சனி, 11 ஜூன், 2022

அப்பாவின் துணை

சிறுகதையின் தலைப்பு: அப்பாவின் துணை

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

"எதையோ மறந்து விட்டேனே...", என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை... "அப்படி என்ன மறந்திருப்பேன்...", வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து எழுதி வந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோமா என்று சரி பார்த்துவிட எண்ணினார்... இப்படித்தான் ஒருமுறை வெற்றிலை வாங்க மறந்து விட்டார் வீட்டிற்கு சென்றபின் மனைவியின் முதல் கேள்வி, "வெற்றிலை எங்கே?", கமலம் ஒரு வேளை உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார் ஆனால் வாயில் வெற்றிலை இல்லாமல் ஒரு பொழுதும் நகர்வது சிரமம். அன்று தான் எவ்வளவு கோபம்... எவ்வளவு கேள்விகள்... "எதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா? கடைக்கு பொய் வருகிற வேலை மட்டும் தான் செய்யுறீங்க அதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா?  அப்படி என்ன ஞாபக மறதி? பொறுப்பு இருந்தால் இப்படி மறப்பீங்களா? எங்களை எல்லாம் எப்படி உங்க நினைப்பில் வைச்சிருப்பீங்க? எப்படித்தான் நீங்க வங்கியில் வேலை செஞ்சீங்களோ? சமர்த்தா அவங்க பணிஓய்வு குடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்க? எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்கா? ம்..க்கும்...".

அப்பாவின் துணை ... மீ.மணிகண்டன்

"சரி இப்பவே நான் பொய் வாங்கிட்டு வந்துடறேன்... கோபப்படாதே", என்றவரிடம் உடன் பதிலளித்தார் கமலம், "ஆஹா போதும் உங்க அக்கறை... வெளியில பாக்கறவங்க இந்த அம்மா இவ்வளவு பெரியவரை வெயில்னு பாக்காம இத்தனை தடவை கடைக்கு அனுப்புதுன்னு என்ன கரிச்சுக் கொட்டணும் அதுக்குத்தானே.. அப்பப்பா நல்ல பேர் இல்லைனாலும் பொல்லாப்பு வாங்கித்தரன்னு இப்படி அலையுறீங்களே...", ஒன்றும் பேச முடியாமல் அறைக்குச்சென்று விட்டார் சிவநேசன்.

அதுபோல இன்று எதுவும் நடந்து விடக்கூடாதே என்று சிமெண்ட் இருக்கை மீது வைத்த பைக்குள் பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்று சரி பார்த்தார்.

அரிசி 2 கிலோ ... இருக்கிறது
உ.பருப்பு... இருக்கிறது
பொன்னாங்கண்ணிக் கீரை பார்க்கவே குளிர்ச்சியாக இருந்ததால் பட்டியலில் இல்லாவிட்டாலும் அதை வாங்கி வைத்திருந்தார் அதையும் கொஞ்சம் விலக்கி...
சிந்தால் சோப்பு 2 ... இருக்கிறது
சர்க்கரை... இருக்கிறது

"பட்டியலில் உள்ள யாவும் இருக்கிறது... பொருட்கள் மறக்கவில்லை... இருந்தாலும் எதையோ மறந்து விட்டேனே..." என்ற எண்ணம் துளைத்துக் கொண்டே இருக்க....பையை தூக்கிக்கொண்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தார். ராஜன் மளிகைக் கடையிலிருந்து அவர் வீடு சுமார் 400 மீட்டர் தொலைவு.

"ஒரு வேளை மகன் ஏதாவது சொல்லி மறந்து விட்டேனா... இல்லையே அவன் வாங்கி வரச்சொன்னது வாசன் டைலரிடமிருந்து அவனது தைத்து தயாராக இருக்கும் கால்ச்சட்டை மட்டும்தான்...", இதோ டைலர் கடை வந்து விட்டது, கடையில் இருந்தது தையற்காரரின் உதவியாளர் ஒரு வாலிபர். அவரிடம் ரசீதை நீட்டினார் சிவநேசன். அந்த வாலிபர் வாங்கிக்கொண்டு ரசீதில் என்ன எண் இருக்கிறது என்று பார்த்தார் பின்னர் விநியோகத் தேதி என்ன என்று பார்த்தார் இன்று தான் என்று சரி பார்த்துக்கொண்டவர் தைத்துத் தயாராய் இருக்கும் உருப்படிகளில் எந்த எண் ரசீதுடன் ஒத்துப்போகிறது என்று சரிபார்த்து, "ம்... இதோ கிடைத்துவிட்டது..." அந்த பாண்டை மடித்து முறையாக ஒரு காகிதப் பைக்குள் இட்டு சிவநேசனிடம் நீட்டினார், சிவநேசன் பதிலுக்கு ரூபாய் 500 ஒற்றைத்தாளை எடுத்து நீட்டினார்... கடை வாலிபரோ, "சார் பில் 450, 450 ஆ இருந்தா குடுங்க இல்லாட்டி அண்ணன் வரணும் என்னிடம் சில்லறை இல்லை", என்றார். "அண்ணன் எப்போ வருவார்?" என்று கேட்டார் சிவநேசன். "சாப்பிடப் போயிருக்கார் இப்போ வர்ற நேரம்தான் அதுவரைக்கும் இந்த நாற்காலியில் உட்காருங்க", என்று ஒரு நாற்காலியைக் காட்டினார். இருக்கையில் அமர்ந்த சிவநேசனுக்கு பழைய ஞாபகம் தொடர்ந்தது... அன்று மகன் கேட்ட பிளேடு வாங்க மறந்து விட்டார் அதற்குத்தான் மகனிடம் எவ்வளவு பேச்சு வாங்கினார்... "ஏன்பா நான் கேட்டது ஒரேயொரு பொருள் அதைக்கூட உன்னால வாங்கி வர முடியலையா... இந்த ராத்திரில பொய் நான் எந்தக் கடையத் தொறக்கச்சொல்லி வாங்குவேன்... நேத்தே பிளேடு தீர்ந்து போச்சு.. பழசை வச்சே அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கேன்... ஷேவ் பண்ணாமப்போனா மேனேஜர் மேலேருந்து ஷூ வரைக்கும் மொறைச்சுப் பார்ப்பான்.. அது போட்டும் ஷேவ் பன்னாமப் போனா எந்த டாக்டராவது மெடிக்கல் ரெப்பா என்ன மதிப்பானா? நீட்டாப்போகும்போதே ரெண்டு மணிநேரம் உட்கார வச்சுடறானுங்க... நீயெல்லாம் வங்கியில காற்றாடி, குளுகுளு அரைன்னு சொகுசா இருந்து வேலை பார்த்த ஆளு உனக்கெல்லாம் எங்க கவலை புரியாது... போப்பா...", இன்னும் மகன் உதிர்த்த வார்த்தைகளை எழுத்தில் சொல்வது நாகரிகம் அல்ல.

"சார் இந்தாங்க 50 ரூபாய் பாக்கி", என்று நினைவைக் கலைத்தார் கடைக்கார வாலிபர், "அண்ணன் வந்துட்டாரா?", என்று கேட்ட சிவநேசனிடம், "ம்... இதோ...", என்று தையற்கடை உரிமையாளரைக் காட்டினார் அந்த உதவியாளர். "நன்றி சார்", என்று இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிவநேசன் வீடு நோக்கிய தன் நடையைத் தொடர்ந்தார்... மீண்டும் தொடர்ந்தது மறந்துவிட்ட உணர்வு... "நான் உண்மையிலேயே ஏதாவது மறந்து விட்டேனா இல்லை வெறும் நினைப்பா?", சிந்தனை குழப்பமானது. "மகளின் விருப்பம் ஏதாவது வாங்காமல் விட்டுவிட்டேனா... இருக்காது... அவள்தான் கோபத்தில் இருக்கிறாளே எதையும் வங்கச் சொல்லவில்லை என்பது திண்ணம்". ஏன் அவளுக்கு கோபம்... சென்ற முறை மருதாணிப் போடி வாங்கி வரச்சொல்லியிருந்தாள் மருதாணிப் பை வாயில் பாதித் திறவு இருந்ததைக் கவனிக்காத சிவநேசன் அதை அப்படியே பையில் போட்டுக்கொண்டார் வீடு வந்து சேர்ந்தபின் பொருள்களை எடுத்து வைத்தார் ஆனால் அவரின் போதாத நேரம் பிரிந்திருந்த மருதாணிப் பொடிப் பை முழுவதும் கொட்டி காய்கறிகள் மீதும் மீதி பையிலுமாக சிதறி ஒட்டிக்கிடக்க காய்கறிகளைக் கழுவி எடுத்துவிட்டார் ஆனால் தண்ணீரோடு கரைந்து போன மருதாணிப் பொடியை அவரால் திரட்டி எடுக்க முடியாமல் மகளிடம் வாங்கி கட்டிக்க கொண்டார்.

சிந்தனைக்கு முடிவுரை எழுதியது வீட்டு வாயிற்படி... வீட்டுக்குள் சென்றவர் பொருள்களை மனைவி கமலத்திடம் நீட்டினார்... "ஒரு தம்ளர் காப்பி போடுறயா...", மெதுவாகக் கேட்டார் சிவநேசன். "ஏன் சாப்பிடுற நேரத்துல காப்பி?", எதிர் கேள்வி... "சரி வேண்டாம்.", என்றுவிட்டு அறைக்குள் சென்றார்... மீண்டும் மறந்த உணர்வு சிவநேசனைத் தீண்டியது... எதோ உறுத்துகிறதே "என்ன மறந்தேன்?", "இந்தாங்க...", காப்பித் தம்ளரை நீட்டினார் கமலம். "இன்னிக்கு தேதி 5 ஆயிடுச்சு பென்ஷன் வந்திருக்குமில்ல சாயங்காலம் வாக்கிங் போகும்போது மறக்காம ATM போயிட்டு வந்துடுங்க". இந்தப் பேன்ஷன்தான் சிவநேசனை மாதந்தோறும் அவர் மனிதன் என்பதை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... "சரி", என்றார். அடுப்படிக்குச் சென்றுவிட்ட கமலம் அழைப்பு மணி அழைக்கும் ஓசை கேட்டு "வாசல் கதவைத் திறக்கறீங்களா... நான் அடுப்படிக்கு வந்துட்டேன்...", என்றார். மெதுவாக முகப்பு நோக்கி நடந்தார் சிவநேசன்... கதவைத் திறந்தார்... வாசலில் நின்றவர் ராஜன் மளிகைக்கடைச் சிப்பந்தி... "என்னப்பா?", என்றார் சிவநேசன். "இந்தாங்க மறந்து கடையில விட்டுட்டு வந்துட்டீங்க எங்க இதுக்காக திரும்ப நீங்க நடந்து வந்து சிரமப்படப் போறீங்களோன்னு வேகமா வழிநெடுக உங்கள பார்த்துகிட்டே வந்தேன்". என்று மூச்சு வாங்கிக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை சிவநேசனிடம் நீட்டினார் சிப்பந்தி. 

...மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக