வியாழன், 16 ஜூன், 2022

மேப்பிள் மனசு ... மீ.மணிகண்டன்

ஒரு போட்டியில் இருபது சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது 'மேப்பிள் மனசு'

மேப்பிள் மனசு ... மீ.மணிகண்டன்


வணக்கம் அன்பு நண்பர்களே,

"மேப்பிள் மனசு", இது அமெரிக்க நிகழ்வுகளைக் கலந்து நான் சித்தரித்த ஒரு சிறுகதை. அமெரிக்கா வந்துபோகும் ஒரு தமிழகத்துத்தாயின் மனசு இந்த "மேப்பிள் மனசு". படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
...மீ.மணிகண்டன் 

சிறுகதையின் தலைப்பு: "மேப்பிள் மனசு"
ஆசிரியர்: மீ.மணிகண்டன்
எழுதிய நாள் - March-08-2022
இடம்: ஆஸ்டின், டெக்சாஸ்

சூரியன் வெளியே வர நாணும் நவம்பர் மாதக் காலை, சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து வெளியேற, வெள்ளை ஹாண்டா சிவிக் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது, தன்னகத்தே ஐம்பது வயது மதிக்கத்தக்க மேகலாவையும், மேகலாவின் மருமகன் பிரகாஷையும் புகுத்திக்கொண்டு இரண்டுமணி நேரப் பிரயாணமாக ஃபால்சம் நோக்கி விரையத் துவங்கியது. மேகலாவின் இந்த அமெரிக்கப் பயணம் அவளுக்கு விருப்பமில்லாத பயணம். மகளின் வற்புறுத்தலின் பேரில் இன்று இங்கிருக்கிறாள். 

Pic: Thanks Pixabay
காருக்குள் கதகதப்பு வெளியே குளிர். நவம்பரில் சிவந்திருந்த மேப்பிள் மரங்கள் சாலையை அழகு படுத்தியிருந்தது. அங்கே அந்த மரத்தின் அருகில் நின்று ஒரு இளஞ்சோடி தங்களை செல்ஃபீ எடுத்துக்கொண்டும் கதைத்துக்கொண்டுமிருப்பதை மகிழுந்திலிருந்து மேகலா பார்த்துக்கொண்டே கடந்தாள். இந்த மனிதன்தான் எத்தனை சுயநலக்காரன், மரத்தின் வேதனையைப் புரிந்துகொள்ள மனமில்லாமல் அதனை அழகு என்று ஆராதனை செய்கிறானே? இந்த மரங்கள் என்ன மருதாணி பூசி திருவிழா கொண்டாடுகின்றனவா அல்லது கோபாவேசத்தில் சிவந்தெழுந்து நிற்கின்றனவா? இரண்டும் இல்லை குளிர் நிறைந்த இந்த மாதத்தில் பகல் நேரத்தின் நீளம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக இலைகள் தங்கள் உணவை உருவாக்கும் செயல்முறையை நிறுத்துகின்றன ஒருவகையில் இலைகள் பசியில் துவளுவதாகவே தோன்றியது மேகலாவிற்கு, பசியால் துவண்டிருக்கும் இலைகளின் சோகத்தை மனிதன் சொர்கமாகக் காண்கிறானே என்று இயற்கையின்பால் கரிசனம் பூத்தாள் மேகலா.

மேகலாவின் நினைவைக் கலைத்தான் பிரகாஷ், "அத்தை ரொம்ப அமைதியா இருக்கீங்க, வீட்டுக்குப் போனதும் குளிச்சு டிஃபன் சாப்பிட்டுட்டு நல்லா தூங்குங்க ஜெட் லாக் சரியாயிடும், மாமாவும் வந்திருக்கலாம்... ரொம்பப் பிடிவாதமா வரமாட்டேன்னுட்டார்", சொல்லிக்கொண்டே தனது மகிழுந்தை வழியில் தென்பட்ட ஸ்டார்பக்ஸ் நோக்கித்திருப்பி ட்ரைவ் இன் வரிசையில் நின்றிருந்த வாகனங்களுடன் வரிசையில் நிறுத்தினான். "அத்தை, ஒரு ரெண்டு நிமிடம்.., எனக்குத் தெரியும் உங்களுக்கு இங்க எதுவும் பிடிக்காது அதான் பிரேமி காஃபி போட்டு ஃபிளாஸ்க்ல கொடுத்துட்டா", ஃபிளாஸ்கை மேகலாவிடம் நீட்டினான், "எனக்கு ஒரு மோக்கா மட்டும் வாங்கிட்டு கிளம்பிடுவோம், வீட்டுல பிரேமி டிபன் ரெடி பண்ணியிருப்பாள், ஆனா எனக்கு நேரம் இல்ல, உங்கள வீட்டுல விட்டுட்டு அப்படியே ஆஃபீஸ் கெளம்பணும்".  'பிரேமி டிஃபன் ரெடி பண்ணியிருப்பாள்' அப்படியென்ன செய்துவிடப் போகிறாள்? ஊற்றிய முட்டையையும் ஒருபக்கம் வேகாத ரொட்டியையும் மேகலாவின் மனத்திரை பிளாஷ்பேக் போட்டுக் காண்பித்தது. மேகலாவின் கண்கள் வரிசையில் நின்றிருந்த வாகனங்களின் மீது படர்ந்தது, இந்த ஸ்டார்பக்ஸ் வாசலில் காலையில் வாகனங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் மேகலாவுக்கு வழக்கமாக ஒரு கேள்வி எழும், இப்பொழுதும் எழுந்தது, பால் என்று சொல்லப்பட்டு எதோ ஒரு திரவத்தினில் காஃபி என்ற பெயரில் எதையோ அவர்கள் கலந்து கொடுக்க அதையும் குளிர் வெயிலென்று பாராமல் வாகனங்களில் தவமிருந்து வாங்கிச்செல்லும் இந்த மனிதர்கள், மாடுகளைக் குளிப்பாட்டி மடியில் பால்கறந்து மணக்க மணக்கப் போடும் காஃபியை என்னவென்று சொல்வார்கள்? 

சன்னலோரமாக நடந்துசெல்லும் அந்தக் கிழவர் மேகலாவின் எண்ண அலைகளைத் தன்வசமாக்கினார். அவர் தலைக்கு அணிந்திருந்த தொப்பிக்குக் கட்டுப்பட மாட்டேன் என பறந்துகொண்டிருந்தது பரட்டைத் தலைமுடி, வெள்ளைக் கன்னங்களில் செம்பட்டைத் தாடியும் தாடியைத் தொட்டுத்தொங்கும் மீசையும் சவரக்கத்திகண்டு பலவாரங்கள் ஆனதை உணர்த்தியது. கொஞ்சம் இளைத்த உடல், நிறைய நாள்கள் படிந்த சாலையோரத்துத் தூசி அவரின் உடை நிறத்தை சுமார் கருப்பு நிறத்திற்கு மாற்றியிருந்தது, தோளில் அவர் சுமந்திருந்த பை சற்று பருமனாக இருந்தது உள்ளே மாற்று உடை வைத்திருப்பாரோ? இல்லை தான் உடுத்தியிருக்கும் அழுக்கைவிடவும் மிகையான அழுக்கைச் சுமந்திருப்பாரோ? அவர் தன் இடது கரத்தில் ஓரடிக்கு ஓரடி அளவிலான அட்டைப் பேட்டியின் ஒரு பக்கத்து அட்டையைப் பதாகைபோல் ஆக்கிப் பிடித்திருந்தார் அதில் 'ஹோம்லெஸ்!!! ப்ளீஸ் ஹெல்ப்!!! காட் ப்ளேஸ்!!! என்ற ஆங்கில வாசகங்கள் அவரை வீடில்லாதவர் என்று பறைசாற்றிக்கொண்டும் மனித மனத்தின் ஈரத்தைச் சோதிப்பதாகவும் காட்சியளித்தது. அங்கே அந்தக் மகிழுந்தில் ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ஒருவர் இடது பக்கக் கண்ணாடியை இறக்கித் தனது இடது கரத்தால் ஏதோ நீட்டுகிறார் அந்தக் கிழவரும் பெற்றுக்கொள்கிறார். என்ன, ஒன்றிரண்டு டாலர்களாக இருக்கும், இன்னும் ஒன்றிரண்டு வாகனங்களைக் கடக்கும் முன் ஒருவேளை அவருக்கு ஒரு வேளை காஃபி குடிக்க தேவையான காசு கிடைக்கக்கூடும். அவருக்கும் தனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்று தோன்றியது மேகலாவிற்கு, அவர் கிடைக்குமிடத்தில் தங்கவேண்டும் கிடைப்பதை உண்ணவேண்டும். தனக்கு வீடு இருந்தாலும் தானும் விரும்பிய இடத்தில இருக்க முடியாது இதோ உதாரணத்திற்கு இப்பொழுது அமெரிக்கா, பிரேமிக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறையோ இருமுறையோ இங்கே வந்து போக வேண்டும், மகள் சொல்லுக்கு இணங்கவேண்டும். பிரகாஷும் மாமியாரின் மீது பாசமிருப்பதுபோல பிரேமியோடு சேர்ந்து நாடகமாடிவிடுவான் என்பது மேகலா நன்கறிந்தவொன்று. பிடிக்காமல் ஓரிரு மாதங்களைக் கடத்துவது என்பது காற்றடிக்கும் திசைக்கு  எதிர்த்திசையில் பலம்கொண்ட மட்டும் கடலுக்குள் துடுப்புப் போட்டுப் படகைச் செலுத்துவதற்குச் சமம் அதனால் இந்தமுறை எதிர்த்திசையில் துடுப்புப் போடத் தயாராக இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் மேகலாவின் கணவரும் பிரகாஷின் மாமனாருமான சந்திரன். 

தனது முறை வந்ததும் மோக்காவை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி விண்டோ நோக்கிக் மகிழுந்தை நகர்த்தினான் பிரகாஷ். காஃபியை வாங்கித் தனது இருக்கைக்கு அருகில் கப் ஹோல்டரில் வைக்க, ஸ்டார்பக்ஸ் வளாகத்தை விட்டு வெள்ளை ஹாண்டா தனது ஃபால்சம் பயணத்தைத் தொடர வெளியேறியது. அந்த ஹோம்லெஸ் கிழவர் இப்போது கையில் ஸ்டார்பக்ஸ் குவளையோடு அங்கே பாதையோரமாக அமர்ந்திருந்தார். 

சாலையோரத்து மரங்கள் பச்சை மஞ்சள் பிரவுன் என்ற நிறங்களில் இலைகள் தாங்கி வரிசையாக அணிவகுத்து நின்றிருந்தது என்னவோ முக்கியப் புள்ளியை வரவேற்கும் ராணுவ அணிவகுப்புப்போலக் காட்சிதந்தாலும் தானொன்றும் அத்தனை முக்கியமானவள் அல்ல நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் என்பதுபோல அந்த மரங்களின்மீது பதித்துக் கடந்துகொண்டிருந்தது மேகலாவின் பார்வை. இருபுறமும் அடர்ந்த கானகத்தின் இடையில் நீண்ட தார்ச்சாலையில் நிதானமாகப் பயணித்துக்கொண்டிருந்தது பிரகாஷின் மகிழுந்து. பயணத்தின் மௌனத்தைக் கரைக்க 'செவ்வந்திப் பூவெடுத்தேன்...' எனப் பழனிபாரதியின் பாடலை பி. சுசீலா, சிற்பியின் இசையில் வசீகரித்துக்கொண்டிருந்தார். இளம் சூரியனை அவ்வப்பொழுது கடந்துகொண்டிருந்த மேகப் பஞ்சுகள் குட்டிக்குட்டியாகப் பழைய நிகழ்வுகளை மேகலாவின் மனதில் மீட்டுக் கொடுத்து மிதந்துகொண்டிருந்தன. அன்று அந்த பூச்செடியை மான் மேய்ந்து விட்டுச் சென்றுவிட்டதென எத்தனை கோபத்தைக் கொட்டினாள், தாய் என்றுகூடப் பாராமல் எத்தனை வசவு... மான்கள் அங்கே இருள்சூழ்ந்த மாலையில் வரும் என்று சொல்லக் கேட்டதுண்டு ஆனால் மேகலாவோ ஒருமுறைகூட மான்கள் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து பார்த்ததில்லை.  "நான்தான் காரிலிருந்து இறங்கியதும் அந்தப் பூத்தொட்டியை வெளியில் தரையில வச்சுட்டு கதவு திறக்க வந்துவிட்டேன் அதன்பிறகு அப்படியே மறந்துட்டேன், நீ சும்மாதானே என் பின்னால வந்த... ஞாபகமா தொட்டியை வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கலாமில்ல? எல்லாம் போக காலைலதான் எனக்கு ஞாபகம் வந்தது வெளியில பொய் பார்த்தா தொட்டி இருக்குது செடியக் காணோம், அட போம்மா...", என்று பிரேமி தொடுத்த வசவுச் சொற்களைத்தாங்கிக்கொண்டு மேகலா எப்படி மௌனமாகக் கடந்தாள் என்பது அந்த மேகத்திற்குப் புரியும். ஆனால் முடியாது இந்தமுறை பிரேமி என்ன பேசினாலும் எதிர்த்துப் பேசிவிடவேண்டும், 'நான் அவளுக்குத்தாயா... இல்லை அவள் எனக்குத்தாயா?' என்று மனம் கொதித்தெழுந்து அடங்கியது.

வீடுகளின் முன்னால் மேயும் மான்கள்

மகிழுந்தில் இப்போது இளையராஜா 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...' பாடிக்கொண்டிருந்தார், பாடல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது மேகலாவின் மனது பாடலில் லயிக்கவில்லை எனினும் அவளையும் அறியாமல் பாடல் வரிகள் அவள் காதுகளில் புகுந்து அந்த கல்யாண நாள் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தது. அது பிரேமியின் தோழி நளினியின் திருமணம் முதல் ஆண்டு நிறைவு விழா. திருமணம் இந்தியாவில் நடந்தேறியதால் அமெரிக்காவில் அந்த நேரத்தில் அழைப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யவில்லை ஆதலால் முதல் ஆண்டு நிறைவு விழாவை தனது நட்புறவுகளை அழைத்து வீட்டிலேயே விமரிசையாகக் கொண்டாடினாள் நளினி. அந்தக் கூடிமகிழும் விழாவிற்குத் தனது தோழியின் தாயார் எனும் முறையில் மேகலாவையும் அழைத்திருந்தாள் நளினி. அந்த விழா வீட்டில்தான் தனக்கு எத்தனை அவமரியாதையை ஏற்படுத்திவிட்டாள் பிரேமி?! வந்தவர்கள் எல்லோரும் சின்னச்சின்னக் குழுவாக மகிழ்ந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும்வேளை நாவறட்சியால் நீர் அருந்தவேண்டி மேகலா சமையலரைப் பக்கம் சென்றுபார்த்தாள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்தநீரை நேரிடையாகப் பிடித்து அருந்தும் பழக்கம் மேகலாவிற்குத் தெரிந்திருந்த காரணத்தால் அக்கம்பக்கத்தில் ஒரு குவளையைமட்டும் தேடினாள் அருகில் ஒரு மேசையில் பழரசம் நிறைத்த புட்டிகளும் சில காகிதக் குவளைகளும் இருப்பதைக் கண்டாள். அதிலிருந்து ஒரு குவளையை எடுத்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நீரைப் பிடித்து அருந்தி முடித்ததுதான் தாமதம், அருகில் வந்த ஒரு சிறுமி, "ஏய்..ஆன்டி என் கப்பை யூஸ் பண்ணிட்டாங்க" என்று தன் குரலை உயர்த்த, இதைக் கேட்டு அதிர்ந்து என்னவோ எதோ என்று ஒரு சிறு கூட்டம் அங்கு கூடிவிட, தான் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தாள் மேகலா, கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு தாயின் அருகில் வந்த பிரேமி, "ஏம்மா கப்பில் பேர் எழுதியிருக்கிறதுகூட தெரியாதா? படிக்கத்தெரியாத தற்குறியா நீ?" என்று அத்தனைபேர் மத்தியிலும் பகிரங்கமாகக் கேட்க, தனது சுயகௌரவம் அங்கு கூடியிருந்த அத்தனை பார்வைகளாலும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மேகலாவின் கண்கள் பனித்தன. தன் கையில் இருந்த பேப்பர் குவளையைத் திருப்பிப் பார்த்தாள் நீல மார்க்கர் பேனாவால் ஆங்கிலத்தில் 'நேஹா' என்று எழுதியிருந்த பெயரை அப்பொழுதான் உணர்ந்தாள். பின்னர் அந்த மேசையைப் பார்க்கும்பொழுது அத்தனை குவளைகளிலும் பெயர்கள் எழுதப்பட்டிருப்பது மேகலாவின் கண்களுக்குப் புலப்பட்டது. சிறுமியைச் சமாதனப் படுத்தி வேறு குவளையை கொடுத்துவிட்டு தன் தாயிடம் திரும்பிய பிரேமி, "அம்மா தெரியாத இடத்துல நீபாட்டுக்கு எதையாவது பண்ணி வைக்காத, ஏதாவது வேணும்னா என்னைக்கேளு, இப்படி என் மானத்தை வாங்காதே" என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லிவிட்டு நகர்ந்தாள். கலங்கிய கண்களுடன் கட்டாய புன்னகை வரவழைத்து அந்தக் கூட்டத்திலிருந்து நகர்ந்ததை நினைத்தபொழுது இப்பொழுதும் மேனி புல்லரித்தது மேகலாவிற்கு. இந்தமுறை அதுபோல் பிரேமி பேச முனைந்தால் "வாயை மூடு நீ ஒண்ணும் எனக்கு அறிவுரை சொல்லவேண்டாம்" என்று அவள் வாயை அடைக்க வேண்டும். 'அவள் எனக்குப் பிறந்தாளா.... நான் அவளுக்குப் பிறந்தேனா?' என்று தனக்குள் சூளுரைத்துக்கொண்டாள் மேகலா. இளையராஜா 'ஒரு கணம் ஒரு யுகமாக...' என்று தொடர மகிழுந்து ஒரு சிறு மலைப் பகுதியைக் கடந்துகொண்டிருந்தது.  

காடுகள் மலைகள் நதிகளையெல்லாம் தாண்டி விரைந்துகொண்டிருந்த மகிழுந்து தற்காலிமாக ஒரு சிறிய டவுன் போன்ற பகுதியை அடைய அங்கே இருந்த சாலைவிதிப் பதாகை 'இது பள்ளிக்கூடப் பகுதி, காலை பள்ளிக்கூட நேரம்' என்று விதியைச் சொல்ல சாலைவிதிக்குக் கட்டுப்பட்டு வேகமாகச் செலுத்திவந்த மகிழுந்தை இருபத்தைந்து மைல் வேகத்திற்குக் குறைத்து மெதுவாகச் செலுத்தினான். ஆங்காங்கே சாலையோரத்தில் சிறுவர் சிறுமியர் தனியாகவும் உடன் பெற்றோர் மற்றோருடனும் புத்தகப் பைகள் சகிதமாக நடந்துசென்றுகொண்டிருந்தனர். புள்ளினங்கள் கூடுதாண்டிப் பறக்கும் வேளை, பிள்ளைகள் வீடுதாண்டிப் புறப்படும் காலை, புள்ளினங்களின் தேடல் உணவு, பிள்ளைகளின் தேடல் அறிவு. மேகலாவிற்கு அந்த மழலைகளைப் பார்க்கும்பொழுது பறவைகளாகத்தான் தெரிந்தார்கள், பறவைகளில் பல நிறம், இந்தப் பச்சிளம் பிள்ளைகளின் தோல்நிறங்களிலும் கருப்பு, சிவப்பு, மாநிறம் என்று பல நிறங்கள், இருந்தாலும் ஒற்றுமையாகப் பேசிச்சிரித்துக் கடந்தனர். சிறுமிகளில் சிலர் தலை பின்னியிருந்தனர் சிலர் வகிடெடுத்து இரண்டு குதிரைவல்கள் போட்டிருந்தனர், அந்தக் குழந்தை சற்று வித்தியாசமாக தலையில் குட்டிக் குட்டியாக ஏகப்பட்ட சடைகால்கள் பின்னியிருந்தாள், சற்று தள்ளி அங்கொரு சிறுமி தன்தலைமுடிக்கு சுதந்திரம் கொடுத்திருந்தாள். 'பிரேமிக்கும் என்றாவது ஒருநாள் குழந்தையொன்று பிறந்து வளரும்பொழுது இப்படிப் பள்ளிக்குச் செல்லும் நாள்களில் தன்னை இங்கு வரச்சொல்லுவாள் அந்தக் குழந்தையை கவனிக்கும் பொறுப்பையும் தன்னிடமே தள்ளிவிடுவாள் மேற்கொண்டு அது சரியில்லை இது முறையில்லை என்று தனக்கே பாடம் எடுப்பாள் முடியாது அப்படியொரு நாள் வரும்பொழுது திட்டவட்டமாக வரமுடியாது என்று சொல்லி ஊரிலேயே இருந்துவிட வேண்டியதுதான். எனக்கு ஒரு பயமும் இல்லை, என்னை அவள் பெற்றாளா.... நான் அவளைப் பெற்றேனா?' மனம் மீண்டுமொருமுறை விண்ணைத்தொட்டுத் திரும்பியது..

பள்ளிக்கூடப் பகுதியைக் கடந்ததும் மகிழுந்து தனது பழையவேகத்தை எட்டிக்கொண்டிருந்தது. கோவையில் தன் கணவனோடு இருக்கும் நாள்கள்தான் எத்தனை ஆனந்தம். தனக்கும் அவருக்குமான சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொண்டு முடிந்ததை முடிந்த நேரத்தில் சமைத்து உண்டு வீண்பொழுதாகாமல் விபரம் அறிந்துகொள்ளப் புத்தகங்கள் படித்துக்கொண்டு முப்பொழுதும் இறைவனை தியானித்துக் கொண்டு மாலை நேரங்களில் நல்ல காற்றை சுவாசித்து நறுமண மலர்கள் பூத்த பூங்காக்களில் நடை பயில்வது என வரமாக நாள்கள் பறந்துபோகும். அதற்கு நேரெதிர்ப் போராட்டமாக அமெரிக்காவில் மகள் வீட்டில் நாள்களைக் கடத்தவேண்டும். மகளின் ஆடம்பரம் மகளுக்கானது மகளாகிப்போன காரணத்தால் அந்த ஆடம்பர அனலில் அவ்வப்போது வந்து வெந்து திரும்புவது வலிமிகுந்தது. தான் இங்கிருக்கும் நாள்களெல்லாம் சமையலறைக்குச் சொந்தக்காரியாகத்தான் செயல்படவேண்டியிருக்கும். தான் இல்லாதபொழுது மகள் சமைப்பாளா இல்லையா என்ற கேள்வி மேகலா மனத்தில் எப்போதும் இருக்கும். சமையல் பாத்திரங்கள் கழுவி எடுக்க டிஷ் வாஷர் இருந்தாலும் பாத்திரங்களை டிஷ் வாஷரில் இடும்முன் ஒருமுறை தண்ணீரில் மேலோட்டமாகச் சுத்தம் செய்துவிட்டு இடவேண்டும் அப்படிச் செய்தபோதும் சில பாத்திரங்கள் சரியாகச் சுத்தமாகாமல் இருக்கும் இந்தக்காரணங்களால் டிஷ் வாஷரை முழுவதுமாக நிராகரித்திருந்தாள் பிரேமி. சில நேரங்களில் பாத்திரங்கள் நிறைந்துவிட மகள் உதவிக்கு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டிருப்பாள், பொறுமையிழந்துபோவாள், ச்செய்... இப்படியொரு இரக்கமற்றவளையா நான் பெற்றேன் என்று தன் வயிற்றைத் தானே நொந்துகொள்வாள். வாயிலிருக்கும் வார்த்தைதானே இந்தமுறை நானொரு வேலை செய்தால் நீயொரு வேலை செய் எனக் கட்டளை இடவேண்டும் என்ற சிந்தனையோட்டத்தைச்  செதுக்கிக்கொண்டிருந்த மேகலாவிடம், "அத்தை இன்னும் அஞ்சே நிமிடம்… உங்க மகளைப் பார்க்கத் தயாராகுங்க", என்று புன்னகைதான் பிரகாஷ்.

அந்த நூற்றி இருப்பது வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட் வாயில் கதவு பிரகாஷின் வெள்ளை ஹாண்டாவிற்கு தனது எல்லைக் கதவைத் திறந்து வழிவிட்டது. சுமார் நூறடி தூரம் ஐந்து மைல் வேகத்தினும் குறைவாக மெதுவாக மகிழுந்தைச் செலுத்தினான் பிரகாஷ். சிவப்பு மஞ்சள் இளஞ்சிவப்பு என ஓரங்களில் வரிசையாக ரோஜாச்செடிகள் நிறைந்திருந்த அப்பகுதியில் தனது வீட்டு எண் எழுதப்பட்டிருந்த மகிழுந்து நிறுத்துமிடத்தில் ஹாண்டாவை நிறுத்தி இறங்கினான். பின்பக்கமாக வந்து "அத்தை இறங்குங்க", என்று பின்கதவைத் திறந்தான். மெல்ல இறங்கிய மேகலாவின் கரங்களையும் கன்னங்களையும் ஃபால்சம் பனிக்காற்று கொஞ்சமாகத் தீண்டிப் பார்த்தது. "நீங்க மேல படியில ஏறுங்க அத்தை நான் பேக்கை எடுத்துட்டு வரேன்", என்று முதல்மாடியிலிருந்த தன் வீட்டிற்கு மேகலாவைப் போகச்சொன்னான் பிரகாஷ். பலவிதமான மனக்குமுறல்களோடு படியேறினாள் மேகலா. மாடிப்படி அருகில் நின்ற மேப்பிள் மரம் இன்னொரு துளிர்ப்பிற்கு ஆயத்தமாக இலைகளை உதிர்த்து நின்றது. 

அழைப்புமணி ஓசை கேட்டு மெல்ல நடந்துவந்த பிரேமி கதவருகே இருக்கும் சன்னல் வழி எட்டிப்பார்த்தாள், "அம்மா..." என்று ஆரவாரமாகவும் மெதுவாகவும் நடந்துவந்து கதவைத்திருந்தாள். திறந்த கதவின் உள்ளே நின்ற பிரேமியின் நிலை... மேகலா சற்றும் எதிர்பார்க்காத ஒன்று, அந்த நிலையில் மகளைப் பார்த்த அடுத்த நொடி மேகலாவின் கண்கள் குளமாக... குரல் தழுதழுக்க... இத்தனை நேரம் தனக்குள் உழன்றுகொண்டிருந்த அத்தனை மனக்குமுறல்களையும் கடந்த ஒரு நொடி அபகரித்துக்கொண்டு ஓடிவிட..., "பிரேமி, ஏண்டா கண்ணு ஒரு வார்த்தை கூட சொல்லல, இத்தனை நாள் நீயா தனியா எப்படி சமாளிச்ச? நான் வந்துட்டேன் இனி நீ உட்கார்ந்த இடத்த விட்டு எழக்கூடாது", என்று வீட்டினுள் நுழைந்த மேகலா மகளைக் கட்டியணைக்க முயற்சி செய்து பின் முடியாமல் தன் நெஞ்சோடு தலைசாய்த்து சற்றே பெரிதாகியிருந்த மகளின் குட்டி வயிற்றைத் தடவி வாழ்த்தினாள், தாயின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்த பிரேமி, "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் முன்னால சொல்லல", என்று கண்ணடித்தாள். அத்தையையும் மனைவியையும் கடந்து வீட்டினுள் வந்து, அத்தையின் பயணப் பையை அறைக்குள் வைத்துவிட்டு, அன்னைக்கும் மகளுக்குமான அந்த ஆனந்த நொடிகளை இடையூறு செய்ய மனமில்லாமல் மெதுவாக வெளியேறி அலுவலக அழைப்பைத் தொலைபேசியில் அணுகிக்கொண்டே விடுவிடுவெனப் படியிறங்கினான் பிரகாஷ். விழிகள் தாண்டிய நீரை விரல்கள் கொண்டு துடைக்க மறந்து மகளுக்கு ஆதரவாக அவளின் கன்னங்களை வருடிக்கொண்டிருந்தாள் அன்னை மேகலா.

மீ.மணிகண்டன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக