சனி, 29 மார்ச், 2014

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ - M.Manikandan

எங்கே எங்கே எங்களின் நாட்கள்
எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

விடிந்திடும் காலையின் கீற்று வெளிச்சம்
வடிந்துகொண் டிருக்கும் இரவின் மிச்சம்
குளிர்ந்தனல் காற்றை சுவாசம் சுகிக்கும்
தெளிந்தநீ ரோடையில் தேகம் குளிக்கும்

ஆன்றோர் அளந்த நல் அறிவுரை கொண்டு
சான்றோர் உவந்த நல் தெளிவுரை கொண்டு
பெற்றோர் வாழ்த்திட ஆசான் உரைத்திட‌
கற்றுவளர் ந்த பொன் நாட்களும் வருமோ

"வா"வென ந‌ண்பர்கள் வழினின் றழைத்திட
வாடாமுக மாய்க் கை கோர்த்தி ணைந்திட
கலைபல பயின்றதும் கவலைம றந்ததும்
வலைத்தள தலைமுறை வழங்கிடத் தகுமோ

பெண்மான் ஒருத்தியை கனவில் வடித்ததும்
கண்மாய்க் கரைகளில் கவிதை புனைந்ததும்
நீண்டு நிறைந்த பனித்துளி நாட்களை
மீண்டும் கணினிக் காலம் தருமோ

மலர்ந்த நன் நாட்களின் ஞாபகக் கூட்டம்
உலர்ந்த இன் நாட்களில் விழிகளைப் பனிக்கும்
"மானுடம்" என்பதும் மாறிடு மென்றால்
ஊனுடல்வ ளர்க்குமிம் மாற்றமும் மெதற்கோ ?

ஆக்கம்:  மீ.மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக