ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு: மிதக்கும் பயணங்கள்

சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன் 

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

நெல்சனின் நடப்பு கான்ட்ராக்ட் நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது விரைவில் தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை நேரில் பார்க்கப் போகும் ஆவலில் இருந்தான் நெல்சன். இந்த கான்ட்ராக்ட் நிறைவடையும் பொழுது கப்பல் யான்பு துறைமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும், கான்ட்ராக்ட் தேதி முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகே கப்பல் யான்பு துறைமுகத்தைத் தொட்டிருக்கும். பொதுவாக கரையில் இறங்கும்பொழுது இரண்டொரு நாட்கள் அந்தத் துறைமுகநகரை சுற்றி பார்த்துவிட்டு பின் பயணத்தை தொடர்வதோ அல்லது ஊருக்குத் திரும்புவதோ வழக்கம் ஆனால் யான்பு துறைமுகத்தில் அப்படி இறங்கி உலா வரமுடியாது. இஸ்லாமியர்களின் முக்கிய நகரமான மதீனா இருக்கும் காரணத்தால் இசுலாமியர்கள் அல்லாதவர்கள் அங்கே வெளியில் செல்ல அனுமதி கிடையாது. கப்பலை விட்டு இறங்கக்கூட கெடுபிடி அதிகம். முறையான அனுமதிப் படிவங்கள் பெற்ற மேலதிகாரி பரிசோதகர்கள் மட்டுமே கப்பலைவிட்டு இறங்க முடியும். நெல்சனுக்கு கான்ட்ராக்ட் முடியும் காரணத்தால் அவன் திரும்ப அவனது ஊர் செல்லவேண்டுமாதலால் அவனுக்கு அனுமதி வாங்கியிருந்தார்கள். கப்பலில் இருந்து இறங்கியதும் நேரே விமான நிலையம்தான் செல்ல முடியும் வேறு எங்கும் அடி எடுத்து வைக்க முடியாது.

இந்தக் கப்பலில் பாட்ரிக் தான் நெல்சனுக்கு மிக நெருங்கிய நட்பு. இலங்கை துறைமுகத்தைக் கடக்கும் பொழுது ஒருநாள் நெல்சனுக்கு காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது கப்பலில் இருந்த மருத்துவர் ஒன்றிரண்டு மருந்துகளைக் கொடுத்து நல்ல ஓய்வெடுக்கச்சொன்னார். அந்த இரண்டு நாட்கள் முழு ஓய்வில் பாட்ரிக் நெல்சனை கவனித்துக் கொண்ட விதம் நெல்சனுக்கு அவனது தாயை ஞாபகப் படுத்தியிருந்தது. மேல்தளத்தில் வேலைக்கு செல்லும்பொழுது கூட வெந்நீரை பிளாஸ்கில் வைத்துவிட்டு "நீ ரொம்ப எழுந்திரிக்காதே நான் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை டெக்கில் உன்னை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச்செல்வான் பாட்ரிக். அடுத்ததாக நெல்சனின் நெருக்கம் அந்த இரண்டு புறாக்கள், ஆம் ஒரு மாலை வேளை ஹாங்காங் துறைமுகத்திடம் விடைபெற்றுக்கொண்டு கப்பல் நகர்ந்த பொழுது சிறகடித்து வந்து இரண்டு புறாக்கள் நெல்சனின் டெக்கின் ஜன்னல் அருகே அமர்ந்தது, ஒன்று இளம் சாம்பல் நிறம் மற்றொன்று வெண்மை. நெல்சனுக்கு இவைகளைப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இருட்டும் வரை அந்தப் புறாக்கள் அந்த ஜன்னலை விட்டு மீண்டும் பறக்கவே இல்லை, இது மேலும் ஆச்சர்யத்தைத்தூண்டியது நெல்சனுக்கு. காலையில் பார்த்தான் அங்கேயே நின்றன. அன்று அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்க எண்ணி கப்பலில் இருந்த மரச் சட்டங்களைக் கொண்டு அவைகளுக்குக் கூடு செய்தான். தினமும் உணவு தண்ணீர் கொடுத்து புறாக்களை உபசரித்து வந்தான். வேலை நேரம் போக புறாக்களுடன் பேசி மகிழ்வது நெல்சனின் வினோதப் பொழுதுபோக்கு.    

இன்று பாட்ரிக்குக்குப் பிறந்தநாள், கப்பல் சிப்பந்தி கேக் செய்திருந்தார், எல்லோருடைய பிறந்தநாளையும் கேக் வெட்டிக் கொண்டாடுவது கப்பலில் வழக்கம். கப்பல் சிப்பந்திகள் அதிகாரிகள் என எல்லோரும் கூடியிருக்க கேக் வெட்டி முதல் துண்டை நெல்சனுக்கு ஊட்டினான் பாட்ரிக். நெல்சனும் பாட்ரிக்குக்கு ஊட்டினான். "பிரெண்ட்ஸ் உங்களுக்கெல்லாம் ஒரு ஹாப்பி நியூஸ்," என்று நெல்சனின் திருமண நிச்சயத்தை சொல்ல வாயெடுத்தான் பாட்ரிக், வெட்கத்தில் சொல்லாதே என்று கையசைத்தான் நெல்சன், ஓர விழியில் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் பாட்ரிக். நம்ம பிரென்ட் நெல்சன் இந்த கான்ட்ராக்ட் முடிஞ்சதும் ஊருக்குப் பொய் கல்யாணம் செஞ்சுக்கப் போறார், அவங்க வீட்டில பெண் பார்த்து நிச்சயம் செஞ்சுட்டாங்க" என்றதும் குழுமியிருந்த அனைவரும் ஹூய் என்ற ஆரவாரத்தோடு கைகள் தட்டி ஒவ்வொருவரும் நெல்சனுக்கு வாழ்த்துச்சொல்ல ஆரம்பித்தார்கள். "ஐ ஆம் ஹாப்பி டு கெட் யுவர் க்ரீட்டிங்ஸ், எல்லோருக்கும் நன்றி, மறந்துடாதீங்க இன்னிக்கு பாட்ரிக்குக்குத்தான் பிறந்தநாள் சோ இந்த செலிப்ரேஷன் பாட்ரிக்குக்குத்தான்" என்று ஞாபகப் படுத்தினான் நெல்சன். 

நடுக்கக்கடலில் பிறந்தநாள் கொண்டாடி ஆனந்தமாய் பெற்றோருடன் போனில் உரையாடி நல்ல பொழுதாக இருந்ததை சற்றே மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தான் நெல்சன். புறாக்களுக்கு உணவளித்துவிட்டு இந்த இரவில் சற்றுநேரம் இயற்கைக் காற்றுவாங்கிவிட்டு வரலாம் என்று மேல்தளத்திற்கு வந்தான். அங்கே ஏற்கனவே பாட்ரிக் கையில் தேனீர் குவளையோடு நின்றிருந்தான். "என்னடா தூக்கம் வரலியா" என்றான் பாட்ரிக். "மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எல்லாமே நிறைவா இருக்க மாதிரி ஒரு பீலிங், தூக்கம் வரல" என்றான் நெல்சன். "ம்... வுட்பீ ஞாபகம்னு சொல்லு.." என்றான் பாட்ரிக் சிரித்துக்கொண்டே. "ஏ... எனக்கு மறந்தா கூட நீ ஞாபகப் படுத்திவிடுவாய்" என்றான் பதிலுக்கு சிரித்துக்கொண்டே நெல்சன். "நெல்சன், உன்கிட்ட ஒண்ணு சொல்லணும், இன்னிக்கு பார்ட்டில எல்லோரும் ஹாப்பியா இருந்தாங்க ஆனா நீ கவனிச்சியா வாலரி மட்டும் கொயட்டா இருந்தா, அவ முகம்கூட கொஞ்சம் டல்லா இருந்துச்சு," 

"யெஸ், கவனிச்சேன், ஆனா எனக்கு அத கேட்கணும்னு தோணல,"

"என்னவா  இருக்கும்?"

"அவகிட்டையே கேட்கலாமே பாட்ரிக்", என்றான் நெல்சன்.

"நோ, அவ எதார்த்தமா இருந்து நாம தப்பா புரிஞ்சுக்கிட்டா?" என்று கேள்வியெழுப்பினான் பாட்ரிக்.

"இல்ல, அவ ஏதோ நினைப்புல இருந்ததை என்னால பீல் பண்ண முடிஞ்சுது," என்றான் அழுத்தமாக நெல்சன். "சரி விடியட்டும் நானே அவகிட்ட கேட்கறேன்" என்றுவிட்டு நெல்சன் தொடர்ந்தான், "நான் கிச்சனுக்கு போய் ஒரு டீ போட்டு எடுத்துட்டு வறேன்", "நானும் வறேன் "என்று நெல்சனைத் தொடர்ந்தான் பாட்ரிக்.

டெக்கினுள் நல்ல உறக்கத்தில் இருந்தான் நெல்சன் கதவு திறக்கும் ஓசை கேட்டு சட்டென விழித்தான், பட படவென சிறகடித்தன புறாக்கள், பதட்டமாக உள்ளே வந்த பாட்ரிக், "ஹேய் நீ எதுவும் வாலரிகிட்ட பேசல இல்ல?" என்று கேட்டான், "நைட் நாம பேசிட்டிருந்தோம் அப்பறம் நான் கீழ வந்து தூங்கிட்டேன்," என்ற நெல்சன் தொடர்ந்தான், "நான் அவகிட்ட எதுவும் பேசல," 

"நல்லது, காலைல ப்ரேக்பாஸ்ட சாப்பிட கிச்சன் போனேன், வாலரி கண்ணை தொடைச்சிகிட்டே உள்ள இருந்து வெளியே வந்தா, அவ போனதுக்கப்பறம் நானும் செஃப் கிட்ட ஏன் வாலரி சோகமா இருக்காண்ணு கேட்டேன், செஃப் சொன்னத கெட்டப்பறம் எனக்கு இந்த கப்பல் லைப் மேல ஒரே கோபம்."

"என்னடா சொல்ற"

"பின்ன என்னடா, உனக்கே தெரியும் வாலரியோட மேரேஜ் ஒரு லவ் மேரேஜ், இப்போ என்னடான்னா அவ ஹஸ்பெண்ட் அவளுக்கு டிவோர்ஸ் அனுப்பியிருக்கானாம்"

இதைக் கேட்டு அதிர்ந்த நெல்சன், "ஏண்டா" என்றான் முழுவதும் தூக்கம் கலைந்தவனாக.

"இவ பாக்குற கப்பல் டூட்டி பிடிக்கலையாம்"

"இதெல்லாம் முன்னாடி தெரியாதா?"

"அது என்னவோ, ஆனா பாவம்டா வாலரி, அவளோட பேமிலி சிச்சுவேஷன் கொஞ்சம் எனக்கு தெரியும், பட் வாட் டு டூ... நத்திங் இஸ் இன் அவர் ஹான்ட்"

நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னும் ஒரு மாதம் இருக்கிறது நெல்சனின் இந்த ஒப்பந்தம் நிறைவடைய. இன்று ஞாயிற்றுக் கிழமை பிரியாணி ஸ்பெஷல் டே. வாலரி சைவம் என்பதால் கப்பலில் அசைவ உணவு சமைக்கும் நாட்களில் அவள் தனியே தனக்கென சைவ உணவு தயார் செய்து கொள்வாள். அன்று ப்ளம் கேக் கெய்திருந்தாள் முட்டை சேர்க்காமல். அங்கே ஒரு மேசையில் பாட்ரிக் மற்றும் நெல்சன் அமர்ந்து பிரியாணி சுவைத்துக்கொண்டிருந்தனர். அருகில் தனது ப்ளம் கேக்குடன் வந்து அமர்ந்தாள் வாலரி. "கைஸ் சண்டே என்ன ஸ்பெஷல்" என்றாள், "வேற என்ன சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போன் செய்யணும், ஒரு படம் பார்க்கணும், தண்ணியில மிதந்துகிட்டு வேற என்ன பண்ண முடியும் சொல்லு" என்றான் பாட்ரிக்.

"ட்ரு," என்றவள் நெல்சனிடம்,  "உன்னோட டவ்ஸ் எப்படி இருக்காங்க, கண்டு பிடிச்சுட்டியா ரெண்டு பெரும் ஜோடியா இல்ல பிரெண்ட்ஸா..?"

சிரித்தோக்கொண்டான் நெல்சன், "அவங்க யாரோ தெரியாது, ஆனா ரெண்டுபேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப அதிகம்." என்றவன் தொடர்ந்தான், "ஆமா நீ பிறந்தித்திலிருந்தே சைவம் தான் சாப்பிடுவியா வாலரி?,"  

"ஐ கான்ட் சே, பட் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் வெஜ் தான் ஏனோ எனக்கு மீட் டேஸ்ட் ஒத்து வரல" 

"பட், இப்ப நாங்க சாப்பிடுறோம் நீ எங்க பக்கத்துல உக்காந்திருக்க... இஸ் தட் ஓகே ?", கேட்டான் பாட்ரிக்.

"ஐ யூஸ்ட் டு இட்" என்று பதிலளித்தாள் வாலரி 

"ஸோ மூக்கு ஏத்துக்கும் நாக்கு தான் ஏத்துக்காது, ஆம் ஐ ரைட் வாலரி," சிரித்துக்கொண்டான் நெல்சன்.

"ஹே.. யு நோ.. ப்ளம் கேக் இஸ் ஒன் ஆப் மை பாவோரைட்"

"அதான் மத்தவங்களுக்கு கொடுக்காம நீயே கொஞ்சமா செஞ்சுக்கிட்டியா," கண்ணடித்தான் நெல்சன்.

"ஹேய்... நீங்க பிரியாணி டேஸ்ட் பண்ணும்போது இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம், டு யு வாண்ட் டு டேஸ்ட் இட்?" எடுத்து நெல்சனிடம் நீட்டினாள் வாலரி 

"ஹேய்... ஜஸ்ட் கிட்டிங்...." என்று மறுத்தான் நெல்சன்.

"யு நோ... ப்ளம் கேக் செய்ய கத்துக்கிட்டதே என் ஹஸ்பண்ட்காகத்தான். அவருக்கு பிடிக்கும்னு சொன்னார் அவருக்காக செய்ய ஆரம்பிச்சு இப்போ இது எனக்கு பிடிச்சுப் போச்சு", நெல்சன் பாட்ரிக் இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் சற்றே மௌனத்தில் கடத்தினர்.

"ஹே... என்ஜாய் தி சண்டே கைஸ்", என்று விடை பெற்றுக்கொண்டு மேசைவிட்டு நகர்ந்தாள் வாலரி. 

யான்பு துறைமுகத்தின் எல்லையை அடைந்ததும் கப்பல் நங்கூரமிட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. "பாஆஆ.....ம்.." கப்பலின் சங்கொலி யான்பு துறைமுகத்திற்கு சமிக்ஞையானது. துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினார் தலைமை மாலுமி, தகவலில் நெல்சனுக்கான அனுமதி, விமான நிலையம் வரை தனி வாகனம் மற்றும் விமான டிக்கட் போன்ற விபரங்களை மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார்.

இந்த இரவு மட்டும்தான் நெல்சனுக்கு இந்தக் கப்பல் பயணம் நாளை கப்பல் துறைமுகத்தை அடைந்தபின்னர் அவனுக்கு வேறு வாழ்க்கை காத்திருக்கிறது. இரவு உணவிற்குப் பின் கப்பலில் பயணித்து வந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் ஒவ்வொருவரையும் சென்று பார்த்து விடை பெற்று வந்தான் நெல்சன். கேன்டீன் கடந்து வரும்பொழுது அங்கே வாலரி மற்றும் பாட்ரிக் இருவரும் நிற்பதைக் கண்டான். அருகில் சென்றான் நெல்சன், பேசுவதற்கு வார்த்தை வரவில்லை, பாட்ரிக்கின் கண்கள் பளபளப்பதைக் கண்டான் நெல்சன், வாலரியும் அதை கவனித்தாள், பாட்ரிக்கின் கையை இருக்கமாகப் பிடித்து, "ஹே... டேக் இட் ஈஸி..., இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீயும் ஒரு இடத்தில் இறங்கப்போற அதற்கு அப்பறம் எனக்கும் ஒரு இடம், நம்ம ஜாப் இப்படித்தானே... டேக் இட் ஈஸி.." என்று பாட்ரிக்கை சமாதானம் செய்தாள் வாலரி. அதுவரை அடைத்து வைத்திருந்த மனக்குமுறலை பாட்ரிக்கின் தோளில் சாய்ந்து கண்ணீராக கொட்டித்தீர்த்தான் நெல்சன். இதை பாட்ரிக் எதிர்பார்த்திருந்தவன்போல நெல்சனை அணைத்து ஏற்றுக்கொண்டான். 

நெல்சன் தங்கியிருந்த டெக்கில் தனது உடமைகளை சரிசெய்து கொண்டு இருந்தான், பாட்ரிக் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தான். "டேய் இந்த புறாக்களை என்ன செய்யலாம்," கேட்டான் பாட்ரிக்.

"புரியுது, நான் கூட கூட்டிக்கிட்டு போக முடியாது, யாரையும் பார்த்துக்கச்சொல்லவும் முடியாது, சோ காலைல அவங்க ரெண்டுபேரையும் ஜன்னல்கிட்ட வைக்கப்போறேன் அவங்க இருக்க நினைக்கிறாங்களா இல்ல பறக்க நினைக்கிறாங்களான்னு அவங்களே முடிவு செய்யட்டும், யான்பு தரையிலே நடக்குறதுக்கு எனக்குத்தான் அனுமதி இல்ல ஆனா யான்பு வானத்துல பறக்குறதுக்கு அந்தப் புறாக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு, அவங்களுக்கு மத அடையாளம் கிடையாது.

இன்று அந்த சூரியன் கொஞ்சம் நிதானமாகத்தான் எழுந்தான், கப்பலை விட்டு நெல்சன் பிரிவதில் அவனுக்குக்கூட சற்று வருத்தம் போல. சொன்னதுபோல புறாக்களை ஜன்னலின் அருகே வைத்தான். காரணம் கேட்காமல் படபடவென சிறகடித்து நெல்சனுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த இளம் சாம்பல் நிறப் புறாவும் வெண்புறாவும் யான்பு வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. அவைகள் கண்களுக்கு எட்டும் வரையில் அந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நெல்சன்.

தலைமை அதிகாரியிடம் விடை பெற்று கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கப்பலிலிருந்து பிரியாவிடை பெற்றான் நெல்சன்.

கால மாற்றத்தில் பறவைகளின் இருப்பிடம் மாறும், கப்பல் பயணமும் வாலரி பாட்ரிக் நெல்சன்களுக்கு ஒரு கால மாற்றம்.

வாலரி, பாட்ரிக், நெல்சன்களின் பயணங்களுக்கு துறைமுகங்கள் கிடையாது இந்தப் பயணங்கள் மிதந்துகொண்டே இருக்கும்.

... மீ.மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக