வெள்ளி, 16 மே, 2014

நேற்றால் இன்று ... M.Manikandan

நாளை என்றொரு
நம்பிக்கை இன்றேல்
நாளும் வாழ்கை
எவ்விதம் நகரும் ?
மாற்றம் இதுவென
மனதில் தோன்ற
மருந்தொன் றுண்டு
என்றே இருந்தால் !

உனக்கதைச் செய்வேன்
எனக்கிதைச் செய்வாய்
உத்திர வாதம்
கையெழு த்தாகும்
உன்கதை என்கதை
செய்தவ னிருக்க
ஊடேயொப் புதல்
செய்திட லாமோ ?

நடப்பது யாவும்
நடத்திய தாலே
நடப்பதை யுணர
முயன்றவ ராரோ
நாளை எதுவென்
றறிந்திடு வாரே
நாளும் நடப்பைப்
பார்த்தி ருப்பாரே !

by M.Manikandan

குரு வாழ்க

குரு வாழ்க - M.Manikandan

குருவாழ்க குருவாழ்க குருவாழ்கவே !
குணம்வாழ குலம்வாழ குருவாழ்கவே !

தருவாகத் தரவந்த திருவாழ்கவே !
தலந்தந்து தனந்தந்த திருவாழ்கவே !

கரஞ்சேர்த்துக் கரைசேர்த்துக் கலமாகினாய்
கடந்தீர்த்துக் கனியீந்துக் காப்பகினாய்

அரணான‌ அன்னைனின் அருளாசியால்
அடிபோற்றும் அடியேனை உடனாக்கியே

எப்போதும் உன்னோடு நானாகவே
எனதான எந்தைனின் எழில்வாழ்கவே !

வளம்வாழ்க நலம்வாழ்க குருவாழ்கவே
வணங்கித் தொழுவேன்னின் தாள்வாழ்கவே !

ஆக்கம்: மீ.மணிகண்டன்


வியாழன், 1 மே, 2014

ஏமாளிப் போராளி

நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர‌
நனைந்திடும் பணியாளி !

பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ர‌ருகுண்டு
பெரும்பே ர‌துபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.

பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர‌.

நால்வர் குடியுயர‌
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !

வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென‌
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !


by M.Manikandan

பிரபலமான இடுகைகள்