் பார்த்த நான்... சற்றே தலை நிமிர்த்தி.... மணமக்களைப்                                பா.....ர்.....க்.....க                             இன்ப அதிர்ச்சி.... மாப்பிள்ளை பத்மநாபன்... அவர் யாரோ… ஆனால்..... ஆனால்..... ரே வ தி… அந்த மணப்பெண்.....! தலை சுற்றுகிறது எனக்கு... ஆம்... அதே ரேவதி... கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் இளையவள்... இருந்தாலும் நெருங்கிய பழக்கம்... பாடக் குறிப்புகள் கொடுப்பதிலிருந்து, மதிய உணவுப் பரிமாற்றம் வரை. தூய நட்பின் சின்னமான இவளைக்கூட மறந்துவிட்டேனே... அதோ என்னைப் பார்த்துப் புன்னைகைக்கிறாள், நானும்கூட... எனக்குள் நேர்ந்த பூகம்ப அதிர்ச்சி அவளுக்குத்தெரிய நியாயமில்லை...

இந்த வேகமான உலகம் வகுத்துக் கொடுத்த பாதையில் நிலைப்பதற்காக, பசுமையான பல பழைய நினைவுகளை மயிலிறகாய் திறக்காத புத்தகத்தினுள் வைத்து மூடுவதுதான் வாழ்க்கையா…?

...மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

சனி, 11 ஜூன், 2022

என் முதல் எழுத்துப் பிரசவம் 'பாக்யா'வில் பிரசுரம்!

பாக்யா வார இதழில் எனது அட்டைப்படக் கமெண்ட்.

என் முதல் எழுத்துப் பிரசவம் 'பாக்யா'வில் பிரசுரம்!

1994ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 'பாக்யா' வார இதழால் முதன்முதலாக எனது எழுத்து அச்சில் ஏற்றப்பட்டது. 

அதற்காக ரூ. 7 சன்மானமாக அனுப்பித்தந்து என்னை மகிழ்வித்தது பாக்யா. நன்றி பாக்யா! 

கூடுதல் செய்தி. ரூ. 7 Money Order வந்த பொது நாங்கள் அந்த முகவரியிலிருந்து மாறியிருந்தோம், மன்னார்குடி விட்டு பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்திருந்தோம். ஆனாலும் மன்னார்குடி முகவரிக்கு வந்த Money Order ஐ தபால்காரர் மிகவும் நேர்மையாக பாண்டிச்சேரிக்கு எங்களின் புதிய முகவரிக்கு Redirect செய்திருந்தது என்றும் என் நினைவில் இருக்கும். அந்தத் தபால்காரருக்கும் என் நன்றி! 

...மீ.மணிகண்டன் 

பாக்யாவிற்கு நன்றி ... மீ.மணிகண்டன்



 

ஆனந்தவிகடனில் எனது கவிதை

 ஆனந்த விகடனில் எனது கவிதை

2016ம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை. 

மீ.மணிகண்டன்

ஆனந்தவிகடனுக்கு நன்றி ... மீ.மணிகண்டன்





அப்பாவின் துணை

சிறுகதையின் தலைப்பு: அப்பாவின் துணை

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

"எதையோ மறந்து விட்டேனே...", என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை... "அப்படி என்ன மறந்திருப்பேன்...", வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து எழுதி வந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோமா என்று சரி பார்த்துவிட எண்ணினார்... இப்படித்தான் ஒருமுறை வெற்றிலை வாங்க மறந்து விட்டார் வீட்டிற்கு சென்றபின் மனைவியின் முதல் கேள்வி, "வெற்றிலை எங்கே?", கமலம் ஒரு வேளை உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார் ஆனால் வாயில் வெற்றிலை இல்லாமல் ஒரு பொழுதும் நகர்வது சிரமம். அன்று தான் எவ்வளவு கோபம்... எவ்வளவு கேள்விகள்... "எதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா? கடைக்கு பொய் வருகிற வேலை மட்டும் தான் செய்யுறீங்க அதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா?  அப்படி என்ன ஞாபக மறதி? பொறுப்பு இருந்தால் இப்படி மறப்பீங்களா? எங்களை எல்லாம் எப்படி உங்க நினைப்பில் வைச்சிருப்பீங்க? எப்படித்தான் நீங்க வங்கியில் வேலை செஞ்சீங்களோ? சமர்த்தா அவங்க பணிஓய்வு குடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்க? எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்கா? ம்..க்கும்...".

அப்பாவின் துணை ... மீ.மணிகண்டன்

"சரி இப்பவே நான் பொய் வாங்கிட்டு வந்துடறேன்... கோபப்படாதே", என்றவரிடம் உடன் பதிலளித்தார் கமலம், "ஆஹா போதும் உங்க அக்கறை... வெளியில பாக்கறவங்க இந்த அம்மா இவ்வளவு பெரியவரை வெயில்னு பாக்காம இத்தனை தடவை கடைக்கு அனுப்புதுன்னு என்ன கரிச்சுக் கொட்டணும் அதுக்குத்தானே.. அப்பப்பா நல்ல பேர் இல்லைனாலும் பொல்லாப்பு வாங்கித்தரன்னு இப்படி அலையுறீங்களே...", ஒன்றும் பேச முடியாமல் அறைக்குச்சென்று விட்டார் சிவநேசன்.

அதுபோல இன்று எதுவும் நடந்து விடக்கூடாதே என்று சிமெண்ட் இருக்கை மீது வைத்த பைக்குள் பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்று சரி பார்த்தார்.

அரிசி 2 கிலோ ... இருக்கிறது
உ.பருப்பு... இருக்கிறது
பொன்னாங்கண்ணிக் கீரை பார்க்கவே குளிர்ச்சியாக இருந்ததால் பட்டியலில் இல்லாவிட்டாலும் அதை வாங்கி வைத்திருந்தார் அதையும் கொஞ்சம் விலக்கி...
சிந்தால் சோப்பு 2 ... இருக்கிறது
சர்க்கரை... இருக்கிறது

"பட்டியலில் உள்ள யாவும் இருக்கிறது... பொருட்கள் மறக்கவில்லை... இருந்தாலும் எதையோ மறந்து விட்டேனே..." என்ற எண்ணம் துளைத்துக் கொண்டே இருக்க....பையை தூக்கிக்கொண்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தார். ராஜன் மளிகைக் கடையிலிருந்து அவர் வீடு சுமார் 400 மீட்டர் தொலைவு.

"ஒரு வேளை மகன் ஏதாவது சொல்லி மறந்து விட்டேனா... இல்லையே அவன் வாங்கி வரச்சொன்னது வாசன் டைலரிடமிருந்து அவனது தைத்து தயாராக இருக்கும் கால்ச்சட்டை மட்டும்தான்...", இதோ டைலர் கடை வந்து விட்டது, கடையில் இருந்தது தையற்காரரின் உதவியாளர் ஒரு வாலிபர். அவரிடம் ரசீதை நீட்டினார் சிவநேசன். அந்த வாலிபர் வாங்கிக்கொண்டு ரசீதில் என்ன எண் இருக்கிறது என்று பார்த்தார் பின்னர் விநியோகத் தேதி என்ன என்று பார்த்தார் இன்று தான் என்று சரி பார்த்துக்கொண்டவர் தைத்துத் தயாராய் இருக்கும் உருப்படிகளில் எந்த எண் ரசீதுடன் ஒத்துப்போகிறது என்று சரிபார்த்து, "ம்... இதோ கிடைத்துவிட்டது..." அந்த பாண்டை மடித்து முறையாக ஒரு காகிதப் பைக்குள் இட்டு சிவநேசனிடம் நீட்டினார், சிவநேசன் பதிலுக்கு ரூபாய் 500 ஒற்றைத்தாளை எடுத்து நீட்டினார்... கடை வாலிபரோ, "சார் பில் 450, 450 ஆ இருந்தா குடுங்க இல்லாட்டி அண்ணன் வரணும் என்னிடம் சில்லறை இல்லை", என்றார். "அண்ணன் எப்போ வருவார்?" என்று கேட்டார் சிவநேசன். "சாப்பிடப் போயிருக்கார் இப்போ வர்ற நேரம்தான் அதுவரைக்கும் இந்த நாற்காலியில் உட்காருங்க", என்று ஒரு நாற்காலியைக் காட்டினார். இருக்கையில் அமர்ந்த சிவநேசனுக்கு பழைய ஞாபகம் தொடர்ந்தது... அன்று மகன் கேட்ட பிளேடு வாங்க மறந்து விட்டார் அதற்குத்தான் மகனிடம் எவ்வளவு பேச்சு வாங்கினார்... "ஏன்பா நான் கேட்டது ஒரேயொரு பொருள் அதைக்கூட உன்னால வாங்கி வர முடியலையா... இந்த ராத்திரில பொய் நான் எந்தக் கடையத் தொறக்கச்சொல்லி வாங்குவேன்... நேத்தே பிளேடு தீர்ந்து போச்சு.. பழசை வச்சே அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கேன்... ஷேவ் பண்ணாமப்போனா மேனேஜர் மேலேருந்து ஷூ வரைக்கும் மொறைச்சுப் பார்ப்பான்.. அது போட்டும் ஷேவ் பன்னாமப் போனா எந்த டாக்டராவது மெடிக்கல் ரெப்பா என்ன மதிப்பானா? நீட்டாப்போகும்போதே ரெண்டு மணிநேரம் உட்கார வச்சுடறானுங்க... நீயெல்லாம் வங்கியில காற்றாடி, குளுகுளு அரைன்னு சொகுசா இருந்து வேலை பார்த்த ஆளு உனக்கெல்லாம் எங்க கவலை புரியாது... போப்பா...", இன்னும் மகன் உதிர்த்த வார்த்தைகளை எழுத்தில் சொல்வது நாகரிகம் அல்ல.

"சார் இந்தாங்க 50 ரூபாய் பாக்கி", என்று நினைவைக் கலைத்தார் கடைக்கார வாலிபர், "அண்ணன் வந்துட்டாரா?", என்று கேட்ட சிவநேசனிடம், "ம்... இதோ...", என்று தையற்கடை உரிமையாளரைக் காட்டினார் அந்த உதவியாளர். "நன்றி சார்", என்று இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிவநேசன் வீடு நோக்கிய தன் நடையைத் தொடர்ந்தார்... மீண்டும் தொடர்ந்தது மறந்துவிட்ட உணர்வு... "நான் உண்மையிலேயே ஏதாவது மறந்து விட்டேனா இல்லை வெறும் நினைப்பா?", சிந்தனை குழப்பமானது. "மகளின் விருப்பம் ஏதாவது வாங்காமல் விட்டுவிட்டேனா... இருக்காது... அவள்தான் கோபத்தில் இருக்கிறாளே எதையும் வங்கச் சொல்லவில்லை என்பது திண்ணம்". ஏன் அவளுக்கு கோபம்... சென்ற முறை மருதாணிப் போடி வாங்கி வரச்சொல்லியிருந்தாள் மருதாணிப் பை வாயில் பாதித் திறவு இருந்ததைக் கவனிக்காத சிவநேசன் அதை அப்படியே பையில் போட்டுக்கொண்டார் வீடு வந்து சேர்ந்தபின் பொருள்களை எடுத்து வைத்தார் ஆனால் அவரின் போதாத நேரம் பிரிந்திருந்த மருதாணிப் பொடிப் பை முழுவதும் கொட்டி காய்கறிகள் மீதும் மீதி பையிலுமாக சிதறி ஒட்டிக்கிடக்க காய்கறிகளைக் கழுவி எடுத்துவிட்டார் ஆனால் தண்ணீரோடு கரைந்து போன மருதாணிப் பொடியை அவரால் திரட்டி எடுக்க முடியாமல் மகளிடம் வாங்கி கட்டிக்க கொண்டார்.

சிந்தனைக்கு முடிவுரை எழுதியது வீட்டு வாயிற்படி... வீட்டுக்குள் சென்றவர் பொருள்களை மனைவி கமலத்திடம் நீட்டினார்... "ஒரு தம்ளர் காப்பி போடுறயா...", மெதுவாகக் கேட்டார் சிவநேசன். "ஏன் சாப்பிடுற நேரத்துல காப்பி?", எதிர் கேள்வி... "சரி வேண்டாம்.", என்றுவிட்டு அறைக்குள் சென்றார்... மீண்டும் மறந்த உணர்வு சிவநேசனைத் தீண்டியது... எதோ உறுத்துகிறதே "என்ன மறந்தேன்?", "இந்தாங்க...", காப்பித் தம்ளரை நீட்டினார் கமலம். "இன்னிக்கு தேதி 5 ஆயிடுச்சு பென்ஷன் வந்திருக்குமில்ல சாயங்காலம் வாக்கிங் போகும்போது மறக்காம ATM போயிட்டு வந்துடுங்க". இந்தப் பேன்ஷன்தான் சிவநேசனை மாதந்தோறும் அவர் மனிதன் என்பதை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... "சரி", என்றார். அடுப்படிக்குச் சென்றுவிட்ட கமலம் அழைப்பு மணி அழைக்கும் ஓசை கேட்டு "வாசல் கதவைத் திறக்கறீங்களா... நான் அடுப்படிக்கு வந்துட்டேன்...", என்றார். மெதுவாக முகப்பு நோக்கி நடந்தார் சிவநேசன்... கதவைத் திறந்தார்... வாசலில் நின்றவர் ராஜன் மளிகைக்கடைச் சிப்பந்தி... "என்னப்பா?", என்றார் சிவநேசன். "இந்தாங்க மறந்து கடையில விட்டுட்டு வந்துட்டீங்க எங்க இதுக்காக திரும்ப நீங்க நடந்து வந்து சிரமப்படப் போறீங்களோன்னு வேகமா வழிநெடுக உங்கள பார்த்துகிட்டே வந்தேன்". என்று மூச்சு வாங்கிக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை சிவநேசனிடம் நீட்டினார் சிப்பந்தி. 

...மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

வெள்ளி, 10 ஜூன், 2022

மழையின் தாகம்


மழையின் தாகம் ... மீ.மணிகண்டன்

மழையின் தாகம் 

சொட்டுச் சொட்டாய்
சோலையில் சாரல் 
சோ வேனும் சத்தம் 
அவைகளின் கூவல்
 
கரும் புகை மண்டலக் 
கருவினில் உதயம் 
கருப்பு கரைந்த 
கண்ணாடித் துளியும்

ஒன்றன் பின் ஒன்றாய் 
தொடர்ந்த பிறப்பு 
வரிசை மாறா 
வாலிப வனப்பு 
 
மேக வாழ்வின் ரகசியத்தை 
புள்ளிப் புள்ளிப் பந்துகளாய் 
பூவின் இதழில் உருண்டெழுதும் 
புதுமைக் காதல் கதை கதையாய்
 
காற்றுப் பாதை நெடுகிலுமே 
கவிதை பாடி வந்த துளி 
ஆற்றைத் தேடி அலைந்தழுது 
விழுந்த இடமோ சாலை வெளி!

மீ.மணிகண்டன்

புதன், 8 ஜூன், 2022

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

கதையின் தலைப்பு: குடைக்குள் கங்கா

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

"இந்த மழை இப்போதைக்கு விடாது போலிருக்கே..." சற்றே கோபத்தோடு மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் கங்கா. 4:50க்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை, என்னதான் குடை பிடித்து நின்றாலும், சாரல் மழையில் உடைகள் நனைவதும், பாதம் தொட்டுச் சாலையில் ஓடும் மழை நீரும் சங்கடத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது கங்காவிற்கு. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், கங்காவைத்தவிர இன்னும் ஒன்றிரண்டு நபர்களும் பெருந்திற்காகக் காத்திருந்தனர், ஆனால் எந்தப் பேருந்திற்காக அவர்களின் காத்திருப்பு என்று தெரியாது. அங்கே நின்றிருந்த வசந்த்தும், பெருந்திற்காகத்தான் நின்றான் ஆனால் அவனிடம் குடை இல்லாத காரணத்தால் மழையில் நனைந்தவாறே நின்றிருந்தான். மின்னலும் இடியும் கருத்த மேகக்கூட்டமும் மாலை ஐந்துமணியைக்கூட 

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

இருட்டாக்கிக்கொண்டிருந்தது. கங்கா சற்றும் எதிர்பார்க்காத வேளையில் அவளின் முன் அந்தக் கார் வந்து நின்றது, காரை ஓட்டிவந்த அந்த வாலிபன் உள்ளிருந்தவாறே கங்காவிடம் ஏதோ சைகை காட்டினான். அவனது சைகையைப் பார்த்ததும் தன் கண்களாலேயே அவன்மீது கோபத்தைக் கக்கினாள் கங்கா. கார் வாலிபன் அவளின் கோபத்தைச் சற்றும் சட்டை செய்யாமல் கார் கண்ணாடியை இறக்கி, "மழையில ரொம்ப நேரமா நனையுறீங்க இஃப் யு டோன்ட் மைண்ட் ஐ வில் ட்ராப் யு" என்றான், "உங்க கரிசனத்திற்கு ரொம்ப நன்றி, நான் ஒண்ணும் மழையில நனையல, என் கைல குடை இருக்கு, மைண்ட் யுவர் ஓன் பிசினெஸ்", என்று சூடாக வார்த்தைகளை அவன் மீது கொப்புளித்துவிட்டு சற்றே தான் நின்ற இடத்தை விட்டு நகர்ந்து நின்றாள் கங்கா. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வசந்த் தனக்குள் சிரித்துக்கொண்டான், அவனது மனப்பறவை, "அடப்பாவி... நான் மழையில் நனைஞ்சுக்கிட்டு இருக்கேன், அவள் குடைக்குள் நிற்கிறாள், என்னிடம் உதவி வேண்டுமா என்று கேட்கத்தோன்றவில்லை, அவளிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொள்கிறான், இவனைப்போன்ற ஆட்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்", என்றது. மனப்பறவையை அமைதிப்படுத்திவிட்டு கங்காவை நோக்கி நடந்தான் வசந்த்.

தன் அருகில் யாரோ ஒருவன் வருவதைக்கண்டு கங்கா குடையை இறுக்கப் பிடித்துக்கொண்டு இன்னும் சற்று தள்ளி நின்றாள், "கடவுளே இந்த பஸ் இன்னைக்கின்னு பார்த்து இப்படி சோதிக்குதே", என்று நிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அவள் அருகில் சென்ற வசந்த், "எஸ்க்யூஸ் மீ, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா உங்க குடையில கொஞ்சம் இடம் தருவீங்களா, பாருங்கா ரொம்ப நேரமா நனைஞ்சிகிட்டு இருக்கேன், தலை கனக்க ஆரம்பிச்சிடுச்சு, தலையைத் துவட்டி கர்ச்சீஃப் முழுக்க ஈரம் ஆயிடுச்சு", என்று தன் ஈரக் கர்ச்சீஃப்பைக் காட்டினான். "யாரிவன்?" என்கிற தோரணையில் வசந்த்தை ஏறிட்டுப் பார்த்தாள் கங்கா. "என்ன அப்படிப் பார்க்குறீங்க, இங்க பாருங்க குடையில மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்க போதும், உங்க மேல என் சுண்டு விரல் கூடப் படாது, நீங்க அந்த கார்க்காரனுக்கு பதிலடி கொடுத்ததை பார்த்துக்கிட்டுதான்  நின்றேன்", என்று சொல்லிவிட்டு அவன் சட்டையை சரிசெய்து கொண்டு நின்றது கங்காவிற்கு குபுக்கென்று சிரிப்பை வரவழைத்தது, வசந்தின் அந்த அணுகுமுறை அவளுக்கு குழந்தைத்தனமாகத் தோன்றவே, "ம்", என்று தன் குடையை வசந்தை நோக்கி நகர்த்த, வசந்த்தும் சற்று முன்வந்து தன் தலை மழையில் நனையாத வண்ணம் குடைக்குள் நின்றுகொண்டான்.

அந்நியனின் அருகாமை, சற்றே லேசான பயம் கங்காவின் மனத்தைக் கவ்வினாலும் தான் நின்றிருக்கும் இடம் ஒரு பொது இடம் இங்கே எந்தவகையான எதிர்ப்பானாலும் அதைச்சந்திக்கும் துணிச்சல் தன்னிடம் இருக்கிறது என்றே கங்கா நம்பினாள். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் அவர்கள் இருவரும் நிற்கும் இடம் நோக்கி வந்தான், அவன் அணிந்திருந்த சட்டையின் அழுக்கு வாடை எவரையும் முகம் சுழிக்க வைக்கும், கங்காவும் வசந்த்தும் அதற்கு விதிவிலக்கல்ல, மழையில் மலர்ந்த மண்வாசனையை மறைத்து மேலோங்கியது அந்தச் சிறுவனின் சட்டையின் அழுக்கு வாடை, ஒரு வேளை இந்த மழைக்குப் பின் அந்தச்சட்டையில் இருந்து அழுக்கு மறையக்கூடும். கையளவிற்கும் சற்றே கூடுதல் அளவிலான நெகிழிப் பை ஒன்று சிறுவனின் தலை மழையில் நனையாத வண்ணம் கவசமாக இருந்தது. அருகில் வந்த சிறுவன் "அக்கா டீ, பன் வாங்க ஏதாவது காசு கொடுக்கா..." என்றான். வசந்த் அந்தச் சிறுவனைப் பார்த்தான், மனப்பறவை மீண்டும் பேசியது, "பாரு, ரெண்டு பேர் நிக்கிறோம் ஆனா இவனுக்கு என்னிடம் கேட்கத் தோன்றவில்லை அவளிடம் கேட்கிறான், உதவியானாலும் சரி உபாத்திரவமானாலும் சரி, எல்லோருக்கும் பெண்கள்தான் கண்களுக்குத் தெரிவார்கள் போல". வசந்த் சிறுவனின் மீது பதித்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை கங்கா புரிந்துகொண்டிருக்கக்கூடும். லேசான புன்னகையோடு கங்கா வசந்தை நோக்கினாள், "நான் வேணும்னா 'டீ'க்கு கொடுக்கிறேன், நீங்க 'பன்'க்கு கொடுங்க", என்றாள் கங்கா, இதைச் சற்றும் எதிர்பார்க்காத வசந்த் சுதாரிப்பதற்குள் அவனது மனப்பறவை மீண்டும் தலை தூக்கியது, "எப்படி இவள் இவ்வளவு ஷார்ப்பா இருக்கா?", என்று கேட்ட மனப்பறவையை சட்டை செய்யாமல் கங்காவிற்கு, "யெஸ்.. யெஸ்... ஷூர்", என்று பதிலளித்தவன் தனது சட்டைப் பையிலிருந்த நனைந்த ரூபாய்த் தாள்களிலிருந்து சிறுவனுக்குத் தேவைப்படும் காசை எடுத்தான், கங்கா வசந்த்திடம், "இந்தக் குடையை கொஞ்சம் பிடிங்க நான் அவனுக்கு என்னோட பர்சில இருந்து காசு எடுத்து கொடுத்துட்டு வாங்கிக்கறேன்," என்றாள். இதை எதிர்பார்க்காத வசந்த்திற்கு பட்டென்று அவளிடமிருந்து குடையைப் பெரும் ஒரு சூழல், அவளின் கை விரல்கள் வசந்தின் கைவிரல்களைச் சந்தித்த அந்த ஒன்றிரண்டு வினாடிகள் வசந்த் மழையை மறந்தான் தான் நிற்கும் மண்ணை மறந்தான். பாரதிராஜாவின் அந்த ஐந்து வெள்ளை உடை தேவதைகள் அங்கே வந்து இளையராஜாவின் லல்லல்லா பாடிச்சென்றது அவனுக்கு மட்டுமே புலப்பட்டது.

சற்று நேர இடைவெளியில் கங்காவிற்கான பேருந்து வருவது தெரிந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது, இருந்தும் எப்படியாவது ஏறிவிட வேண்டும், சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவளுக்குள் ஓங்கியிருந்தது. "ஓகே, எனக்கு பஸ் வற்ற மாதிரி தெரியுது நான் கிளம்பறேன்", என்று வசந்த்திடம் சொன்ன கங்கா அவனது பதிலுக்கு காத்திராமல் பேருந்தில் ஏறுவதற்குத் தோதாகச் சற்று முன்னோக்கி நடந்தாள். வசந்த் மீண்டும் மழையில் நனையலானான். ஈரமாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் தனது கைக்குட்டையை எடுத்து மீண்டும் தன் தலையைத்துடைப்பதும் பிழிவதுமாக, மழை தனக்கிட்ட வேலையைத் தொடரலானான். வேகமாக வந்த பேருந்து சரியாக நிறுத்தத்தில் நிற்கவில்லை... சற்று தள்ளி நிற்கும் என்று எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றம் தரும் வகையில், பேருந்து நிற்காமலேயே சென்றுவிட, அதிகமானோர், மழையினையும், அந்த அந்திப் பொழுதினையும் கடிந்துகொண்டிருந்தனர். கங்கா மீண்டும் திரும்பி தான் முன்பு நின்றிருந்த இடத்திற்கு வந்தாள், வசந்த் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அப்பொழுதுதான் வசந்த்தை மழையில் விட்டுச்சென்றதை உணர்ந்தாள் கங்கா. "மன்னிக்கணும், பஸ்ஸை பார்த்ததும் நீங்க மழையில நனைவீங்கங்கறத மறந்துட்டு வேகமா போயிட்டேன்", என்று வசந்த்திடம் வருந்தினாள் கங்கா. "அட பரவால்லிங்க... இதுக்காக எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு... மழை நேரம்... மாலை நேரம்... எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்ங்கிற நினைப்பு இருக்கிறது எல்லோருக்கும் சகஜம்தானே." என்று சமாதானம் சொன்னான் வசந்த். மீண்டும் இருவரும் ஒரு குடைக்குள் அடைக்கலமாகினர்.

சற்றுநேரம் மெளனமாக நின்றிருந்தனர் இருவரும். எவ்வளவு நேரம் இருவரும் ஒரே குடைக்குள் மெளனமாக நிற்பது? மௌனத்தை கலைத்தாள் கங்கா, "ஏங்க காலைல வரும்போதே மழை வர்றாப்ல இருந்திருக்குமே அப்பறம் ஏன் குடை எடுக்காம வந்தீங்க?" என்ற கங்காவிற்கு பதிலளித்தான் வசந்த், "கதவை பூட்டின பிறகு மழை வருமோன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு, ஆனா பூட்டின கதவை மறுபடி திறந்து உள்ளே பொய் குடை எடுக்க சோம்பேறித்தனம்... மழை வந்தாப் பார்த்துக்கலாம்... என்று அப்படியே வந்துட்டேன்... ஆனா இப்போ கஷ்டமா இருக்கு..." என்று தன் தவறை எண்ணி நொந்துகொண்டான். 'ஓ சார் சின்ன விஷயத்துக்கெல்லாம் சோம்பல் படுவீங்களோ?' என்று கேட்டாள் கங்கா. 'அடடா அப்படி பட்டுன்னு முடிவெடுத்துடாதீங்க, யு நோ, ஆபீஸ் வொர்க்ல நான் ரொம்ப பர்ஃபெக்ட், கொஞ்சம் கூட சோம்பல் படமாட்டேன், நான் ஹார்ட் வொர்க்கர் னு பேர் வாங்குறவன்', என்று, எங்கே தன் திறமைகளை கங்கா குறைத்து எடை போட்டுவிடுவாளோ என்கிற பயத்தில் படபட வென ஒப்பிக்கலானான். இதனைக் கேட்ட கங்கா சிரித்துக்கொண்டே, 'சரி சரி நீங்க சுறுசுறுப்பானவர்ங்கறத அக்ஸப்ட் பண்ணிக்கறேன்' என்று பதிலளித்து, அவனது வேகத்தைக் குறைத்தாள். மழை சற்று வேகம் கூட்டியது, பேருந்திற்கான காத்திருப்பு இருவருக்கும் வேதனையைக் கூட்டியது. சற்றே யோசித்த வசந்த், 'ஏங்க தப்பா எடுத்தக்கலைன்னா, அதோ அந்த டீ கடைல ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம் வறீங்களா?' என்றான், 'எனக்கும் அது தோணாம இல்ல, ஆனா டீ கடை அவ்ளோ தூரத்தில இருக்கு, இங்கிருந்து போகும்போதோ, அல்லது கடைல நிக்கும்போதோ பஸ் வந்துடுச்சுன்னா இவ்வளவு தூரம் பஸ் ஸ்டாப்புக்கு திரும்ப மழைல ஓடி வந்து பஸ்ஸை பிடிக்க முடியாது, அதுனாலதானே குடையை பிடிச்சுக்கிட்டு இங்கேயே நிக்கறேன்', என்று பதிலளித்தாள் கங்கா. 'இவ்வளுவு நேரமா நிக்கறோம், உங்களுக்கு வந்த ஒரு பஸ்ஸும் நிக்காம போய்ட்டான், இன்னமும் சீக்கிரம் பஸ் வந்துடும்னு நம்பறீங்களா?' கேட்டான் வசந்த். 'நம்பணுமே, நம்பாம விட்டுட்டா மனித மனத்திற்கு அழகில்லையே, வீட்டுல அம்மா வேற என்னை இன்னும் காணோம்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க.' என்று தன் கவலையை கொஞ்சமாக வெளிக்காட்டினாள். 'பாருங்க கொஞ்சம் ரிலாக்சேஷன் வேணும், அப்படியே பஸ் வந்துட்டாலும் ரோட்டுல பஸ்ஸுக்கு முன்னாடி என் ரெண்டு கைகளையும் விரிச்சு மறியல் பண்ணியாவது உங்களை ஏத்தி விட்டுடறேன்', என்ற வசந்தின் விளையாட்டுத் துணிச்சலை ரசித்தவளாய், 'சரி வாங்க உங்கள நம்பி டீ கடைக்கு வறேன்', என்று கங்கா சம்மதம் சொல்லவும், இருவரும் ஒரே குடைக்குள் சற்று முன்னும் பின்னுமாக டீ கடை நோக்கி நடக்கலானார்கள், இருந்தாலும் பேருந்து வருகிறதா என்று அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள் கங்கா.

கடையை அடைந்ததும், கடையின் முன்னால் வேயப்பட்டிருந்த ஒட்டு வாரத்தின் உள்ள இருவரும் ஒதுங்கிக்கொள்ள, குடையை மடக்கினாள் கங்கா. இடது கரத்தில் பெரிய கப் மற்றும் வலது கரத்தில் சின்ன கப் என்று லாவகமாக பாலை ஆற்றிக்கொண்டிருந்தார் கடைக்காரர். "மாஸ்டர் ரெண்டு டீ ஸ்ட்ராங்கா போடுங்க" என்றான் கடைக்காரரைப் பார்த்து வசந்த், சற்றும் தாமதிக்காமல் கங்காவிடம் திரும்பி, 'சாரி, கேட்க மறந்துட்டேன், நீங்க டீ சாப்பிடுவீங்கதானே?', என்றான், 'இல்ல ', என்று பதிலளித்தாள் கங்கா. 'வேறே?' என்றவனின் கேள்விக்கு, 'ராகிமால்ட் சொல்லுங்க', என்று பதிலளித்தாள் கங்கா. 'மாஸ்டர் ரெண்டு இல்ல, ஒண்ணுதான் டீ, இன்னொண்ணு ராகிமால்ட்' என்று கடைக்காரரிடம் ஆர்டரை மாற்றினான் வசந்த். மழையில் அரைகுறையாக நனைந்து நின்ற வசந்த் மற்றும் கங்காவைப் பார்த்த டீக்கடைக்காரர், 'உள்ளே டேபிள் காலியா இருக்கு, போய் உட்காருங்க', என்றார் கரிசனத்துடன். கங்காவிற்கு பேருந்து வந்துவிடுமோ என்ற பயம், நிறுத்ததைப் பார்த்தவாறே, 'இல்ல இங்கயே நிக்கலாம், பஸ் வந்தா தெரியும் போய் ஏறிடலாம்,' என்றாள் சற்றே அச்சம் கலந்த தொனியில். 'ஆமா மாஸ்டர் பரவால்ல நாங்க இங்கயே நிக்கறோம்', என்றான் வசந்தும் கங்காவிற்கு ஆதரவாக. டீக்கடையின் அடுப்புச்சூடு இந்த மழைக்கு இதமாகவே இருந்தது இருவருக்கும். அடுப்பின் மீது பாய்லரில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்க, பாய்லரின் அருகாமையில் தனது ஈரக் கைக்குட்டையை விரித்துப்பிடித்து ஈரம் சற்று உலரச்செய்தான் வசந்த்.

சூடான திரவம் தொண்டையை நினைத்தது இருவருக்கும், பேருந்து நிறுத்தத்தில் ஒரு பார்வை வைத்துக்கொண்டே சூடான் ராகிமால்ட்டை ஊதி ஊதிப் பருகிமுடித்தாள் கங்கா, இன்னும் சற்று நேரம் மழையை எதிர்கொள்ளும் தெம்பைப் பெற்றனர் இருவரும். டீக்கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆயத்தம் ஆனார்கள். மடக்கி வைத்த குடையை மீண்டும் விரித்தாள் கங்கை. 'வேணும்னா குடையை குடுங்க நான் பிடிக்கறேன்', என்றான் வசந்த், 'இல்ல பரவால்ல', என்று பதிலளித்துவிட்டு தானே பிடித்துக்கொண்டாள். முன்போலவே முன்னும் பின்னுமாக நடந்து நிறுத்தம் வந்தடைந்தனர், 'பார்த்தீங்களா, நாம் டீ சாப்பிட்டு வந்தாச்சு இன்னும் பஸ் வரல. எவ்வளவு பயந்தீங்க', என்று வசந்த் சொல்லி முடிக்கும் அதே நேரம் பேருந்து ஒன்று தென்பட்டது, கங்கா தொடர்ந்தாள், 'பாருங்க அதோ... எனக்கு பஸ் வருது'. 'குட் லக், நான்தான் மறுபடி மழையில நனையணும்', என்று சற்று தாழ்ந்த குரலில் சொன்னான் வசந்த். சட்டென ஏதோ சிந்தித்த கங்கா, 'எனக்குதான் பஸ் வந்துடுச்சே நீங்க குடையை வச்சுக்கோங்க', என்று வேகமாகச் சொன்ன கங்கா குடையை வசந்தின் கைகளில் திணித்தாள். 'அப்பறம் எப்படி இந்தக் குடையை உங்ககிட்ட திருப்பிக் கொடுக்கறது', என்று சந்தேகமாகக் கேட்டான் வசந்த். 'அது நாளைக்கோ இல்ல அடுத்தநாளோ நாம இந்த இடத்துல மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சா வாங்கிக்கறேன், இப்ப எனக்கு நேரம் இல்ல இந்த பஸ்ஸை நான் மிஸ் பண்ணிடக்கூடாது, எங்க அம்மா ஏற்கனவே பயந்துகிட்டு இருப்பாங்க, நான் வறேன்,' என்று படபடவென பதிலளித்துவிட்டு நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தின் பின்புறப் படிக்கட்டில் ஏறுவதற்காக விடுவிடுவென ஓடினாள் கங்கா. 'கொஞ்சம் இருங்க நீங்க பஸ்ல ஏறுகிற வரைக்கும் நனையாம இருக்க நான் குடை பிடிச்சுக்கிட்டு வரேன்', என்று குடையை அவளுக்குப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடிவந்தான் வசந்த்.

பெருந்தினுள் ஏறிய கங்கா, வசந்தைப் பார்த்து 'ரொம்ப நன்றி', என்றாள் சிரித்துக்கொண்டே, சொல்லிவிட்டு உள்ளே நகர்ந்தாள், 'நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும், குடைக்கு', என்றான் வசந்த. பேருந்து புறப்பட்டது, வசந்த வெளியில் குடைக்குள் நின்றுகொண்டு கங்காவைப் பார்த்து மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல, பேருந்தில் இருந்துகொண்டு சன்னல் வழியே வசந்தின் அப்பாவித்தனத்தை ரசித்தவாறே புன்னகைத்து நின்றாள் கங்கா.

கங்கா இறங்கவேண்டிய நிறுத்தத்தின் அருகில் பேருந்து நின்றது, மழை சற்று குறைந்திருந்தது ஆனால் நிற்கவில்லை, மாலை வெளிச்சத்தை இருள்கவ்வியிருந்தது. பெருந்தைவிட்டு இறங்கிய கங்கா வீட்டை நோக்கி வேகநடை போட்டாள், தனது வலது கையை தலைக்குமேல் உயர்த்தி கொஞ்சமாக மழையைத் தடுத்துக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தாள். கங்கா எதிர்பார்த்ததுபோலவே வாசலில் பயத்துடன் மகளின் வரவை எதிர்நோக்கியிருந்தாள் கங்காவின் தாய். 'ஏண்டி இவ்வளவு நேரம்?' என்று சற்று பதட்டமாகக் கேட்ட தாய்க்கு, 'அட போம்மா பஸ் ரொம்ப நேரமா வரலை, வந்த பஸ்ஸும் நிக்காம போய்ட்டான்', என்று நொந்துகொண்டாள், 'பாதைல நிக்காம கொஞ்சம் வழி விடும்மா, வீட்டுக்குள்ள வந்ததுக்கப்பறம் உன்னோட என்கொயரிய ஆரம்பி.' என்று தாயை நகர்ந்துகொள்ளச்சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்த கங்கா முற்றத்தில் ஓரத்துக்கொடியில் காய்ந்துகொண்டிருந்த தலைதுவட்டும் துண்டை எடுக்க ஓடினாள்.  'குடை கொண்டு போனியே? இப்ப ஏன், இப்படி நனைஞ்சு வந்து நிக்கறே?' என்று மறு கேள்வி தொடுத்தள் தாய். சட்டென தன்னிலை உணர்ந்த கங்கா கொஞ்சமும் யோசிக்காமல், மனது நிறைத்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக்கொல்லாமல், 'தொலைச்சிட்டேன்மா', என்று உதட்டளவு பதிலை தாயிடம் சமர்ப்பித்தாள் கங்கா.

மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.