புதன், 28 ஆகஸ்ட், 2024

நகரத்தார் சமுதாய ஊர்கள்

நகரத்தார் 76 ஊர் பாடல்
எழுதியவர்: ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்

ஆத்தங்குடி, முத்துப்பட்டணம், கல்லலோடுமே,
அரியக்குடி, பலவாங்குடி, பாகனேரியும்,
ஆத்திக்காடு தெக்கூரும், கடியாபட்டியும்,
ஆறாவயலும், சிறாவயலும், கோனாபட்டுமே,
கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், மதகுப்பட்டியும்,
கோட்டையூரும், குழிபிறையும், வேகுபட்டியும்,
புதுவயலும், ராயவரம், பூலாங்குறிச்சி,
புகழ் சேர்க்கும் ஊர்களிவை சிறப்பேயாகும்.

கண்டனூரும், அழகாபுரி, ஆவினிப்பட்டி,
கருங்குளமும், மானகிரி, மிதிலைப்பட்டி,
கண்டர நல்மணிக்கம், உலகம்பட்டி,
கானாடுகாத்தானும், பனையப்பட்டி,
கண்டவராயன்பட்டி, தேனிபட்டி,
காளையார் நல்மங்கலமும், கல்லுப்பட்டி,
பொன்புதுப்பட்டியுடன், வலையபட்டி,
பிள்ளையார்பட்டி அது பெருமையாகும்,

நற்சாந்துபட்டியுடன், பள்ளத்தூரும்,
நாட்டரசங்கோட்டையொடு, தேவகோட்டை,
வெற்றியூரும், அமராவதிபுதூரும், ஒக்கூர்,
விரையாச்சிலை, சொக்கலிங்கம்புதூரும், செவ்வூர்,
நெற்குப்பை, மகிபாலம்பட்டியினோடு,
நேமத்தான்பட்டியுடன், செம்பனூரும்,
சிறுகூடற்பட்டி, வளர் கொப்பனாபட்டி,
சீர் புகழை சேர்க்கும் ஊர்கள் சிறப்பேயாகும்.

சோழபுரம், காரைக்குடி, அலவாக்கோட்டை,
சொக்கநாதபுரத்தோடு, வேந்தன்பட்டி,
கீழச்சீவற்பட்டியுடன், அழகாபுரியும்,
கீழப்பூங்குடி, குருவிக்கொண்டான்பட்டி,
அரண்மனை நல் சிறுவயலும், பட்டமங்கலம்,
அரிமழமும், ஜெயங்கொண்டபுரம், விராமதியோடு,
ராங்கியமும், மேலைச்சிவபுரியுமாக,
வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும்.

தானிச்சாவூரணியும், நாச்சியாபுரம்,
சக்கந்தி, உ.சிறுவயல், கோ.அழகாபுரி,
பனங்குடியும், நடராஜபுரமும் சேர்த்து
பார் புகழும் நகரத்தார் வாழும் ஊராமே.
இன்றைக்கு எழுபத்தியாறு ஆகும்
இவ்வினிய குலமின்னும் செழித்து வாழ்க
குன்றக்குடி முருகனவன் துணையிலிருப்பான்
கோவில்கண்ட நகரத்தார் குலமே வாழ்க
... ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்

Reference:

Song         https://ta.wikipedia.org/wiki/
                                                                                                நாட்டுக்கோட்டை_நகரத்தார் as on 8/28/2024
01. ஆத்தங்குடி ஆத்தங்குடி
02. முத்துப்பட்டணம் ஆ.முத்துப்பட்டணம்
03. கல்லலோடுமே கல்லல்
04. அரியக்குடி அரியக்குடி
05. பலவாங்குடி பலவான்குடி
06. பாகனேரியும் பாகனேரி
07. ஆத்திக்காடு தெக்கூரும் ஆ.தெக்கூர்
08. கடியாபட்டியும் கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
09. ஆறாவயலும் ஆறாவயல்(சண்முகநாதபுரம்)
10. சிறாவயலும் சிறாவயல்
11. கோனாபட்டுமே கோனாபட்டு
12. கொத்தமங்கலம்      கொத்தமங்கலம்
13. லெட்சுமிபுரம் கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
14. மதகுப்பட்டியும் மதகுப்பட்டி
15. கோட்டையூரும் கோட்டையூர்
16. குழிபிறையும் குழிபிறை
17. வேகுபட்டியும் வேகுப்பட்டி
18. புதுவயலும் புதுவயல்
19. ராயவரம் ராயவரம்
20. பூலாங்குறிச்சி பூலாங்குறிச்சி
21. கண்டனூரும் கண்டனூர்
22. அழகாபுரி பில்லமங்களம். அளகாபுரி
23. ஆவினிப்பட்டி ஆவினிப்பட்டி
24. கருங்குளமும் கருங்குளம்
25. மானகிரி மானகிரி
26. மிதிலைப்பட்டி மிதிலைப்பட்டி
27. கண்டர நல் மணிக்கம் கண்டரமாணிக்கம்
28. உலகம்பட்டி உலகம்பட்டி
29. கானாடுகாத்தானும் கானாடுகாத்தான்
30. பனையப்பட்டி பனையப்பட்டி
31. கண்டவராயன்பட்டி கண்டவராயன்பட்டி
32. தேனிப்பட்டி தேனிப்பட்டி
33. காளையார் நல் மங்கலமும் காளையார்மங்கலம்
34. கல்லுப்பட்டி கல்லுப்பட்டி
35. பொன்புதுப்பட்டியுடன் பொன்புதுப்பட்டி
36. வலையபட்டி வலையபட்டி
37. பிள்ளையார்பட்டி அது பெருமையாகும் பிள்ளையார்பட்டி
38. நற்சாந்துபட்டியுடன் நற்சாந்துபட்டி
39. பள்ளத்தூரும் பள்ளத்தூர்
40. நாட்டரசங்கோட்டையொடு நாட்டரசன்கோட்டை
41. தேவகோட்டை         தேவகோட்டை
42. வெற்றியூரும் வெற்றியூர்
43. அமராவதிபுதூரும் அமராவதிபுதூர்
44. ஒக்கூர் ஒக்கூர்
45. விரையாச்சிலை விரையாச்சிலை
46. சொக்கலிங்கம்புதூரும் சொக்கலிங்கம்புதூர்
47. செவ்வூர் செவ்வூர்
48. நெற்குப்பை நெற்குப்பை
49. மகிபாலம்பட்டியினோடு மகிபாலன்பட்டி
50. நேமத்தான்பட்டியுடன்                 நேமத்தான்பட்டி
51. செம்பனூரும் செம்பனூர்
52. சிறுகூடற்பட்டி சிறுகூடற்பட்டி
53. வளர் கொப்பனாபட்டி கொப்பனாபட்டி
54. சோழபுரம் சோழபுரம்
55. காரைக்குடி காரைக்குடி
56. அலவாக்கோட்டை அலவாக்கோட்டை
57. சொக்கநாதபுரத்தோடு க.சொக்கனாதபுரம்
58. வேந்தன்பட்டி வேந்தன்பட்டி
59. கீழச்சீவற்பட்டியுடன் கீழச்சிவல்பட்டி
60. அழகாபுரியும் கொல்லங்குடி. அழகாபுரி
61. கீழப்பூங்குடி கீழப்பூங்குடி
62. குருவிக்கொண்டான்பட்டி          குருவிக்கொண்டான்பட்டி
63. அரண்மனை நல் சிறுவயலும்         அரண்மனை சிறுவயல்
64. பட்டமங்கலம் பட்டமங்கலம்
65. அரிமழமும் அரிமழம்
       ஜெயங்கொண்டபுரம் (N/A)
66. விராமதியோடு விராமதி
67. ராங்கியமும் இராங்கியம்
68. மேலைச்சிவபுரியுமாக மேலச் சிவபுரி
69. வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும். வி. லட்சுமிபுரம்
70. தானிச்சாவூரணியும் தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)
71. நாச்சியாபுரம் நாச்சியாபுரம்
72. சக்கந்தி சக்கந்தி
73. உ.சிறுவயல் உ.சிறுவயல்
74. கோ.அழகாபுரி கோட்டையூர். அழகாபுரி
75. பனங்குடியும் பனங்குடி
76. நடராஜபுரமும் சேர்த்து நடராஜபுரம்




வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஆனந்தவிகடனில் எனது கவிதை ... மீ.மணிகண்டன்

ஆனந்தவிகடன் சொல்வனத்தில் எனது வரிகள்...
2024ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை.
ரூபாய் 250 சன்மானம் தந்த ஆனந்த விகடனுக்கு என் நன்றி!
மீ.மணிகண்டன்





ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

கோயில் மாலை ... மீ.மணிகண்டன்

கோயில் மாலை
சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன் 
பதிவான மின்னிதழ்: நாம் நகரத்தார் 
பதிவான தேதி: January 2024 & November 2024
















சனி, 3 ஆகஸ்ட், 2024

நீர் வீதி

 எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'நீர் வீதி'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018




செவ்வாய், 30 ஜூலை, 2024

நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர் ... மீ.மணிகண்டன்

நகைச்சுவை நாடகம் 

(குறிப்பு: சிறுகதைகள் தளத்தில் எனது 'பப்பு வீட்டில் ஹெட்மாஸ்டர்' நாடக வெற்றியைத் தொடர்ந்து நான் எழுதிய குறுநாடகம்)

நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்

Script by Mee.Manikandan

Date: Sep-13-2019

மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர்

அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை "சார் சுத்துது..."

"ஆமா நான்தான்..."

உதாவி ஆசிரியை ஹெட் மாஸ்டரை பார்த்துவிட்டு "சார் நான் பேன் சுத்துறத சொன்னேன்... பவர் வந்துடுச்சு..."

"நான் இந்த பூமி சுத்துறத சொன்னேன்..."

சற்று நேரத்தில் ஒரு புதிய நபர் ஹெட் மாஸ்டர் அலுவலகத்தில் நுழைய அனுமதி கேட்கிறார். "சார் மே ஐ கம் இன்?"

"ப்ளீஸ் கம் " எதிர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு... சார் என்ன விஷயமா வந்திருக்கீங்க.."

"என் பேரு மதன்.."

"நைஸ் நேம்.."

"என் பையன் பேரு வருண்.."

"வெரி நைஸ் நேம்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே.."

"என்ன கேட்டீங்க.."

"என்ன விஷயமா வந்திருக்கீங்க.."

"7th ஸ்டாண்டர்ட் க்கு ஒரு அட்மிஷன் வேணும்.."

"நீங்க இன்னும் 7th ஸ்டாண்டர்டே முடிக்கலையா.."

"ஏன் கேட்கறீங்க.."

"அட்மிஷன் கேட்டீங்களே.."

"என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் வேணும்.."

"ஓஹ்.. ஓகே ஓகே.. இதுக்கு முன்னாடி எங்க படிச்சான்.."

"எங்க படிச்சான்.."

"வாட் ...!"

"இல்ல எங்க ஊர்... சொந்த ஊர்ல படிச்சான்.."

"எதுக்கு இப்போ இங்க வந்தீங்க.."

"ஸ்கூல் அட்மிசனுக்கு.."

"ம்... இந்த ஊருக்கு இப்போ ஏன் வந்தீங்க.."

"அதுவா எனக்கு ட்ரான்ஸபெர்... சோ.."

"டிரான்ஸபெர் வாங்குறதுக்கு முன்னாடியே இங்க ஸ்கூல்ல இடம் இருக்கான்னு கேட்டுட்டு டிரான்ஸபெர் வாங்க மாட்டீங்களா.."

"ஏன் சார்.."

"பாருங்க நீங்க டிரான்ஸபெர் வாங்கிட்டீங்க ஆனா எங்க ஸ்கூல்ல இடம் கிடைக்கிறது குதிரைக் கொம்பு.."

"நீங்க மட்டும் இடம் கொடுத்துப் பாருங்க சார்.. என் பையன் உங்க ஸ்கூலுக்கே பேர் தேடித்தருவான்.."

"எங்க ஸ்கூலுக்கு ஏற்கனவே பேர் வச்சாச்சு..." உதவி ஆசிரியையை  பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர், "அம் ஐ ரைட் ?"

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே," அதெல்லாம் ஆரம்பத்திலேயே வச்சிட்டாங்க சார்.."

ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, "பாத்தீங்களா நான் சொல்லல.."

"நான் நல்ல பேர் தேடித்தருவான்னு சொன்னேன்.."

"இப்ப இருக்க பெரே நல்ல பேர்தான்.."

"சார் ரொம்ப விளையாட்டா பேசுறீங்க.. இப்ப மட்டும்... ஒரே ஒரு அட்மிஷன் கொடுங்க..."

"நம்ம ஸ்கூல்ல 7th அட்மிசனுக்கு seat இருக்கா.."

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் செக் பண்ணிவிட்டு... "இருக்கு சார்..  ஒண்ணே ஓண்ணு இருக்கு.. ஆனா ரொம்ப பின்னாடி சீட் ஸ்க்ரீன்  மறைக்கும்.." 

ஹெட் மாஸ்டர் தனக்குள் "எந்த நேரமும் சினிமா டிக்கெட் புக்கிங் பிரௌசிங்க்லயே இருக்க வேண்டியது.." பின்னர் கேட்டார் " செக் பார் 7th அட்மிஷன்"

பின்னர் ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, "சரி உங்களுக்கு எத்தனை அட்மிஷன் வேணும் ஒண்ணா ரெண்டா?"

"என்னோட ஒரே பையனுக்கு ஒரே ஒரு அட்மிஷன் வேணும்.."

"ஓ. கே"

"சரி... உங்க ஸ்கூல்ல என்னென்ன கோ-ஆக்டிவிட்டீஸ் இருக்கு.."

"சாரி நீங்க கோபப்படுற மாதிரி ஆக்டிவிட்டீஸ் எல்லாம் இங்க எதுவும் இல்ல.."

"நான் என்ன கேட்டேன்.."

"அதான் கோபப்படுற மாதிரி.... "

"கேம்ஸ் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் இப்படி என்னென்ன இருக்குன்னு கேட்டேன்.."

"அதுக்கு ஏன் கோபப்படுறீங்க.."

"சரி கோபப் படாமகேட்குறேன் சொல்லுங்க.."

"சரி கேளுங்க சொல்றேன்.."

"என்னென்ன அவுட் டோர் கேம்ஸ் இருக்கு.."

"சாரி நாங்க பிள்ளைங்க மேல ரொம்ப கவனமா இருப்போம்... ஸ்கூல் காம்பௌண்ட விட்டு வெளில எல்லாம் அனுப்பமாட்டோம்.."

"ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்காவது அனுப்புவீங்களா..."

"இப்ப... நீங்க காமெடி பண்றீங்க.."

வந்தவர் அமைதியாக முறைத்துப் பார்க்கிறார்

ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார் "வேற கேள்வி இருக்கா.."

"ரொம்ப தேங்க்ஸ்.."

"ஓகே ஆபீஸ் க்கு போங்க நான் கால் பண்ணி சொல்லிடறேன் நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு அட்மிஷன் வாங்கிக்கோங்க.."

"ரொம்ப தேங்க்ஸ்.." போன் எடுத்து டைப்செய்கிறார்.

"என்ன பண்றீங்க.."

"என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் கிடைச்சத FaceBook ஸ்டேட்டஸ் போட்டிட்டிருக்கேன்.."

"போடுங்க போடுங்க... நம்ம ஸ்கூலப் பத்தி நாலு பேருக்கு தெரியட்டும்.."

******

வந்தவரை அனுப்பிய பின்னர் ரௌண்ட்ஸ் கிளம்பினார் ஹெட் மாஸ்டர், சற்று நேரத்தில் எதிரில் அட்மிஷன் கேட்டு வந்தவர் எதிர்பட, "அட்மிஷன் வாங்கிட்டிங்களா.."

" இல்ல சார்.. "

"வொய்.."

"நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம்.."

"என்ன சொல்றீங்க.."

"ஆமா... அப்படித்தான் ஆபீசுல சொன்னாங்க.."

"மறுபடி சொல்லுங்க.."

"நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம் .."

"ஏனாம்.."

வந்தவர் கையில் இருக்கும் போனிலிருந்து facebook அலெர்ட் வருகிறது... எடுத்துக் பார்க்கிறார்... "உங்க பேச்சை நம்பி FaceBook ஸ்டேட்டஸ் போட்டேன்... ஊர்ல FaceBook பாக்காதவனெல்லாம் இன்னிக்கு பார்த்திருப்பான் போல.... 500 லைக்ஸ் தாண்டி போய்ட்டிருக்கு... ஏகப்பட்ட கமெண்ட்ஸ் க்ரீட்டிங்ஸ்... ம்...." எரிச்சலாக முறைக்கிறார்.."

"ஏன் அட்மிஷன் தரமாட்டாங்க.."

"ஏன்னா நீங்க இந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர் இல்லையாம்..."

எதிரில் மூச்சிரைக்க ஓடி வந்தார் ஹெட் மாஸ்டரின் அந்த ஆபீஸ் அசிஸ்டன்ட், "சார்... உங்கள எங்கெல்லாம் தேடுறது.. வழக்கம்போல மறந்துட்டு... நம்ம ஸ்கூலுக்கு போகாம.. வேற ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க...!

...மீ.மணிகண்டன் 

வெள்ளி, 28 ஜூன், 2024

3வது குறுஞ்செய்தி … சிறுகதை … மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு: 3வது குறுஞ்செய்தி
எழுதியவர்: மீ.மணிகண்டன் 

வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்தா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது. காரைச் செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது இனி அடுத்த குறுஞ்செய்தியை அனுப்பப்போகும்  மூன்றாவது நபர் தாமாகத்தான் இருக்கவேண்டும், ஒருவேளை மாறிப்போனால்... போனால்... ஆ... அதை அவனது மனம் ஏற்க வில்லை. விவேக்கின் அவசரம் புரியாமல் சாலை சிக்னல் சிவப்பைக் காட்டியது. அப்படி என்ன அந்த மூன்றாவது குறுஞ்செய்தியின் மகிமை? சிக்னல் பச்சை காட்டுவதற்குமுன் அந்த மகிமையை உங்களுக்கு கொஞ்சம் வேகமாகச் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். சற்றே இரண்டு நாட்களுக்கு முன் செல்வோம்.

புதன் கிழமை மாலை வழக்கம் போல் கிரண் அவனது அபார்ட்மெண்ட் ஜிம் மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அருகில் சைக்கிளிங் செய்துகொண்டிருந்தான் கௌஷிக். இருவரும் உடற்பயிற்சி முடித்துவிட்டு வியர்வை பூத்து அரும்பி பெருகி அருவியாய் ஓடிக்கொண்டிருந்த தங்களின் முகம் மற்றும் கைகளை துடைத்துக்கொண்டிருந்தனர். கௌஷிக்கின் கைப்பேசி ஒளிர்ந்தது. 

'கௌஷிக் உன் மொபைல் ரிங் ஆகுற மாதிரி தெரியுது, சைலண்ட்ல வச்சிருக்கியா?' என்று கிரண் கேட்க. 

'ஆமாடா ஆஃபிஸ்ல இருக்கும்போது சைலண்ட்ல வச்சது அப்படியே இருக்கு' என்று பதிலளித்துவிட்டு தொலைபேசித் தொடர்பை இயக்கினான் கௌஷிக். மறுமுனையில் அகிலன்.

'கௌஷிக் இந்த வாரம் புதுப்படம் வருதாம் டிக்கட் போட்டுறவா' 

'படம் வேணாம்டா ஏதாவது ரெஸ்டாரண்ட் போயிட்டு மனம்விட்டு பேசலாம், நான் கிரணையும், விவேக்கையும் வரச்சொல்லுறேன்... சினிமா டைம் வேஸ்ட்' பதிலளித்தான் கௌஷிக். பேசி முடித்துக் கைப்பேசியை நிறுத்தினான். 

கிரண் தொடர்ந்தான், 'யாருடா அகிலனா?'

'ஆமா தியேட்டருக்குப் போறதுல என்ன பொழுதுபோக்கு இருக்கு, நாலு பேரா சேர்ந்து போவோம் அப்பறம் மூணு மணிநேரம் அவன் காட்டுறத பாத்துட்டு படம் முடிஞ்சதும் ஒருத்தருக்கொருத்தர் பை சொல்லிட்டு கிளம்பிடுவோம். அதான் ரெஸ்டாரண்ட் போலாம்னு சொல்லி இருக்கேன்' 

'குட் ஐடியா' ஆமோதித்தான் கிரண்.

வியாழன் மதியம் அலுவலக முகப்பில் வழக்கம் போல் நால்வரும் சந்திக்கும் நேரம். 

'விவேக்... சும்மா பார்வர்ட் மெசேஜ் அனுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லுறது, அர்த்தமில்லாமால் டைம் வேஸ்ட் ஆகுது' அலுத்துக்கொண்டான் கிரண். 

'அப்படி இல்லடா நமக்கு உதவாட்டியும் யாருக்காவது உதவுமே அப்படிங்கற நல்ல எண்ணம் வேற ஒண்ணும் இல்ல' என்றான் விவேக். 

'கைக்காசை செலவு பண்ணி உதவி பண்ண யாராவது வராங்களா... எல்லாம் கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க தயாரா இருக்காங்க...' என்று உரையாடலில் கலந்துகொண்டான் கௌஷிக். 

அகிலன் ஆமோதித்து, ' ஆமா யாருக்கோ A+ ரத்தம் வேணும், யாரையோ பள்ளிக்கூடத்துல சேர்க்க பணம்வேணும்னு வர்ற மெசேஜ் எல்லாம் அப்படியே பார்வர்ட் பண்ண முடியுறவுங்களால தானே இறங்கி ரத்தம் கொடுக்கவோ பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டவோ செய்யுங்கன்னா செய்வாங்களா?'

கௌஷிக் தொடர்ந்தான், 'இப்பல்லாம் ஆக்கபூர்வமா சிந்திக்கிறதைவிட அர்த்தமில்லாம வாட்சாப் பேஸ்புக் ன்னு பொழுதை வீணாக்குறதுதான் அதிகமாகி இருக்கு'.

'ஏன் மத்தவுங்கள பேசிக்கிட்டு.. நாமளே எவ்வளவு நேரம் வீணடிக்கிறோம் வாட்சாப் ல', என்றான் கிரண்.

'சரிடா இவ்வளவு பேசுறீங்க, இன்னைல இருந்து நாம நாலு பேரும் வாட்சாப் பேஸ்புக் உபயோகப் படுத்துறதில்லன்னு முடிவெடுத்தா எத்தனை பேர் கடை பிடிப்பீங்க?', கேள்வியைத் தொடுத்தான் விவேக்.

'கேள்வி நல்லா இருக்கு. அனுபவத்துல கொஞ்சம் சிரமம்னு தோணுது', என்றான் அகிலன்.

'முடியாதுன்னு நினச்சா வள்ளுவர் இவ்வளவு குறள் எழுதியிருப்பாரா? ரைட் சகோதரர்கள் பறந்திருப்பாங்களா?', நம்பிக்கையூட்டினான் கௌஷிக்.

'கரெக்ட், இது சாதாரணம், நம்மால வாட்சாப் பேஸ்புக் உபயோகப் படுத்தாம இருக்க முடியும். நான் தயார்', என்றான் கிரண்.

அகிலனும், 'நானும் ஓ.கே. ஸ்டாப் பண்ணுறோம்', என்றான்.

'அப்படி சாதாரணமா எப்படி நிறுத்தறது, நமக்குள்ள வாட்சாப்போ பேஸ்புக் கையோ வச்சு ஒரு விளையாட்டு வச்சுக்குவோம். அதுதான் ஃபைனல் அதுக்கப்புறம் நாம அந்தப்பக்கமே எட்டிப்பாக்குறதில்ல', என்று புதிதாக ஒன்றைச்சொன்னான் கௌஷிக்.

'ஓகே என்ன விளையாட்டு', என்று விவேக் ஆவலுடன் கேட்க, ஒவ்வொருவரும் தங்களின் அதீத மூளையைக்கொண்டு சிந்திக்கத் துவங்கினர். 

'ஆக்க பூர்வமா சிந்திக்கிறோம்னு சொன்னோம். சிம்பிளா ஒரு கேம் நம்மால சிந்திக்க முடியல...ம்...', என்று யோசனையைத் தொடர்ந்தான் விவேக்.

'டேய்... இப்படி செஞ்சா எப்படி?', என்றான் அகிலன்.

'எப்புடி?', என்று நகைத்தான் கிரண்.

அகிலன் தொடர்ந்தான், 'அதாவது நாம நாளைக்கு ரெஸ்டாரண்ட் போறதா இருக்கோம்'

'ஆமா' ஆமோதித்தான் கௌஷிக்.

'நாலுபேரும் அசெம்பிள் ஆகுறதுதான் கேம்', என்றான் அகிலன்.

கிரண் முந்திக்கொண்டு, 'புரியும்படியா சொல்லேண்டா'

அகிலன் தொடர்ந்தான், 'அதாவது நாலு பேர்ல யாரெல்லாம் முன்னாடி ரெஸ்டாரண்ட் வாரங்களோ அவங்க வெற்றியாளர், கடைசியா வர்றவர் போட்டியில தோத்தவர்.'

'இதுக்கும் வாட்சாப் கும் என்னடா சம்பந்தம்?', கேள்வி எழுப்பினான் விவேக்.

'இருக்கே... வாட்சாப் தான் இங்க ஜட்ஜ், ரெஸ்டாரண்ட் ரீச் ஆகுறவுங்க தன்னை செல்ஃபி  எடுத்து வராத மத்தவங்களுக்கு அனுப்பனும். மூணு மெசேஜ் வரைக்கும் வெற்றியாளர். கடைசியா வர்றவர் யாருக்கும் மெசேஜ் அனுப்ப முடியாதே! ஆகா அவர் தோத்தவர்', என்று விளையாட்டை விளக்கினான் அகிலன்.

'நல்லாருக்கே... அக்ரீட்', என்றான் ஆனந்தமாக கௌஷிக்.

'நானும் ஏத்துக்கறேன்', என்றான் விவேக்.

'எனக்கும் ஓ.கே.', ஆமோதித்தான் கிரண்.

இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே விவேக் ஏன் தான் அந்த மூணாவது மெசேஜ் அனுப்ப அவசரப் பட்டு காரைப் பறக்க விடுறான்னு. ஆமா கிரணும் கௌஷிக்கும் மெசேஜ் அனுப்பிட்டாங்க இப்போ அகிலனை முந்துவதுதான் விவேக்கின் முயற்சி.

சிக்னல் பச்சை காட்டியது பிரேக்கில் இருந்து காலை எடுத்த நம்ம விவேக் சட்டென மீண்டும் பிரேக்கில் பலமாக அழுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் சாலையைக் கடந்து ஓடிய நாயும் நாயைப் பிடித்துக்கொண்டு அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலை தடுமாறி சாலையின் நடுவே தனது காருக்கு எதிரே விழுந்த நாயின் எஜமானரும்தான். கடிகாரத்தைப் பார்த்தான் விவேக். என்ன செய்வது… புரியவில்லை. காரை நிப்பாட்டி கதவைத்திறந்து இறங்கினான். முன்னம் சென்று கீழே விழுந்தவர் எழுவதற்கு உதவினான். நன்றியுள்ள நாயும் தன் எஜமானரின் அருகில் நின்று வாலைக் குழைத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக நாயையும் எஜமானரையும் வழியனுப்பிவிட்டு காருக்குள் ஏறினான். சிக்னல் மீண்டும் சிவப்பு.

சற்று நேரத்திற்குப் பின்.

ரெஸ்டாரண்ட் வாசல். தனது மொபைல் போன் எடுத்துப் பார்த்தான் விவேக் மூன்றாவது குறுஞ்செய்தி இன்னும் வரவில்லை. அப்பாடா என்று மனம் நிம்மதியோடு இருந்தாலும் போட்டி நிபந்தனை செல்ஃபி எடுத்து அனுப்பும்வரை நீள்கிறதல்லவா. அவசரமாக கார் கதவைத் திறந்து இறங்கினான். காரை பார்த்தும் பார்க்காமலும் ரிமோட்டில் லாக் செய்துவிட்டு லாக் ஆன சத்தத்தை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு ரெஸ்டாரண்டினுள் விரைந்தான். அங்கே அவன் எதிர்பார்க்காத நிகழ்வு. மீண்டும் தனது மொபைல் போனை எடுத்துப் பார்த்தான் நிச்சயமாக மூன்றாவது குறுஞ்செய்தி வரவில்லை. ஆனால் ரெஸ்டாரண்டில் அவன் பார்த்த நிகழ்வு, கிரண் கௌஷிக்கோடு அகிலனும் அந்த மேசையில் அமர்ந்திருந்தான். ஏன் அகிலன் குறுஞ்செய்தி அனுப்பவில்லை…?!

'டேய் நம்ம ஸ்பான்சர் வந்துட்டார்டா', என்றான் கௌஷிக். 

'வாங்க ஸ்பான்சர், ஆர்டர் பண்ணிடுவோமா', என்றான் நகைத்துக்கொண்டே கிரண். 

அகிலனும் கௌஷிக் மற்றும் கிரணோடு சேர்ந்துகொள்ள, மூவரும் ஆரவாரமாகச் சிரித்தார்கள்.

இவற்றைக் காதில் வாங்காமல் கண்டும் கொள்ளாமல் தன்னை செல்ஃபி எடுத்து அதை மற்ற மூவருக்கும் அனுப்பி முடித்தான் விவேக்.

இங்க ஒரு சின்ன பிளாஷ்பாக்.

அகிலன் வீட்டிலிருந்து தனது காரை கிளப்புகையில் தனது கைப்பேசியைப் பார்த்தான் வெண்திரையாக வெறும்திரையாக இருப்பது கண்டு குழப்பம் கொண்டான். பின்னர் கைப்பேசி பேட்டரி ரீசார்ஜ் செய்யாதது நினைவில் வந்தது. இனி நேரம் இல்லை காரில் ரீசார்ஜ் செய்யலாம் என்றால் சார்ஜர் அவசரத்திற்கு டாஷ்போர்டில் கிடைக்கவில்லை. பரவாயில்லை இதில் நேரம் செலவிடாமல் ரெஸ்டாரண்ட்க்கு செல்வோம் என்று புறப்பட்டு விட்டான். ரெஸ்டாரண்டை மூன்றாவது நபராக அகிலன் வந்தடைந்தாலும் தனது கைப்பேசியில் பேட்டரி பவர் இல்லாத காரணத்தால் செல்ஃபி எடுத்து அனுப்ப முடியவில்லை.

பிளாஷ்பாக் நிறைவடைந்தது.

இப்போது தங்களது கைப்பேசியைப் பார்த்த கௌஷிக்கும் கிரணும் குழப்பத்தில் விவேக்கைக் கண்டனர். காரணம் நான்காவதாக வந்துவிட்டு ஏன் செல்ஃபி அனுப்புகிறான் விவேக் என்ற குழப்பம்.

ரெஸ்டாரண்டிற்கு எதார்த்தமாக வந்திருந்த அவர்களில் மூத்த வயதுடைய நண்பர் நால்வரையும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டு பின்னர் நால்வரின் விளையாட்டையும் கேட்டறிந்தார்.

நண்பர் சொன்னார், 'நண்பர்களே நல்ல விளையாட்டு. உண்மையிலே நன்மையும் கூட. ஆக இன்னிலிருந்து நீங்க யாரும் வாட்சாப் பேஸ்புக் உபயோகிக்கப் போறதில்லை?ஆம் ஐ ரைட்?'

விவேக் பதிலளித்தான், 'எஸ் அங்கிள்.' தொடர்ந்து, 'அதோட எங்க விளையாட்டுக்கு ஒரு நல்ல தீர்ப்பும் சொல்லிடுங்க இவங்க எல்லாம் நான்தான் இன்னிக்கு ஃபுட் ஸ்பான்சர் பண்ணனும்னு சொல்லுறாங்க.' என்று அப்பாவியாகச் சொன்னான்.

நண்பர் தொடர்ந்தார், 'நோ…நோ... உங்கள ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சிருக்கேன். நான்தான் உங்க ஸ்பான்சர் இன்னிக்கு.'

'அதெப்படி… அப்படின்னா எங்க கேம் நிறைவடையாதே', என்ற கௌஷிக்கிற்கு பதிலளித்தார் நண்பர், 'விவேக் ஸ்பான்சர் செஞ்சாலும் உங்க கேம் கம்ப்ளீட் ஆகாது'

'அதெப்படி', புருவத்தை உயர்த்தினான் கிரண்.

நண்பர் விளக்கினார், 'உங்க கேம் நிபந்தனை என்ன? மூன்றாவது மெசேஜ் கொடுக்குறவுங்க வரை வெற்றியாளர்தானே. விவேக் தான் மூன்றாவது மெசேஜ் கொடுத்துட்டாரே?!'

ஐவரின் ஆரவார மகிழ்ச்சி ரெஸ்டாரண்ட் முழுவதையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

...மீ.மணிகண்டன்

குறிப்பு: வம்சி புக்ஸ் வெளியிட்ட எனது 'அத்தனையும் பச்சை நிறம்' சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்ற கதை.

ஞாயிறு, 19 மே, 2024

அடுக்கு மல்லிகள் ......மீ.மணிகண்டன்

அடுக்கு மல்லிகள்

அடுக்கு மல்லிகள் 
புன்னகைக்கின்றன 
அவசரமின்றி 
வெண்ணிலவு நகர்ந்து 
ஓடை குளம் ஏரி எங்கும் 
தன்னைப் பிரதி 
எடுத்துக்கொண்டிருக்கிறது 
அன்னங்கள் பருகப் பருகத் 
தீராநிலவு ஆட்டத்தைத் 
தக்கவைத்துக் கொள்கிறது 
இருளென்று சொன்னவர்களைத் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
வெள்ளை ராத்திரியில். 

…மணிமீ 
Apr-26-2024

பிரபலமான இடுகைகள்