சனி, 22 ஏப்ரல், 2023

முதற்பரிசுக் கவிதை

அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
விழா நாள்: April-05-2023

பெண்ணவள் இன்றிப் பேரெழில் குடும்பம்
பிறப்பதும் அன்று பிழைப்பதும் அன்று;
பெண்ணே குடும்பப் பின்னணி இயக்கம்
பெருமை சேர்த்திடப் பிறந்தவள் அவளும்;

அடுப்படி சமையல் அவளின் பங்கா?
அலுவல் ஒன்றே ஆற்றுதல் பங்கா?
அத்தை அம்மான் அன்புடன் மழலை
அனைவரைக் காப்பது அவளின் பங்கா?

கொண்டவ னுக்கோர் குலமகள் ஆகிறாள்;
குழந்தைக ளுக்கோர் தாயும் ஆகிறாள்;
கோடிப் பொருள்கள் குவிந்திடு மாறு
கொள்கைப் பிடிப்புடன் கோலோச் சுகிறாள்;

இதுதான் பெண்மை ஏற்கும் பங்கு
என்றே பிறிக்க இல்லை குடும்பம்;
எதுவும் அவளே என்கிற பாங்கு
இருந்திடும் வீட்டில் இன்பம் தங்கும்;

M.பானுமதி

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

கொரோனாவின் தொடக்க காலத்தில் எழுதிய நகைச்சுவைக் கதை. நாடகமாக்கிட ஏதுவாக அதிகம் உரையாடலாக எழுதிய கதையிது.

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

சிறுகதை எழுதியவர் மீ.மணிகண்டன் 

எழுதிய நாள்: Feb-04-2020

கொக்கரக்கோ

"என்ன இது..." 

"இன்னைக்கு சண்டே..." 

"தெரியும் சண்டே ... இது என்ன..." 

"சிக்கன்..." 

விடுவிடுவென சமயலறைக்குள் நுழைந்தாள் ப்ரேமி, "ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" என்றாள் அடுப்பிலிருந்து வெந்த இட்டலியை 

இறக்கி வைத்துக்கொண்டே.

"எந்த ஊர்ல..."

"ம்… நாம எந்த ஊர்ல இருக்கோம்..."

"அம்மாடி... புரியுற மாதிரி ஏதாவது சொல்லுறியா..."

"டி.வி. பாக்கறீங்க... யூடியூப் பாக்கறீங்க... எதுவுமே தெரியாத மாதிரி என்னைக் கேட்கறீங்க..." என அடுப்புச்சூட்டில் பொரிந்தாள்.

"ஸ்... அப்பா... தலை வலிக்குது... கொஞ்சம் காபி போட்டுத் தருவியா?"

"அம்மாடி… தலை வலியா... இதோட ஆரம்பம் தலை வலின்னு எந்த யூடியூப் லையோ சொன்ன மாதிரி இருக்கே... கடவுளே மறுபடி அதைப் பார்க்கலாம்னா 

எந்த சேனல் ன்னு அவசரத்துல ஞாபகம் வரமாட்டேங்குதே..." பயமும் கவலையும் கலந்துகட்ட, படபடத்தாள்.

"சரிதான்... காபியும் இல்லையா... பரவால்ல நான் வெளில போய் கடையில சாப்பிட்டுக்கறேன்..."

"போகும்போது நீங்க வாங்கிட்டு வந்ததை ஓபன் பண்ணாம எடுத்துட்டு போய் குப்பைல போடுங்க..."

"அடிப் பாவி... சிக்கன் விக்கற விலைக்கு... அப்படியே தூக்கி ஏறியச் சொல்லுற.. ஓஹோ... சிக்கன்தான் இவ்வளவுக்கும் காரணமா... இப்பப் புரியுது..."

"ம்... புரிஞ்சா சரி..."

"அடியே... அது எங்கயோ... யாருக்கோ கொரோனான்னு நியூஸ்ல சொல்றாங்க அதுக்காக நம்ம ஊர் சிக்கன் என்னடி பண்ணுச்சு?" என்று. கோழி சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கிறங்கினான் பிரகாஷ்.  

வாசற்கதவு தட்டும் ஓசை கேட்க, பிரகாஷ் சாளரம் வழியே எட்டிப்பார்த்தான், வெளியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு நின்றார்கள். நின்றவர் மீண்டும் கதவைத்தட்டினார், 

"யாரது..."

"நான்தான்..."

ப்ரகாஷிற்கு வெளியே நிற்பவர் "நான்தான்" என்று சொல்வது புரிகிறது அதனைத்தொடர்ந்து அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை. ஒருவேளை 

அவர் முகத்தை மூடாமல் பேசினால் புரியும்.

சமையலறை விட்டு வெளியே வந்த ப்ரேமி, “கதவைத் திறந்துதான் பேசுங்களேன்..." என்று கதவைத்திறக்க அடி எடுத்து வைத்தாள்.

"ஏய்... நில்லு... அவர் முகத்தை மூடி இருக்கார்... யாராவது முகமூடித் திருடனா இருக்கப் போகுது..."

கதவு மீண்டும் தட்டப்பட்டு, "நான்தான்..." என்றுவிட்டு இன்னும் எதோ சொல்கிறார்...

சற்று உன்னிப்பாகக் கேட்ட ப்ரேமி சிரித்துக்கொண்டே, "அப்பா..." என்றாள். 

"என்னது உங்க அப்பாவா?"

"ஹையே... ஆமாங்க... உங்களுக்கு அப்பாவோட குரல் தெரியலையா?"

கதவைத்திறந்தாள் ப்ரேமி, "வாங்க அப்பா... என்ன இது முகமூடி?" 

"வாங்க மாமா, என்ன ஒரு போன் கூட பண்ணல..."

முகத்தை மூடியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, " அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று மூச்சை இழுத்துவிட்டுச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சண்டே.. சும்மாதானே இருப்பீங்கன்னு அப்டியே கிளம்பி வந்துட்டேன் மாப்ள..."

"சரி இதென்ன கெட்டப்?"

"அட நீங்க வேற... ஏதோ கொரோல்லா வாமே அதுக்கு பயந்துதான்..."

"மாமா... அது கொரோல்லா இல்ல... கொரோனா…"

"எதோ ஒண்ணு... அத விடுங்க இன்னைக்கு என்ன சமையல்? யார் சமையல்?" 

"என்னப்பா சண்டே இங்க வந்தா கொக்கரக்கோ சாப்பிடலாம்னு வந்துட்டீங்களா..."

"அதென்ன கொக்கரக்கோ... சிக்கன்னு செல்லமா சொல்லக்கூடாதா..."

"ஆண்டவா... ஆண்டவா... அந்தப்பேரை சொன்னாக்கக்கூட சைனால இருக்கறது சைதாப்பேட்டைக்கு சட்டுன்னு வந்துடுதாம்... காத்துல அவ்வளவு வேகமாப் பரவுதாம்... அதான் அந்தப் பேரைக்கூடச் சொல்லமாட்டேன்." எச்சரிக்கைக் கொடி பிடித்தாள் ப்ரேமி.

"அடடா... நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டே ப்ரேமி... சிக்கனுக்கும் கொரோல்லாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல..."

"மாமா... அது கொரோனா..." மாமனாரை மீண்டும் திருத்தினான் பிரகாஷ்.

"விடுங்க மாப்ள... எனக்கு அப்படித்தான் வருது... சரி மாப்ள நீங்க இன்னும் சிக்கன் வாங்க கடைக்குப் போகலையா?"

"மாமா... அதெல்லாம் ஆச்சு... இப்போ இந்த சிக்கன் குப்பைக்குப் போகணுங்கறதுதான் ப்ரேமியோட போராட்டம்... இந்தப் போராட்டத்துக்கு நீங்கதான் சமாதானக் கொடி கட்டணும்..."

"அம்மாடி... உங்க அம்மா சைவமா இருந்துக்கிட்டு எப்பவுமே வெஜ்தான்... உனக்கு தெரியாதா... எப்பவோ ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை சிக்கன் சாப்பிடுறதுக்காக நாலு தெரு தள்ளி உங்க வீட்டுக்கு வறேன்... ஏமாத்திடாதடா கண்ணு..." என்று மகளைக் கெஞ்சினார் அப்பா.

"மாமா நீங்க தலை கீழ நின்னாலும் சரி... இன்னிக்கு இட்லி சாம்பார்தான்..."

"ஆமா... இப்ப இட்லி ரெடியா இருக்கு ரெண்டு பெரும் வாங்க மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் இருக்கு... மதியானத்துக்கு கொக்கரக்கோ மாதிரியே உங்களுக்கு காலிபிளவர் பொரியல் செஞ்சு தரேன்..."

"பாத்தீங்களா... மாமா... நான்... சொன்னது சரியா..."

இவர்களின் உரையாடலுக்கு நடுவே உள்ளே எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த பப்பு வெளியில் ஓடிவந்தான், "தாத்தா க்ரோனா என்ன…"

"அட உனக்கும் இது தெரிஞ்சுடுச்சா... அது எதோ கண்ணுக்குத் தெரியாத பூச்சியாம்..." பேரனுக்குப் பாடம் சொன்னார் தாத்தா.

"அடடா... மாமா கொஞ்சம் நிதானமா... குட்டிப் பையன குழப்பிடாதீங்க... அவன் கேட்கறது கொரோனா இல்ல... க்ரோனா என்ன? அதாவது C R O W க்ரோ அப்படின்னா என்ன?

"ஓஹோ... அதானே பார்த்தேன்... இதக் கண்டுபுடிச்சே ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா ப்ரீ கே ஜி க்கு பாடமா வந்ததுன்னு…" என்று இழுத்துச் சமாளித்தார் தாத்தா.

சத்தமில்லாமல் சிக்கன் பையை எடுத்து சமையலறையில் ப்ரேமி பார்வை படும்படி வைத்துவிட்டு வந்தான் பிரகாஷ். இதனைக் கண்ட ப்ரேமி, "சொன்னா கேட்க மாட்டீங்க..." என்று ஒரு அதட்டல் போட. "இன்னிக்கு மட்டும்தான்..." என்று கெஞ்சலாகச் சொல்லிவிட்டு மாமனாருடன் உரையாட ஹாலுக்கு வந்தான் பிரகாஷ்.

பின்னாலேயே பையைத்தூக்கிக்கொண்டு ஓடிவந்த ப்ரேமி, "என்னங்க என்ன இது சிக்கன்னு சொல்லி காலிபிளவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க..."

"ஏய் சும்மா சமாளிக்காத... நான் கொண்டு வந்தது சிக்கன்தான்..."

"அட இங்க பாருங்க..." என்று பையை திறந்து காட்டினாள். ப்ரகாஷிற்குப் புரியவில்லை. "நான் சின்னையா கடையிலிருந்து சிக்கன்தானே வாங்கி 

வந்தேன்... அவர் சிக்கன் வெட்டி பையில் போடும்போது பார்த்தேனே..." என்று யோசித்தான். "சரி ஒரு எட்டு அவர் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்," என்று கிளம்பினான்.

"இன்னிக்கு காலிபிளவர் பொரியல்தான்..." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ப்ரேமி.

கடை காலியாக இருந்தது. இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. "ஆஹா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டாரா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். 

"என்ன மாப்ள சிக்கன் கொண்டு வந்துடீங்களா?" என்றார் மாமனார் ஆவலுடன். 

"இல்ல மாமா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டார்…"

"சோ வாட், அவருக்கு ஒரு போன் போடறது..." 

"ஆமா மாமா, நல்ல யோசனை" என்று தனது மொபைல் போனை எடுத்து சின்னையாவிற்கு டையல் செய்தான் பிரகாஷ்.

மறுமுனையில், " ஹலோ…"

"அண்ணே நான்தான் பிரகாஷ் பேசுறேன்..."

"சொல்லுங்க தம்பி..."

"அண்ணே நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்த சிக்கன் வீட்டுக்கு வந்ததும் காலி ப்ளவரா மாறிடுச்சு..." என்று சிரித்தான் 

"அடடே அது நீங்க தானா…"

"என்ன சொல்றீங்க?"

"ஆமா பிரகாஷ் தம்பி, நான் வீட்டுக்கு வாங்கி வச்சிருந்த காலி ப்ளவரை நீங்க மாத்தி எடுத்துட்டு போயிட்டீங்க போல..."

"நான் அந்தப் பையை மாத்தி எடுத்தபோதே சொல்லக்கூடாதா?"

"அட... எனக்கெப்படி தெரியும் நீங்க மாத்தி எடுத்தீங்கன்னு? நான் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ பார்த்தா அந்தப் பையில சிக்கன் இருக்கு. சரி யாரோ மாத்தி எடுத்துட்டு போய்ட்டாங்க கேட்டா சொல்லலாம்னு இருந்தேன். இப்ப தான் தெரியுது நீங்கதான்னு... சரி நாளைக்கு கடைப்பக்கம் 

வரும்போது மறக்காம என்னைப் பாத்து சிக்கன் காசை திரும்ப வாங்கிக்கோங்க... சரியா?" 

"அட அது இருக்கட்டும் அண்ணே, இன்னிக்கு நம்ம சிக்கன் கனவை மொத்தமா கலைச்சுடீங்களே…"

மெளனமாக இருந்தார் சின்னையா 

"சரி அண்ணே உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையா, அதுவும் சொந்தமா கடை வச்சிக்கிட்டு…"

"நமக்கு வெஜ் தான் எப்பவும் ஸ்பெஷல் தம்பி. சிக்கன் நமக்கு தொழில் அவ்வளவுதான்."

"ஆச்சர்யமா இருக்கு..."

"ஆமா... கொஞ்சநாளைக்கு முன்னே யாரோ சொன்னாங்க வெஜ்தான் ஹெல்த்துக்கு நல்லதுண்ணு, அதுலேருந்து நாங்க வீட்டோட வெஜிடேரியனா மாறிட்டோம். சரி தம்பி மணக்க மணக்க வத்தக் குழம்பு என்னைக் கூப்பிடுது நான் இப்போ போனை வைக்கிறேன், நாளைக்கு மறக்காம கடைப்பக்கம் வந்து காசை வாங்கிக்குங்க" என்று போனை வைத்தார் சின்னையா.

"என்ன மாப்ள ரொம்ப நேரமா உரையாடல்..."

"ம்... அது ஒன்னும் இல்ல மாமா... இனிமே நம்ம வீட்டில... வெஜ்தான்..." என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு பிரகாஷ் எழ, மாமனார் "வடை போச்சே..." என்று விழிக்க... 

"ப்ரேமி... காலிப்ளவர் பொரியல் ரெடியா..." என்று சமையலறை நோக்கி அடி எடுத்துவைத்தான் பிரகாஷ்.

... மீ.மணிகண்டன்

 

வியாழன், 2 மார்ச், 2023

மௌனம் திறக்கும் கதவு

எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'மௌனம் திறக்கும் கதவு'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!

ஆண்டு: 2017







தொலைந்துபோன வானவில்

 எனது 'மனித மந்தையில் தொலைந்த மந்திகள்' கவிதை வெளியான புத்தகம் 'தொலைந்துபோன வானவில்'. திரு.அகன் அவர்களுக்கு நன்றி! 

ஆண்டு: 2017







சனி, 10 டிசம்பர், 2022

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்!

இன்று (10/Dec/2022) தொல்லியல் ஆய்வாளர் முனைவர் திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரை ஒன்று மெய்நிகராகப் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது. இதனை ஏற்பாடு செய்த FETNA அமைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

FETNA
களப்பிரர் காலம் இருண்ட காலமா? என்ற கேள்விக்கு, யார் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை உணரவேண்டும் என்று அவர் கூறியதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பிள்ளையார்பட்டியில் ஒரு குடவரை கோயில் இருக்கிறது அது முழுமைபெறாமல் உள்ளது என்றும் அங்கே மலையில் ஒரு பிள்ளையார் செதுக்கப்பட்டு அதன் கீழ் அதனைச் செதுக்கியவர் 'எக்காட்டூருக்கோன் பெருந்தசன்' என்று கல்வெட்டு காணப்படுவதாகவும் கூறுகிறார். அந்த எழுத்தின் காலம் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு என்று  ஆதாரத்துடன் விளக்குகிறார். இன்று பிள்ளையார்பட்டியில் வணங்கப்படும் பிள்ளையாரும்  எக்காட்டூருக்கொண் பெருந்தசனால் செதுக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லவா? பிள்ளையார்பட்டி, நகரத்தார்களின் ஒன்பது கோயில்களில் ஒன்றானது என்பது யாவரும் அறிந்ததே. களப்பிரர்கள் மலையில் பிள்ளையரைச் செதுக்கியபோது அதைக் கடவுளாகச் செதுக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. களப்பிரர்கள் சைவர்கள் அல்லர். பின்னர் ஏன் அதைச் செதுக்கினார்கள்? என்ற கேள்விக்கு, களப்பிரர்கள் தங்களின் அடையாளமாகவே செதுக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியனுக்கு மீன், சோழனுக்குப் புலி அதுபோல் களப்பிரர்களுக்கு யானைக்குட்டி என்பது திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையிலிருந்து அறிகிறேன். மேலும், களப்பிரர்கள் காலத்து நாணயங்களின் ஒரு புறம், வலப்பக்கம் நோக்கி நிற்கும் யானைச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

from worldtamilforum com

'களபிர' என்ற சொல்லுக்கு 'யானைக்குட்டி' என்ற பொருள் என்பதை அவர் உரையிலிருந்து அறிகிறேன். பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர். கோயில் சிலைகள் பொதுவாகக் கிழக்கு நோக்கி இருக்கும் ஆனால் பிள்ளையார்பட்டி விநாயகர் வடக்கு நோக்கி இருந்தவண்ணம் இருக்கிறது. இதிலிருந்தே களப்பிரர்கள் அவர்களின் அடையாளமான ஒரு யானைச் சின்னத்தையே அங்கே செதுக்கியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் சமணம் பெளத்தத்தை அழித்தொழித்தவர்கள் சைவத்திற்கு வளம்சேர்க்க பிள்ளையார்பட்டியில் சிவலிங்கத்தை வைத்திருக்கலாம், யானைக்குட்டியை பிள்ளையார் என சைவத்திற்குள் வளைத்திருக்கலாம். 

நகரத்தார்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் பிள்ளையாரைத் தொழுது செயலைத் தொடங்குவது அறிந்த ஒன்று. மேலும் எந்த சமூகமும் கொண்டாடாத ஒரு வழிபாட்டை நகரத்தார்கள் மட்டுமே கடைபிடித்து வருகிறார்கள் என்றால் அது பிள்ளையார் நோன்பு.

Thanks Google
களப்பிரர்கள் காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்திருந்தது. பிள்ளையாருக்கு குண்டு வயிறு பெரிய காதுகள் ஆங்கிலத்தில் Laughing Buddha என்று பௌத்தம் வடிவமைத்த சிரிக்கும் புத்தருக்கும் குண்டு வயிறு பெரிய காதுகள். சிரிக்கும் புத்தர் செல்லப் பிள்ளையாராகியிருப்பாரோ?

பூலாங்குறிச்சிக் கல்வெட்டு வைதீகர்களிடமிருந்து சொத்துக்களை விற்று களப்பிரர்களின் கோயிலுக்குத் திருப்பியதாகச் சொல்கிறது. அதாவது மன்னர்களிடமிருந்து வைதீர்கள் பெற்ற சொத்துக்களை, களப்பிரர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் வைதீகர்களிடமிருந்து திருப்பியதாகச் சொல்கிறார் நான் இதை மேலும் ஒருமுறை கேட்டுப் புரிந்துகொண்டேன். பூலாங்குறிச்சி நகரத்தார்கள் ஊர்களில் ஒன்று.

திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையில், களப்பிரர் காலத்தில் ஐயனாரை வணங்கியதையும், 'சாத்தன்' என்கிற பெயரையும் குறிப்பிடுவதைக் காண்கிறேன். நகரத்தார்கள் தமது குலதெய்வங்களாக ஐயனாரை வணங்குவது வழக்கம், மேலும் சில நகரத்தார்கள் தங்கள் குலதெய்வம் 'சாத்தையனார்' என்று கூறுவதைக் காணலாம்.

ஐயனாரை வணங்கியதுடன் பிடாரி (அம்மன்) யையும் வணங்கியதாகக் குறிப்பிடுகிறார். அம்மனுக்கு கோயில் எழுப்பி அதனைச்சுற்றி ஊர் அமைக்கும்பொழுது, அதை அம்மனுக்கு தானம் வழங்கியதாகக் குறிப்பிட்டு 'மங்கலம்' என்று குறிப்பிடுவதாகக் கூறுகிறார். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகர் குழு தானம் வழங்கியது ஐந்நூற்றுவர் மங்கலம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறார். நகரத்தார்களின் மாத்தூர் கோயிலில் உள்ள சிவனுக்கு ஐநூற்றீசுவரர் என்ற பெயர். 

wiki

'காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்' என்கிறது ஒரு விக்கிப்பீடியா பதிவு. நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்ததும் முருகனைத் தங்களின் குலதெய்வமாக வணங்கி வருவதும் யாவரும் அறிந்ததே.

களப்பிரர்கள் கடல் வணிகம் செய்தவர்கள். இன்று நாம் அதைத்தான் நகரத்தார்கள் கடல் வழி வணிகம் செய்தவர்கள் எனச்சொல்கிறோமோ?  . 

கண்ணகியும் கோவலனும் நகரத்தார் என்று கூறுகிறோம். அவர்கள் வாழ்ந்த இடம் காவேரிப்பட்டினம் வாழ்ந்த காலமும் களப்பிரர்களின் காலத்தை ஒட்டிய காலமாகவே காண்கிறேன். கோவலனைக் காதலித்த மாதவியும் பௌத்த துறவியாகிறார். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலையும் பௌத்த துறவியாகிறார். நகரத்தார்களின் ஒன்பது கோயில்களுள் கோவலன் பிறந்தது எந்தக்கோயில், கண்ணகி பிறந்தது எந்தக்கோயில் என்று விபரம் நம்மிடம் இருக்கிறதா?


சொ.சொ.மீ ஐயாவின் உரை, அதாவது நகரத்தார்களின் பூர்வீகம் சைவம் அல்ல. 

ஐயா சமணத்தை அடையாளம் காட்டுகிறார், நான் இங்கே சமணம், பௌத்தம் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறேன். மற்றபடி சைவ மாற்றத்திற்கு இரண்டு கரணங்கள் காண்கிறேன், ஒன்று, களப்பிரர்களை ஒரு கூட்டம் வாழவிடாமல் அழிக்கும் காரணத்தால் தங்களுடைய களப்பிரர் அடையாளத்தை மறைப்பதற்காக இருந்திருக்கலாம், அல்லது களப்பிரர்களின் சொத்துகளை அபகரித்து அவர்களை அழிக்க வந்த  கூட்டம் களப்பிரர்களில் 

Thanks Google
சிலரை அழைத்து, சைவத்திற்கு மாறினால் மேலும் இன்னல் தராமல் விட்டுவிடுவோம் என்று  கூறியிருக்கலாம்.

சமணமும் பெளத்தமும் கற்றுத்தந்த சித்தர்கள் வாழ்வியலைத்தான் பட்டினத்தாரும் காரைக்கால் அம்மையாரும் இயற்பகையும் கடைப்பிடித்திருக்கக்கூடும், காலம் அவர்களை சைவத்திற்குள் அடைத்திருக்கலாம்.


முருகன் வழிபாட்டை நகரத்தார்கள் பண்டாரத்தைக் கொண்டே நடத்துகிறார்கள், வைதீகர்களைக்கொண்டு பூசைகள் செய்வதில்லை. பழனிப் பாதயாத்திரையில் வேல் கொண்டு முன்செல்வதும், வேலுக்குப் பூசையிடுவதும் பண்டாரமே. பழனி அன்னதானமடத்தில் பூசைகள் பண்டாரங்களைக்கொண்டே நடைபெறுகிறது. இல்லங்களில் முருகனுக்குப் பூசைகளிடும்போது முன்னின்று பூசை இடுவதும் பண்டாரமே. 

Palani Pathayathirai

நகரத்தார் திருமணங்கள், வைதீகர்களைக்கொண்டு நடத்தப்படுவது இல்லை. வயதில் மூத்த நகரத்தார் மக்களே முன்னின்று தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்திவருகிறார்கள். 

இவை ஏன்? என்ற கேள்வி என்னுள் எழும்போது அதற்கு விடையாக, களப்பிரர்களின் அழிவிற்குக் காரணம் வைதீகர்கள், எனவே வைதீகர்கள் என்றென்றும் களப்பிரர்களின் எதிரி என்ற காரணமாக் கூட இருக்கலாம்.

ஆதிக்காலங்களில் பழனி மலையில் முருகனுக்குப் பூசையிட்டவர்கள் பண்டாரங்கள் என்பதர்க்கு சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள் கொடுக்கும் ஆதாரம்::


     

மேலும் களப்பிரர் ஆதாரங்களை அறிய விரும்புகிறேன். அதற்கு வழிகோலுபவர்களை வரவேற்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

Date: Dec-10-2022

Updated: Dec-29-2022

Updated: Aug-29-2023


சனி, 22 அக்டோபர், 2022

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ... மீ.மணிகண்டன்

நகைச்சுவை நாடகம். இக்கதை நாடகமாக்குவதற்காக எழுதிய சிறுகதை. அதனை மெய்யாக்கும்வண்ணம் குறும்படக் குழுவினர் என்னை அணுகி இக்கதையை ஒளி நாடகமாகப் பதிவு செய்து YouTube ல் வெளியிட்டு எனது கதையினைச் சிறப்பு செய்தனர் என்பது கூடுதல் தகவல். 

கதையின் தலைப்பு: பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

நாள்: Jun-16-2019

அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி,

என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா... கதவைத் திறந்தா என்ன...

ம்... பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது... நீ போய் கதவை திறயேன்... அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ்.

அழைப்பு மணி மீண்டும் ஒலிக்கிறது.

அப்பப்பா... போட்டி போட்டி.. எதுக்கெடுத்தாலும் போட்டி... சொல்லிக்கொண்டே கையில் கரண்டியோடு அறைக்குச்சென்றாள் பிரேமி... 

இப்போ நீங்க போய் கதவைத் திறக்கலே... 

திறக்கலே.... 

திறக்கலே....

ம்... திறக்கலே... சொல்லு  சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி.... என்றான் பிரகாஷ்.

ம்.. நானே பொய்த்த திறந்துடுவேன்.... சொல்லிவிட்டு வாசற்கதவு நோக்கி நடந்தாள் பிரேமி.

கையில் கரண்டியுடன் கதவைத்திருந்தாள்... வாசலில் நிர்ப்பவரைப் பார்த்தவுடன் சற்றே பதட்டமானாள்... அவர் வேறு யாரும் அல்ல பப்பு படிக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர். 

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ...
குறும்படத்தின் காட்சி

வணக்கம் சார் என்று கைகளைக் குவித்தாள் பிரேமி... கையில் இருந்த கரண்டி தவறி வாசலில் நின்றிருந்த ஹெட்மாஸ்டர் சட்டை மீது உரசிக்கொண்டு கீழே 'நங்' என்று விழுந்தது. 

கரண்டி உபாயத்தால் சட்டையில் ஒட்டித் தவழ்ந்த குழம்பை தொட்டு நாவில் வைத்த அவர்... 

ம்... வத்தக் குழம்பு... உப்பு இன்னும் ஒரு பின்ச் சேத்திங்கன்னா டேஸ்ட் இன்னும் தூக்கலா இருக்கும்... என்றவர் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.... 

நான் பப்புவோட ஸ்கூல் ஹெட் மாஸ்டர்...

எஸ் சார்... ஆமா சார்... எனக்குத் தெரியுமே... பதட்டம் குறையவில்லை பிரேமிக்கு....

யார்டி வெளில... உங்க சொந்தக் காரங்க யாராவது வந்துட்டாங்களா தெரிஞ்சிருந்தா நேத்தே வீட்டைப் பூட்டிட்டு வெளியில கிளம்பியிருக்கலாமே... என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்  பிரகாஷ்..

அச்சச்சோ.. என்னங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... கொஞ்சம் பேசாம இருங்களேன்... என்று கணவரை அமைதிப்படுத்திவிட்டு... 

சார் நீங்க இங்க உட்காருங்க... ஹெட் மாஸ்டருக்கு இருக்கை காட்டி இருக்கச்சொன்னாள் பிரேமி.

ம்... நான் நினைக்கிற மாதிரி இல்லையா... அப்படின்னா எங்க அண்ணன் தம்பி யாராவது வந்துட்டாங்களா...  யாரை இவ வீட்டுக்குள்ள கூப்புட்டு உட்காரச்சொல்லுறா... என்று வினவிக்கொண்டே கைலியை இருகக்கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான் பிரகாஷ்.

ஓஹ்... சாரி சார்.. வணக்கம்... நான்கூட யாரோன்னு நினைச்சு.... என்று இழுத்தான் பிரகாஷ்

பரவால்ல... அதனால் என்ன ... என்ற ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார்...  அதிருக்கட்டும் ... நான்... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாருங்க... என்று தான் வந்ததற்கான காரணத்தைச் சொல்ல வந்தார் ஹெட் மாஸ்டர்...

சார்... முதல்ல என்ன சாப்பிடறீங்க காபி... டீ ... என்றாள் பிரேமி 

அதெல்லாம் வேண்டாம்... என்றான் பிரகாஷ்

கணவனின் இந்த பதிலைக் கண்டு பதட்டம் அடைந்த பிரேமி... என்னங்க... என்றாள் பிரகாஷைப் பார்த்து

இல்ல அப்படி சொல்லுவார் சார்... ஆனா நாம விடமாட்டோம்னு.. சொல்லவந்தேன்... என்று சமாளித்தான் பிரகாஷ்

ஆமா.. அதெல்லாம் வேண்டாம்..என்றார் நகைத்துக்கொண்டே ஹெட் மாஸ்டர்

பார்த்தீங்களா.. ஆனா நாங்க விட மாட்டோம்...சரி தண்ணி... என்றான் பிரகாஷ் 

நோ நோ.. நான் வேண்டாம்னு சொன்னா... வேண்டாம்னு அர்த்தம் இல்ல... இட்லி, தோசை, சப்பாத்தி... இப்படி ஏதாவது சாப்பிடறீங்களான்னு கூட... நீங்க.. கேட்கலாம்... என்றார் ஹெட் மாஸ்டர்

சற்றே குழம்பிய பிரகாஷ்... ம்... புரியுது... புரிஞ்சுதா பிரேமி... சார் என்ன சொல்றாருன்னா... என்றான் மனைவியைப் பார்த்து

ஆ... ம்... புரிஞ்சுது... அதாவது இட்லி சாப்பிடறீங்களான்னு கேட்கலாம்... என்று இழுத்தாள் பிரேமி 

ஆமா கேளுங்க... பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர் 

ஆனா மாவு அறைக்கலையே... என்றாள் பிரேமி 

எஸ்... ஆமோத்தித்தான் பிரகாஷ்

தோசை சாப்பிடறீங்களானு கேட்கலாம்.. என்று இழுத்தாள் பிரேமி... 

ஆமா கேளுங்க... பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர்  

ஆனா அதுக்கும் மாவு வேணும்... ஆனா நாங்கதான் மாவு அறைக்கலையே... என்று பட்டென பதிலளித்தாள் பிரேமி 

எஸ்... ஆமோதித்தான் பிரகாஷ்

சப்பாத்தியாவது வேணுமான்னு கேட்கலாம் தான்... யோசித்து இழுத்தாள் பிரேமி

என்ன.. அதுக்கும் மாவு அறைக்கலியா.. பதிலாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர் 

சேச் சே... அத மாவாவே கடையில இருந்து வாங்கிடுவோம்... என்றான் பிரகாஷ்

அப்பறம் என்ன... கேட்டார் ஹெட் மாஸ்டர் 

ஆனா நான் கோதுமை மாவுன்னு எழுதிக் கொடுத்தேன் இவர் முழு கோதுமை வாங்கிட்டு வந்துட்டார்... என்றாள் பிரேமி

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ...
குறும்படத்தின் காட்சி

அதனாலென்ன... கோதுமையைக் கொண்டுவந்து கொடு ... சார் வீட்டுக்குப் போய் மாவை அறைச்சு... சப்பாத்தி பண்ணிக்குவார்... இல்ல சார்... என்றான் வெகுளியாக பிரகாஷ்

ஷட் அப்... என்ன இது... நான் எதுக்கு வந்தேன்.. நீங்க என்ன பேசுறீங்க... சற்றே கோபத்துடன் எழுந்தார் ஹெட் மாஸ்டர் 

அத நீங்க இன்னும் சொல்லவே இல்லையே சார்... என்றான் பிரகாஷ்

ஓஹ் மை காட்... லிசென்... உங்க பையன் பப்பு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்தானா... என்றார் ஹெட் மாஸ்டர்  

ஆமா காலைல இவர்தான் கூட்டிட்டு வந்தார்... பதிலளித்தாள் பிரேமி   

ரைட்... கூட்டிட்டு வரும்போது பையன் கிட்ட பென்சில் ரப்பர் எல்லாம் மறக்காம எடுத்து பேக்ல வச்சியான்னு ஒரு அம்மாவா நீங்க கேட்டீங்களா... பிரேமியைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்  

முழித்தாள் பிரேமி 

அருகில் இருந்த பிரகாஷிடம் சென்று.. ஒரு அப்பாவா நீங்க கேட்டீங்களா... என்றார் ஹெட் மாஸ்டர்

இப்போ என்ன சார் அதுக்கு... என்றான் பிரகாஷ்

ஒரு நால்லாப் படிக்கற பையன் பென்சிலை மறந்துட்டு ஸ்கூலுக்கு போனா அவன் எப்படி பாடத்தை எழுதுவான்... என்று கோபப் படாமல் கடிந்துகொண்டார் ஹெட் மாஸ்டர் 

பிரேமியும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழப்பத்தில் விழிக்க தொடர்ந்தார் ஹெட் மாஸ்டர்.. அதான்.. பப்புக்கு பென்சில் கொடுத்து எழுதச்சொல்லிட்டு... உங்க கிட்ட கேட்கலாமுன்னு வந்தேன்... என்று முடித்தார் ஹெட் மாஸ்டர் 

அவன் கிட்ட பென்சில் கொடுத்தா அவனைத்தான் கேட்கணும்... எங்களைக் கேட்டா நாங்க எப்படிக் கொடுப்போம்.. என்று பரிதாபமாகக் கேட்டான் பிரகாஷ் 

ஓஹ்... நான் கேட்கறேன்னு சொன்னது... உங்க கவனக் கொறைச்சலை கேட்க வந்தேன்னு சொன்னேன்... என்றார் ஹெட் மாஸ்டர் கண்டிப்பாக

அப்படி புரியும்படி சொல்லுங்க சார்... என்றாள் பிரேமி 

சரி... ஒரு பென்சிலுக்காக இப்படி வீடு வரைக்கும் வரணுமா... ஆச்சர்யமாகக் கேட்டான் பிரகாஷ் 

நோ நோ ... டிஸிப்ளின்... டிஸிப்ளின் எனக்கு முக்கியம்... எங்க அது இல்லையோ.. உடனே அத எடுத்துச் சொல்லிக் கேட்கலைன்னா எனக்கு அடுத்த வேலை ஓடாது... டிசிப்ளின்... டிசிப்ளின்... என்று கண்டிப்பாகச் சொன்னார் ஹெட் மாஸ்டர் 

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ... குறும்படத்தின் காட்சி

இவர்களின் உரையாடலுக்கு நடுவே பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்தான் பப்பு.

வீட்டுக்குள் நுழைந்த பப்புவிற்கு ஹெட் மாஸ்டரைக் கண்டதும் ஆச்சர்யம்... இருந்தாலும்... குட் ஈவினிங் சார்.. என்றான் பப்பு ஹெட் மஸ்டெரைப் பார்த்து

குட் ஈவினிங்... பதிலளித்தார் ஹெட் மாஸ்டர் 

என்ன சார் எங்க வீட்டுக்கு விசிட் பண்ணியிருக்கீங்க... சந்தேகமாகக் கேட்டான் பப்பு 

நீதான் பென்சிலை மறந்துட்டியே.. அதான் உங்க பாரென்ஸ் கிட்ட அட்வைஸ் பண்ண வந்தேன்... என்றார் ஹெட் மாஸ்டர்

நானா... பென்சிலை.. மறந்தேனா... என்ன சார் சொல்லுறீங்க... சந்தேகமாக வினவினான் பப்பு 

மை பாய்... நான் ரௌண்ட்ஸ் வரும்போது... நீ பென்சிலை மறந்துட்டு... சைன்ஸ் டீச்சர் கிளாஸ்ல... போர்டில் எழுதிப் போட்டதை எழுத வழியில்லாம... வெளில... பராக்... பார்த்துட்டு... இருந்தியே... நான்தான் உனக்கு பென்சில் கொடுத்து... எழுதச் சொன்னேனே... என்ன... ஞாபகம் இல்லாயா... பப்புவிடம் உரையாடினார் ஹெட் மாஸ்டர் 

சார் மறந்தது நான் இல்லை சார்... பென்சிலை மறந்தது எனக்குப் பக்கத்தில இருந்த சுப்பு... நீங்க பென்சில் கொடுத்தது சுப்புவுக்கு... என்று விளக்கமளித்தான் பப்பு...

ஓஹ்... சாரி... தென் இட்ஸ் மை மிஸ்டேக்... அசடு வழிந்த ஹெட் மாஸ்டர்... சாரி நான் தப்பா உங்கள தொந்தரவு பண்ணிட்டேன்... என்று ப்ரேமி மற்றும் பிரகாஷைப் பார்த்து மேலும் அசடு வழிந்தார்..

ஓகே... பப்பு... நான் சுப்பு வீட்டுக்கு போறேன்... என்று சொல்லி வெளியில் கிளம்பிய ஹெட் மாஸ்டர் சற்றே தலை சொரிந்து யோசனையுடன்... பப்புவைப் பார்த்து... கிளாஸ்ல சுப்பு பப்புவோட பக்கத்துல உட்கார்ந்திருப்பான்... ஓகே... இது பப்புவோட வீடு அப்படின்னா இதுக்குப் பக்கத்து வீடு சுப்புவோட வீடு... ஆம் ஐ ரைட் பப்பு... என்று சிரித்துக்கொண்டே பப்புவைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்

கிளாசில எனக்குப் பக்கத்துல உட்கார்ந்தா அவன் வீடும் என் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கணுமா... என்ன சார் உங்க லாஜிக்... நொந்து கொண்டான் பப்பு...

அப்போ பக்கத்து வீடு இல்லையா... சந்தேகமாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர்...

இல்ல சார்.. பதிலளித்தான் பப்பு 

அப்போ அவன் வீடு எங்க...கேட்டார் ஹெட் மாஸ்டர் 

பப்பு சற்றே கோபத்துடன்... உங்க வீட்டுக்குப் போகணும் சார்... என்றான் 

என் வீட்டுக்கா... ஏன்... விழி பிதுங்கினார் ஹெட் மாஸ்டர் 

சுப்பு உங்க பையன் சார்... என்று பப்பு கத்தியத்தைக் கேட்டு தெருவே ஒரு கணம் அமைதியில் லயித்தது.

...மீ.மணிகண்டன் 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பாலைவனத் தூண்கள் ... மீ.மணிகண்டன்

ஆகாயம் ஏறிப் பறக்கும் அத்தனை பேரும் பணத்தால் செல்வந்தர்களா? என்ற கேள்விக்கான எனது விடை... பாலைவனத் தூண்கள்.

சிறுகதை: பாலைவனத் தூண்கள் 

எழுதியவர் மீ.மணிகண்டன்

Jan-14-2021

"நந்தா உனக்கு லெட்டர் வந்திருக்கு போல இப்போதான் டைம் ஆஃபிஸ் போர்டு பார்த்துட்டு வரேன் உன் பேர் இருக்கு" என்றான் பஷீர் அறைக்குள் நுழைந்துகொண்டே. நீண்ட நாட்கள் கழித்து தனக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற செய்தியைக் கேட்டதும் நந்தனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை, அலுவல் முடிந்து வந்து குளியலுக்குத் தயாரான நிலையில் தேநீர் தயாரிப்பில் இருந்த நந்தன் கண்கள் அகலமாக விரிய "பஷீர் நிஜமாவா சொல்லுற?", "ஆமாடா" என்றான் பஷீர் தனது அலுவல் உடையை மாற்றிக்கொண்டு குளியலுக்குத் தயாராகிக்கொண்டே.

Reader's Comment


பாலைவனத் தூண்கள் ... மீ.மணிகண்டன்

"வரும்போது பார்த்தேண்டா டைம் ஆஃபிஸ் போர்ட் கிட்ட கூட்டமா இருந்துச்சு, இன்னிக்கு லெட்டர் டெலிவரி வந்திருக்கும்னு அப்பவே நினைச்சேன். ஆனா எனக்கு லெட்டர் வந்து ரொம்ப மாசம் ஆச்சா, அதான் இப்பவும் வந்திருக்காதுன்னு நினைச்சு போர்டை பார்க்காம நேரா ரூமுக்கு வந்துட்டேன்", என்று பஷீரிடம் சொல்லிக்கொண்டே, "யார்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கும்?" என்று தனக்குத்தானே கேள்விகேட்டுக்கொண்டு உற்சாகத்தில் "ஊ..லல்லல்லா" பாடினான் நந்தன். 

"நின்னு பாடிக்கிட்டே இருந்தா எப்படி தெரியும் போய் வாங்கிட்டு வாடா" என்றான் பஷீர். "இப்படியேவா?" என்று தான் குளிக்கத் தயாரான நிலையில் தலையில் தேய்த்த எண்ணை வடிவதை காட்டிக்கொண்டே நகைப்புடன் கேட்டான் நந்தன்.

"சரி சரி அப்ப குளிக்கப்போ" என்றான் பஷீர் 

"டீ போட்டிட்டிருக்கேண்டா கொஞ்சம் பொறு" என்றான் பதிலுக்கு நந்தன்.

"தாங்ஸ் டா, அதுல இஞ்சி போட்டியா" கேட்டான் பஷீர்

"ம்" பதிலளித்தான் நந்தன்.

நந்தனும் பஷீரும் மூன்றாண்டு கால நண்பர்கள். இருவரும் ஒரே கான்ட்ராக்ட்டிங் கம்பெனியில் ஒரே விதமான வேலை பார்க்கும் ஊழியர்கள். இந்தக் கம்பெனி கேம்பில் மொத்தம் ஐந்து பிரிவுக் கட்டிடங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சுமார் நூறு அறைகள் ஒவ்வொரு அறையிலும் அதிகபட்சம் இரண்டு நபர்கள் என்கிற கணக்கில் ஊழியர்களுக்கு அறைகள் ஒதுக்கிக்கொடுத்திருக்கும் நிர்வாகம். மூன்றாண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து இந்த சவூதி அரேபியாவிற்கு ஒரு ஏஜெண்சி மூலமாக வேலைக்கு வந்தவர்கள்தான் நந்தனும் பஷீரும். சவுதிக்கு வந்தபிறகுதான் நந்தனும் பஷீரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனார்கள். உறவுகள் நட்புக்களை ஊரிலே விட்டுவிட்டு வந்து ஆண்டுக் கணக்காக வேலைபார்க்கும் நந்தன் பஷீர் போன்ற நபர்களுக்கு இந்தக் கேம்ப் தான் உலகம்.  இங்குள்ள நபர்கள் தான் உறவுகள். இங்கே நந்தன் பஷீர் போல நிறையப் பேர்கள் உண்டு, உதாரணத்திற்கு குமரன் என்கிற சென்னையைச் சேர்ந்தவர் உண்டு, கிறிஸ்டோபர் என்கிற கன்னியாகுமரிக் காரர் உண்டு, வாஹித் என்கிற ராமநாதபுரத்துக் காரர் உண்டு, ஆப்ரஹாம் மேத்யூ என்கிற கேரளத்துக்காரர் உண்டு, தமிழ்விந்தன் என்கிற இலங்கைக்காரர் உண்டு, காலித் பாய் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உண்டு, இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே கேம்பில் வாழ்ந்து பயணித்து வரும் உறவுகள். இவர்கள் அனைவருக்கும் ஒரே உணவுக் கூடம் ஒரே சமையல். காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணிவரை, என்கிற கணக்கில் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்ப்பவர்கள்தான் இந்தக் கேம்பில் இருப்பவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை. ஒரு நாளில் எட்டு மணிநேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்று உலகச் சட்டம் சொல்லலாம் அதை நடைமுறையில் இவர்கள் கண்டதில்லை, இவர்கள் அதை பொருட்படுத்தவும் இல்லை. இங்கே வசிக்கும் நிறைய ஊழியர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் ஊழியர்கள், கப்பலிலிருக்கும் கிரேன் ஆபரேட்டர்கள், ஃபோர்க் லிஃப்ட் ஆப்பரேட்டர்கள், கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதற்கு குனிந்து நிமிர்ந்து உடலுழைப்பு நல்குபவர்கள், இப்படி உடலுழைப்பு நல்குபவர்களை லேபர் என்றழைக்கிறது ஆங்கில வார்த்தை, இறக்கிய சரக்குகளை பி.எல். படி சரி பார்த்து பிரித்து வைத்து, இரவு பகல் என்று இருபத்திநான்கு மணிநேரமும் காவல் செய்யும் கண்காணிப்பாளர்கள், சரக்குகளின் உரிமையாளர்கள் வரும்பொழுது அவர்களிடம் சரியானபடி பொருட்களை டெலிவரி செய்யும் விநியோகிப்பாளர்கள் என்று பலவகை உண்டு. இவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்க கேம்ப்பின் உள்ளேயே சமையற்கூடமும், சமையல் ஊழியர்களும் உண்டு.

தயாரான தேனீரை கோப்பையில் இட்டு பஷீரிடம் நீட்டினான் நந்தன். பெற்றுக்கொண்ட நந்தன், "சீக்கிரம் குளிச்சுட்டு போடா மணி இப்பவே எட்டு ஆகிடுச்சு ஒன்பது மணிக்கு டைம் ஆஃபிஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க தெரியுமில்ல?".

தானும் ஒரு கோப்பையில் தேநீர் இட்டு அதை சுவைத்துக்கொண்டே "ம்... பயங்கர பசிடா மொதல்ல டீ, அப்பறம் குளியல் அப்பறம்தான் டைம் ஆபீஸ்" என்று வரிசைப்படுத்திவிட்டு தேநீரைச் சுவைக்கத் தொடர்ந்தான் நந்தன்.

நூறு அறைகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, இந்த நூறு அறைகளுக்கும் பொதுவாக மேல் தளத்திலோ கீழ் தளத்திலோ அமைந்திருக்கும் சுமார் இருபது குளியல் அறைகள். கூடுமான வரை காலை நேரமும் சரி மாலை நேரமும் சரி ஷிஃப்ட்க்கு செல்பவர்கள் ஷிஃப்ட் முடித்து வந்தவர்கள் என குளியல் பகுதி கூட்டமாகவே இருக்கும். நட்புகளுடன் உரையாடி இந்தக் கூட்டத்திற்குள் காத்திருந்து பாட்டுப்பாடி குளித்து முடித்து அறைக்குத்திரும்புவதே ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு. இன்றையதினம் டைம் ஆஃபிஸ் நோட்டீஸ் போர்டில் கடிதம் வந்தவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது அல்லவா குளியல் பகுதியில் அதிகமாக கடிதம், ஊர், திருமணம், வீடு, நிலம், அத்தை மகள், மாமன் மகள், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, நண்பன், அண்ணன், அக்கா என்ற வகையான பேச்சாகவே இருந்தது.

இவைகளின் நடுவே பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகித்தது. குளியல் அறைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்ததால் தானும் வரிசையில் காத்திருந்தான் நந்தன். நின்றிருந்த வேளையில் தனக்கு யாரிடம் இருந்து கடிதம் வந்திருக்கும் என்கிற நினைப்பு மீண்டும் ஆவலைத் தூண்டியது, எப்போ ஊருக்கு வருவேன் என்று அப்பா அம்மா கேட்டிருப்பார்களோ, நண்பர்கள் யாரவது ஊருக்கு வரும்போது பொருட்கள் ஏதாவது வாங்கி வரச்சொல்லியிருப்பார்களோ, யாருக்காவது திருமணம் நிச்சயம் ஆகியிருக்குமோ, உறவுகள் யாராவது யாரையாவது விசாரிக்கச்சொல்லி எழுதியிருப்பார்களோ, இப்படியான பல சிந்தனைகளின் ஊடே தன்னைப்போலவே அருகாமையில் வரிசையில் நின்றிருந்த சக ஊழியர்களின் உரையாடல்களும் நந்தனின் காதுகளைத் தீண்டியது.

அப்படியான உரையாடல்களில் சில…

"தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வாங்கித்தான் ஏஜெண்டுக்கு கொடுத்தேன், சீட்டு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு அதுக்கு அப்புறம் தான் ஊருக்கு ஏதாவது பொருட்கள் வாங்குவது பற்றி யோசிக்கணும்"

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், இருந்தாலும் அப்பா சொல்றாரு வெறுங்கையோடு எப்படிடா அனுப்பறது, கடனை உடனை வாங்கி அனுப்ப முடியுமா ஒரு அஞ்சு பவுனாவது போடணும்"

"வட்டிப் பணம் கொடுக்கலைன்னா வீட்டு வாசலுக்கு வந்து மானத்தை வாங்கிடுவான்னு வட்டியை விடாம காட்டுறாங்க இப்போ ரெண்டு மாசமா வாடகை குடுக்கலையாம் வட்டிக்காரனுக்கு பதில் வீட்டுக்காரன் மானத்தை வாங்கப்போறான்"

"அந்தப் பொண்ணுக்கு சவூதி மாப்பிள்ளை வேண்டாமாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன?"

"நான் என்ன ஃபிளையிட் ஏறி வந்து கலெக்டர் உத்தியோகமா பாக்குறேன், பாக்குறது லேபர் வேலை இதுக்கெல்லாம் அந்தப் பொண்ணு சம்மதிக்குமா, அதான் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"என் பையன் கல்லூரியில் அவுங்க டிபார்ட்மெண்ட்லேயே முதல் மாணவனா வந்திருக்கானாம், ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா, வருஷக் கணக்கா தள்ளி இருந்தாலும் பிள்ளைங்களை அந்த ஆண்டவன் சந்தோஷமா வச்சிருந்தா அது போதும்"

வீடு கிரகப் பிரவேசம்ன்னு பத்திரிகை வந்திருக்குடா, இங்க இருந்துட்டு என்ன செய்யுறது, வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கேன்.

"மூணு மாசமா லெட்டர் வரலை இன்னைக்காவது வந்திருக்கும்னு ஆசையா நோட்டிஸ் போர்டில் என் பேரைத் தேடினேன், ம்ஹூம், இன்னைக்கும் வரலை"

"கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்தில இங்க வந்தேன், இப்போ ரெண்டு வருஷம் ஆச்சு, எப்போ வருவேன்னு கேட்குது, கடனை அடிக்காம எப்புடி ஊருக்கு போக முடியும்?"

"ரெண்டு வருஷ சம்பாத்தியம் ஊருல நிலம் வாங்கி என் பேர்ல ரெஜிஸ்டர் பன்னிட்டான்டா மச்சான், ஐ ஆம் ஹாப்பி"

"ஒவ்வொரு தடவையும் ரெண்டு லெட்டர் மூணு லெட்டர் எழுதுறா மச்சான், லவ்வோ லவ்வு, எப்படா ஊருக்குப் போவோம் கல்யாணத்தை முடிப்போம்னு இருக்கு"

"டேய் மாப்ள இங்க கேளுடா, போன வாரம் லீவு முடிஞ்சு ஊர்ல இருந்து வந்தான்ல நம்ம ராஜேசு"

"ஆமா"

"அவன் மொதல்ல ஊர்ல இருந்து வந்தபோது அவன் பொண்ணுக்கு ஒரு வயசாம், இப்போ மூணு வருஷம் காண்ட்ராக்ட் முடிச்சுட்டு லீவுல போனான், இப்ப அவன் பொண்ணுக்கு நாலு வயசு ஆகுதா, இவனைப் பார்த்து அடையாளம் தெரியாம யாரும்மா இந்த மாமான்னு கேட்குதாண்டா.. ஹா ஹா ஹா"

இந்தச் சிரிப்பொலிகூட நந்தனின் காதுகளைத் தொட்டது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்ப தில்; 

என்கிறான் வள்ளுவன். ஆனால் இவர்களிடம் அந்த குறளைச்சொல்லி நியாயம் கேட்க முடியாது. சராசரி வாழ்க்கையில் இதுபோன்ற வலிகளை சிரித்துக் கிடப்பதுதான் இவர்களின் பாக்கியம்.

வார்த்தைப் பரிமாறல்களும் வரிசையும் மெல்ல மெல்லக் கடக்க ஒரு அறை காலியானது. குளியல் முடித்த நந்தன் அறைக்குத்திரும்ப நேரம் ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அறைக்குத்திரும்பிய நந்தன், "பஷீர் சாப்பாடு வாங்கீட்டு வந்துட்டியா, இன்னிக்கு என்ன டின்னர்?"

"என்ன புதுசா செஞ்சுடப் போறானுங்க, அதே கூசாக்காய் சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், சாதம். டேபிள்ள வச்சிருக்கேன், சாப்பிடு நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்", என்று நந்தனிடம் கூறிவிட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தைத் தொடரலானான் பஷீர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டி வி, வி சி ஆர் வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தான் பஷீர், ஆனால் அப்பொழுது அவனால் வாங்க இயலவில்லை, காரணம் அந்த மாதம் அவன் அக்கா வீட்டுக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது அதில் அவர் செய்த தொழில் சரியான வருமானம் தரவில்லை என்றும் புதுத்தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு கொஞ்சம் பணம் அனுப்பித்தரும்படியும் கேட்டிருந்தார், அவர் கேட்டிருந்த தொகையை அடுத்த இரண்டு  மாதங்கள் சம்பளம் வாங்கி அனுப்பி வைத்தான், பிறகு பெற்றோரிடமிருந்து எதிர்பாராத செலவுகள் என்றும் கடிதம் வரவே அவற்றையும் சரிசெய்து அவன் விரும்பிய டி வி, வி சி ஆர் வாங்க இதோ ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. சென்ற வாரம்தான் புதிதாக வாங்கி வந்திருந்தான், அதில் தான் இப்போது 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். படம் பார்க்கும் ஆவல் காரணமாக நந்தனை சாப்பிடச்சொல்லிவிட்டு தான் பிறகு சாப்பிடுவதாகச்சொன்னான்.

"அவங்கள குறை சொல்லாதடா, கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க, அவங்களும் நம்மள மாதிரி கான்ட்ராக்ட்ல வந்தவுங்கதானே, கம்பெனி விதவிதமா காயும் கறியும் வாங்கிக் கொடுத்தா அவங்க சமைக்கப் போறாங்க. கம்பெனி வாங்கிக் கொடுக்காததுக்கு கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க?" என்று சமையல் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினான் நந்தன்.

"யப்பா, தெரியாம சொல்லிட்டேன், கிச்சன் ஸ்டாஃப் மேல எந்த தப்பும் இல்லை. சரியா? இப்போ நீ சாப்பிடு சீக்கிரம் பொய் உன் லெட்டரை வாங்கிட்டு வா, டைம் ஆஃபிஸ் மூடிடுவாங்கள்ள?" என்று நந்தனை அவசரப்படுத்தினான் பஷீர்.

"ஓ.கே.டா நீயும் அப்பறம் தான் சாப்பிடுறேன்னு சொல்லுற, நானும் உன் கூடவே சாப்பிடுறேன், இப்போ போய் லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன்." என்ற நந்தன் தான் உடுத்திய பாண்ட் ஷர்ட் சரியாக இருக்கிறதா என்று சுவற்றில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின்முன் நின்று தெரிந்தவரை எட்டி எட்டி சரி செய்து கொண்டான், கண்ணாடியின் முன்னிருந்த சீப்பை எடுத்து தலை வாரினான், சீப்பிற்கு பக்கத்தில் இருந்த யார்ட்லி பவுடர் டப்பாவை எடுத்து தனது இடதுகையில்  லேசாகக் கொட்டிக்கொண்டான் பவுடரை இரண்டு கைகளாலும் தடவி பிறகு மிகவும் லேசாக பட்டும் படாமலும் முகத்திற்குத் தடவிக்கொண்டான், " வரேண்டா பஷீர்" என்று டைம் ஆஃபிஸ் கிளம்பினான்.

"நந்தா, கான்டீன் திறந்திருந்தா வரும்போது குபூஸ் (ஒரு வகை ரொட்டி, அரபு மொழியில் 'குபூஸ்') வாங்கிட்டு வாடா, சாம்பாருக்கு நல்லா இருக்கும்." என்றான்,

"ஓகேடா", என்று பஷீருக்கு பதிலளித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் நந்தன்.

வெகு சீக்கிரமாகவே அறைக்குத்திரும்பினான் நந்தன் கையில் குபூஸுடன். 

"என்னடா, யார்கிட்ட இருந்து லெட்டர்" என்று கேட்டான் பஷீர்.

"டைம் ஆஃபிஸ் மூடிட்டாங்க பஷீர்", என்றான் சற்று தோய்ந்த குரலில்.

"அதான் சொல்லிக்கிட்டே இருந்தேன் சீக்கிரம் போடான்னு, சரி நாளைக்கு டூட்டி முடிஞ்சு வரும்போதே நேரா டைம் ஆஃபிஸ் போயிட்டு, லெட்டரை வாங்கிட்டு வந்துடு." என்று சொல்லிவிட்டு 'உள்ளத்தை அள்ளித்தா'வைத் தொடர்ந்தான் பஷீர்.

இருவரும் உணவருந்தி முடித்ததும், பஷீரிடம், "டேய் வெளில நல்லா காத்து வருது வரியா ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்" என்று நடக்கக் கூப்பிட்டான் நந்தன். பஷீரும் சம்மதிக்க இருவரும் அறையைப்பூட்டிக்கொண்டு வெளியில் நடக்கக் கிளம்பினர்.

"என்னடா ஒண்ணுமே பேசாம வர்ற, லெட்டர் யார்கிட்ட இருந்து வந்திருக்கும்னுதான நினைக்கிற?" கேட்டான் பஷீர்.

"இல்லடா, அது எனக்கு நல்லாத்தெரியும், எங்க அப்பா அம்மாதான் எழுதியிருப்பாங்க, எப்போ ஊருக்கு வரேன்னு கேட்டிருப்பாங்க, நானும் வந்து மூணு வருஷம் ஆச்சு, காசும் கொஞ்சம் சேத்திருக்கேன், இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதோட ஊருக்குப்போய் ஏதாவது தொழில் செஞ்சு செட்டில் ஆகிடனும்"

"நந்தா, இப்டித்தாண்டா முதல் முறை பிளைட் ஏறும்போது எல்லோரும் சொல்றாங்க, ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது"

"ஏண்டா அப்படி சொல்ற, நான் நினைச்சதெல்லாம், கொஞ்சம் காசு சேக்கனும் சீக்கிரம் ஊருக்குப்போய் பிசினஸ் பண்ணனும், இப்போ என் கணக்குப்படி எனக்கு இது போதும் இனி புது காண்ட்ராக்டுக்கு நான் சைன் பண்ணப் போறதில்ல, போதும், ஊர்ல தொழில் செஞ்சு சொந்தக்காரங்க பக்கத்துல இருந்துக்கிட்டு அக்கம் பக்கத்துல எல்லா விசேஷத்துக்கும் அட்டண்ட் பண்ணிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கணும்” என்றான் நந்தன் ஒரு வித மன நிறைவுடன்.

"நந்தா, இந்த சவுதிக்கு வர்ற எல்லோருடைய மனநிலையும் இதான்டா, நீ ஹாப்பியா இருப்படா" என்று நந்தனுக்கு ஆதரவாகச்சொன்னான் பஷீர்.

அறைக்குத்திரும்பிய இருவரும் சற்று நேரத்தில் தத்தமது கட்டில்களுக்கு உறங்கச்சென்றுவிட்டனர். கடிதம் பற்றிய நினைப்பு தொடர்ந்துகொண்டே இருந்ததால் நந்தனுக்கு இரவு உறக்கம் சற்று கடினமாகவே இருந்தது.

அடுத்தநாள் விடியும் முன்னர் எழுந்துகொண்டான் நந்தன், குளியல் அறைகள் பகுதியில் மிகுந்த நடமாட்டம் இல்லை ஒன்றிரண்டு அறைகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன காரணம் அந்த அதிகாலை நேரம், அவ்வளவு சீக்கிரம் இருளிலேயே எழுந்துகொண்டான் நந்தன். 

காலை ஷிஃப்டுக்கு செல்லும்முன் டைம் ஆஃபிஸ் திறந்திருந்தாலும் கடிதங்கள் பெறுவதற்கான நேரம் மலையில் மட்டும்தான் எனவே மாலை வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் என்று மனதைச் சமாதனப் படுத்திக்கொண்டு ஷிப்டுக்கு அழைத்துச்செல்லும் பேருந்தின் வரவை நோக்கி டைம் ஆஃபிசின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான் நந்தன்.

கப்பலின் அருகாமையில் சரக்குகளின் அணிவகுப்பில் தனது உத்தியோகத்தை மிகுந்த சிரமத்துடன் பார்த்துவந்தான் நந்தன். அதிகமாக அவனது சிந்தனையை கடிதமே ஆட்கொண்டிருந்தது. மதியம் வரை மிகுந்த சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தினான் நந்தன். மதிய உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் வண்டி நந்தன் வேலை பார்க்கும் கப்பலின் அருகில் வந்து நின்றது. வண்டியின் உள்ளிருந்து ஒருவர் ஒரு பாலிதீன் பையை உணவுடன் நீட்ட அதைப் பெற்றுக்கொண்டான் நந்தன், "அண்ணா எத்தனை தடவை சொல்லியிருக்கோம் பிளாஸ்டிக் பைல சூடு சாதத்தை அப்படியே போடாதீங்கன்னு?" என்று வண்டியில் இருப்பவரிடம் கேட்டான் நந்தன்.

"ஏன் தம்பி எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி பிளாஸ்டிக் பைல போடணும்னு, ஒரு நாளைக்கு மத்தியானத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு சாப்பாடு கட்டுறோம், எல்லாத்துக்கும் கம்பெனி எங்ககிட்ட பக்சா கொடுத்திருக்கு, கம்பெனி கொடுக்கிறத வச்சு நாங்க காலம் தள்ளுறோம், வரட்டுமா தம்பி, அடுத்த கப்பல்ல உங்கள மாதிரியே பசியோட நிப்பாங்க." என்று வண்டியிலுருந்தவர் கூற வண்டி அடுத்த கப்பல் நோக்கிப் புறப்பட்டது.

மாலையில் வேலை முடிந்து கேம்ப் திரும்பிய நந்தன் முதல் வேலையாக டைம் ஆஃபிஸ் சென்றான், வெளியில் பெரிய வரிசை நின்றது, ஒருவரிடம் வரிசைக்கான காரணத்தைக் கேட்டான், அவரும் புதுக் கான்டராக்டில் சேர விருப்பம் உள்ளவர்களை டைம் ஆஃபிஸ் வந்து பெயர் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள் அல்லவா அதற்குப் பெயர் கொடுக்கத்தான் இந்த வரிசை என்றார்.

நந்தனோ இது தனக்குச்சம்பந்தம் இல்லை என்ற நினைப்பில் கடிதம் வாங்க டைம் ஆஃபிஸ் அதிகாரியை நாடினான். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியில் அனுப்புனர் விலாசம் பார்த்தான் அவன் நினைத்ததுபோல அவனது அப்பாவிடமிருந்து வந்திருந்தது. பொறுமை இழந்தவனாய் ஆவலுடன் கடிதத்தை அங்கேயே பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

கடிதத்தைப் படிக்கப் படிக்க அவனது உற்சாகம் சற்றே குறையத் துவங்கியது, அப்படி என்ன அப்பா எழுதியிருந்தார், ஆம், ஊரில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது எதுவும் சமாளிக்க முடியவில்லை இன்னமும் தாமதிக்க வேண்டாமென்று வீடு கட்ட லோன் போட்டிருந்தோம் அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது இன்னும் ஓரிரு நாட்களில் பணம் வந்துவிடும் வேலைகளைத் துவங்கிவிடுவோம், உன்னிடம் இருக்கும் சேமிப்பையும் அனுப்பினால் கடனை சீக்கிரம் அடைந்துவிடலாம். உன்னுடைய அடுத்த கான்டராக்ட் எப்பொழுது ஆரம்பம் ஆகிறது? இந்த வயசிலேயே சம்பாதித்துக்கொண்டால்தான் நல்லது, இப்பொழுது உறவுகளை சொந்தங்களை பிரிந்து இருக்கிறோம் என்று எண்ணாதே, பின்னர் கல்யாணம் குழந்தை என்று வந்துவிட்டால் அவர்களைப் பிரிந்து சென்று சம்பாதிப்பது என்பது கடினமாகிவிடும். நல்ல செய்திக்கு பதில் போடவும். என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்து முடித்த நந்தன் டைம் ஆபிஃஸ் வெளியில் நின்றிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்றான்.  நேற்றிரவு பஷீர் சொன்ன வரிகள் மனதில் அலை மோதியது "ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது"

...மீ.மணிகண்டன்

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

பிரபலமான இடுகைகள்