ஞாயிறு, 19 மே, 2024

அடுக்கு மல்லிகள் ......மீ.மணிகண்டன்

அடுக்கு மல்லிகள்

அடுக்கு மல்லிகள் 
புன்னகைக்கின்றன 
அவசரமின்றி 
வெண்ணிலவு நகர்ந்து 
ஓடை குளம் ஏரி எங்கும் 
தன்னைப் பிரதி 
எடுத்துக்கொண்டிருக்கிறது 
அன்னங்கள் பருகப் பருகத் 
தீராநிலவு ஆட்டத்தைத் 
தக்கவைத்துக் கொள்கிறது 
இருளென்று சொன்னவர்களைத் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
வெள்ளை ராத்திரியில். 

…மணிமீ 
Apr-26-2024

எழுதிவிட்டால் பொதுவாகும் ...மீ.மணிகண்டன்

 எழுதிவிட்டால் பொதுவாகும் ...மீ.மணிகண்டன்

எழுதாமல் பொத்திவைத்தால் 
எனதாகும்
விழுதாகி வேராகும்
விதையீன்று மரமாகும்
மழையோடு உரையாடும்
மனதோடு உறவாடும்
எழுதிவிட்டால் பொதுவாகும்
எழுதாமல் பொத்திவைத்தால்
எப்போதும் எனதாகும்…

… மணிமீ
28/04/2024

மறதி ...மீ.மணிகண்டன்

 மறதி ...மீ.மணிகண்டன்

எது மறந்ததென்று தெரியவில்லை
பயணச்சீட்டு பைக்குள்
இருப்பதை உறுதிசெய்துகொள்கிறேன் 
ஒரு பயணத்திற்கு அதைவிடவும்
அவசியமானது
வேறு எதுவாக இருந்துவிட முடியும்?
பயணப்பொதி சுமந்து வந்தேனோ?
ஆம் என் பார்வை படும்படியாக
இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்
மீண்டுமொருமுறை சிந்தனையைச்
சன்னலில் புகுந்துவந்த
காற்றினும் வேகமாய்ப் புரட்டுகிறேன்
எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ
அந்த ஞாபகம்.
பயணம் நிறைவேறியது என்ற
குரல்கேட்டு உடமைகளோடு
இறங்கியபின் ஞாபகம் வந்துவிட்டது
நான் பயணிக்க வேண்டியவன் அல்ல.

#மணிமீ 
8/May/2024

சொல்லாத ஒன்று ...மீ.மணிகண்டன்

சொல்லாத ஒன்று ...மீ.மணிகண்டன்

முதுகுச் சவாரியில்
முழங்கால் வலித்ததைச்
சொல்லவே இல்லை ...
மழைக் காய்ச்சலில்
மருத்துவமனை வரிசையில் 
விழிகள் உறங்காத 
வேதனையைச் 
சொல்லவே இல்லை ... 
மூன்றாம் வகுப்பில்
முழுக்கால் சட்டைக்கு
அழுதபோது 
மூன்று நாட்கள்
இருக்கிறது இன்னும்
முதல் தேதிக்கு என்று 
சொல்லவே இல்லை ...
மிதிவண்டிக் கனவொன்றை
முகப்பு வாசலில் நனவாக்கி 
கழுத்துவலி மருத்துவத்தைக்
கடத்தி வந்ததைச்
சொல்லவே இல்லை ...
விடுதிக்கு வந்து என் 
வெறுங்கைகளுக்குள் 
திணித்தபோதும் 
ஒரே எட்டுமுழ வேட்டியை 
ஒருபக்கமாகவே கட்டிவரும் 
உண்மையைச் 
சொல்லவே இல்லை ...
மாதக் கடைசியில் 
மணிக்கட்டைத் தடவிப் பார்த்து 
மகனேன்னைப் 
பார்த்தபோதுதான் புரிந்தது 
நீ சொல்லாதவைகளில் 
ஒளிந்திருக்கும் சுகத்தையும் 
சொல்லவே இல்லை ...
... மீ.மணிகண்டன்
#மணிமீ
25/Jun/15 

பிரபலமான இடுகைகள்