வெள்ளி, 4 அக்டோபர், 2024

மௌனப்பூ ... மீ.மணிகண்டன்


(குறிப்பு:  ஆஸ்டின் ஆம்பல் காலாண்டு மின்னிதழுக்காக எழுதிய கதை. கதை 450 சொற்களுக்குள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு எழுதியதால் இக்கதை சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.  மேலும் விவரணைகளுடனும் நிகழ்வுகளுடனும் இக்கதை புதுப்பிக்கப்படும்.  நன்றி.  மீ.மணிகண்டன்)

மௌனப்பூ ... சிறுகதை ... மீ.மணிகண்டன்

 பூக்கள் நிறைந்த சோலையில் மாயா மௌனம் சுமந்து அமர்ந்திருக்கின்றாள். சென்ற வாரம்வரை ஏழு வரன்கள் வந்து போனார்கள். ஏழாமவன் பெயர் ரகுவரன். எழுவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்தவர்கள் எனினும் மாயாவிற்குத் தந்தது ஒரே பதில், வெவ்வேறு கானகங்களில் முளைத்தாலும் கள்ளியில் முள் நிலையாகத் தோன்றுவதுபோல். மாயாவிற்கு அந்த முள்ளான பதில் முதல்முறை வலித்தது, அடுத்தமுறையும் தொடர்ந்தது, ஏழாவது முறை ஆணியைத் தாங்கிய மரச்சட்டமாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை அவள். அவள் பயிலும் உளவியல் அவளை மானுடத்தின் அணுவசைவுகளைப் புரிந்துகொள்ளச் செய்திருந்தது. இன்னும் ஓராண்டில் அவளின் உளவியல் ஆராய்ச்சி நிறைவேறி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றாள். எனினும் கடந்த இரண்டாண்டுகளிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவளை உளவியல் மேதையாக மாற்றியிருந்தது.

 ரகுவரனிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டபோது 'நான் வளர்க்கும் கறுப்புப் பூனை' என்றான். 'அதில் என்ன சிறப்பு' என வினவினாள். 'இருட்டில் மஞ்சள் ரேகையோடும் அதன் விழிகளை உருட்டி நடக்கும் ஆளுமை பிடிக்கும்' என்றான். பூனை, இருள், இவற்றின் கறுப்பை ரசிப்பவன் தனது புறத்தோல் நிறத்தைப் பொருட்படுத்தமாட்டான் என்று சற்றே சஞ்சலமானாள். ரகுவரனின் நிறைவான பதில், பூனையில் விரும்பிய நிறம் புதிதாக வரும் மனைவியிடம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது.

 தாயின் அரவணைப்பில் தத்தித் தத்தி வளர்ந்த மாயா பட்டப் படிப்பு நிறைவேறியதும் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியேற்றாள். தொடர் முயற்சியில், அயரா உழைப்பில், கணினித்துறையில் மேன்மை கண்டாள். நிறுவனம் அவளைத் தற்காலிகப் பணி விசாவில் அமேரிக்கா அனுப்பியது. தாய் மண்ணின்மீது பாசம் கொண்டவள். அன்னையின் புடவை முந்தானை வாசத்தில் தினமும் காலையில் உற்சாகமாகக் கண் விழித்துக்கொள்ளும் சிசுவைப்போலத் தாய் மண்ணின் தேசியகீதத்தை பூபாளமாக அனுசரிப்பவள் மாயா. தாய் மண் தெய்வம் என்பவளுக்கு அமெரிக்க மண் ஆலயமானது.

 கல்வியோடும் கனத்த சிந்தனையோடும் வலம் வருபவள் மாயா. உழைக்கப் பணி கொடுத்துவிட்டு உறைவிடமாக ஒரு நிரந்தரக் குடியுரிமை தர மறுக்கும் அமெரிக்க அரசியல் அவளுக்கு விந்தை அனுபவம் ஊட்டியது. சில பல ஆண்டுகள் தன் உழைப்பைப் பங்களித்து நாட்டின் பொருளாதாரத்தை மலையென உயர்த்தும் உழைப்பாளிகள் பெறும் பிரதிபலன் கடுகினும் சிறிது என்று வாதிடுவாள். அரசியலை வகுக்கும் மானுடம்தான் எத்தனை குரூரமானது என்று வியந்துகொள்வாள். இவற்றை எண்ணிவிட்டால் சில நாள்கள் நித்திரை விழிநுழையாமல் நையாண்டி செய்யும் நிலைக்கு ஆளாவாள். விளைவு, மனிதர்களைக் கற்றறியும் ஆவலில் உளவியல் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்தாள். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவளின் முனைவர் பட்டப் படிப்பிற்கு அனுமதியளித்தது.

 சமுதாய நிகழ்வுகளைப் போற்றும் சராசரித் தாயின் மகள் மாயா. அன்னையின் சொல்லுக்கு எப்போதும் 'ஆம்' சொல்பவள். தனக்கு வரன் தேடுவதற்கும் ஆமோதித்தாள். அமெரிக்க மண்ணில் வசிப்பவள் என்ற முத்திரையில் நெகிழ்ந்து அவளைப் பெண் பார்க்க வந்தவர்களும் அவளின் புறநிறம் கண்டு புறமுதுகு காட்டினர்.

 மாயாவிற்காக கால ரயில் தன் ஓட்டத்தை நிறுத்தவா போகிறது? கையில் முனைவர் பட்டத்துடன் வந்து நின்றவளுக்கு அன்னை ஒரு ஆசைப் பரிசு கொடுக்கப்போவதாகச் சொன்னாள். மல்லிகையென மாயாவின் விழிகள் பூத்தது. 'உனக்கு நல்ல நேரம் கூடி வருது மாயா?' என்று அன்னை தொடர்ந்தாள். கடந்து சென்ற எழுவரில் மூன்றாமவர் தான் மாயாவைச் சந்தித்து மன்னிப்புக் கோரவேண்டும் என்ற தகவல் வந்ததாகச் சொன்னாள். அன்னையின் மனம் ஆசையில் துள்ளியது, அந்த வரன் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதம் கூறவேண்டும் என்று நேர்ந்துகொண்டது.

மாயாவும் அந்த மூன்றாமவனும் சந்திக்கும் நாள் வந்தது, 'முதலில் உங்களோட டாக்டர் பட்டத்திற்கு என் வாழ்த்துகள்' என்று உரையாடலைத் தொடங்கினான் வந்தவன். 'உங்களைப் பெண் பார்த்துட்டு போன பிறகு உங்க மனசு எவ்வளவு வருத்தப்பட்டிருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. என்னை மன்னிச்சுடுங்க' என்றான். மாயா மௌனம் சுமந்து அமர்ந்திருந்தாள். 'ஏன் எதுவுமே பேசாம உக்காந்திருக்கீங்க?' என்றவனுக்கு பதிலளித்தாள் மாயா, 'என்ன சொல்லணும்?'

'உங்க மனநிலை புரியுது. நீங்க நேரம் எடுத்துக்குங்க மனசு மாறினால் திருமணத்துக்கு சொல்லியனுப்புங்க' என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான். சென்றவன் தன் பெற்றோரிடம் இத்திருமணத்திற்கு எவ்விதமாவது சம்மதம் வாங்க வேண்டி மன்றாடினான். ஏனென்று காரணம் கேட்ட பெற்றோருக்கு பதிலளித்தான், 'எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நான் இந்தத் தற்காலிக விசாவில் திண்டாடுவது. இப்போ அவளிடம் பி எச் டி இருக்கு சீக்கிரம் க்ரீன் கார்ட் வந்துடும்'.

 உளவியல் கற்றவள், தன்னுடன் உரையாடுபவர் உள்ளத்தை உணரும் ஆற்றல் பெற்றவள் மாயா. இன்னும் அதே பூக்கள் நிறைந்த சோலையில் மௌனம் சுமந்து அமர்ந்திருக்கின்றாள். பொருளாசையால் புண்ணாகிப்போன மனித இனம் இது என எண்ணிப் புன்னகை பூக்கிறாள்.

... மீ.மணிகண்டன்

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

கனவு ஆசிரியரில் என் எக்ஸிபிஷன்

கனவு ஆசிரியர் இதழில் எனது சிறுகதை 'பொருட்காட்சி' (எக்ஸிபிஷன்)

கதையின் தலைப்பு: பொருட்காட்சி
பதிவான இதழ்: கனவு ஆசிரியர்
பதிவான மாதம்: செப்டம்பர் 2024

நான் எதிர்பாராமலேயே எனக்கொரு பரிசு கிடைத்திருக்கின்றது. பரிசு கொடுத்தவர் திரு யெஸ். பாலபாரதி அவர்கள். என் மனம்நிறைந்த மகிழ்ச்சியோடு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படுகிறது என்பது நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். இம்மாத (செப்) 'கனவு ஆசிரியர்' இதழில் அடியேனின் சிறுகதை.

அழகிய வண்ணப்படங்களுடன் என் சிறுகதை அரசு சார் இதழில் பதிவாகியிருப்பதைவிட வேறென்ன பெருமகிழ்ச்சி இருந்துவிடமுடியும் எனக்கு. இதனைச் சாத்தியமாக்கிய ஆசிரியருக்கும் மற்றும் 'கனவு ஆசிரியர்' குழுவினருக்கும் என் நன்றி.
இதழில், கதை ஆசிரியர் குறிப்பில், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 'இலக்கியத்தடத்தில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது' என்ற வாசகத்தை வாசிக்கும்போது உண்டாகும் என் உள்ளப்பூரிப்பை விவரிக்க வார்த்தைகள் ஏது?
கனவு ஆசிரியரின் ஆசிரியருக்கு மீண்டும் என் நன்றி!
மேலும் என் எழுத்துகளை ஊக்குவிக்கும் பேருள்ளங்கள் யாவருக்கும் என் நன்றி!

... மீ.மணிகண்டன்










புதன், 28 ஆகஸ்ட், 2024

நகரத்தார் சமுதாய ஊர்கள்

நகரத்தார் 76 ஊர் பாடல்
எழுதியவர்: ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்

ஆத்தங்குடி, முத்துப்பட்டணம், கல்லலோடுமே,
அரியக்குடி, பலவாங்குடி, பாகனேரியும்,
ஆத்திக்காடு தெக்கூரும், கடியாபட்டியும்,
ஆறாவயலும், சிறாவயலும், கோனாபட்டுமே,
கொத்தமங்கலம், லெட்சுமிபுரம், மதகுப்பட்டியும்,
கோட்டையூரும், குழிபிறையும், வேகுபட்டியும்,
புதுவயலும், ராயவரம், பூலாங்குறிச்சி,
புகழ் சேர்க்கும் ஊர்களிவை சிறப்பேயாகும்.

கண்டனூரும், அழகாபுரி, ஆவினிப்பட்டி,
கருங்குளமும், மானகிரி, மிதிலைப்பட்டி,
கண்டர நல்மணிக்கம், உலகம்பட்டி,
கானாடுகாத்தானும், பனையப்பட்டி,
கண்டவராயன்பட்டி, தேனிபட்டி,
காளையார் நல்மங்கலமும், கல்லுப்பட்டி,
பொன்புதுப்பட்டியுடன், வலையபட்டி,
பிள்ளையார்பட்டி அது பெருமையாகும்,

நற்சாந்துபட்டியுடன், பள்ளத்தூரும்,
நாட்டரசங்கோட்டையொடு, தேவகோட்டை,
வெற்றியூரும், அமராவதிபுதூரும், ஒக்கூர்,
விரையாச்சிலை, சொக்கலிங்கம்புதூரும், செவ்வூர்,
நெற்குப்பை, மகிபாலம்பட்டியினோடு,
நேமத்தான்பட்டியுடன், செம்பனூரும்,
சிறுகூடற்பட்டி, வளர் கொப்பனாபட்டி,
சீர் புகழை சேர்க்கும் ஊர்கள் சிறப்பேயாகும்.

சோழபுரம், காரைக்குடி, அலவாக்கோட்டை,
சொக்கநாதபுரத்தோடு, வேந்தன்பட்டி,
கீழச்சீவற்பட்டியுடன், அழகாபுரியும்,
கீழப்பூங்குடி, குருவிக்கொண்டான்பட்டி,
அரண்மனை நல் சிறுவயலும், பட்டமங்கலம்,
அரிமழமும், ஜெயங்கொண்டபுரம், விராமதியோடு,
ராங்கியமும், மேலைச்சிவபுரியுமாக,
வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும்.

தானிச்சாவூரணியும், நாச்சியாபுரம்,
சக்கந்தி, உ.சிறுவயல், கோ.அழகாபுரி,
பனங்குடியும், நடராஜபுரமும் சேர்த்து
பார் புகழும் நகரத்தார் வாழும் ஊராமே.
இன்றைக்கு எழுபத்தியாறு ஆகும்
இவ்வினிய குலமின்னும் செழித்து வாழ்க
குன்றக்குடி முருகனவன் துணையிலிருப்பான்
கோவில்கண்ட நகரத்தார் குலமே வாழ்க
... ஆத்தங்குடி கவித்தென்றல் கா.சு.மணியன்

Reference:

Song         https://ta.wikipedia.org/wiki/
                                                                                                நாட்டுக்கோட்டை_நகரத்தார் as on 8/28/2024
01. ஆத்தங்குடி ஆத்தங்குடி
02. முத்துப்பட்டணம் ஆ.முத்துப்பட்டணம்
03. கல்லலோடுமே கல்லல்
04. அரியக்குடி அரியக்குடி
05. பலவாங்குடி பலவான்குடி
06. பாகனேரியும் பாகனேரி
07. ஆத்திக்காடு தெக்கூரும் ஆ.தெக்கூர்
08. கடியாபட்டியும் கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
09. ஆறாவயலும் ஆறாவயல்(சண்முகநாதபுரம்)
10. சிறாவயலும் சிறாவயல்
11. கோனாபட்டுமே கோனாபட்டு
12. கொத்தமங்கலம்      கொத்தமங்கலம்
13. லெட்சுமிபுரம் கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
14. மதகுப்பட்டியும் மதகுப்பட்டி
15. கோட்டையூரும் கோட்டையூர்
16. குழிபிறையும் குழிபிறை
17. வேகுபட்டியும் வேகுப்பட்டி
18. புதுவயலும் புதுவயல்
19. ராயவரம் ராயவரம்
20. பூலாங்குறிச்சி பூலாங்குறிச்சி
21. கண்டனூரும் கண்டனூர்
22. அழகாபுரி பில்லமங்களம். அளகாபுரி
23. ஆவினிப்பட்டி ஆவினிப்பட்டி
24. கருங்குளமும் கருங்குளம்
25. மானகிரி மானகிரி
26. மிதிலைப்பட்டி மிதிலைப்பட்டி
27. கண்டர நல் மணிக்கம் கண்டரமாணிக்கம்
28. உலகம்பட்டி உலகம்பட்டி
29. கானாடுகாத்தானும் கானாடுகாத்தான்
30. பனையப்பட்டி பனையப்பட்டி
31. கண்டவராயன்பட்டி கண்டவராயன்பட்டி
32. தேனிப்பட்டி தேனிப்பட்டி
33. காளையார் நல் மங்கலமும் காளையார்மங்கலம்
34. கல்லுப்பட்டி கல்லுப்பட்டி
35. பொன்புதுப்பட்டியுடன் பொன்புதுப்பட்டி
36. வலையபட்டி வலையபட்டி
37. பிள்ளையார்பட்டி அது பெருமையாகும் பிள்ளையார்பட்டி
38. நற்சாந்துபட்டியுடன் நற்சாந்துபட்டி
39. பள்ளத்தூரும் பள்ளத்தூர்
40. நாட்டரசங்கோட்டையொடு நாட்டரசன்கோட்டை
41. தேவகோட்டை         தேவகோட்டை
42. வெற்றியூரும் வெற்றியூர்
43. அமராவதிபுதூரும் அமராவதிபுதூர்
44. ஒக்கூர் ஒக்கூர்
45. விரையாச்சிலை விரையாச்சிலை
46. சொக்கலிங்கம்புதூரும் சொக்கலிங்கம்புதூர்
47. செவ்வூர் செவ்வூர்
48. நெற்குப்பை நெற்குப்பை
49. மகிபாலம்பட்டியினோடு மகிபாலன்பட்டி
50. நேமத்தான்பட்டியுடன்                 நேமத்தான்பட்டி
51. செம்பனூரும் செம்பனூர்
52. சிறுகூடற்பட்டி சிறுகூடற்பட்டி
53. வளர் கொப்பனாபட்டி கொப்பனாபட்டி
54. சோழபுரம் சோழபுரம்
55. காரைக்குடி காரைக்குடி
56. அலவாக்கோட்டை அலவாக்கோட்டை
57. சொக்கநாதபுரத்தோடு க.சொக்கனாதபுரம்
58. வேந்தன்பட்டி வேந்தன்பட்டி
59. கீழச்சீவற்பட்டியுடன் கீழச்சிவல்பட்டி
60. அழகாபுரியும் கொல்லங்குடி. அழகாபுரி
61. கீழப்பூங்குடி கீழப்பூங்குடி
62. குருவிக்கொண்டான்பட்டி          குருவிக்கொண்டான்பட்டி
63. அரண்மனை நல் சிறுவயலும்         அரண்மனை சிறுவயல்
64. பட்டமங்கலம் பட்டமங்கலம்
65. அரிமழமும் அரிமழம்
       ஜெயங்கொண்டபுரம் (N/A)
66. விராமதியோடு விராமதி
67. ராங்கியமும் இராங்கியம்
68. மேலைச்சிவபுரியுமாக மேலச் சிவபுரி
69. வி.லெட்சுமிபுரமும் சேர்த்து சிறப்பேயாகும். வி. லட்சுமிபுரம்
70. தானிச்சாவூரணியும் தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)
71. நாச்சியாபுரம் நாச்சியாபுரம்
72. சக்கந்தி சக்கந்தி
73. உ.சிறுவயல் உ.சிறுவயல்
74. கோ.அழகாபுரி கோட்டையூர். அழகாபுரி
75. பனங்குடியும் பனங்குடி
76. நடராஜபுரமும் சேர்த்து நடராஜபுரம்




வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஆனந்தவிகடனில் எனது கவிதை ... மீ.மணிகண்டன்

ஆனந்தவிகடன் சொல்வனத்தில் எனது வரிகள்...
2024ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை.
ரூபாய் 250 சன்மானம் தந்த ஆனந்த விகடனுக்கு என் நன்றி!
மீ.மணிகண்டன்





ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

கோயில் மாலை ... மீ.மணிகண்டன்

கோயில் மாலை
சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன் 
பதிவான மின்னிதழ்: நாம் நகரத்தார் 
பதிவான தேதி: January 2024 & November 2024
















சனி, 3 ஆகஸ்ட், 2024

நீர் வீதி

 எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'நீர் வீதி'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018




செவ்வாய், 30 ஜூலை, 2024

நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர் ... மீ.மணிகண்டன்

நகைச்சுவை நாடகம் 

(குறிப்பு: சிறுகதைகள் தளத்தில் எனது 'பப்பு வீட்டில் ஹெட்மாஸ்டர்' நாடக வெற்றியைத் தொடர்ந்து நான் எழுதிய குறுநாடகம்)

நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்

Script by Mee.Manikandan

Date: Sep-13-2019

மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர்

அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை "சார் சுத்துது..."

"ஆமா நான்தான்..."

உதாவி ஆசிரியை ஹெட் மாஸ்டரை பார்த்துவிட்டு "சார் நான் பேன் சுத்துறத சொன்னேன்... பவர் வந்துடுச்சு..."

"நான் இந்த பூமி சுத்துறத சொன்னேன்..."

சற்று நேரத்தில் ஒரு புதிய நபர் ஹெட் மாஸ்டர் அலுவலகத்தில் நுழைய அனுமதி கேட்கிறார். "சார் மே ஐ கம் இன்?"

"ப்ளீஸ் கம் " எதிர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு... சார் என்ன விஷயமா வந்திருக்கீங்க.."

"என் பேரு மதன்.."

"நைஸ் நேம்.."

"என் பையன் பேரு வருண்.."

"வெரி நைஸ் நேம்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே.."

"என்ன கேட்டீங்க.."

"என்ன விஷயமா வந்திருக்கீங்க.."

"7th ஸ்டாண்டர்ட் க்கு ஒரு அட்மிஷன் வேணும்.."

"நீங்க இன்னும் 7th ஸ்டாண்டர்டே முடிக்கலையா.."

"ஏன் கேட்கறீங்க.."

"அட்மிஷன் கேட்டீங்களே.."

"என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் வேணும்.."

"ஓஹ்.. ஓகே ஓகே.. இதுக்கு முன்னாடி எங்க படிச்சான்.."

"எங்க படிச்சான்.."

"வாட் ...!"

"இல்ல எங்க ஊர்... சொந்த ஊர்ல படிச்சான்.."

"எதுக்கு இப்போ இங்க வந்தீங்க.."

"ஸ்கூல் அட்மிசனுக்கு.."

"ம்... இந்த ஊருக்கு இப்போ ஏன் வந்தீங்க.."

"அதுவா எனக்கு ட்ரான்ஸபெர்... சோ.."

"டிரான்ஸபெர் வாங்குறதுக்கு முன்னாடியே இங்க ஸ்கூல்ல இடம் இருக்கான்னு கேட்டுட்டு டிரான்ஸபெர் வாங்க மாட்டீங்களா.."

"ஏன் சார்.."

"பாருங்க நீங்க டிரான்ஸபெர் வாங்கிட்டீங்க ஆனா எங்க ஸ்கூல்ல இடம் கிடைக்கிறது குதிரைக் கொம்பு.."

"நீங்க மட்டும் இடம் கொடுத்துப் பாருங்க சார்.. என் பையன் உங்க ஸ்கூலுக்கே பேர் தேடித்தருவான்.."

"எங்க ஸ்கூலுக்கு ஏற்கனவே பேர் வச்சாச்சு..." உதவி ஆசிரியையை  பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர், "அம் ஐ ரைட் ?"

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே," அதெல்லாம் ஆரம்பத்திலேயே வச்சிட்டாங்க சார்.."

ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, "பாத்தீங்களா நான் சொல்லல.."

"நான் நல்ல பேர் தேடித்தருவான்னு சொன்னேன்.."

"இப்ப இருக்க பெரே நல்ல பேர்தான்.."

"சார் ரொம்ப விளையாட்டா பேசுறீங்க.. இப்ப மட்டும்... ஒரே ஒரு அட்மிஷன் கொடுங்க..."

"நம்ம ஸ்கூல்ல 7th அட்மிசனுக்கு seat இருக்கா.."

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் செக் பண்ணிவிட்டு... "இருக்கு சார்..  ஒண்ணே ஓண்ணு இருக்கு.. ஆனா ரொம்ப பின்னாடி சீட் ஸ்க்ரீன்  மறைக்கும்.." 

ஹெட் மாஸ்டர் தனக்குள் "எந்த நேரமும் சினிமா டிக்கெட் புக்கிங் பிரௌசிங்க்லயே இருக்க வேண்டியது.." பின்னர் கேட்டார் " செக் பார் 7th அட்மிஷன்"

பின்னர் ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, "சரி உங்களுக்கு எத்தனை அட்மிஷன் வேணும் ஒண்ணா ரெண்டா?"

"என்னோட ஒரே பையனுக்கு ஒரே ஒரு அட்மிஷன் வேணும்.."

"ஓ. கே"

"சரி... உங்க ஸ்கூல்ல என்னென்ன கோ-ஆக்டிவிட்டீஸ் இருக்கு.."

"சாரி நீங்க கோபப்படுற மாதிரி ஆக்டிவிட்டீஸ் எல்லாம் இங்க எதுவும் இல்ல.."

"நான் என்ன கேட்டேன்.."

"அதான் கோபப்படுற மாதிரி.... "

"கேம்ஸ் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் இப்படி என்னென்ன இருக்குன்னு கேட்டேன்.."

"அதுக்கு ஏன் கோபப்படுறீங்க.."

"சரி கோபப் படாமகேட்குறேன் சொல்லுங்க.."

"சரி கேளுங்க சொல்றேன்.."

"என்னென்ன அவுட் டோர் கேம்ஸ் இருக்கு.."

"சாரி நாங்க பிள்ளைங்க மேல ரொம்ப கவனமா இருப்போம்... ஸ்கூல் காம்பௌண்ட விட்டு வெளில எல்லாம் அனுப்பமாட்டோம்.."

"ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்காவது அனுப்புவீங்களா..."

"இப்ப... நீங்க காமெடி பண்றீங்க.."

வந்தவர் அமைதியாக முறைத்துப் பார்க்கிறார்

ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார் "வேற கேள்வி இருக்கா.."

"ரொம்ப தேங்க்ஸ்.."

"ஓகே ஆபீஸ் க்கு போங்க நான் கால் பண்ணி சொல்லிடறேன் நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு அட்மிஷன் வாங்கிக்கோங்க.."

"ரொம்ப தேங்க்ஸ்.." போன் எடுத்து டைப்செய்கிறார்.

