தலைப்பு: கண்ணால் ஏரிப்பேன்
படைப்பு: மீ.மணிகண்டன்
வெள்ளைச் சட்டைச் சீருடையா
வேண்டாம் வேண்டாம் புறந்தள்ளு
பள்ளிக் கூடம் எதற்குஇனி
பாடம் நடத்தும் சினிமாதான்
பிள்ளைகள் பெற்ற பெரியோரே
பிரயத்தனம் எதற்கு வழியனுப்ப
வேண்டாம் பள்ளிக் கூடந்தான்
வீட்டில் தெரியும் சினிமாதான்
அறிவியல் கணிதம் அர்த்தமில்லை
ஆவியில் கலந்திடு சினிமாவை
பொறியியல் புவியியல் மூட்டைக்கட்டு
பொலிவுறும் மூளை சினிமாவால்
அறிவால் உயர்வு ஏதுமில்லை
அறியா தோரே கேளுங்கள்
அரிவாள் உயர்த்தும் நாயகன்தான்
ஆசான் என்பதை நம்புங்கள்
அப்பன் பாட்டன் கல்விகற்க
அர்த்த மின்றிச் செலவுசெய்தான்
இப்போ செலவே இல்லாமல்
எடுக்கும் பாடம் இன்ஸ்டாதான்
எப்பேர் பெற்ற தலைவர்களும்
எழுதிச் சொன்னது சொத்தையடா
செப்பும் வசனம் அனல்பறக்கச்
செய்பவன் கூற்றே வேதமடா
கண்ணீ ருத்திற்கும் நடிப்புஉண்டு
கட்டிப் பிடிக்கும் ஆடலுண்டு
குண்டர் கத்தி சண்டையுண்டு
குடித்துப் புரளும் போதையுண்டு
கிண்டல் செய்ய வில்லைநான்
கெட்டது கல்வி கற்றவர்தான்
கொண்டாட் டந்தான் சினிமாவால்
குவலயம் தழைக்கும் நீபார்த்தால்
மண்ணைத் தின்னும் கயவரின்பால்
மயங்கிக் கிடக்கும் தூயோரே,
பெண்ணைப் பிள்ளையை ஏய்ப்பாரின்
பின்னால் செல்லும் வீரர்களே,
பண்பை மறந்து பண்டைதொலைத்து
பலனென் றெதுவும் இல்லைகேள்
கண்ணகி எரித்த மண்ணிதனைக்
கண்ணால் ஏரிப்பேன் நானொருனாள்
...மீ.மணிகண்டன்
May/12/2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக