ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

 நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

நிலவோடு ஒரு நேர்காணல்
… மீ.மணிகண்டன்
பள்ளிக்கூட மணியடித்ததும் ஹோய் என்ற சத்தத்துடன் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகள் விட்டு ஓடி வெளியேறினர், மாலை வீடு திரும்பும் மகிழ்ச்சி. மலைச்சாமியும் செல்வமும் எப்பொழுதும்போல பேசிக்கொண்டே நடந்தனர், மலைச்சாமி செல்வத்திடம் கேட்டான், "டேய் தமிழ் சார் எதோ புத்தக விழா பற்றி சொன்னாரே அது எப்போ?"

"அது ஜூன் மாசத்துல டா, நமக்கு அப்ப பள்ளிக்கூடம் லீவு விட்டுருவாங்க"

"அது சென்னையில தானே"

"ஆமாடா... அது புத்தகக் கண்காட்சி, அங்க நிறைய பேர் எழுதின புத்தகங்கள் வச்சிருப்பாங்க, நிறை புத்தகங்கள் வெளியிடுவாங்க"

"நானும் போய் பாக்கணும்டா" மனதினுள் தன்னுடைய 'நிலவோடு ஒரு நேர்காணல்' புத்தகமும் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டான் மலைச்சாமி.

தன்னுடைய வீடு வந்ததும், "சரிடா நாளைக்கு பார்க்கலாம்", என்று செல்வத்திடம் விடை பெற்று தன் வீட்டிற்குள் நுழைந்தான் மலைச்சாமி. அம்மா சமையலறையில் மூட்டிய அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தாள் அடுப்பிற்கு நேர் மேலே ஓலை கீத்து இடைவெளியில் மாலைச் சூரியன் தன் கதிர்களை அனுப்பி சமைக்கும் பாத்திரத்தின் மீது சதிராடிக் கொண்டிருந்தான். சுற்றி நான்கு புறமும் மண்சுவர் நடுவில் ஒரு கைப்பிடி உயர அரைச்சுவர் தடுப்பு, எது சமையலறை எது தங்கும் அரை என்று வகுத்துக்காட்ட ஓலைகள் வேய்ந்த அந்த வீட்டில்தான் மலைச்சாமியும் அவனது தாயாரும் மலைச்சாமிக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்ந்து வருகிறார்கள்.

"டேய், கால் கை கழுவிட்டு கொஞ்சம் வந்து இந்தக் காய் நறுக்கிக்கொடுடா" என்றாள் தாய்.

"சரிம்மா..."

"நாளைக்கு சனிக்கிழமை தானே, பள்ளிக்கூடம் இருக்கா?"

"இல்லம்மா..."

"அப்போ, காலைல வேப்பங்காட்டுக்குப் போய் கொஞ்சம் சுள்ளி சேர்த்துக்கிட்டு வாரியா?"

"சரிம்மா.." போகும்போது செல்வத்தை கூட்டிட்டு போலாம் என்று தனக்குள்  நினைத்துக்கொண்டான்.

இரவு பள்ளிப் பாடங்களை முடித்துவிட்டு வழக்கம்போல் வெளிச்சுவற்றில் சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு வீட்டு நிலை வாசலுக்கு வலப்பக்கமாக வெளியில்  போட்டான் உள்ளே சென்று போர்வை தலையணையை எடுத்துக் கொண்டு வந்தான் வெளியில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் விரித்தான். கட்டிலில் ஆயாசமாக மல்லாந்து படுத்தவனின் நேர் பார்வையில் முழு வட்ட நிலா அவனை வரவேற்றது. மலைச்சாமிக்கு நிலாதான் குரு. நிலவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் தமிழ் ஊற்று பீறிட்டு எழும். நிறைய வரிகள் தோன்றும் அப்படியே மனனம் செய்து கொள்வான் காலையில் எழுந்ததும் முன்னிரவில் யோசித்த வரிகளை அவனது நோட்டுப் புத்தகத்தில் எதுகை மோனையோடு எழுதி ஒரு முழுக் கவிதையாக்குவான். சில நாட்கள் முன்னிரவில் யோசித்த வரிகளை மறந்துவிடுவான் எவ்வளவு யோசித்தாலும் அது திரும்ப வராத கனவாகிவிடும். இப்படியே நிலவோடு பேசிக் காதலித்து அவன் எழுதிய நோட்டுப் புத்தகத்தின் தலைப்புத் தான் 'நிலவோடு ஒரு நேர்காணல்'. அந்த நோட்டுப் புத்தகம் நிறைய அவன் எழுதிய புதுக் கவிதை மற்றும் சந்தக் கவிதைகள். தமிழ்ப் பாடம் என்றால் அவன் ஆர்வமாகப் படிப்பான், வகுப்பறையில் தமிழ் இலக்கணம் நடத்தும் பொழுது கவனித்து நோக்குவான் வீட்டிற்கு வந்ததும் தான் எழுதிய கவிதை வரிகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வான். உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம், ஒரு முறை தான் எழுதிய ஒரு சந்தக் கவிதையில்...

'சித்திரம் போலுன்னை வெண்ணிலாவே

செதுக்கியது யாரோ வெண்ணிலாவே'

என்று எழுதியிருந்தான், தமிழ் வகுப்பில் கற்ற மாத்திரை அளவு தனது கவிதைக்குப் பொருந்துகிறதா என்று பார்த்தான் பொருந்தவில்லை என்றுணர்ந்ததும் அந்த வரிகளை இப்படி மாற்றினான்.

'சித்திரம் போலுனை வெண்ணிலவே

செய்தவர் யாரது வெண்ணிலவே'.

சனிக்கிழமை காலை, சகாக்கள் இருவரும் வேப்பங்காட்டுக்குக் கிளம்பினார் சுள்ளி சேர்க்க. வழக்கம் போல் போகும் வழியில் உரையாடல், பேசிக்கொண்டே காட்டை அடைந்தனர், "டேய் சீக்கிரம் சேர்த்துட்டு வீட்டுக்குப் போகனும்டா, எங்க மாமா இன்னிக்கு எங்க வீட்டுக்கு வராங்க கூடவே கனகாவும் வருது" என்றான் செல்வம்.

"அதானே, கனகா வந்தா நீ வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டியே, என் நல்ல நேரம் நான் காலையிலேயே உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்..." என்று சிரித்துக் கொண்டான் மலைச்சாமி.

"பேசாதடா... சீக்கிரம் வேலையப் பாரு.." என்று அதட்டினான் செல்வம்.

சேர்த்த சுள்ளிகளைக் கட்டி முடிந்து இருவரும் தங்கள் தலையில் சும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினார் வழியில் மலைச்சாமிக்கு அந்தப் புத்தகக் கண்காட்சி நினைவு வர "டே நான் எழுதி வச்சிருக்க கவிதை தொகுப்பு 'நிலவுடன் ஒரு நேர்காணல்' புத்தகத்தையும் அந்த கண்காட்சியில வெளியிடப் போறேண்டா" என்றான் மலைச்சாமி உற்சாகமாக.

சிரித்துவிட்டு செல்வம், "டேய் புத்தகம் வெளியிடுறதுன்னா என்ன தெரியுமா, உன்னையும் என்னையும் மாதிரி பத்தாங்கிளாஸ் படிக்கிறவுங்க விளையாடுற விளையாட்டு இல்ல. நீ எழுதினத ஒரு அஞ்சாறு பேர் படிச்சுப் பார்க்கணும், அதோட யாராவது ஒரு பிரபலமும் அதைப் படிச்சுட்டு நல்லா நாலு கருத்து எழுதித் தரணும் அப்பறமா அந்த கருத்த புத்தகத்தோட முதல் பக்கமா வச்சு அதன் தொடர்ச்சியா உன் எழுத்துக்களை அச்சிடனும் அதுக்கு ஒரு நல்ல அட்டைப்படம் வேணும் எல்லாத்துக்கும் மேல ஒரு புத்தகப் பிரசுரக் கம்பெனி உன் கவிதைகளை ஏத்துக்கிட்டு அச்சடிச்சுத் தரணும் இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?"

இவற்றை மௌனமாகக் கேட்டுக்கொண்டே நடந்த மலைச்சாமி, "இவ்வளவும் செஞ்சாத்தான் என் புத்தகத்தை வெளியிட முடியுமா, ஏன் ஒரு கையெழுத்துப் பிரதியா வெளியிட முடியாதா? அந்தக் காலத்துல எவ்வளவு பேர் கையெழுத்துப் பிரதி வெளியிட்டிருக்காங்க, நம்ம பாடத்துல படிச்சிருக்கோம்ல"

"அது அந்தக் காலம் டா மலைச்சாமி , இப்பல்லாம் அது செல்லாது"

"என்னோட கவிதைகளை நம்ம வெற்றி டைலர் படிச்சிருக்கார், டீக்கடை சாஹிப் படிச்சிருக்கார், மாதவன் மெடிக்கல்ஸ்ல சங்கர் அண்ணன் படிச்சிருக்கார், போன வாரம் லைப்ரரி போனப்போ ரவி சார் கூட நான் நல்லா எழுதறேன் விடாம எழுதுன்னு சொன்னார்"

"அவங்க சொல்றது உண்மையா இருந்தாலும் பெரிய படிப்பு படிச்சவுங்க முகவுரை எழுதித்தரணும்டா"

"எங்கிட்ட இருக்கே"

"என்னடா சொல்ற"

"நம்ம ஸ்டேஷன் மாஸ்டர்கிட்ட ஒரு தடவை என் கவிதைகளை படிச்சுப் பாருங்கன்னு கொடுத்திருந்தேன் அவரும் ரெண்டு நாள் வச்சிருந்து ஸ்டேஷன்ல ரயில் வராத நேரத்துல என் கவிதையெல்லாம் படிச்சுப் பார்த்து, ஒரு பக்கத்துல நல்லா எழுதுற புரட்சி நிறைய இருக்கு மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காரே"

"அட போடா கிறுக்கா... என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது... சரி சரி என் வீடு வந்துடுச்சு... இந்நேரம் கனகா வந்திருப்பா..." சொல்லிவிட்டு மலைச்சாமியின் பதிலுக்குக்காதிராமல் துள்ளிக் குதித்து ஓடினான் செல்வம்.

அன்றுதான் பள்ளியின் கடைசி வேலை நாள் அதன் பிறகு விடுமுறை. இன்று எப்படியும் தமிழ் சாரிடம் புத்தகக் கண்காட்சி விலாசத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று மிகக் கவனமாக மலைச்சாமி தமிழ் சாரைத் தேடினான். "சார், நீங்க புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு சொன்னீங்களே அந்த விலாசம் தர முடியுமா?"

"உனக்கு எதுக்குடா மலைச்சாமி?" கேட்டார் தமிழ் சார்

இவரிடம் தான் புத்தகம் வெளியிடப் போவதாகச் சொன்னால் இவரும் செல்வத்தைப் போல ஏதாவது குதர்க்கமாகச் சொல்வார் என்று எண்ணிய மலைச்சாமி, "நான் லீவுக்கு எங்க பெரியப்பா வீட்டுக்கு, சென்னைக்குப் போவேன் சார், அப்போ கண்காட்சி பாக்கலாம் இல்லையா அதுக்குத்தான்" என்று பாதி உண்மையை மறைத்தான் மலைச்சாமி.

"எழுதிக்கோ" என்று விலாசத்தைச் சொன்னார் தமிழ் சார்.

விலாசத்தைப் பெற்றுக்கொண்ட மலைச்சாமி சாருக்கு நன்றி சொல்லிவிட்டு தனது புத்தகத்திற்குப் பரிசு கிடைத்ததைப்போல பேரானந்தம் அடைந்தான்.

பள்ளியிலிருந்து திரும்பிய மகனை வழக்கம்போல் வரவேற்றாள் அம்மா,"டேய் கால் கைய கழுவிட்டு வந்து இந்த காப்பிய குடி, குடிச்சுட்டு இந்த உப்புக்கண்டத்தை கொஞ்சம் நச்சுக் குடு"

"சரிம்மா.."

நல்ல வெள்ளாட்டு உப்புக்கண்டம் காய்ந்து கனத்து இருந்தது எளிதாக அடித்து நைக்க முடியவில்லை மலைச்சாமியால். பெரும் போராட்டத்திற்குப் பிறகு நைத்த உப்புக்கண்டங்களைத் தாயிடம் நீட்டினான் மலைச்சாமி. "சாமி இன்னியோட பள்ளிக்கூடம் முடிஞ்சதுல்ல?" கேட்டாள் தாய்.

"ஆமாம்மா..."

"மாதவன் மெடிக்கல்ஸ்ல வேலைக்கு கேட்டிருக்கேன், நீ உடனே போக வேண்டாம் ரெண்டு நாளைக்கு நல்லா உங்கூட்டாளிகளோட விளையாடு, கண்மாயில் ஆட்டம் போடு அப்பறமா, மெடிக்கல்சுக்கு ரெண்டு மாசத்துக்கு வேலைக்கும் போயிட்டு வா பள்ளிக்கூடம் தொறக்குற வரைக்கும் சரியா ராசா, மருந்தெல்லாம் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கிட்டா நாளைக்கு நீயும் கடைகன்னி வைக்க உதவியா இருக்கும்ல?"

மலைச்சாமிக்கு இது திடீர் மாற்றமாகத் தெரிந்தது ஒன்றும் புரியாமல் ஏக்கத்தில், "ஏம்மா, லீவுல பெரியப்பா வீட்டுக்கு அனுப்பமாட்டியா? போன வருஷம் பெரியப்பா வீட்டுக்குத் தானே போனேன்?"

"அட புரியாதவனே... போன வருஷம் உங்க பெரியப்பா வீடு கட்டினாரு... கூட சித்தாள் வேலைக்கு ஒத்தாசையா இருக்கும்னு உன்னை கூட்டிட்டு போனாரு.. இப்பல்லாம் உன்னை கூப்பிட மாட்டார்"

சுரீரென்று முதுகில் யாரோ அடித்தது போல இருந்தது மலைச்சாமிக்கு. இப்போதுதான் புரிந்தது சென்ற ஆண்டு விடுமுறையில் ஏன் தான் சென்னையில் பெரியப்பா வீட்டில் இருந்தோம் என்பது.

அம்மா செய்து கொடுத்த கஞ்சியை ருசிக்க முடியவில்லை, உப்புக்கண்டத்தை மெல்ல முடியவில்லை. ஒவ்வொரு கவளமும் ருசியைக் காட்டாமல் மலைச்சாமியின் தொண்டையைக் கடந்துகொண்டிருந்தது. உணவுக் கடமையை முடித்த மலைச்சாமி எதுவும் பேசாமல் எழுந்து சென்றான். இரவு படுக்கைக்குச்செல்லும்முன் பரணில் வைத்திருந்த நிலவோடு ஒரு நேர்காணலை எட்டி எடுத்தான், தட்டுத் தடுமாறி கீழே விழுந்த நோட்டுப் புத்தகம் எதோ ஒரு பக்கத்தைத் திறந்துகொண்டு விழுந்தது... அங்கே..

உனை எட்டிப் பிடிக்க நான் பறக்க வேண்டும்

பறந்து பார்க்க சிறகுகள் வேண்டும்

சிறகுகள் தந்திட இறைவன் வேண்டும்

இறைவனுக்கு எட்டும் வரை

எழுதிட வேண்டும்...

...மலைச்சாமி

...மீ.மணிகண்டன்

May-09-2020


குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக