ஞாயிறு, 24 ஜூலை, 2022

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்

 வணக்கம் அன்பு நண்பர்களே,

மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறிவிடவேண்டும் என்று எண்ணுவது மானுட இயல்பு. எண்ணங்களில் எது உகந்தது எது மாறானது என்று வரையறுக்கும் சக்தி ஒன்று உண்டெனில் அதுவும் மானுடமாகவே அமைந்துவிடுவது உலக நடப்பு. இயல்பையும் நடப்பையும், உறவையும் வயதையும் கொண்டு நான் புனைந்த சிறுகதை 'அத்தனையும் பச்சை நிறம்'. படித்துப்பார்த்துத் தங்களின் கருத்துகளைத் தளத்தில் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

...மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... சிறுகதை ... மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்
கடற்கரை அலைகள் காவியாவின் கொலுசணிந்த பாதங்களை நனைத்து நனைத்து மகிழ்ந்து களித்துக்கொண்டிருந்தன. காவியாவின் மனதில் எப்பொழுதும் தோன்றும் எண்ணம் மறுபடி நிழலாடியது. இந்தக் கடற்கரைக்கு வரும்நேரமெல்லாம் அந்த நினைப்பு தொடர்ந்துவிடும். என்று அந்த ஆசை நிறைவேறுமோ? என்கிற ஏக்கம் சற்றே தலைதூக்கும். 'இந்த அப்பாவிடம் எத்தனை முறை கேட்டுவிட்டேன் எப்பொழுது கேட்டாலும் ஏதாவது ஒரு பதில், மிகவும் சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில்களைத் தந்துவிடுகிறார், என்னாலும் அதற்கு மேல் பேச முடியவில்லை. அப்படி என்ன கேட்டுவிட்டேன், அதோ தெரியும் கப்பலில் ஏறிப் பயணிக்க வேண்டும் அவ்வளவுதான் இது ஒரு பெரிய சவாலா? என்ன... கரையிலிருந்து கப்பல் வரை நடந்துபோக முடியாது... தெரியும், அதற்குத்தான் கரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுமரங்கள் இருக்கின்றனவே, அதில் ஒன்றைச் செலுத்தி கப்பலை எட்டிவிட்டால் பின்னர் கப்பலில் ஏறிவிடலாம் பிறகென்ன ஆனந்தப் பயணம்தான். என்ன எனக்கு மட்டும் பலமிருந்தால் நானே அந்தக் கட்டுமரத்தில் ஒன்றைத்தள்ளிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவேன், எனக்கு அத்தனை பலம் இல்லாத காரணத்தால்தான் அப்பாவை நாடுகிறேன், அவரும் இன்று வேண்டாம், நாளை என்பார், அடுத்த முறை கேட்டால் பயணச்சீட்டு வாங்க வேண்டுமென்பார், மறுமுறை... கப்பல் தரை தட்டிவிட்டதாம் என்பார் இப்படிப் பல காரணங்கள் சொல்லிக்கொண்டே வருகிறார். இந்த பதில்களை அவர் முன்னமே தயார் செய்து வைத்திருப்பாரோ? ', என்று தனக்குள் கூடிவந்த தன் தந்தைமீதான கோபத்தை அணைக்கும் விதமாகக் கடல் நீரைத் தன் இரு கரங்களாலும் அள்ளிப் பருகினாள், உப்பு நாவைத்தாண்டி தொண்டையைத்தொட, க்கு... க்கு... என்று இருமிக்கொண்டு த்து... த்து... எனக் குடித்ததுபோக மீதமிருந்த தண்ணீரை வாயிலிருந்து துப்பினாள். 'ப்ரியா..' என்று அப்பாவின் கோபம் கூடிய குரல் கேட்டதும் சுதாரித்த காவியா, 'ம்... முடிந்தது... இனிப்போகாமல் இருந்தால் ப்ரியா பாவம்', என்று தனக்குள் எண்ணிக்கொண்டு கடல் அலைகளை விட்டுப் பின்வாங்கிப் ப்ரியாவை நாடினாள் காவியா.  

கடற்கரை மணலில் சட்... சட்... சட்... என்று குளம்படிச்சத்தம் கிளப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிய குதிரைகளைப் பார்த்த காவியாவிற்கு குதிரைச்சவாரி செய்ய ஆசை கிளம்பியது, கேட்டால் மட்டும் உடன் ஆசை நிறைவேறிவிடவா போகிறது இருந்தாலும் கேட்டுவைப்போம் என்று தன் தந்தையின் இடது கரத்தைப் பற்றினாள் காவியா, தனது வலது கரத்தை கடலை நோக்கி நீட்டிப் ப்ரியாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த அப்பா காவியாவை கவனித்தார், காவியாவின் பார்வை அங்கிருந்த குதிரையொன்றின் மீது குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு 'என்ன குதிரைச் சவாரி செய்யணுமா?' என்றார், 'அட அப்பா கனிவுடன் கேட்பதைப்பார்த்தால் இன்று நமக்கு குதிரைச்சவாரி ஆசை நிறைவேறிவிடும் போலிருக்கிறதே', என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதே வேளை அப்பா அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பற்றிக்கொண்டு குதிரைக்கு அருகில் நின்ற நபரை அணுகி அவரிடம் சில வார்த்தைகள் பேச அடுத்த சில நொடிகளில் காவியா  குதிரைமீதமர்ந்திருந்தாள், குதிரையின் மேனியைத் தொட்டுப்பார்த்து அதன் பட்டுத்தன்மையை உணர்ந்தபோது விழிகளை உயர்த்தி அதிசயித்தாள், வலுவான தேகமாக இருப்பதை உணர்ந்து வியப்படைந்தாள். 'இங்கிருந்து பார்க்கும்பொழுது உலகம் கொஞ்சம் தாழ்ந்துவிட்டது', என்று தனக்குள் எண்ணி நகைத்துக்கொண்ட காவியா, குதிரையோட்டத்தில் ஏற்பட்ட உடற்குலுங்கலை ஏற்கவும் இயலாமல் விலக்கவும் இயலாமல் வம்படியாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். இதுவரை அவள் உடல் உணர்ந்திராத உணர்வு. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்வழியே வந்துவிடுமோ என்று ஒரு அச்சம் விழிதிறந்தது. கரையில் நின்று குதிரையைக் கண்டபொழுது அவள் எதிர்பார்த்தது வேறு, சவாரியில் அவள் அனுபவிப்பது வேறு, இருந்தாலும் வந்த அச்சம் ஒரு சில நொடிகளில் விடைபெற்று ஆனந்தமாக மாறியது. குதிரையும், கடற்கரையிலிருந்து அந்த யாரோ ஒருவரின் சிலைவரை சென்று திரும்பிவந்து ஒரு வட்டமாகத் தன் பயணத்தை நிறைவேற்றியது.

குதிரையிடமிருந்து விடைபெற்றதும், காவியா தன் மனதில் எழுந்த ஆசையை அப்பாவிடம் கேட்டுப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்தில், 'அப்பா நாமும் ஒரு குதிரை வாங்கலாமா?', 'ம்..ம்..' என்று  சுரத்தில்லாமல் பதிலளித்ததிலிருந்தே காவியா புரிந்துகொண்டாள் இது நடக்காது என்று, 'அப்படி என்ன கடினமாக இருந்துவிடப்போகிறது, கோழி வளர்ப்பது போல நாய் வளர்ப்பது போல குதிரையும் ஒரு பிராணி, இப்படித்தான் அன்றொருநாள் நாய் வளர்ப்பது எப்படி என்று ப்ரியா கம்பியூட்டரில் தேடிப்பார்த்து அறிந்துகொண்டாள், அதேபோல் குதிரை வளர்ப்பையும் கம்பியூட்டரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நம் வீட்டில் பெரிய தோட்டம் இருக்கிறது குதிரை ஓடவும் உலாவவும் நம் வீட்டுத்தோட்டம் நல்ல வசதியானது மேலும் நானும் அவ்வப்பொழுது விரும்பும் வேளைகளில் நம் தோட்டதிலியேயே குதிரைச்சவாரி செய்யலாம்'. என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே மீண்டும் அப்பாவை நோக்கி 'சரியாப்பா?', இந்த முறை அப்பாவின் 'ம்..ம்..' சற்று முரட்டுத்தனமாக இருந்தது கூடவே 'ப்ரியா..' என்ற கூப்பாடு. இது நடக்காது என்று புரிந்துகொண்ட காவியா, 'ப்ரியா மட்டும் நாய் கேட்கலாம் ஆனால் நான் குதிரை கேட்கக்கூடாது, ப்ரியாவிற்கொரு நீதி, எனக்கொரு நீதி, புரியாத அப்பாவிற்கு மகளாய்ப்பிறந்து இன்னும் என்னென்ன சந்திக்கக் காத்திருக்கிறேனோ?' என்று சத்தமில்லாமல் விசனப்பட்டுக்கொண்டாள்.

சட்டென கண்விழித்த காவியாவிற்குத் தான் ஒரு நிலையில்லாத இடத்தில் உறங்கிக்கொண்டிருப்பது புலப்பட்டது நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றில் இருக்கும் தான் கண்விழித்த திசையில் இருள்... வெள்ளை வட்டம்... 'அது என்ன? ஓ நிலா... அப்படியானால் இருட்டிவிட்டதா... அந்தச் சின்னச் சதுர இடைவெளியில் நிலா தெரிகிறதே அப்படியானால் நகர்ந்துகொண்டிருப்பது என்ன? அடடா விமானமா? நான் கேட்டதுபோல அப்பா என்னை விமானத்தில் அழைத்து வருகிறாரா? இது தெரியாமல் உறங்கிவிட்டேனா?' இப்படிப் பல கேள்விகள் மண்ணிலிருந்து விண்ணை நோக்கிப் புறப்பட்ட ராக்கெட்டுகளாய் மனதிலிருந்து புறப்பட்டது , 'போகட்டும் மீதிப் பயணத்தை விழிப்புடன் அனுபவிக்கவேண்டும் என்று எழுந்து அமர்ந்த பொழுது அந்தச் சின்னச் சதுர இடைவெளி சற்றே பெரிதாகியது, நிலா வெளிச்சத்தில் மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது... ஆகாயத்தில் எப்படி மரம்?! அடடா இது விமானம் அல்ல ரயில், மீண்டும் ரயிலில் பயணமா?', புறப்பட்ட ராக்கெட்டுகள் செயலிழந்து கடலை நாடியதுபோல அத்தனை கேள்விகளும் பதிலின்றிக் கரைந்தன. 'நான் ஏற்கனவே இந்த அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் அடுத்த முறை விமானப் பயணம்தான் போகவேண்டுமென்று ஆனால் சமர்த்தாக நான் உறங்கும்வேளையில் என்னை ரயிலில் அழைத்துவந்துவிட்டார்... இருக்கட்டும், இப்போதைக்கு இந்தப் பயணத்தை அனுபவிப்போம்' என்று நன்றாக எழுந்து உட்கார்ந்தாள் காவியா, ஆயா வீட்டுச் சாமியறையில் ஒரு படமிருக்கும் அதில் ஒருவர் தாடிவைத்துக்கொண்டு தலை முடியைக் கொண்டைபோட்டுக்கொண்டு இப்படித்தான் அமர்ந்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டிருப்பார் அதேபோல் அமர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள் ப்ரியா.  'உறங்குபவளுக்கு எதற்கு சன்னலோரம்?' என்ற கேள்வியெழ, ப்ரியாவைத் தட்டியெழுப்பி நகரச்சொல்லிவிட்டுச் சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு நகரும் மரங்களை நிலவொளியில் எண்ணத் துவங்கினாள் காவியா. இரவு நேரம் காற்று சிலுசிலுவென்றிருக்குமே கைகளை வெளியே நீட்டலாமென்று முனைந்த காவியாவின் கரங்களை சன்னலின் கண்ணாடிக் கதவு தடுத்தது. சன்னல் மூடியிருக்கிறது, தான் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவேன் என்றே கதவை அடைத்துவிட்டார்கள் என்ற குட்டிக்கோபத்தின் ஊடே பார்வையை மட்டும் வெளியே செலுத்தினாள். மரங்கள் கடந்துபோனாலும் காவியாவின் எண்ணத்தில் ஏன் விமானத்தில் பயணிக்கவில்லை? என்ற கவலையும் கேள்வியும் அலைமோதியது, அவள் விமானப் பயணம் வேண்டுமென்று சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒருமுறை இப்படியான ரயில் பயணத்தில் இருக்கையின் இடைவெளிகளில் தூசி படிந்திருப்பதைக் கண்டாள், அவற்றைச் சுத்தம் செய்து தூய்மைப்படுத்த எண்ணியவள் அருந்துவதற்காக வைத்திருந்த போத்தல் நீரைச் சிறிது சிறிதாகத் தூசி தெரிந்த இடைவெளிகளில் ஊற்ற அந்த நீர் இருக்கையையும் நனைத்தது, தண்ணீரை ஊற்றிய பின்னர் தன் கரங்களால் இங்குமங்கும் தடவிச் சுத்தம் செய்யத்துவங்கினாள், அதுவரை எங்கோ சென்றிருந்த அப்பா திரும்பிவந்து காவியாவின் செய்கையைப்பார்த்து 'ப்ரியா...' என்று குரலெழுப்பினார், சன்னல் வழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா அதிர்ந்துபோனாள், ஏன்... அருகாமையில் உடன் அமர்ந்து பயணித்த சக பயணிகளும்கூட ஒரு கணம் ஸ்தம்பித்து அப்பாவைத் திரும்பிப்பார்த்தனர். அப்பாவிடம் பெற்ற பாட்டைப் ப்ரியா, காவியா மீது எதிரொலித்தாள். இப்படிச்சிக்கல் வந்துவிட்டது என்று நவீனிடம் பேசிக்கொண்டிருந்தபோது நவீன்தான் சொல்லியிருந்தான் விமானத்தில் பயணித்தால் இதுபேன்ற தொல்லைகள் நேராது காரணம் விமானத்தை மிகவும் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று. நவீனின் மாமாவின் வீடு சிங்கப்பூரில் இருந்தது விடுமுறைக்கு நவீன் அவர்கள் மாமா வீட்டிற்குப் போய் வருவான் அதனால்தான் நவீனுக்கு விமானம் பற்றித்தெரிந்திருந்தது. இப்படியான நினைவுகளில் அடடா மரங்களை எண்ண மறந்துவிட்டோமே என்று மரங்களைத்தேடினாள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் தென்படவில்லை ரயில் பாலத்தின்மீது பயணித்துக்கொண்டிருந்தது பாலத்தின் ஓரங்களைப் பார்க்க சற்று பயமாக இருந்ததால் திரும்பிப் ப்ரியாவைப் பார்த்தாள் ஆயா வீட்டு சாமியறைப் படம் மீண்டும் நினைவில் வந்தது. வெளியே நிசப்தமான இரவு தடக் தடக்கென தாலாட்டும் ரயிலோசை... பிரியாவின் மடிமீது சாய்ந்துகொண்டு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள் காவியா.

மூடிய விழித்திரைக்குள் பச்சை வண்ணப் பட்டாம்பூச்சிகள் கண்ணாமூச்சி விளையாடின. ஒரு பட்டாம்பூச்சி தன் முதுகில் நட்சத்திரம் ஒன்றைச் சுமந்து மின்னியவண்ணம் பறந்துகொண்டிருந்தது. அதனைக் கண்ட மற்ற பட்டாம்பூச்சிகள் உனக்கெப்படி நட்சத்திரம் கிடைத்ததெனக் கேட்க நட்சத்திரம் சுமந்த பட்டாம்பூச்சி கர்வத்துடன் பதிலளித்தது தனக்கு நிலா என்றொரு நண்பனிருக்கிறான் அவன்தான் கொடுத்தானென்று. இப்போது மற்ற பட்டாம்பூச்சிகள் தங்களுக்கும் நிலவை நண்பனாக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தன. இந்த நாடகங்கள் நிறைவேறும்பொழுது காவியா கண்விழித்து அத்தனை பச்சைப் பட்டாம்பூச்சிகளையும் காணவில்லையே என்று தேடப்போகிறாள், அப்போதும் அப்பா, 'ப்ரியா..' என்று கோபமாகக் குரலெழுப்பப் போகிறார், அப்பாவி அம்மா ப்ரியாவும், அந்தக் கோபத்தை, மகள் காவியாவின் மீது எதிரொலிக்கப் போகிறாள்…!

தரைதட்டிய கப்பலைத் தனியொரு ஆளாகப் பயணிக்க வைப்பதும், ஒன்றரை சென்ட் கொல்லைப்புற நிலப்பரப்பில் குதிரையொன்றை அனல்பறக்க ஓடவிடுவதும், மகிழுந்து, பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் மட்டுமே கடந்து பயணிக்க வாய்ப்புள்ள தூரங்களை விமானத்தில் பயணித்துக் கடப்பதும், கனவில் தோன்றும் பட்டாம்பூச்சிகளைக் கண் முன் தேடிப் பிடிப்பதும், முப்பத்திரெண்டு வயது அப்பாக்களுக்கு வேண்டுமானால் சாத்தியமற்றுப் போகலாம், ஆனால் மூன்று வயது காவியாக்களுக்கு அவைகள் என்றும் சாத்தியமே!

... மீ.மணிகண்டன்

03/31/2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக