"ஒரு கலைஞனின் தார்மீகப் பொறுப்பு என்ன என்று என்னை நானே கேள்வி கேட்டபோது என்னால் எழுதிப்பார்க்க முடிந்த ஒரே விடைதான் என் உயிர்த் தோழன்" --- என் உயிர்த் தோழன்"அந்த ஈர மணற்பரப்பில் என் பாத்திரங்களின் பெயரெழுத்திப் பெயரெழுதி எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு எழுந்துவந்திருக்கிறேன்" --- கடலோரக் கவிதைகள்
"இலையுதிர்காலமென்பது இறப்பல்ல இன்னொரு துளிர்ப்புக்கான தொடக்கம். அஸ்தமனம் என்பது முடிவல்ல இன்னொரு உதயத்துக்கான பதுக்கல்" --- வேதம் புதிது
"ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையில்தானே இடைவெளி விடச்சொன்னார்கள். உனக்கும் எனக்கும் இடையில் இடைவெளி விடச்சொல்லவில்லையே. வா... சத்தம் போடும் இளமையைச் சமாதானப்படுத்து. உன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு நான் கட்டில் பரிசளிக்கிறேன். என் ஒவ்வொரு பிறந்தநாளும் நீ தொட்டில் பரிசளிக்கிறாய்" --- கொடி பறக்குது
இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போவேன். அத்தனையும் அவரின் படப்பாடல் ஒலிநாடாக்களில் அவரின் காந்தக் குரலில் பதிவானவை, என் மனதிலும்.
***
எண்பதுகளின் நிறைவில் அல்லது தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பத்திரிகையில் ஒரு பேட்டி.
கேள்வி: நீங்கள் நடிகனாக ஆசைப்பட்டீர்கள். ஆனால் இயக்குனராக இருக்கின்றீர்கள். இதைப்பற்றி உங்கள் கருத்து.
பாரதிராஜா: நடிகனாக ஆகியிருந்தால் ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் மட்டும்தான் ஏற்றிருக்க முடியும். இன்று என்னுடைய எல்லாப்படங்களிலும் எல்லாக்கதாபாத்திரங்களிலும் நான்.
***
பாண்டேயுடன் youtube பதிவொன்றில்...
பாரதிராஜா: தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகம் இல்லை.
பாண்டே: என்ன இப்படி சொல்றீங்க?
பாரதிராஜா: உண்மை. தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகம் இல்லை.
1991 நிறைவு அல்லது 1992 தொடக்கம்.
பள்ளத்தூரில் 'நாடோடித் தென்றல்' படப்பதிவு. பத்து நாள்களாக நடந்துகொண்டிருக்கிறது, என் செவிக்கு எட்டியதோ பத்தாம் நாள். சூரியன் விடைபெறும் மாலைப்பொழுது. அந்த நீண்ட தெருவின் முனையில் இருக்கும் வீட்டின் படிகளில் படபடக்கும் இதயத்துடன் ஏறுகின்றேன். பாரதிராஜாவைக் காணப்போகும் ஒரு புத்துணர்ச்சி. படிகளில் ஏறி முகப்புத் திண்ணையைக் கடந்து செல்கின்றேன். கடப்பதற்கு முன் இடதுபுறம் அந்த மாகலைஞன். லைட் பிரவுன் டீ ஷர்ட் டார்க் பிரவுன் ஷார்ட்ஸ். எதிர்த்திண்ணையிலும் படக் குழுவின் ஒன்றிருவர். படமாக்கப்போகும் காட்சியை விளக்குகின்றார். இத்தனை அருகில் அத்தனை பெரிய கலைஞனைக் காண்பேன் என்று அதுவரை கனவிலும் நான் கண்டிருக்கவில்லை. கைகூப்பி வணங்குகின்றேன். பதில் வணக்கம் புன்னகையுடன். அதனைத்தொடர்ந்து அந்த வீட்டில் சுமார் நான்கு மணிநேரங்கள் அவருடனும் மற்றும் சித்ரா லட்சுணமன், பொன்வண்ணன், நெப்போலியன், க்ருபா என்று அவரால் பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தின் ஆங்கிலேய நாயகி ஆகியோருடன் பேசிக் களிக்கும் வாய்ப்பு. அன்றைய படப்பிடிப்போடு பள்ளத்தூர் ஷெடியூல் நிறைவடைகின்றது. இரவில் பேக்கப் செய்து கொண்டு படக்குழுவினர் புறப்படுகின்றனர். வீட்டின் உரிமையாளரையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும் அழைக்கின்றார் பாரதிராஜா. அனைவருடனும் இணைந்து நின்றுகொள்கின்றார், சட்டென ஒரு யோசனை, ஷார்ட்ஸுடன் நிற்பது அவருக்கு ஏற்பில்லைபோலும். கட்டிக்கொள்ள வேட்டி கேட்கின்றார். உதவியாளர்கள் கொடுத்தவுடன் அங்கேயே வேட்டியை இடுப்பில் காட்டுகின்றார் ஷார்ட்ஸ் மறைந்துவிடுகின்றது. வேட்டி மற்றும் டீ ஷர்டுடன் புகைப்படத்திற்குத் தயாராகின்றார். படக்குழுவின் புகைப்படக்காரரை அழைத்து படமெடுக்கச் சொல்கின்றார். விடைபெறுகையில் வீட்டு உரிமையாளர் வெள்ளந்தியாகக் கேட்கின்றார் பாரதிராஜாவிடம், "ஐயா நம்ம வீட்டில் பத்து நாளா படம் புடிச்சதுல எங்க எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. மெட்றாஸ் போனதும் எங்களுக்கு ஒரு வீடியோ பதிவு மட்டும் அனுப்பி வைங்க". கலகல வென்று சிரிக்கின்றார் இயக்குனர் இமயம், "ஐயா முதலில் தியேட்டரில் படம் வரட்டும்" என்கின்றார். வீட்டு உரிமையாளருக்கு திரைப்படம் வணிகம் போன்ற விவரங்கள் புரியவில்லை விழிக்கின்றார். படக் குழுவினரின் சிரிப்பலை இன்னும் ஒலிக்கின்றது.
நான் காதலித்த மற்றும் காதலிக்கும் ஒரேயொரு திரை இயக்குனர்.
வாழ்க வளத்துடன்.