திங்கள், 7 ஜூலை, 2025

FeTNA 2025 நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா  இவ்வாண்டு (2025) பேரவை விழா 38 நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை இது.

போட்டி அமைப்பினர் கொடுத்திருந்த தலைப்பு 'செம்புலப் பெயல் நீர் போல'. அன்பை மையப்படுத்தி கொடுக்கப்பட்ட தலைப்பாகக் கருதி அந்தத் தலைப்பிற்கு நான் எழுதிய கதை. போட்டிக்குப் பின்னராக இக்கதைக்கு எனது தலைப்பு 'நரம்புகளில் உறங்கும் ஓசை'.

FeTNA நிகழ்வு நாள்கள்: From 3/Jul/2025 till 05/Jul/2025

இடம்: Raleigh, NC, USA

குறிப்பு: FeTNA என்பது  வட அமெரிக்காவின் 73 தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு.




நரம்புகளில் உறங்கும் ஓசை … சிறுகதை … மீ.மணிகண்டன்

டெக்சாஸ் மாகாணத்தின் மையப் பகுதியிலிருந்து தெற்கே ஏறக்குறைய 200 மைல்கள் தொலைவில் ஒரு குட்டிக் கிராமம், கான்கேன். சின்னச்சின்ன மலைகள், நடைப்பயிற்சிப் பாதைகள், காடுகள், ஏரிகள், ஓடைகள் என இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ள, பரபரப்பிடமிருந்து தன்னைப் பதுக்கிக்கொண்டிருக்கும் கிராமம். உழைத்துக் களைத்து தன்னை உயர்பிறப்பு என அடையாளப்படுத்திக்கொள்ளும் மானுடம் ஓய்வு தேடி ஒதுங்கும் ஒரு கிராமம்.

நீரோடைகளிலும் காடு மலைகளிலும் உல்லாசம் தேடியலைந்து ஒதுங்கும் மாந்தர்களுக்கு உணவளிக்கும் ஒரு சாலையோர விடுதி அது. பாரம்பரிய முறையில் உணவு தயாரிப்பது அவ்வுணவகத்தின் சிறப்பு. வாரந்தோறும் ஞாயிறுகளில் ஜாக் அங்கே தவறாமல் தன்னை ஆஜர் படுத்திக்கொள்வான். தனது கிடார் இசையில் விடுதிக்கு வரும் விருந்தினர்களை மகிழ்விப்பான். மற்ற நாள்களில் என்ன செய்வான்? கிடார் இசையை மனித செவிகளுக்குக் கடத்திக்கொண்டிருக்கும் அந்த ஒலிபெருக்கியின் முன்னிருக்கும் சின்னப் பதாகை சொல்லும். 'உங்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் மேலும் சுவை சேர்க்க அழையுங்கள் இந்த ஜாக்கை... தொலைபேசி...' என்ற வாசகங்களோடு அவனது தொலைபேசி இலக்கத்தை கலைநயத்தோடு வரைந்திருப்பான். அந்தப் பதாகை வாரத்தின் ஏழு நாள்களும் அங்கே நிலையாக இருக்கும். கிடார் இசைப்பதைத்தவிர அவனுக்கு வேறு தொழில் இல்லை. இல்லங்களில் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிக்கு இவ்வளவு தொகை என்று அவன் நிர்ணயிக்கவில்லை அவர்கள் கொடுப்பதைப் பெறுவான். அவனது ஞாயிறுகளின் வருகைக்கு அந்த விடுதியில் என்ன கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் விடுதியில் ஞாயிறுகளில் மீட்டும் இசைக்கு அவன் பணம் வாங்குவதில்லை. அங்கே அவன் விரும்புவதும் வேண்டுவதும் மெலிண்டாவின் அன்பும், அவள் கரங்களால் ஒரு வேளை உணவும். இரவில் விடுதி சாத்திப்புறப்படும் முன் ஊழியர்களோடு உணவு மேசையில் அமர்வான். மெலிண்டாவைத் தேடித் தனக்கு வேண்டிய உணவைக் கேட்பான். மேசைக்கு மெலிண்டா அதைக்கொண்டுவந்து வைத்துவிட்டுப்போவாள். அவள் பரிமாறிய உணவு ஜாக்கிற்கு அடுத்து வரப்போகும் ஞாயிறு வரை அதாவது ஒருவாரத்திற்கான மனப் பசியை ஆற்றும்.

மெலிண்டா அந்த உணவகத்தில் கடந்த சில மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறாள். மற்ற நாள்களில் காலை மாலை என்று அவளது பணி நேரம் மாறுபட்டாலும் ஞாயிறுகளில் மட்டும் அவளுக்கு மாலை நேரப்பணி என்பது அங்கே அவளுக்கான நிபந்தனை. ஞாயிறுகளில் விருந்தினர் வருகை அதிகமிருப்பதால் டிப்ஸ் அதிகம் வரும் மெலிண்டாவின் பொருளாதாரத்திற்கு அது பலம் சேர்க்கும் என்பதால் அவளும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டாள். சிவந்த முகம், இளங்கரு விழிகள், வாள்போல் வளைத்துச் செம்மைப்படுத்திய புருவங்கள்,  தோள்களுக்குக் கீழே இடுப்புக்கு மேலே என அளவாக வெட்டிய பிரவுன் நிறக் கேசம், மாலைச்சூரியன் நிறத்தில் கன்னங்கள், தூரத்தில் தெரியும் கப்பல் முனைபோல் நாசி, மொத்தத்தில் வசீகர தேகம் எனத் தோற்றத்தில் பொலிவுடன் மிளிரும் மெலிண்டா ஞாயிறு மாலைகளில் விருந்தினர் வருகையை அதிகரிப்பாள் என்பது விடுதியின் கணக்கு.

சாலையோர வெளித்தோற்றமாக இருக்கும் அகண்ட அடுப்பில் மதியம் தொடங்கி இரவுவரை நெருப்பு கனன்றுகொண்டிருக்கும். அடுப்பைச்சுற்றி இரண்டடி இடைவெளியில் சீராக அடுக்கப்பட்ட விறகுகள் அணைபோலக் காட்சி தரும். அடுப்பில் எறிந்துதீர்த்த கரிகள் அகற்றப்பட்டு புது விறகுகளை உடனடியாகத் தீயில் செருக அது தோதாக இருக்கும். பெரிய தோசைக்கல் போல நான்கடி சதுரத்தில் கறுப்புக் கல் அடுப்பின் மீது ஆவியை காற்றில் கலந்து காற்றின் வெப்பத்தை அதிகரித்துக்கொண்டிருக்கும், விருந்தினர்களின் வேண்டுதலுக்கேற்ப கறிவகைகள் அந்தக் கல்லில் அங்குமிங்குமாக வெந்துகொண்டுமிருக்கும். அடுப்பு அமைப்பின் பகுதிக்கு இடப்புறம் விடுதிக்கான அகலப் பாதை. பாதையின் மறுபுறம் ஜாக்கின் சிறிய இசைப்பரிவாரமும் ஒலிபெருக்கியும் விடுதியை மகிழ்விக்கும். ஜாக் அமர்ந்து கிடார் இசைக்கும் இடத்திற்கு எதிர்புறம் விடுதியின் கவுண்டர் பகுதி, அங்கே நின்று மெலிண்டா விருந்தினரின் உணவு ஆர்டர் எடுப்பதும், விருந்தினர்கள் பணம் செலுத்துவதும் நடைபெறும். அவனது நேர்பார்வைக்கு மெலிண்டா தெரியும் வண்ணம் அவனது இருக்கையை அமைத்துக்கொள்வான் ஜாக்.

கூரை வேய்ந்த சாலையோர உணவகத்திற்கு ஜாக்கின் நிஜத்தோற்றம் மிகவும் பொருத்தமாக இருந்தது. குழி விழுந்த கன்னங்களை மறைக்க அவன் கனமாகத் தாடி வளர்த்திருந்தான். தாடி மயிர்கள் கருப்பை இழந்து பத்துப்பதினைந்தாண்டுகள் கடந்திருந்தன. கருப்பு விழிகளில் பார்வை இன்னும் கூறாகத் தொடர்ந்தது. நீண்ட கூந்தலை எண்ணையிட்டுச் சீவி அள்ளி உச்சந்தலையில் கொண்டையிட்டிருப்பான். வெள்ளையும் பிரவுனுமாக தலை முடியும் தாடியும், மெலிந்த உடலுமாக ஒரு சாமியாரைப்போலவே தோன்றுவான் ஜாக். கனத்த மேல் கோட்டும், ஜீன்சும் அவனது தேக மெலிவை ரகசியமாக்கியது.

இருபதாண்டுகளுக்கு முன் அவன் மனைவி அவனை விட்டுப்பிரிந்து போனாள். திருமணமாகி ஐந்தாண்டுகள் பொறுத்திருந்தாள், கிடார் மட்டுமே வாழ்க்கை என்றிருந்த ஜாக்கின் வருமானம் அவளின் தேவைகளை நிறைவேற்றவில்லை. ஒரு குழைந்தை பிறந்தும் கூட ஜாக் மாறவில்லை. இனி அவனை நம்புவது பாலைவனத்தில் மழையை எதிர்நோக்குவது என்று அவனிடமிருந்து விடைபெற ஒரு நாள் முடிவெடுத்தாள். எளிய வாழ்க்கையின் இனிமையை எடுத்துச்சொன்னான் ஜாக். அது வாழ்க்கையல்ல வெறும் நாள்கடத்தல் என்று விவாதித்தாள் அவள். ஜாக்கை நம்பியது போதுமென நடையைக் கட்டிய மனைவியைப் பிரிந்த நாள் முதல் இன்னும் தனிமரமாகத் தனது வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கிறான் ஜாக்.

வழக்கம்போல ஞாயிறொன்று வந்தது. தனது குட்டிப் பரிவாரங்களைத் தயார் படுத்தி ஒலி பெருக்கியைக் கையில் பிடித்தான். "அன்பான உள்ளங்களே உங்களுக்கு இந்த ஞாயிறு மாலை மகிழ்ச்சியான மாலையாகட்டும் இந்த ஜாக்கின் கிடார் மழையில்", என்ற உற்சாக அறிவிப்போடு கிடாரின் நரம்புகளுக்கு தனது விரல்களால் உயிரூட்டினான். வழக்கம்போல கவுண்டரில் பார்வையைச் செலுத்தினான். அங்கே மெலிண்டா இல்லை வேறொருத்தி நின்றாள். ஒரு வேளை இன்று தாமதமாக வருவாள் என்று கிடாரில் கவனம் செலுத்தினான். விடுதி தன் இயல்புகள் மாறாமல் இயங்கிக்கொண்டிருந்தது. விறகுகள் தங்களை அர்ப்பணித்து விருந்தினருக்கு சுவையூட்டிக்கொண்டிருந்தன. ஜாக்கின் பார்வைத் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இன்னும் மெலிண்டாவைக் காணவில்லை. இரவு உணவு வேளையும் வந்தது. அலைகளைத்தாண்டிய ஆழ்கடல் போல விடுதியின் ஆரவாரக் குரல்கள் படிப்படியாக குறைந்தது. தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ஜாக். விடுதி நிர்வாகி வேகமாக ஜாக்கிடம் வந்தான்.

"ஹே ஜாக், சாப்பிட வா..." என்று ஜாக்கை உணவுண்ண அழைத்தான்.

"வேண்டாம்"

"வா... உனக்கு வேண்டிய உணவை எப்போதும் போல உண்ணலாம்"

"இன்று மெலிண்டா வரவில்லையென்று எண்ணுகிறேன்"

"ம்... புரிகிறது... வெகுநாள்களாக எனக்கு ஒரு சந்தேகம்... நீ எப்போதும் மெலிண்டாவை எதிர்பார்கிறாய்... அவளிடமே உனக்குத் தேவையான உணவைக் கேட்கிறாய்... நீ மெலிண்டாவை விரும்புகிறாயா?"

நிர்வாகியிடம் இந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை ஜாக். "நிறுத்து ..." என்ற ஜாக்கின் உரத்த குரலை எதிர்பார்க்கவில்லை நிர்வாகி.

"ஏன் கோபப்படுகிறாய்... இன்றுமட்டுமல்ல இனி எப்போதும் மெலிண்டா இங்கு வரமாட்டாள். அவள் வேறு ஊருக்கு இடம்மாறப்போவதாகச் சொல்லி சென்றவாரத்தோடு கணக்கை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாள்", கான்கேனின் நீரோடைகள் இப்போது ஜாக்கின் கண்களில் ஓடியது. மனதுக்குள் யாரோ அந்தப் பெரிய தோசைக்கல்லைக்கொண்டு அழுத்தினார்கள். செம்மண்ணில் பெய்த மழைநீர் போன்று இரண்டறக் கலந்த அன்பு ஜாக் மெலிண்டா மீது கொண்ட அன்பு.

"ஜாக்... அழுகிறாயா? நான் எதுவும் தவறாகச் சொல்லிவிட்டேனா?" என்று பதட்டமடைந்தான் நிர்வாகி.

கன்னங்களில் வழிந்த நீரைத்துடைக்கத்தோன்றவில்லை ஜாக்கிற்கு, "ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் பார்வையில் பல அர்த்தங்கள் இருக்கிறது, அதை உன்னைப்போன்றவர்கள் உணரத் தவறுகிறீர்கள். கணவன் மனைவியைக் காண்பது, சகோதரன் சகோதரியைக் காண்பது, மகன் தாயைக் காண்பது, தந்தை மகளைக் காண்பது என அத்தனையும் இருவிழிப் பார்வையில்தான் நிகழ்கின்றது. ஆனால் ஒவ்வொன்றிலும் வித்தியாசம் இருக்கிறது. மெலிண்டா என் மகள்... இருபதாண்டுகளுக்கு முன் அவளைவிட்டு நான் பிரிந்தபோது அவளுக்கு இரண்டு வயது. 'அப்பா' என்று அவள் என்னை அழைக்கும் பாக்கியத்தை நான் பெறவில்லை. சில மாதங்களுக்கு முன் என் மகள் இங்கே வேலைக்குச் சேர்ந்தாள் எனக் கேள்விப்பட்டு ஞாயிறுகள் தோறும் இங்கே வரத்தொடங்கினேன். நான் அவள் தந்தை என்பதை காட்டிக்கொள்ள விரும்பவில்லை. என் மனைவி என்னைப்பற்றி என்ன சொல்லி வளர்த்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் அவளின் தாய் சொன்னதே அவளுக்கு உண்மையாக இருக்கட்டும் அதை நான் மடைமாற்ற விரும்பவில்லை. அவளின் கரங்களால் கிடைக்கும் உணவில் நான் என் கடந்துபோன வாழ்க்கையை அனுபவித்துக்கிடந்தேன். இனி நானும் புறப்படுகிறேன்", என்று கூறித் தனது கிடாரையும் பதாகையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ஜாக். ஒலி பெருக்கி அமைதியாய் நின்றது.

... மீ.மணிகண்டன் 



திங்கள், 24 மார்ச், 2025

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பேசும் புதிய சக்தி நடத்திய போட்டியில் சிறப்புக் கதைகள் பட்டியலில் சிறுகதை 'நிசி'

 பேசும் புதிய சக்தி நடத்திய போட்டியில் சிறப்புக் கதைகள் பட்டியலில் சிறுகதை 'நிசி'



அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டியில் முதற்பரிசு

 அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டியில் முதற்பரிசு



வேண்டுதல் ... மீ.மணிகண்டன்

 வேண்டுதல் ... மீ.மணிகண்டன் 

அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டியில் முதற்பரிசு வென்ற கதை.


வேண்டுதல் ... சிறுகதை ... மீ.மணிகண்டன் … 11/27/2024

     எமியின் அனுமதியின்றி அவள் கைவிரல் நகக்கணுக்களில் நுழைந்து அவளின் மூளைத்திசுக்களை முத்தமிட்டு உடல் ரோமங்களை எழுப்பிக் கூத்தாடியது வாடைக்காற்று. அசையாமல் விழிகளைத் திறந்துகொண்டாள் எமி. நல்ல உறக்கத்தைக் கலைத்துவிட்டது குளிர். தன்னிலையை உணரச் சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு. இப்போது நன்றாகவே விழித்துக்கொண்டாள். போர்த்தியிருந்த கம்பளி விலகி மணிக்கட்டு வரை இருகரங்களும் போர்த்தப்படாமல் இருந்தன. இருக்கட்டுமே? கூடாரத்தினுள்தானே உறங்கிக்கொண்டிருக்கிறாள், உள்ளே எப்படி காற்று நுழைந்தது? புரண்டு திரும்பினாள், அருகில் அம்மாவைக் காணவில்லை. அவசரத்திற்கு எழுந்து சென்றிருப்பாள் என்று யூகித்துக்கொண்டாள். காற்று உள்ளே நுழைந்த விதமும் அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. அம்மா கூடாரத்தின் வாயிலைத் திறந்து வெளியே சென்றிருப்பாள்அப்போது காற்று உள்ளே நுழைந்திருக்கும். உறங்கச்செல்லும்முன் கைகளுக்கும் கால்களுக்கும் உறைகள் அணிந்துகொள்ளச்சொல்லியிருந்தாள் அம்மா. எமி கால்களுக்கு அணிந்துகொண்டாள். சோம்பல் மேலிட கைகளுக்கு வேண்டாமென்று தவிர்த்திருந்தாள். ஒரு கையில் உறை அணிந்ததும் மறு கைக்கு உறையணிந்த கையால் உறையணிந்து இழுத்துச் சரிசெய்வது சற்றே சுலபமற்ற பணி அவளுக்கு. கூடாரத்தின் வெளிய 'உய் உய்' என்று ஊதக்காற்று ஏற்ற இறக்கங்களோடு உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தது, காதுகள் வரை மறைத்திருந்த குல்லாவைத்தாண்டி எமியின் செவிகளில் அது வெற்றிரைச்சலாய்ப் பாய்ந்துகொண்டிருந்தது. கைகள் வெளியே தெரியாவண்ணம் கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்ணிமைகளைப் பொருத்திக்கொண்டாள். வாயிலைத்திறந்துகொண்டு அம்மா உள்ளேவந்து படுக்கையைச் சரிசெய்து படுத்துப் போர்த்திக்கொண்டதை எமியால் உணரமுடிந்தாலும் அமைதியாகவே இருந்தாள். மகள் விழித்தெழுந்திருக்கிறாள் என்பதை அம்மா உணர்ந்தாள். எமி கால்களை நீட்டிக் கம்பளியைச் சீராகப்போர்த்தியிருந்ததே அதற்கு சாட்சி.

 "எமி ..."

அம்மா அழைப்பதைக் கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தாள். பதில் குரல் கொடுக்க அவளுக்கு மனமில்லை. வறண்ட மைதானமாக அவள் மனம் காய்ந்துகிடந்தது. ஷெல்டரில் உறங்கிப் பலநாள்கள் ஆகிவிட்டது. சமீப சிலநாள்களாக அழைத்துப் போகச்சொல்லிப் பலமுறை அம்மாவிடம் மன்றாடியிருக்கிறாள்அம்மா மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள். உறங்க மனமின்றி கூடாரத்தின் மேல்பகுதியை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள் எமி. உச்சிவானில் நிலா உருண்டுகொண்டிருக்கிறான் என்பதைக் கூரையில் படர்ந்த பாலொளி வெளிச்சத்தில் உணர்ந்தாள். அடிவயிறு சமிக்ஞை செய்து எழச்சொன்னது. கழிப்பறை உபயோகிக்க வேண்டுமெனில் எழுந்து ஏறக்குறைய முன்னூறடிகள் நடந்து செல்லவேண்டும். கூடாரமிருக்குமிடத்திற்கும் அரசு அமைத்துக்கொடுத்திருக்கும் அந்தத் தற்காலிகக் கழிப்பறைக்கும் அவ்வளவு தூரம். மேலும் மெல்லிழைக் காகிதங்கள், நறுமனக் குப்பி இவற்றையும் மறக்காமல் எடுத்துச்செல்லவேண்டும் மறந்துவிட்டால் அந்தக் கழிப்பறைக்குள் சென்று திரும்புவதே மறுபிறப்பு. இவ்வளவு தயாராகி இந்தக்குளிர் இருட்டில் வெளியே செல்வதா? கூடாரத்தின் அருகில் வேறு மார்க்கமில்லை. இந்தப்பூங்காவில் எமியும் அம்மாவும் வசிக்கும் கூடாரத்தைப்போல முப்பதுக்கும் மேற்பட்ட கூடாரங்கள் புல்வெளியில் மழைக்காளான்கள் போல் பரவலாக இருக்கின்றன. சுருக்கமாக அது ஒரு கூடாரப்பூங்கா. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்கச்சொன்னது சோம்பல். 'சடசட' வெனக் கூடாரத்தின்மீது ஏதோ உதிரும் ஓசை. சில நொடிகளில் 'படபட' வென இடைவெளியின்றி ஒலித்தது. 'சரிதான் ... மழை பெய்கிறதா?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள். வயிற்றின் கட்டளைக்கு எழுந்தால் மழையீரத்தில் நனையவேண்டும். குடைபிடித்துக் கொண்டு நடந்தாலும் உடைகளில் ஈரம் படியும். ஷூக்களில் ஈரம் ... ஈரத்தோடு மண்ணும் ... திரும்பிவந்து ஷூவைக் கழற்றிவிடலாம் ஆனால் அதே ஈர உடையில் உறங்க முடியுமா? ம் ஹூம் .... முடியாது ... விடியும்வரை பொறுத்துக்கொண்டு உறங்கிவிட எண்ணிப் பசையிட்டதுபோலக் கண்ணிமைகளை இருக்கமாக இணைத்துக்கொண்டாள். புரண்டு படுத்தாள். கம்பளியை இழுத்துத் தலை முழுவதும் போர்த்திக்கொண்டு இருட்டுக்குள் உடலை ஏமாற்றி உறங்கிவிட முயற்சித்தாள். அவளின் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டது அவள் மேனி. குளிரால் நடுங்கத் தொடங்கியது. போர்த்திய கம்பளி பயனற்றுக் கனத்தது. எழுந்து அமர்ந்தாள். தலைமாட்டில் வைத்திருந்த பேட்டரி விளக்கை எடுத்து ஒளியூட்டினாள். கூடாரத்தைச் சுற்றி விளக்கொளியில் வட்டம் போட்டு அவசரத்திற்கு விடை தேடினாள். பேட்டரி விளக்கின் அருகில் இரவு உறங்கப்போகும் முன் உண்ட நூடுல்ஸ் மீதத்துடன் மூடியிருந்த நெகிழிக் கொள்கலன் கண்களில் தெரிந்தது, விடை கிடைத்தது, விடுதலை, விடுதலை என்று கண்கள் பிரகாசமானது. கலனைத் திறந்து இரண்டு கையளவு மீதமிருந்த நூடுல்ஸை மொத்தமாக அள்ளி வாயில் திணித்துக்கொண்டாள். கலன் காலியானது. அருகிலிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து மெல்லிழைத் தாள்கள் நான்கைந்து மடிப்புகளை மொத்தமாக உருவி வாய் மற்றும் கையைத் துடைத்துக்கொண்டு உடலிட்ட கட்டளைக்கு ஆயத்தமானாள். விடிந்ததும் நெகிழிக் கலனை வெளியேற்றிக்கொள்ளலாம், அதுவரை உள்ளே ஒரு ஓரத்தில் மூடிக்கிடக்கட்டும் என்று முடிவு செய்து கொள்கலனிடம் தன் அவசரத்தைச்சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கூடாரத்தின் ஒரு மூலைப்பகுதியை நாடினாள். அடிவயிற்றை அமைதிப்படுத்தினாள். நெகிழிக் கலன் மீண்டும் கனமாகிக் குப்பைக்குத் தயாரானது. கால்மாட்டில்  மூடிவைத்துவிட்டு உடலில் மீண்டும் கதகதப்பை உடுத்திக்கொள்ளக் கம்பளியைநாடினாள் எமி. மழை இன்னும் சட சடத்துக்கொண்டிருந்தது.

பறவைகளின் கீச்சொலியில் கண்களைத்திறந்தாள் எமி. பகலவன் வந்துவிட்டிருந்தான். அம்மா யாருடனோ வெளியே பேசிக்கொண்டிருந்தாள். "நாங்க இங்கே வந்து ஏழு நாள்கள் தான் ஆகிறது ..." என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் அம்மா.

 "அது எங்களுக்கு தேவையற்றது ... " என்றது கனமாக ஒரு ஆண்குரல்.

 "அடிக்கடி டெண்டை பிரித்து உடமைகளைத்தூக்கிக்கொண்டு இடம் மாறுவது சுலபமான செயலா? என்று நீங்களே சொல்லுங்கள்" என்றாள் அம்மா.

எமி அதிர்ந்தாள், ' ... இந்த இடமும் போய்விட்டதா?' என்று நகைத்துக்கொண்டாள். அம்மா வெளியே காவல் அதிகாரியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டாள்.

"எங்களிடம் கேள்வி கேட்காதீர்கள். அரசின் கட்டளைக்கு நாங்கள் பணி செய்கிறோம். அங்கே உங்கள் டெண்ட்களை அமைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, கடந்த சிலநாள்களில் அங்கிருந்து முப்பதாயிரம் பவுண்டு  குப்பைகளை அகற்றியிருக்கிறோம்" என்றது ஆண்குரல்.

சரிதான் குப்பையிருந்த இடத்தில் எங்களை மாற்றுகிறார்கள்! ஏன் இந்த அம்மா இத்தனை கெஞ்சிக்கொண்டிருக்கிறாள்எப்படியும் அவர்கள் சொன்னதுதான் முடிவு. இப்படித்தான் பழைய இடத்திலிருந்து ஒரு நாள் வந்து கிளப்பினார்கள், சொன்ன நாளில் காலி செய்ய முடியவில்லை. என்ன செய்தது போலீஸ்? தாமதமான ஒரு நாளுக்கு இருநூற்றறுபது டாலர்கள் அபராதம் விதித்தது. அந்த ஒரு இரவு ஷெல்டரில் தங்கியிருந்தால் கூட ஆளுக்கு முப்பது அல்லது நாற்பதுதான் ஆகியிருக்கும். அபராதத்தைக் கட்டிவிட்டு இன்னும் காருக்கு இன்சூரன்ஸ் கட்டாமல் பயந்து பயந்து கார் ஒட்டிக்கொண்டிருக்கிறாள் அம்மா. அம்மாவின் வருமானம் அவள் வைத்திருக்கும் பழைய ஹாண்டா இன்சூரன்சுக்கும் உணவுத்தேவைக்கும் அவசிய அங்காடித் தேவைக்குமே சரியாகப்போகும் ... இல்லை இல்லை பத்தாமல் போகும். அதனால் சிலநாள்கள் அம்மாவும் மகளும் இரவு நேரம் உணவில்லாமல் கழித்திருக்கிறார்கள், வயிற்றில் ஆகாரம் இல்லாமல் கண்களில் உறக்கம் கொள்ள இயலாமல் திண்டாடியிருக்கிறார்கள். எமியின் பகல் நேர உணவுக்கு அவள் பயிலும் பள்ளிக்கூடம் பொறுப்பு. இரவில்தான் அம்மாவோடு சிலநாள்கள் தவித்திருப்பாள். விடுமுறை நாள் ஏன் வருகிறது என்று வருந்துவாள். வெளியே நடந்துகொண்டிருக்கும் உரையாடலில் எமிக்கு ஒன்று தீர்மானமானது. இன்று கூடாரத்தைப் பிரிக்கவேண்டும். அடடா அப்படியானால் பள்ளிக்கூடம் போக முடியாது என்று ஏக்கத்தை முகத்தில் ஏந்தி எழுந்து கூடாரத்தை விட்டு வெளியே வந்தாள். மறக்காமல் நெகிழிக் கலனைக் கையோடு எடுத்துக்கொண்டு வெளியேறினாள். பூங்காவின் ஒரு எல்லையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் கலனை வீசிவிட்டுத் தன் கூடாரத்திற்குத் திரும்பினாள். முப்பதாயிரம் பவுண்டு குப்பை அள்ளிய இடத்தின் விலாசத்தை காவல் அதிகாரியிடம் அம்மா விசாரித்துக்கொண்டிருந்தாள்.

பழைய ஹாண்டாவைக் கிளப்பினாள் அம்மா. முன்னதாக எமியிடம், "ஹெ எமி, இன்னிக்கு ஸ்கூல் போகவேண்டாம் நான் போய் இடத்தை பார்த்துட்டு வரேன் நீ எல்லாத்தையும் பேக் பண்ணத் தொடங்கு" என்று சொல்லியிருந்தாள். பதிலெதுவும் பேசாமல் எமி அம்மாவின் கட்டளையைக் காதில் வாங்கிக்கொண்டாள்.

காவல் அதிகாரி சொன்ன புது இடம் இப்போதிருக்கும் பூங்காவிலிருந்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் இருந்தது. எமியைத் தினமும் பள்ளிக்கூடம் அழைத்துச்சென்றுவர இனி அதிக நேரம் தேவைப்படும். காரை நிறுத்தி இறங்கினாள். குப்பைகளை அகற்றிய அந்த இடத்திள் இன்னும் குப்பை வாடை ஆளை விரட்டியது. காருக்குள் வைத்திருந்த நறுமணக் குப்பியிலிருந்து சில துளிகளை உள்ளங்கைகளில் உதறி இரு கைகளையும் ஒன்றாய் இணைத்துத் தேய்த்து மூக்கின் அருகில் வைத்து நுகர்ந்துகொண்டாள். இடம் மிகவும் அமைதியாக இருந்தது. அருகில் கடைகள் இல்லை. ஒரு மைல் தொலைவில் ஒரு கேஸ் ஸ்டேஷன் இருந்தது. அவளுடைய பழைய ஹாண்டா போல இன்னொரு பழைய வாகனம் நின்றிருந்தது. அதனருகில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். பார்வைக்கு கணவன் மனைவிபோலத் தெரிந்தனர். அவர்களும் கூடாரமிட வந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவளின் யூகம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த இடத்தில் பாதுகாப்பு இருக்குமா? என்று சந்தேகம் எழுந்தது, கூடவே, அவளோடும் எமியோடும் சேர்ந்து இன்னும்  நிறையக் கூடாரவாசிகளும் அங்கே தங்கப்போகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற, வந்த அச்சம் கூடிக்கலையும் மேகம்போல விலகியது.

அங்கே நின்ற ஷெரிஃப் வண்டியின் அருகில் சென்று வண்டியினுள் காவலர் இருப்பதை உறுதிசெய்துகொண்டு கண்ணாடியில் மெல்லத் தட்டினாள். கண்ணாடியை இறக்கிய காவலர், "என்ன?" என்று அதிகாரப் பார்வை வீசினார். தான் வீடற்றவள் (ஹோம்லெஸ்) என்று கூறி அதற்கான அடையாளக் காகிதங்களைக் காவலரிடம் நீட்டினாள். அதனைப் பெற்றுக்கொள்ளாமலேயே அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட காவலர், "இந்த இடத்தில டெண்ட் அமைக்க இன்னும் அனுமதி வழங்கப்டவில்லை. அநேகமாக அனுமதி நாளை கிடைக்கலாம். நாளை வந்து பார்" என்றார். இந்த எதிர்பாராத பதில் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது. "பழைய இடத்தில இன்று மதியத்திற்குள் காலி செய்யச்சொல்கிறார்கள்" என்றாள். காவலர் அதனைப் பொருட்படுத்தவில்லை. கண்ணாடியை மூடிவிட்டு அவருடைய அலைபேசியில் கவனம் செலுத்தினார்.

பேசவும் முடியாது பேசியும் பயனில்லை என்ற நிலையில் திரும்பி நடந்து தனது காருக்கு வந்தாள். பழைய இடத்திற்கு காரைச் செலுத்தினாள். இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து உயரக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் மற்றவர்களுக்கு என்ன எண்ணத்தை ஊட்டுமென்று தெரியாது ஆனால் இந்த நேரம் அவளுக்குள் அருவருப்பையே ஊட்டிக்கொண்டிருந்தது. சிந்தனை முழுவதும் அலுப்பாகவே இருந்தது. இன்று இரவுப்பொழுதை எப்படி நகர்த்துவது? எங்கே தங்குவது? பறவையாய் பிறந்திருந்தால் மரங்கள் தஞ்சமளித்திருக்கும் இப்படி மனிதனாய்ப் பிறக்க வைத்துவிட்டாயே இறைவா என்று அவள் மனம் உலர்ந்தபோது கண்கள் கசிந்தன.

 "எமி ..."

கூடாரத்தின் வெளியே அம்மாவின் குரல் கேட்டது. கையில் கிடைத்த நெகிழிப் பைகளுக்குள் உடமைகளை அள்ளித்  திணித்துக்கொண்டிருந்த எமி வெளியே வந்தாள்.

"அங்கே இன்னும் பெர்மிஷன் கிடைக்கல. இன்னிக்கு ஷெல்டரில்தான் தங்கணும். எங்கயாவது ஃப்ரீ ஷெல்டர் இருக்கானு பார்த்துட்டு வரேன்" என்று மீண்டும் காருக்கு சென்ற அம்மாவைத் தொடர்ந்து சென்று "அம்மா நானும் வரேன்" என்று உற்சாகமானாள் எமி. 'ஷெல்டர்' என்ற வார்த்தையை அம்மாவின் வாயிலிருந்து கேட்டபொழுது அவள் மனம் ஆகாயத்தைத் தொட்டுத் திரும்பியிருந்தது.

"ஏன்மா ஃப்ரீ ஷெல்டர்? அங்க பாதுகாப்பு இருக்காது. போதை உட்கொள்பவர்கள், புத்தி இல்லாதவர்கள் என பலரும் இருப்பார்கள். தொந்தரவு இருக்கும். ப்ளீஸ்  பே பண்ற ஷெல்டருக்கு போலாம் மா" என்று அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தம்கொஞ்சினாள் எமி. மகள் சொல்வதை மனம் ஏற்றுக்கொண்டது. எண்பது, நூறு டாலர் செலவைக் குறைக்க எண்ணி வம்பில் விழுந்துவிடக் கூடாது என்று அவள் சிந்தனை எச்சரிக்கை மணி அடித்தது. ஷெல்டர்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும். காலையில் காலி செய்துவிடவேண்டும். முன்னதாகப் பெயர்ப் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்பதையெல்லாம் இத்தனை ஆண்டுகாலக் கூடார வாழ்க்கை அவர்களின் மனதில் பதியவைத்திருந்தது.

தாயும் மகளும் அலைந்து தேடி ஒரு ஷெல்டரைக் கண்டடைந்தனர். தாங்கள் வீடற்றவர்கள் என்ற ஆதாரங்களைக் காட்டி அவர்கள் இருவருக்கும் இரண்டு படுக்கைகள் உறுதிப்படுத்தித் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ததோடு எண்பது டாலர்களை முன்பணமாகச் செலுத்திவிட்டு உடமைகளை எடுத்துவரப் பூங்காவிற்கு விரைந்தனர்.

ஷெல்டரில் பனி வாடை இல்லாமல் கதகதப்பாக உறங்கலாம். அருகில் கழிப்பறை வசதி இருக்கும். இந்த ஒரு நாள் இரவை முடிந்தவரை நான்றாக உணர்ந்து மகிழ்ந்து கழிக்க எண்ணினாள் எமி. எண்பது டாலர்கள் செலவை எந்த வகையில் சமாளிப்பது என்ற மனக்கணக்கில் வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள் அம்மா. எதிரில் தென்படும் போக்குவரத்து காவல் வாகனங்களைக் காணும் வேளைகளில் மனம் படபடக்கும், காரணம் வண்டிக்கு இன்னும் இன்சூரன்ஸ் செலுத்தவில்லையே.

மாலை இருள் சூழ்ந்தது எமியின் உள்ளம் சிறகு விரித்த சிட்டுக்குருவியானது. எல்லா உடைமைகளையும் ஷெல்டருக்குள் எடுத்துச்சென்று வைத்துக்கொள்ள இயலாது என்பதால் படுக்கைக்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை காருக்குள் வைத்துவிட்டு அம்மாவும் எமியும் ஷெல்டருக்குள் நுழைந்து தங்களின் படுக்கைகளை நாடினர்.

கண்களை மூடிக் கடவுளை வணங்கினாள் அம்மா. "எமி ... உறங்கப் போகும் முன் நல்லா ப்ரே பண்ணிக்க ப்ளீஸ். நாளைக்கு அந்த இடத்துல டென்ட் போடுறதுக்கு பெர்மிஷன் கிடைச்சுடனும்" என்று எமியிடம் பிரார்த்தனை செய்யச்சொல்லித் தனது வேண்டுதலுக்கு பலம் சேர்க்க எண்ணினாள் அம்மா.

படுக்கைக்கு வந்த எமி இமைகளைப் பொறுத்தித் தியானிக்கத் தொடங்கினாள். "காட், அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு டென்ட் போட பெர்மிஷன் கிடைக்கக் கூடாது".

... மீ.மணிகண்டன்


வேண்டுதல் கதையை மேடையில் பேசிய திரு. மாலன் அவர்களுக்கு நன்றி.


பரிசளிப்பு மற்றும் புத்தக வெளியீடு:


















பிரபலமான இடுகைகள்