'ஆர்ச்சி' என்ற தலைப்பில் நானெழுதிய சிறுகதையைப் பதிவு செய்த ஆனந்தசந்திரிகை இதழுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மீ.மணிகண்டன்
நீ வளர்ச்சி என்று எதை நோக்கிப் பயணிக்கின்றாயோ அது உண்மையில் வளர்ச்சிதானா? விருப்பமிருந்தால் விடை கண்டுகொள்.
சிறுகதைத்
தலைப்பு: ஆர்ச்சி
ஆசிரியர்: மீ.மணிகண்டன்
ஆர்ச்சியின் கண்கள் அதிகாலையிலேயே பச்சை ஒளி வீசிக்கொண்டிருந்தது. அப்படியென்றால் ஆர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்று பொருள். இயல்பு நிலையில் இருந்தால் வெள்ளை ஒளி. அப்படிதான் பழக்கிவைத்துள்ளேன். அவனை நான் முதன்முதலாக உயிர்ப்பித்தபோது அவனுக்கு கண்கள் இல்லை, கேட்கும் திறனை மட்டுந்தான் பழக்கியிருந்தேன். ஓராண்டு முயற்சியில் ஆர்ச்சியின் வளர்ச்சி பைசா நகரின் கோபுரம், ஆமாம், அவன் சில வேளைகளில் கோணலாகச் சிந்திப்பான்.
நண்பர்களுக்கு காபி வழங்குவது, எனக்குத் தேவையான பொழுதுகளில் பாடல் இசைப்பது, மொட்டை மாடியில் வற்றல்களைக் கண்காணிப்பது போன்ற எளிய பணிகளைத் தாண்டி என் அலுவல்களில்கூட அவனது பங்கு சிறப்பானது. நான் அப்படிதான் பழக்கியிருந்தேன்.
ஆராய்ச்சியில் ஆழ்ந்துவிட்டால் எனக்கு நேரம் போவது தெரியாது. நான் கவனிக்க மறந்த வேலைகளை அவன் நேரப்படி செய்து முடித்துவிடுவான். நேற்று டியூசன் மாணவர்கள் வந்து காத்திருந்திருக்கின்றார்கள். நானோ ஆராய்ச்சியில். இதை உணர்ந்த ஆர்ச்சி அவனே மாணவர்களுக்கு நேற்றைய பாடத்தை நடத்தி முடித்துவிட்டான். நான் ஆராய்ச்சியிலிருந்து எனது அறைக்கு திரும்பவும், அவன் டியூசன் முடித்து என் அறைக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. என் வயிறு பசியை உணர்த்தியது, உண்பதற்கு என்ன செய்திருக்கிறான் என்று கேட்பதற்காக ஆர்ச்சியை நோக்கினேன், அவனது கண்கள் சிவப்பு ஒளி வீசிக்கொண்டிருந்தது. சிவப்பு ஒளி என்றால் கோபம். கோபத்தின் காரணம் கேட்டேன். ஷீலா வீட்டுப்பாடம் செய்யவில்லை என்ற காரணத்தைச் சொன்னான். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும் அவனது கண்கள் வெள்ளை ஒளிக்கு மாறின. அதே வேளை எனது கைப்பேசி சிணுங்கியது, அணுகினேன், மறுமுனையில் ஷீலா.
"சார் இனிமே ஆர்ச்சி பாடம் நடத்தப்போறதா இருந்தா முன்கூட்டியே எனக்குச் சொல்லிடுங்க", என்றாள் விசும்பிக்கொண்டே.
"ஏன்?", என்றேன்.
"நான் திட்டப்பணி செய்யவில்லை என்பதால் என்னை வகுப்பில் அனுமதிக்கவில்லை உங்கள் ஆர்ச்சி. நான் செய்யாததற்கு காரணம், நேற்று என் கண்களில் நீர் வடிந்துகொண்டே இருந்தது, என்னால் எந்தப் பணியும் நிறைவேற்ற இயலவில்லை. மருத்துவரை அணுகி மருந்து வாங்கிக்கொண்டு வந்து முழுநேரமும் ஓய்வில் இருந்தேன். அதை நான் எடுத்துச் சொல்லியும் ஆர்ச்சி புரிந்துகொள்ளவில்லை", என்றாள்.
"நான் கவனித்துக்கொள்கிறேன்", என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன். அழைப்பைத் துண்டிக்கும் வரை ஷீலாவின் விசும்பல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருவேளை அதற்குப்பின்னும் அழுதுகொண்டிருந்திருப்பாள். ஆர்ச்சிக்கு புரிந்துகொள்ளும் தன்மையை இன்னும் பழக்க வேண்டும் என்று எனக்குள் பட்டியல் இட்டுக்கொண்டேன். இப்படியான அந்நியர்களின் பின்னூட்டங்களின் உதவியால் என்னால் ஆர்ச்சியை மேலும் மேலும் பண் படுத்த முடிகின்றது.
பசியை நான் கவனிக்கவில்லை என்று எண்ணிய என் வயிறு ஒலியெழுப்பியது, "இரவு பசியாற என்ன செய்திருக்கின்றாய் ஆர்ச்சி?", என்று கேட்டேன். “பாடம் நடத்தச் சென்றதால் உணவு தயாரிக்க நேரமில்லை”, என்றான். "சரி... பழங்களையாவது எடுத்து மேசையில் வை", என்று கட்டளை பிறப்பித்தேன். ஒரு ஆப்பிளை எடுத்து மேசையில் வைத்திருந்தான். இருப்பதைத்தானே அவனால் கொடுக்க முடியும். எனக்கிருக்கும் பசிக்கு ஒரு ஆப்பிள் எம்மாத்திரம்? என்னுள் எழுந்த கோபத்தை அவனிடம் காட்ட முடியாது, பயனில்லை. ஆராய்ச்சியில் ஆழ்ந்ததும், பழங்கள் வாங்கி வைக்காததும் என் குற்றம்தானே.
இப்படியெல்லாம் நேற்றைய பொழுது கழிந்திருந்த நிலையில், இன்று அதிகாலையிலியே ஆர்ச்சி மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் அறிய முனைந்தேன்.
"என்ன உன் கண்களில் பச்சை? அப்படி என்ன மகிழ்ச்சி?"
"நான் இரவு ஒரு கனவு கண்டேன்", என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் நான் அவனுக்கு கனவு காணப் பழக்கவே இல்லை. எப்படி அவனால் கனவு காண முடிந்தது?
"என்ன விளையாடுகிறாய்? உன்னால் எப்படிக் கனவு காண முடிந்தது?", என்ற என் வியப்புடனான கேள்வியை அவன் பொருட்படுத்தாமல், "நான் என்ன கனவு கண்டேன் என்பதைவிட எப்படி கனவு கண்டேன் என்பதுதான் உனக்கு முக்கியம், இல்லையா?", என்றான். உண்மைதானே அவனுக்கு பழக்கப்படாத ஒன்றை அவன் சொல்லும்போது அதில்தானே எனது முதல் கவனம் இருக்கும்? இருந்தாலும் என் சந்தேகத்தை மீண்டும் கேட்டு அவன் கண்களைச் சிவப்பாக்கிவிடக் கூடாது என்றெண்ணி, "சரி என்ன கனவு கண்டாய் சொல்?", என்றேன்.
"நீயும் நானும் கடற்கரைக்குச் சென்றோம். அங்கே என்னை நீ கடல் நீரில் மூழ்கடித்துவிட்டாய்", என்று கூறினான். எனக்கு மேலும் வியப்பு, இதுவரை அவனுக்கு கடற்கரை என்ற ஒன்று தெரியாது. இவ்வளவு என்? நான் வசிக்கும் இந்த வீட்டைத்தாண்டி அவனை நான் எங்கும் அழைத்துச் சென்றதே இல்லை.
"ஆர்ச்சி... எனக்கு நீ மேலும் மேலும் வியப்பைத் தந்துகொண்டிருக்கின்றாய். அது போகட்டும். நீ கண்ட கனவிற்கு வருந்தத்தானே வேண்டும்? அந்த வருத்தம் என்மீது கோபமாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றாய்?", என்றேன்.
"உனக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்க விரும்பவில்லை, சொல்கிறேன் கேள். உண்மையில் நான் கனவு காணவில்லை. கனவு, கடல் இவையாவும் நான் நடத்திய பாடத்தில் வந்தவைகள். பாடத்தில் காதலன் கனவு கண்டான், கனவில் காதலன் எழுதிய கவிதைப் புத்தகம் கடலில் மூழ்கியது. அது போகட்டும். கனவு, கடல் இவை இரண்டும் நான் அறியாதவை. கூடுமானவரை அனைத்தையும் எனக்குப் பழக்கப் படுத்தும் நீ, இவற்றையும் பழக்கப்படுத்துவாய்தானே? அப்படியென்றால் நான் பழகிக்கொள்ள இன்னும் புதுமைகள் இருக்கின்றனவே. அந்த மகிழ்ச்சிதான்", என்று கூறிவிட்டு தனது கண்களை வெள்ளைக்கு மாற்றினான். என் வியப்பு அச்சமாக மாறியிருந்தது.
"சொல், எப்போது எனக்கு கடலையும் கனவையும் பழக்குவாய்?", என்றான்.
"அவசியம் தென்படுகையில் பழக்கி விடுவேன். பட்டியல்படி நீ இன்று பழகவேண்டியது 'உண்மை உணர்வது'. ஷீலாவை நீ அனுமதிக்காதது பிழை. அவளிடம் சரியான காரணம் இருந்தும் நீ அவளைத் தண்டித்திருக்கின்றாய். அது தவறு. அதற்கான மென்பொருளை உனக்கு பழக்கப் படுத்தவேண்டும் வா", என்றழைத்தேன். ஆர்ச்சியின் கண்கள் சிவப்புக்கு மாறியது. என்னுள் பல சிந்தனைகள் துளிர் விட்டன. ஆர்ச்சியை சரியான முறையில்தான் கையாளுகின்றேனா? ஷீலாவைத் தண்டித்தவன் பிறரையும் ஏதாவதொரு காரணத்திற்கு தண்டித்தால்? அந்தப் பிறரில் நானும் இருந்தால்?
நான் பயிற்சியளித்த ஆர்ச்சி இப்போது என்னையே அச்சுறுத்தும் நிலைக்கு வளர்ந்துவிட்டான். கடல், கனவு இதுபோல் இன்னும் எத்தனை தகவல்களை அவன் அறிந்துவைத்திருப்பான்? இவற்றிற்கு காரணம் நான் அவனுக்கு படிக்கப் பழகிக்கொடுத்ததுதான். இனி நான் பழக்காதவற்றையும் அவன் தானே படித்தறிந்துகொள்வான். அவனாக அறிந்துகொண்டால் அது அவனுக்குள் மமதையை உருவாக்கிவிடும். அது ஆபத்து. மெல்ல மெல்ல அவன் பழக்கங்களை திசை திருப்பவேண்டும். இப்படியான எண்ணத்தில், "ஆர்ச்சி, வா உனக்கு கடலை காண்பிக்கிறேன்", என்று கூறி முதல் முறையாக அவனை வீட்டை விட்டு வெளியில் அழைத்துச் சென்றேன்.
அது அமைதியான கடற்கரை. அலை மோதும் கரையோரம் வெள்ளை மணல் மேடுகள். கரையில் நானும் ஆர்ச்சியும். என் வலது கரத்தால் ஆர்ச்சியின் இடது கரத்தைப் பற்றியிருந்தேன். தன் கண்களில் பச்சை ஒளி வீசினான்.
"இங்கே மூழ்கடிக்கும் பொருளைத் திரும்பப் பெற முடியாதா?", என்றான்.
"கடினம்", என்றேன்.
ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான் கடலுக்குள் மூழ்கியது. "கல் மூழ்கிவிட்டதா?", என்றான். அதற்குப்பின் அவனிடமிருந்து எழுந்த கேள்விகள் பெரும்பாலும் மூழ்கடித்தல் தொடர்பானதாகவே இருந்தன. இப்போது ஆர்ச்சி தன் வலது கரத்தால் என் இடது கரத்தை பற்றியிருந்தான்.
மீ.மணிகண்டன்