திங்கள், 7 ஜூலை, 2025

FeTNA 2025 நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா  இவ்வாண்டு (2025) பேரவை விழா 38 நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை இது.

போட்டி அமைப்பினர் கொடுத்திருந்த தலைப்பு 'செம்புலப் பெயல் நீர் போல'. அன்பை மையப்படுத்தி கொடுக்கப்பட்ட தலைப்பாகக் கருதி அந்தத் தலைப்பிற்கு நான் எழுதிய கதை. போட்டிக்குப் பின்னராக இக்கதைக்கு எனது தலைப்பு 'நரம்புகளில் உறங்கும் ஓசை'.

FeTNA நிகழ்வு நாள்கள்: From 3/Jul/2025 till 05/Jul/2025

இடம்: Raleigh, NC, USA

குறிப்பு: FeTNA என்பது  வட அமெரிக்காவின் 73 தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு.




நரம்புகளில் உறங்கும் ஓசை … சிறுகதை … மீ.மணிகண்டன்

டெக்சாஸ் மாகாணத்தின் மையப் பகுதியிலிருந்து தெற்கே ஏறக்குறைய 200 மைல்கள் தொலைவில் ஒரு குட்டிக் கிராமம், கான்கேன். சின்னச்சின்ன மலைகள், நடைப்பயிற்சிப் பாதைகள், காடுகள், ஏரிகள், ஓடைகள் என இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ள, பரபரப்பிடமிருந்து தன்னைப் பதுக்கிக்கொண்டிருக்கும் கிராமம். உழைத்துக் களைத்து தன்னை உயர்பிறப்பு என அடையாளப்படுத்திக்கொள்ளும் மானுடம் ஓய்வு தேடி ஒதுங்கும் ஒரு கிராமம்.

நீரோடைகளிலும் காடு மலைகளிலும் உல்லாசம் தேடியலைந்து ஒதுங்கும் மாந்தர்களுக்கு உணவளிக்கும் ஒரு சாலையோர விடுதி அது. பாரம்பரிய முறையில் உணவு தயாரிப்பது அவ்வுணவகத்தின் சிறப்பு. வாரந்தோறும் ஞாயிறுகளில் ஜாக் அங்கே தவறாமல் தன்னை ஆஜர் படுத்திக்கொள்வான். தனது கிடார் இசையில் விடுதிக்கு வரும் விருந்தினர்களை மகிழ்விப்பான். மற்ற நாள்களில் என்ன செய்வான்? கிடார் இசையை மனித செவிகளுக்குக் கடத்திக்கொண்டிருக்கும் அந்த ஒலிபெருக்கியின் முன்னிருக்கும் சின்னப் பதாகை சொல்லும். 'உங்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் மேலும் சுவை சேர்க்க அழையுங்கள் இந்த ஜாக்கை... தொலைபேசி...' என்ற வாசகங்களோடு அவனது தொலைபேசி இலக்கத்தை கலைநயத்தோடு வரைந்திருப்பான். அந்தப் பதாகை வாரத்தின் ஏழு நாள்களும் அங்கே நிலையாக இருக்கும். கிடார் இசைப்பதைத்தவிர அவனுக்கு வேறு தொழில் இல்லை. இல்லங்களில் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிக்கு இவ்வளவு தொகை என்று அவன் நிர்ணயிக்கவில்லை அவர்கள் கொடுப்பதைப் பெறுவான். அவனது ஞாயிறுகளின் வருகைக்கு அந்த விடுதியில் என்ன கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் விடுதியில் ஞாயிறுகளில் மீட்டும் இசைக்கு அவன் பணம் வாங்குவதில்லை. அங்கே அவன் விரும்புவதும் வேண்டுவதும் மெலிண்டாவின் அன்பும், அவள் கரங்களால் ஒரு வேளை உணவும். இரவில் விடுதி சாத்திப்புறப்படும் முன் ஊழியர்களோடு உணவு மேசையில் அமர்வான். மெலிண்டாவைத் தேடித் தனக்கு வேண்டிய உணவைக் கேட்பான். மேசைக்கு மெலிண்டா அதைக்கொண்டுவந்து வைத்துவிட்டுப்போவாள். அவள் பரிமாறிய உணவு ஜாக்கிற்கு அடுத்து வரப்போகும் ஞாயிறு வரை அதாவது ஒருவாரத்திற்கான மனப் பசியை ஆற்றும்.

மெலிண்டா அந்த உணவகத்தில் கடந்த சில மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறாள். மற்ற நாள்களில் காலை மாலை என்று அவளது பணி நேரம் மாறுபட்டாலும் ஞாயிறுகளில் மட்டும் அவளுக்கு மாலை நேரப்பணி என்பது அங்கே அவளுக்கான நிபந்தனை. ஞாயிறுகளில் விருந்தினர் வருகை அதிகமிருப்பதால் டிப்ஸ் அதிகம் வரும் மெலிண்டாவின் பொருளாதாரத்திற்கு அது பலம் சேர்க்கும் என்பதால் அவளும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டாள். சிவந்த முகம், இளங்கரு விழிகள், வாள்போல் வளைத்துச் செம்மைப்படுத்திய புருவங்கள்,  தோள்களுக்குக் கீழே இடுப்புக்கு மேலே என அளவாக வெட்டிய பிரவுன் நிறக் கேசம், மாலைச்சூரியன் நிறத்தில் கன்னங்கள், தூரத்தில் தெரியும் கப்பல் முனைபோல் நாசி, மொத்தத்தில் வசீகர தேகம் எனத் தோற்றத்தில் பொலிவுடன் மிளிரும் மெலிண்டா ஞாயிறு மாலைகளில் விருந்தினர் வருகையை அதிகரிப்பாள் என்பது விடுதியின் கணக்கு.

சாலையோர வெளித்தோற்றமாக இருக்கும் அகண்ட அடுப்பில் மதியம் தொடங்கி இரவுவரை நெருப்பு கனன்றுகொண்டிருக்கும். அடுப்பைச்சுற்றி இரண்டடி இடைவெளியில் சீராக அடுக்கப்பட்ட விறகுகள் அணைபோலக் காட்சி தரும். அடுப்பில் எறிந்துதீர்த்த கரிகள் அகற்றப்பட்டு புது விறகுகளை உடனடியாகத் தீயில் செருக அது தோதாக இருக்கும். பெரிய தோசைக்கல் போல நான்கடி சதுரத்தில் கறுப்புக் கல் அடுப்பின் மீது ஆவியை காற்றில் கலந்து காற்றின் வெப்பத்தை அதிகரித்துக்கொண்டிருக்கும், விருந்தினர்களின் வேண்டுதலுக்கேற்ப கறிவகைகள் அந்தக் கல்லில் அங்குமிங்குமாக வெந்துகொண்டுமிருக்கும். அடுப்பு அமைப்பின் பகுதிக்கு இடப்புறம் விடுதிக்கான அகலப் பாதை. பாதையின் மறுபுறம் ஜாக்கின் சிறிய இசைப்பரிவாரமும் ஒலிபெருக்கியும் விடுதியை மகிழ்விக்கும். ஜாக் அமர்ந்து கிடார் இசைக்கும் இடத்திற்கு எதிர்புறம் விடுதியின் கவுண்டர் பகுதி, அங்கே நின்று மெலிண்டா விருந்தினரின் உணவு ஆர்டர் எடுப்பதும், விருந்தினர்கள் பணம் செலுத்துவதும் நடைபெறும். அவனது நேர்பார்வைக்கு மெலிண்டா தெரியும் வண்ணம் அவனது இருக்கையை அமைத்துக்கொள்வான் ஜாக்.

கூரை வேய்ந்த சாலையோர உணவகத்திற்கு ஜாக்கின் நிஜத்தோற்றம் மிகவும் பொருத்தமாக இருந்தது. குழி விழுந்த கன்னங்களை மறைக்க அவன் கனமாகத் தாடி வளர்த்திருந்தான். தாடி மயிர்கள் கருப்பை இழந்து பத்துப்பதினைந்தாண்டுகள் கடந்திருந்தன. கருப்பு விழிகளில் பார்வை இன்னும் கூறாகத் தொடர்ந்தது. நீண்ட கூந்தலை எண்ணையிட்டுச் சீவி அள்ளி உச்சந்தலையில் கொண்டையிட்டிருப்பான். வெள்ளையும் பிரவுனுமாக தலை முடியும் தாடியும், மெலிந்த உடலுமாக ஒரு சாமியாரைப்போலவே தோன்றுவான் ஜாக். கனத்த மேல் கோட்டும், ஜீன்சும் அவனது தேக மெலிவை ரகசியமாக்கியது.

இருபதாண்டுகளுக்கு முன் அவன் மனைவி அவனை விட்டுப்பிரிந்து போனாள். திருமணமாகி ஐந்தாண்டுகள் பொறுத்திருந்தாள், கிடார் மட்டுமே வாழ்க்கை என்றிருந்த ஜாக்கின் வருமானம் அவளின் தேவைகளை நிறைவேற்றவில்லை. ஒரு குழைந்தை பிறந்தும் கூட ஜாக் மாறவில்லை. இனி அவனை நம்புவது பாலைவனத்தில் மழையை எதிர்நோக்குவது என்று அவனிடமிருந்து விடைபெற ஒரு நாள் முடிவெடுத்தாள். எளிய வாழ்க்கையின் இனிமையை எடுத்துச்சொன்னான் ஜாக். அது வாழ்க்கையல்ல வெறும் நாள்கடத்தல் என்று விவாதித்தாள் அவள். ஜாக்கை நம்பியது போதுமென நடையைக் கட்டிய மனைவியைப் பிரிந்த நாள் முதல் இன்னும் தனிமரமாகத் தனது வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கிறான் ஜாக்.

வழக்கம்போல ஞாயிறொன்று வந்தது. தனது குட்டிப் பரிவாரங்களைத் தயார் படுத்தி ஒலி பெருக்கியைக் கையில் பிடித்தான். "அன்பான உள்ளங்களே உங்களுக்கு இந்த ஞாயிறு மாலை மகிழ்ச்சியான மாலையாகட்டும் இந்த ஜாக்கின் கிடார் மழையில்", என்ற உற்சாக அறிவிப்போடு கிடாரின் நரம்புகளுக்கு தனது விரல்களால் உயிரூட்டினான். வழக்கம்போல கவுண்டரில் பார்வையைச் செலுத்தினான். அங்கே மெலிண்டா இல்லை வேறொருத்தி நின்றாள். ஒரு வேளை இன்று தாமதமாக வருவாள் என்று கிடாரில் கவனம் செலுத்தினான். விடுதி தன் இயல்புகள் மாறாமல் இயங்கிக்கொண்டிருந்தது. விறகுகள் தங்களை அர்ப்பணித்து விருந்தினருக்கு சுவையூட்டிக்கொண்டிருந்தன. ஜாக்கின் பார்வைத் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இன்னும் மெலிண்டாவைக் காணவில்லை. இரவு உணவு வேளையும் வந்தது. அலைகளைத்தாண்டிய ஆழ்கடல் போல விடுதியின் ஆரவாரக் குரல்கள் படிப்படியாக குறைந்தது. தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ஜாக். விடுதி நிர்வாகி வேகமாக ஜாக்கிடம் வந்தான்.

"ஹே ஜாக், சாப்பிட வா..." என்று ஜாக்கை உணவுண்ண அழைத்தான்.

"வேண்டாம்"

"வா... உனக்கு வேண்டிய உணவை எப்போதும் போல உண்ணலாம்"

"இன்று மெலிண்டா வரவில்லையென்று எண்ணுகிறேன்"

"ம்... புரிகிறது... வெகுநாள்களாக எனக்கு ஒரு சந்தேகம்... நீ எப்போதும் மெலிண்டாவை எதிர்பார்கிறாய்... அவளிடமே உனக்குத் தேவையான உணவைக் கேட்கிறாய்... நீ மெலிண்டாவை விரும்புகிறாயா?"

நிர்வாகியிடம் இந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை ஜாக். "நிறுத்து ..." என்ற ஜாக்கின் உரத்த குரலை எதிர்பார்க்கவில்லை நிர்வாகி.

"ஏன் கோபப்படுகிறாய்... இன்றுமட்டுமல்ல இனி எப்போதும் மெலிண்டா இங்கு வரமாட்டாள். அவள் வேறு ஊருக்கு இடம்மாறப்போவதாகச் சொல்லி சென்றவாரத்தோடு கணக்கை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாள்", கான்கேனின் நீரோடைகள் இப்போது ஜாக்கின் கண்களில் ஓடியது. மனதுக்குள் யாரோ அந்தப் பெரிய தோசைக்கல்லைக்கொண்டு அழுத்தினார்கள். செம்மண்ணில் பெய்த மழைநீர் போன்று இரண்டறக் கலந்த அன்பு ஜாக் மெலிண்டா மீது கொண்ட அன்பு.

"ஜாக்... அழுகிறாயா? நான் எதுவும் தவறாகச் சொல்லிவிட்டேனா?" என்று பதட்டமடைந்தான் நிர்வாகி.

கன்னங்களில் வழிந்த நீரைத்துடைக்கத்தோன்றவில்லை ஜாக்கிற்கு, "ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் பார்வையில் பல அர்த்தங்கள் இருக்கிறது, அதை உன்னைப்போன்றவர்கள் உணரத் தவறுகிறீர்கள். கணவன் மனைவியைக் காண்பது, சகோதரன் சகோதரியைக் காண்பது, மகன் தாயைக் காண்பது, தந்தை மகளைக் காண்பது என அத்தனையும் இருவிழிப் பார்வையில்தான் நிகழ்கின்றது. ஆனால் ஒவ்வொன்றிலும் வித்தியாசம் இருக்கிறது. மெலிண்டா என் மகள்... இருபதாண்டுகளுக்கு முன் அவளைவிட்டு நான் பிரிந்தபோது அவளுக்கு இரண்டு வயது. 'அப்பா' என்று அவள் என்னை அழைக்கும் பாக்கியத்தை நான் பெறவில்லை. சில மாதங்களுக்கு முன் என் மகள் இங்கே வேலைக்குச் சேர்ந்தாள் எனக் கேள்விப்பட்டு ஞாயிறுகள் தோறும் இங்கே வரத்தொடங்கினேன். நான் அவள் தந்தை என்பதை காட்டிக்கொள்ள விரும்பவில்லை. என் மனைவி என்னைப்பற்றி என்ன சொல்லி வளர்த்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் அவளின் தாய் சொன்னதே அவளுக்கு உண்மையாக இருக்கட்டும் அதை நான் மடைமாற்ற விரும்பவில்லை. அவளின் கரங்களால் கிடைக்கும் உணவில் நான் என் கடந்துபோன வாழ்க்கையை அனுபவித்துக்கிடந்தேன். இனி நானும் புறப்படுகிறேன்", என்று கூறித் தனது கிடாரையும் பதாகையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ஜாக். ஒலி பெருக்கி அமைதியாய் நின்றது.

... மீ.மணிகண்டன் 



பிரபலமான இடுகைகள்