"என்ன பண்றீங்க.."

"என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் கிடைச்சத FaceBook ஸ்டேட்டஸ் போட்டிட்டிருக்கேன்.."

"போடுங்க போடுங்க... நம்ம ஸ்கூலப் பத்தி நாலு பேருக்கு தெரியட்டும்.."

******

வந்தவரை அனுப்பிய பின்னர் ரௌண்ட்ஸ் கிளம்பினார் ஹெட் மாஸ்டர், சற்று நேரத்தில் எதிரில் அட்மிஷன் கேட்டு வந்தவர் எதிர்பட, "அட்மிஷன் வாங்கிட்டிங்களா.."

" இல்ல சார்.. "

"வொய்.."

"நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம்.."

"என்ன சொல்றீங்க.."

"ஆமா... அப்படித்தான் ஆபீசுல சொன்னாங்க.."

"மறுபடி சொல்லுங்க.."

"நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம் .."

"ஏனாம்.."

வந்தவர் கையில் இருக்கும் போனிலிருந்து facebook அலெர்ட் வருகிறது... எடுத்துக் பார்க்கிறார்... "உங்க பேச்சை நம்பி FaceBook ஸ்டேட்டஸ் போட்டேன்... ஊர்ல FaceBook பாக்காதவனெல்லாம் இன்னிக்கு பார்த்திருப்பான் போல.... 500 லைக்ஸ் தாண்டி போய்ட்டிருக்கு... ஏகப்பட்ட கமெண்ட்ஸ் க்ரீட்டிங்ஸ்... ம்...." எரிச்சலாக முறைக்கிறார்.."

"ஏன் அட்மிஷன் தரமாட்டாங்க.."

"ஏன்னா நீங்க இந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர் இல்லையாம்..."

எதிரில் மூச்சிரைக்க ஓடி வந்தார் ஹெட் மாஸ்டரின் அந்த ஆபீஸ் அசிஸ்டன்ட், "சார்... உங்கள எங்கெல்லாம் தேடுறது.. வழக்கம்போல மறந்துட்டு... நம்ம ஸ்கூலுக்கு போகாம.. வேற ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க...!

...மீ.மணிகண்டன் 

வெள்ளி, 28 ஜூன், 2024

3வது குறுஞ்செய்தி … சிறுகதை … மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு: 3வது குறுஞ்செய்தி
எழுதியவர்: மீ.மணிகண்டன் 

வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்தா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது. காரைச் செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது இனி அடுத்த குறுஞ்செய்தியை அனுப்பப்போகும்  மூன்றாவது நபர் தாமாகத்தான் இருக்கவேண்டும், ஒருவேளை மாறிப்போனால்... போனால்... ஆ... அதை அவனது மனம் ஏற்க வில்லை. விவேக்கின் அவசரம் புரியாமல் சாலை சிக்னல் சிவப்பைக் காட்டியது. அப்படி என்ன அந்த மூன்றாவது குறுஞ்செய்தியின் மகிமை? சிக்னல் பச்சை காட்டுவதற்குமுன் அந்த மகிமையை உங்களுக்கு கொஞ்சம் வேகமாகச் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். சற்றே இரண்டு நாட்களுக்கு முன் செல்வோம்.

புதன் கிழமை மாலை வழக்கம் போல் கிரண் அவனது அபார்ட்மெண்ட் ஜிம் மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அருகில் சைக்கிளிங் செய்துகொண்டிருந்தான் கௌஷிக். இருவரும் உடற்பயிற்சி முடித்துவிட்டு வியர்வை பூத்து அரும்பி பெருகி அருவியாய் ஓடிக்கொண்டிருந்த தங்களின் முகம் மற்றும் கைகளை துடைத்துக்கொண்டிருந்தனர். கௌஷிக்கின் கைப்பேசி ஒளிர்ந்தது. 

'கௌஷிக் உன் மொபைல் ரிங் ஆகுற மாதிரி தெரியுது, சைலண்ட்ல வச்சிருக்கியா?' என்று கிரண் கேட்க. 

'ஆமாடா ஆஃபிஸ்ல இருக்கும்போது சைலண்ட்ல வச்சது அப்படியே இருக்கு' என்று பதிலளித்துவிட்டு தொலைபேசித் தொடர்பை இயக்கினான் கௌஷிக். மறுமுனையில் அகிலன்.

'கௌஷிக் இந்த வாரம் புதுப்படம் வருதாம் டிக்கட் போட்டுறவா' 

'படம் வேணாம்டா ஏதாவது ரெஸ்டாரண்ட் போயிட்டு மனம்விட்டு பேசலாம், நான் கிரணையும், விவேக்கையும் வரச்சொல்லுறேன்... சினிமா டைம் வேஸ்ட்' பதிலளித்தான் கௌஷிக். பேசி முடித்துக் கைப்பேசியை நிறுத்தினான். 

கிரண் தொடர்ந்தான், 'யாருடா அகிலனா?'

'ஆமா தியேட்டருக்குப் போறதுல என்ன பொழுதுபோக்கு இருக்கு, நாலு பேரா சேர்ந்து போவோம் அப்பறம் மூணு மணிநேரம் அவன் காட்டுறத பாத்துட்டு படம் முடிஞ்சதும் ஒருத்தருக்கொருத்தர் பை சொல்லிட்டு கிளம்பிடுவோம். அதான் ரெஸ்டாரண்ட் போலாம்னு சொல்லி இருக்கேன்' 

'குட் ஐடியா' ஆமோதித்தான் கிரண்.

வியாழன் மதியம் அலுவலக முகப்பில் வழக்கம் போல் நால்வரும் சந்திக்கும் நேரம். 

'விவேக்... சும்மா பார்வர்ட் மெசேஜ் அனுப்பாதேன்னு எத்தனை தடவை சொல்லுறது, அர்த்தமில்லாமால் டைம் வேஸ்ட் ஆகுது' அலுத்துக்கொண்டான் கிரண். 

'அப்படி இல்லடா நமக்கு உதவாட்டியும் யாருக்காவது உதவுமே அப்படிங்கற நல்ல எண்ணம் வேற ஒண்ணும் இல்ல' என்றான் விவேக். 

'கைக்காசை செலவு பண்ணி உதவி பண்ண யாராவது வராங்களா... எல்லாம் கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க தயாரா இருக்காங்க...' என்று உரையாடலில் கலந்துகொண்டான் கௌஷிக். 

அகிலன் ஆமோதித்து, ' ஆமா யாருக்கோ A+ ரத்தம் வேணும், யாரையோ பள்ளிக்கூடத்துல சேர்க்க பணம்வேணும்னு வர்ற மெசேஜ் எல்லாம் அப்படியே பார்வர்ட் பண்ண முடியுறவுங்களால தானே இறங்கி ரத்தம் கொடுக்கவோ பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டவோ செய்யுங்கன்னா செய்வாங்களா?'

கௌஷிக் தொடர்ந்தான், 'இப்பல்லாம் ஆக்கபூர்வமா சிந்திக்கிறதைவிட அர்த்தமில்லாம வாட்சாப் பேஸ்புக் ன்னு பொழுதை வீணாக்குறதுதான் அதிகமாகி இருக்கு'.

'ஏன் மத்தவுங்கள பேசிக்கிட்டு.. நாமளே எவ்வளவு நேரம் வீணடிக்கிறோம் வாட்சாப் ல', என்றான் கிரண்.

'சரிடா இவ்வளவு பேசுறீங்க, இன்னைல இருந்து நாம நாலு பேரும் வாட்சாப் பேஸ்புக் உபயோகப் படுத்துறதில்லன்னு முடிவெடுத்தா எத்தனை பேர் கடை பிடிப்பீங்க?', கேள்வியைத் தொடுத்தான் விவேக்.

'கேள்வி நல்லா இருக்கு. அனுபவத்துல கொஞ்சம் சிரமம்னு தோணுது', என்றான் அகிலன்.

'முடியாதுன்னு நினச்சா வள்ளுவர் இவ்வளவு குறள் எழுதியிருப்பாரா? ரைட் சகோதரர்கள் பறந்திருப்பாங்களா?', நம்பிக்கையூட்டினான் கௌஷிக்.

'கரெக்ட், இது சாதாரணம், நம்மால வாட்சாப் பேஸ்புக் உபயோகப் படுத்தாம இருக்க முடியும். நான் தயார்', என்றான் கிரண்.

அகிலனும், 'நானும் ஓ.கே. ஸ்டாப் பண்ணுறோம்', என்றான்.

'அப்படி சாதாரணமா எப்படி நிறுத்தறது, நமக்குள்ள வாட்சாப்போ பேஸ்புக் கையோ வச்சு ஒரு விளையாட்டு வச்சுக்குவோம். அதுதான் ஃபைனல் அதுக்கப்புறம் நாம அந்தப்பக்கமே எட்டிப்பாக்குறதில்ல', என்று புதிதாக ஒன்றைச்சொன்னான் கௌஷிக்.

'ஓகே என்ன விளையாட்டு', என்று விவேக் ஆவலுடன் கேட்க, ஒவ்வொருவரும் தங்களின் அதீத மூளையைக்கொண்டு சிந்திக்கத் துவங்கினர். 

'ஆக்க பூர்வமா சிந்திக்கிறோம்னு சொன்னோம். சிம்பிளா ஒரு கேம் நம்மால சிந்திக்க முடியல...ம்...', என்று யோசனையைத் தொடர்ந்தான் விவேக்.

'டேய்... இப்படி செஞ்சா எப்படி?', என்றான் அகிலன்.

'எப்புடி?', என்று நகைத்தான் கிரண்.

அகிலன் தொடர்ந்தான், 'அதாவது நாம நாளைக்கு ரெஸ்டாரண்ட் போறதா இருக்கோம்'

'ஆமா' ஆமோதித்தான் கௌஷிக்.

'நாலுபேரும் அசெம்பிள் ஆகுறதுதான் கேம்', என்றான் அகிலன்.

கிரண் முந்திக்கொண்டு, 'புரியும்படியா சொல்லேண்டா'

அகிலன் தொடர்ந்தான், 'அதாவது நாலு பேர்ல யாரெல்லாம் முன்னாடி ரெஸ்டாரண்ட் வாரங்களோ அவங்க வெற்றியாளர், கடைசியா வர்றவர் போட்டியில தோத்தவர்.'

'இதுக்கும் வாட்சாப் கும் என்னடா சம்பந்தம்?', கேள்வி எழுப்பினான் விவேக்.

'இருக்கே... வாட்சாப் தான் இங்க ஜட்ஜ், ரெஸ்டாரண்ட் ரீச் ஆகுறவுங்க தன்னை செல்ஃபி  எடுத்து வராத மத்தவங்களுக்கு அனுப்பனும். மூணு மெசேஜ் வரைக்கும் வெற்றியாளர். கடைசியா வர்றவர் யாருக்கும் மெசேஜ் அனுப்ப முடியாதே! ஆகா அவர் தோத்தவர்', என்று விளையாட்டை விளக்கினான் அகிலன்.

'நல்லாருக்கே... அக்ரீட்', என்றான் ஆனந்தமாக கௌஷிக்.

'நானும் ஏத்துக்கறேன்', என்றான் விவேக்.

'எனக்கும் ஓ.கே.', ஆமோதித்தான் கிரண்.

இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே விவேக் ஏன் தான் அந்த மூணாவது மெசேஜ் அனுப்ப அவசரப் பட்டு காரைப் பறக்க விடுறான்னு. ஆமா கிரணும் கௌஷிக்கும் மெசேஜ் அனுப்பிட்டாங்க இப்போ அகிலனை முந்துவதுதான் விவேக்கின் முயற்சி.

சிக்னல் பச்சை காட்டியது பிரேக்கில் இருந்து காலை எடுத்த நம்ம விவேக் சட்டென மீண்டும் பிரேக்கில் பலமாக அழுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் சாலையைக் கடந்து ஓடிய நாயும் நாயைப் பிடித்துக்கொண்டு அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலை தடுமாறி சாலையின் நடுவே தனது காருக்கு எதிரே விழுந்த நாயின் எஜமானரும்தான். கடிகாரத்தைப் பார்த்தான் விவேக். என்ன செய்வது… புரியவில்லை. காரை நிப்பாட்டி கதவைத்திறந்து இறங்கினான். முன்னம் சென்று கீழே விழுந்தவர் எழுவதற்கு உதவினான். நன்றியுள்ள நாயும் தன் எஜமானரின் அருகில் நின்று வாலைக் குழைத்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக நாயையும் எஜமானரையும் வழியனுப்பிவிட்டு காருக்குள் ஏறினான். சிக்னல் மீண்டும் சிவப்பு.

சற்று நேரத்திற்குப் பின்.

ரெஸ்டாரண்ட் வாசல். தனது மொபைல் போன் எடுத்துப் பார்த்தான் விவேக் மூன்றாவது குறுஞ்செய்தி இன்னும் வரவில்லை. அப்பாடா என்று மனம் நிம்மதியோடு இருந்தாலும் போட்டி நிபந்தனை செல்ஃபி எடுத்து அனுப்பும்வரை நீள்கிறதல்லவா. அவசரமாக கார் கதவைத் திறந்து இறங்கினான். காரை பார்த்தும் பார்க்காமலும் ரிமோட்டில் லாக் செய்துவிட்டு லாக் ஆன சத்தத்தை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு ரெஸ்டாரண்டினுள் விரைந்தான். அங்கே அவன் எதிர்பார்க்காத நிகழ்வு. மீண்டும் தனது மொபைல் போனை எடுத்துப் பார்த்தான் நிச்சயமாக மூன்றாவது குறுஞ்செய்தி வரவில்லை. ஆனால் ரெஸ்டாரண்டில் அவன் பார்த்த நிகழ்வு, கிரண் கௌஷிக்கோடு அகிலனும் அந்த மேசையில் அமர்ந்திருந்தான். ஏன் அகிலன் குறுஞ்செய்தி அனுப்பவில்லை…?!

'டேய் நம்ம ஸ்பான்சர் வந்துட்டார்டா', என்றான் கௌஷிக். 

'வாங்க ஸ்பான்சர், ஆர்டர் பண்ணிடுவோமா', என்றான் நகைத்துக்கொண்டே கிரண். 

அகிலனும் கௌஷிக் மற்றும் கிரணோடு சேர்ந்துகொள்ள, மூவரும் ஆரவாரமாகச் சிரித்தார்கள்.

இவற்றைக் காதில் வாங்காமல் கண்டும் கொள்ளாமல் தன்னை செல்ஃபி எடுத்து அதை மற்ற மூவருக்கும் அனுப்பி முடித்தான் விவேக்.

இங்க ஒரு சின்ன பிளாஷ்பாக்.

அகிலன் வீட்டிலிருந்து தனது காரை கிளப்புகையில் தனது கைப்பேசியைப் பார்த்தான் வெண்திரையாக வெறும்திரையாக இருப்பது கண்டு குழப்பம் கொண்டான். பின்னர் கைப்பேசி பேட்டரி ரீசார்ஜ் செய்யாதது நினைவில் வந்தது. இனி நேரம் இல்லை காரில் ரீசார்ஜ் செய்யலாம் என்றால் சார்ஜர் அவசரத்திற்கு டாஷ்போர்டில் கிடைக்கவில்லை. பரவாயில்லை இதில் நேரம் செலவிடாமல் ரெஸ்டாரண்ட்க்கு செல்வோம் என்று புறப்பட்டு விட்டான். ரெஸ்டாரண்டை மூன்றாவது நபராக அகிலன் வந்தடைந்தாலும் தனது கைப்பேசியில் பேட்டரி பவர் இல்லாத காரணத்தால் செல்ஃபி எடுத்து அனுப்ப முடியவில்லை.

பிளாஷ்பாக் நிறைவடைந்தது.

இப்போது தங்களது கைப்பேசியைப் பார்த்த கௌஷிக்கும் கிரணும் குழப்பத்தில் விவேக்கைக் கண்டனர். காரணம் நான்காவதாக வந்துவிட்டு ஏன் செல்ஃபி அனுப்புகிறான் விவேக் என்ற குழப்பம்.

ரெஸ்டாரண்டிற்கு எதார்த்தமாக வந்திருந்த அவர்களில் மூத்த வயதுடைய நண்பர் நால்வரையும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டு பின்னர் நால்வரின் விளையாட்டையும் கேட்டறிந்தார்.

நண்பர் சொன்னார், 'நண்பர்களே நல்ல விளையாட்டு. உண்மையிலே நன்மையும் கூட. ஆக இன்னிலிருந்து நீங்க யாரும் வாட்சாப் பேஸ்புக் உபயோகிக்கப் போறதில்லை?ஆம் ஐ ரைட்?'

விவேக் பதிலளித்தான், 'எஸ் அங்கிள்.' தொடர்ந்து, 'அதோட எங்க விளையாட்டுக்கு ஒரு நல்ல தீர்ப்பும் சொல்லிடுங்க இவங்க எல்லாம் நான்தான் இன்னிக்கு ஃபுட் ஸ்பான்சர் பண்ணனும்னு சொல்லுறாங்க.' என்று அப்பாவியாகச் சொன்னான்.

நண்பர் தொடர்ந்தார், 'நோ…நோ... உங்கள ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சிருக்கேன். நான்தான் உங்க ஸ்பான்சர் இன்னிக்கு.'

'அதெப்படி… அப்படின்னா எங்க கேம் நிறைவடையாதே', என்ற கௌஷிக்கிற்கு பதிலளித்தார் நண்பர், 'விவேக் ஸ்பான்சர் செஞ்சாலும் உங்க கேம் கம்ப்ளீட் ஆகாது'

'அதெப்படி', புருவத்தை உயர்த்தினான் கிரண்.

நண்பர் விளக்கினார், 'உங்க கேம் நிபந்தனை என்ன? மூன்றாவது மெசேஜ் கொடுக்குறவுங்க வரை வெற்றியாளர்தானே. விவேக் தான் மூன்றாவது மெசேஜ் கொடுத்துட்டாரே?!'

ஐவரின் ஆரவார மகிழ்ச்சி ரெஸ்டாரண்ட் முழுவதையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

...மீ.மணிகண்டன்

குறிப்பு: வம்சி புக்ஸ் வெளியிட்ட எனது 'அத்தனையும் பச்சை நிறம்' சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்ற கதை.

ஞாயிறு, 19 மே, 2024

அடுக்கு மல்லிகள் ......மீ.மணிகண்டன்

அடுக்கு மல்லிகள்

அடுக்கு மல்லிகள் 
புன்னகைக்கின்றன 
அவசரமின்றி 
வெண்ணிலவு நகர்ந்து 
ஓடை குளம் ஏரி எங்கும் 
தன்னைப் பிரதி 
எடுத்துக்கொண்டிருக்கிறது 
அன்னங்கள் பருகப் பருகத் 
தீராநிலவு ஆட்டத்தைத் 
தக்கவைத்துக் கொள்கிறது 
இருளென்று சொன்னவர்களைத் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
வெள்ளை ராத்திரியில். 

…மணிமீ 
Apr-26-2024

எழுதிவிட்டால் பொதுவாகும் ...மீ.மணிகண்டன்

 எழுதிவிட்டால் பொதுவாகும் ...மீ.மணிகண்டன்

எழுதாமல் பொத்திவைத்தால் 
எனதாகும்
விழுதாகி வேராகும்
விதையீன்று மரமாகும்
மழையோடு உரையாடும்
மனதோடு உறவாடும்
எழுதிவிட்டால் பொதுவாகும்
எழுதாமல் பொத்திவைத்தால்
எப்போதும் எனதாகும்…

… மணிமீ
28/04/2024

மறதி ...மீ.மணிகண்டன்

 மறதி ...மீ.மணிகண்டன்

எது மறந்ததென்று தெரியவில்லை
பயணச்சீட்டு பைக்குள்
இருப்பதை உறுதிசெய்துகொள்கிறேன் 
ஒரு பயணத்திற்கு அதைவிடவும்
அவசியமானது
வேறு எதுவாக இருந்துவிட முடியும்?
பயணப்பொதி சுமந்து வந்தேனோ?
ஆம் என் பார்வை படும்படியாக
இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்
மீண்டுமொருமுறை சிந்தனையைச்
சன்னலில் புகுந்துவந்த
காற்றினும் வேகமாய்ப் புரட்டுகிறேன்
எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ
அந்த ஞாபகம்.
பயணம் நிறைவேறியது என்ற
குரல்கேட்டு உடமைகளோடு
இறங்கியபின் ஞாபகம் வந்துவிட்டது
நான் பயணிக்க வேண்டியவன் அல்ல.

#மணிமீ 
8/May/2024

சொல்லாத ஒன்று ...மீ.மணிகண்டன்

சொல்லாத ஒன்று ...மீ.மணிகண்டன்

முதுகுச் சவாரியில்
முழங்கால் வலித்ததைச்
சொல்லவே இல்லை ...
மழைக் காய்ச்சலில்
மருத்துவமனை வரிசையில் 
விழிகள் உறங்காத 
வேதனையைச் 
சொல்லவே இல்லை ... 
மூன்றாம் வகுப்பில்
முழுக்கால் சட்டைக்கு
அழுதபோது 
மூன்று நாட்கள்
இருக்கிறது இன்னும்
முதல் தேதிக்கு என்று 
சொல்லவே இல்லை ...
மிதிவண்டிக் கனவொன்றை
முகப்பு வாசலில் நனவாக்கி 
கழுத்துவலி மருத்துவத்தைக்
கடத்தி வந்ததைச்
சொல்லவே இல்லை ...
விடுதிக்கு வந்து என் 
வெறுங்கைகளுக்குள் 
திணித்தபோதும் 
ஒரே எட்டுமுழ வேட்டியை 
ஒருபக்கமாகவே கட்டிவரும் 
உண்மையைச் 
சொல்லவே இல்லை ...
மாதக் கடைசியில் 
மணிக்கட்டைத் தடவிப் பார்த்து 
மகனேன்னைப் 
பார்த்தபோதுதான் புரிந்தது 
நீ சொல்லாதவைகளில் 
ஒளிந்திருக்கும் சுகத்தையும் 
சொல்லவே இல்லை ...
... மீ.மணிகண்டன்
#மணிமீ
25/Jun/15 

திங்கள், 11 மார்ச், 2024

பொட்டு வைத்த வட்ட நிலா … சிறுகதை … மீ.மணிகண்டன்

பொட்டு வைத்த வட்ட நிலா … மீ.மணிகண்டன்

பொட்டு வைத்த வட்ட நிலா ... மீ.மணிகண்டன்

 "ஏம்மா.. இன்னும் எவ்வளவு தூரம்மா நடக்கணும்..."

 "யாருடி இவ... நானும் உங்கூடத்தானே வாரேன்..."

 "பஸ்ஸ விட்டு எறங்கி இவ்வளவு தூரம் நடக்கணும்னு சொல்லவே இல்ல..."

 "சொல்லியிருந்தா மட்டும் என்ன செஞ்சிருப்ப..."

 "ம்... வெயில் கொளுத்துது... ஒதுங்கி நிக்க ஒத்த மரங்கூட இல்ல... இன்னும் நாலடி எடுத்து வைப்பனான்னு சந்தேகம்தான்..."

 "பேசாம வாடி... அந்தாத்தெரியுற கடையில ஆளுக்கொரு டீ குடிச்சுப்பிட்டு நடப்போம்..."

 "அம்மா... மத்தியான நேரம்... சோறு இல்லைன்னாலும் ஒரு இளநீ வாங்கித்தருவியா.. டீ வாங்குறேங்கிற..."

 "சரி... அங்க என்ன இருக்கோ வாங்குறேன் வா..."

 மாற்று உடைகளை இரண்டு சிறு பொதிகளாகவும் அவசியத் தேவைக்கான சமையல் பாத்திரங்களை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து நான்கு புறமும் கனத்த சணல் கொண்டு இருகக்கட்டி மேலே பிடிப்பதற்கு வசதியாக கொஞ்சம் இடைவெளி விட்டுக்கட்டிய சுமையாகவும், மற்றுமொரு பையும் சுமந்துகொண்டு, தாயும் மகளும் அங்கே புலப்பட்ட சின்ன பெட்டிக் கடையை அடைந்தனர். சற்றே தள்ளாடி மயக்கத்துடன் அந்த பெஞ்சின் ஒரு ஓரம் அமர்ந்த மகளைச் சற்று கவலையுடன் பார்த்துவிட்டு கடைக்காரரின் பக்கம் திரும்பினாள் லலிதாம்மா, "ஐயா சாப்பாடு இருக்குமா?"

"இது ஓட்டல் கடை இல்லைம்மா, காபி, டீ, கலர்த்தண்ணி இருக்கு, ஊருக்குள்ள போனீகன்னா ஐயர் களப்புக் கடை இருக்கு"

இதற்கு மேல் மகளால் பசிதாங்க முடியாது என்றுணர்ந்த லலிதாம்மா, "கலர் குடுங்க.." என்று வாங்கி மகளிடம் நீட்டினாள்.

அரை மயக்கத்தில் தாய் நீட்டியதை வாங்கி வாயில் வைத்தாள் மல்லிகா, பாதிக் கலர் வாயிலும் மீதி வாய் கொள்ளாமல் வெளியேறி அவள் கன்னங்களை நனைத்து கழுத்து வழி இறங்கி ரவிக்கை தாவணியை நனைத்தது. தனக்கு ஒரு டீ வாங்கி குடித்த லலிதாம்மா, மடியில் சொருகியிருந்த சுருக்கிலிருந்து நாணயங்களைத் தேடி கடைக்காரர் கேட்ட விலையைக் கொடுத்துவிட்டு மகளைப் பார்த்துக் கேட்டாள், "நடப்போமாடி".

மல்லிகா சற்றே நிமிர்ந்து கடைக்காரரைப் பார்த்து, "இங்கேருந்து மாணிக்கப்புரம் எவ்வளவு தூரம்?"

"அது சரி ஊருக்கு புதுசா?" என்றார் கடைக்காரர்.

"ஆமா... ஏன் கேக்குறீக?" என்றாள் லலிதாம்மா.

 "பெறகென்ன... ஊருக்குள்ள வந்து இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு கேக்குறீக".

 சட்டென முகம் மலர்ந்தது மல்லிகாவிற்கு.

 "ஊரு வந்துருச்சா..." ஆச்சரியமாகக் கேட்டாள் லலிதாம்மா. "சரி முத்தையா ஐயா வீட்டுக்கு எப்படிப் போகணும்?" என்று சிறு உற்சாகத்துடன் தொடர்ந்தாள்.

 "இந்தாத் தெரியுதுல்ல கிழக்குத் தெரு போர்டு, அந்த வழியா நேராப் போங்க சின்ன ஊரணி தெரியும் ஊரணிக்கு தெக்கே ஒரு ஆல மரம், ஆல மரம் தாண்டி சரியா எண்ணிக்கிட்டே போங்க எடது பக்கம் பத்தாவது வீடு" என்று வழி சொன்னார் கடைக்காரர்.

 கடைக்காரர் சொன்னபடி போர்டு சொன்ன வழியே நடந்து சின்ன ஊரணி, ஆலமரம் கடந்து இடது பக்கம் பத்தாவது வீட்டில் நின்றார்கள் தாயும் மகளும்.

 வர்ணம் பூசப்பட்டு அலங்காரக் கம்பிகளால் ஆன வெளிக்கேட்டு சங்கிலி போட்டுப் பூட்டப் பட்டிருந்தது பூட்டு உட்பக்கம் தொங்கியது. கம்பிக் கதவு தொடங்கி வீட்டு வாயிற்படி வரை சுமார் இருபதடிகள் இருக்கும். அதுவரை இரண்டு பக்கங்களிலும் வண்ண விண்ணப் பூச்செடிகள் வாழை மரங்கள் என்று சிறு தோட்டம் பசுமையைப் படரவிட்டிருந்தது. வாயிற்படியின் இருபுறமும் திண்ணைகள் ஒவ்வொரு திண்ணையிலும் இரண்டிரண்டு தூண்கள்.

 கம்பிக்கதவைப் பிடித்து லேசாக ஆட்டினாள் லலிதாம்மா, பூட்டுச்சங்கிலியோடு கம்பிக்கேட்டு எழுப்பும் சல சல சத்தம் உள்ளே கேட்டு யாரும் வந்து எட்டிப் பார்க்கக்கூடும்.

 "ஏம்மா திண்ணை எதுக்கு வைப்பாக... வழியில போற வாரவுக களைச்சு வந்தா உட்காரத்தானே? இப்படி திண்ணை வச்சுக்கட்டி வெளியில கேட்டுப் போட்டு பூட்டி வச்சா என்ன கணக்காம்?"

 "யாருடி இவ... வாய வச்சுக்கிட்டு சத்த நேரம் சும்மா இருக்க மாட்டே", மெல்லிய குரலில் கோபமின்றி மகளைக் கடிந்துகொண்டாள் லலிதாம்மா.

 கம்பிக்கேட்டுச் சத்தம் உள்ளே இருப்பவர்களுக்குக் கேட்டிருக்க வேண்டும், ஐம்பது வயது மதிக்கத்தக்க முத்தையா ஐயா வெளியில் வந்தார், கைப்பனியன் நாலுமுழ வேட்டி தோளில் குத்தாலந்துண்டு. வாயிற்படி தாண்டி அந்தச் சிறு தோட்டம் கடந்து கேட்டின் அருகில் வந்துகொண்டிருந்தார்.

 "ஐயா நான் லலிதா இது என் மக, போஸ்ட்மேன் மாரியப்பன்..." என்று சொல்லவந்ததை முடிக்கும் முன்னமே முத்தையா தொடர்ந்தார்,

 "ஒ... போஸ்ட்மேன் சொன்ன லலிதாம்மா நீங்கதானா, கொஞ்சம் இருங்க ரைஸ்மில் வீட்டு சாவிய தரச் சொல்றேன்". என்று சொல்லிவிட்டு திரும்பி வீட்டினுள் சென்றார்.

 "அட பாவி மனுசா... வெயில்ல வாரோம்... கதவை தொறந்து உள்ள உட்காருங்க.. தண்ணி குடிங்கன்னெல்லாம்... சொல்லற பழக்கமே இல்ல போல."

 "மல்லி... இப்ப நீ வம்பிழுக்காம இருக்கமாட்டியா", என்று மீண்டும் மெல்லிய குரலில் மகளைக் கடிந்துகொண்டாள் லலிதாம்மா.

 இப்போது வீட்டினுள்ளிருந்து வெளியில் சாவியுடன் வந்தவர் ஒரு பெண்மணி, முத்தையா ஐயாவின் மனைவியாக இருக்கவேண்டும். கேட்டின் அருகே வந்தவர் கம்பிகளின் இடைவெளியில் ரைஸ்மில் வீட்டுச்சாவியை நீட்டினார். "ஒரு வாரத்தில காலி பண்ணிக் கொடுத்திறனும், ஏன்னா அடுத்தவாரம் புது மிசின் போடுற ஆளுக வந்தா அங்கதான் தங்கணும், அதுக்குள்ளே அக்கம் பக்கத்தில வேற வீடு தேடிக்குங்க, நானும் எனக்குத் தெரிஞ்சாச் சொல்லுறேன்."

 "நல்லதும்மா, எங்களுக்கும் அதான் வசதி, ஒரு வாரம் என்ன ஒண்ணு ரெண்டு நாள்ள கெடச்சிட்டாகக்கூட உடனே மாத்திக்குவோம். நன்றிம்மா" என்றாள் லலிதாம்மா.

 "வீட்டுக்கு வழி தெரியாதுல்ல, கேட்டுக்குங்க, நீங்க வந்த வழிதான் அந்த ஆல மரம் தாண்டி சின்ன ஊரணி ஓரமா நடந்திகன்னா ஊரணிக் கரை முடிஞ்சு ஒரு ஒத்தையடிப் பாதை போகும் அதுதான் குறுக்கு வழி நடக்குறதுக்கும் தோது. அந்த வழிய போனீகன்னா கொஞ்ச தூரத்தில ரைஸ்மில் கட்டடம் தெரியும் மில்லுக்குள்ள பயலுகள்ட்ட எங்க வீட்டுக்காரர் பேரச்சொல்லி, அவுகதான் அனுப்பினாகன்னு சொல்லுங்க. வீட்டுக் கதவு எந்தப்பக்கம்ன்னு கேட்டீகன்னா சொல்லுவாய்ங்க."

 "நல்லதும்மா, போயிட்டு வாரோம்" என்று விடை பெற்றுத் தாயும் மகளும் ரைஸ்மில் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

 பிரம்மாண்டமான ரைஸ்மில், வெளியில் இரும்புக்கதவு தாண்டி பத்தடியில் இரு புறமும் பக்கத்திற்கு ஒன்றாக புன்னை மரங்கள். மரத்ததைத்தாண்டி ஐந்தடியில் ரைஸ்மில் முகப்பு. முகப்பு ஓரமாக இரு புறமும் பக்கத்திற்கு மூன்று என ஆறு அசோக மரங்கள். அசோக மரங்களின் ஊடே ஒன்றிரண்டு சைக்கிள்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது. முகப்பை அடைந்ததும் உள்ளே யாரையாவது கூப்பிடலாமா என்று எட்டிப் பார்த்தாள் லலிதாம்மா. பின்னால் நடந்து வந்த மல்லிகா புன்னை மர நிழலில் நின்றுகொண்டு மரத்தில் ஆங்காங்கே பூத்துக்கிடந்த பூக்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

 "ஐயா" என்ற லலிதாம்மாவின் குரல் கேட்டு ரைஸ்மில் பணியாளர் ஒரு சிறுவன் அருகில் வந்தான். லலிதாம்மா அவனிடம் விவரத்தைச்சொல்ல, "கொஞ்சம் இருங்க அண்ணனைக் கூப்பிடுகிறேன்", என்று அந்தச் சிறுவன் உள்ளே இடதுபுறமாக இருந்த அலுவல் அறைக்குள் சென்றான். சற்று நேரத்தில் வாலிபர் ஒருவருடன் சிறுவன் வெளியில் வந்து லலிதாம்மாவைக் காட்டி "இவங்கதான்", என்றான்.

 வந்த வாலிபர் லலிதாம்மாவிடம் "சரவணன் உங்களுக்கு வீடு காட்டுவான்", என்று சிறுவனைக் கை காட்டிவிட்டு, "ஐயா வேற ஏதாவது சொன்னாங்களா?" என்றார்.

 "வந்து ஒரு வாரத்துல காலி பண்ணிடணும்னு சொன்னாங்க, எங்களுக்கும் அதான் வசதி, நானும் என் மகளும் மட்டும்தான், நாங்க தங்குற மாதிரி அதிக வாடகை இல்லாம சின்னதா ஒரு இடம் உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்க", என்றாள் பணிவாக லலிதாம்மா.

 "ம்... சொல்றேன்", என்று புன்னகைத்தபடியே, "சரவணா அவங்களுக்கு கதவு எந்தப் பக்கம்னு காட்டு", என்று கட்டளை இட்டுவிட்டு மீண்டும் அலுவல் அறை நோக்கி நடந்தார் வாலிபர்.

 சிறுவன் சரவணனின் துணையோடு வீட்டைத்திறந்து, கொண்டுவந்திருந்த சுமைகளை ஒரு சுவற்றின் ஓரம் வைத்தனர். பெயர்தான் வீடு ஆனால் அது சீமை ஓடுகள் வேய்ந்த ஒற்றை அறைதான், ஒரு ஓரம் சிமெண்ட் மேடை, அடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேடைக்கு அருகே பானை ஒன்று. பானையத் திறந்து பார்த்தாள் மல்லிகா தண்ணீர் நிறையவே இருந்தது, ஆனால் அது எத்தனை நாட்கள் பழையது என்று சொல்ல முடியாது.  தற்காலிக தங்குதலுக்கு உகந்த இடம். சரவணனிடம் எங்கே காய்கறிகள் வாங்குவது என்ற விபரம் கேட்டுக்கொண்டாள் லலிதா ஆனால் பொருட்கள் வாங்கிவந்து சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு அவர்களின் வயிற்றுப்பசி அவர்களுக்கு நேரம் தரவில்லை. சரவணனிடமே எங்கே உணவு விடுதி இருக்கிறது என்று வினவ அவனும் தானே வாங்கிவந்து தருகிறேன் என்று சொல்லி இரண்டு தயிர் சாதப் பொட்டலம் வாங்கிவந்து கொடுத்துவிட்டு அவர்களிடம் விடைபெற்றுச்சென்றான். உண்டுமுடித்த இருவரும் மற்றவற்றைப் பிறகு யோசித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வெற்றுத்தரையில் கைகள் தலையணையாக சற்று கண் அயர்ந்தார்கள்.

 சட்டென ஓட்டைப் பிரித்துக்கொண்டு, வேட்டி கட்டி விபூதிப் பட்டையுடன் ஒரு உருவம் வீட்டினுள் இறங்க, வாய் திறந்து கத்துவதற்கு முற்பட்டாள் லலிதாம்மா, இறங்கிய உருவம் அவளைக் கத்தவிடாமல் ஒரு கையால் அவள் வாய்யைப் பொத்தியது மறுகையால் அவளை அணைத்து "என்ன ஊரை விட்டு வந்துட்டா எல்லாம் மாறிப் போயிடுமா, உன்னையும் விடமாட்டேன் உன் மகளையும் விடமாட்டேன்", என்று கர்ஜிக்க, "மல்லீ..." என்று அலறிக்கொண்டு பதட்டமாக விழித்தாள் லலிதாம்மா, நடந்தது கனவில் என்று உணர சற்று நேரம் எடுத்தது அவளுக்கு.

 "என்னம்மா கனவா" என்று தாயின் அலறலில் விழித்துக்கொண்ட மல்லிகா தன் தாயின் கையைப் பிடித்தாள்.

 "என்னவோ கனவுடி, சரி", என்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு "பக்கத்தில எங்க பால் கிடைக்கும்னு பாக்குறேன், காபியை கலந்துட்டு மத்த வேலையைப் பார்க்கணும், மணி அஞ்சுக்கு மேல ஆயிருக்கும் போல நல்ல உறக்கம்" என்று படுத்திருந்த லலிதாம்மா எழுந்துகொண்டாள். தாயைத் தொடர்ந்து மகளும் உறக்கம் கலைந்து எழுந்தாள்.

 "போஸ்ட்மேன் நாளைக்கு வருவாராம்மா"

 "ஆமாடி, வரும்போது எல்லாம் தயாரா வருவாரு", தாயிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறு மகிழ்ச்சியில் புன்முறுவல் பூத்தாள் மல்லி.

 கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றி ஒருமுறை புது இடத்தைப் பார்த்தாள் மல்லிகா, மதியம் பாதி மயக்கத்தில் வீடு வந்து சேர்ந்தவள் உறக்கத்திற்குப்பின் சோர்வு தீர்ந்து இப்போது தெளிவாக இருந்தாள்.

 "அம்மா இங்க பாரேன் பச்சைப் பசேல்ன்னு வயல் வெளி, சூரியன் எறங்குற நேரம் அந்த மரத்துக்குப் பின்னால சூரிய ஒளி, இந்தப்பக்கமா நிழல், ஜில்லுனு காத்து, ஆஹா.... சினிமால பாக்குறமாதிரி இருக்கும்மா" என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வீட்டு வாசலில் சுற்றிச்சுற்றி வந்தாள் மல்லிகா.

 மகளின் மகிழ்ச்சித் துள்ளலை ரசித்துக்கொண்டே தனக்குள் பேசிக்கொண்டாள் லலிதாம்மா, "ராமர் குருக்கள் மட்டும் போனவாரம் கண்ணுல படாம இருந்திருந்தா இன்னைக்கு இங்கே இருந்திருக்க மாட்டோம்" என்று.

******

கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத்திருந்தாள் லலிதாம்மா.

"வாங்க போஸ்ட்மேன், உங்களுக்காகத்தான் காத்திருந்தேன், வாங்க உட்காருங்க", என்று சுவற்றோரம் கைகாட்டினாள்.

"ஊருல எங்களப்பத்தி பேசுறாங்களா", கேட்டாள் லலிதாம்மா.

அவள் காட்டிய இடத்தில் தரையில் உட்கார்ந்த போஸ்ட்மேன் மாரியப்பன், "அதெல்லாம் இல்லம்மா, அவங்களுக்கு நீங்க யாரு சொந்தமா சொத்தா?"

"ஆமா, இருந்தாலும் எனக்கு ஒரு நெனப்பு, பதினாலு வருசமா இருந்து பழகின ஊரு", என்று சற்றே குரல் தழுதழுத்தாள் லலிதாம்மா.

"நீங்க இருந்தீங்க எங்கயோ போயிட்டீங்க, அதோட அவுங்க உங்கள மறந்திடுவாங்க", என்று எதார்த்த வார்த்தைகள் சொன்னார் போஸ்ட்மேன்.

"முத்தையா ஐயா உங்களுக்கு ரைஸ்மில்லுல வேலை போட்டுக் குடுத்திருவாரு, நீங்க வீடு மட்டும் சீக்கிரம் மாத்திக்குங்க", என்ற போஸ்ட்மனின் வார்த்தைகளுக்கு பதிலுரைத்தாள் லலிதாம்மா, "ஆமா சொன்னாங்க, நானும் வீடு வேணும்னு ரைஸ்மில்லுல கேட்டிருக்கேன், அந்தத்தம்பி கேட்டுச் சொல்லுறதா சொல்லி இருக்கு".

"போன வெள்ளிக்கிழமையே வாத்தியாரைப் பார்த்துப் பேசிட்டேன், இன்னிக்கு மல்லிகாவை கூட்டிட்டுப் போனாப் போதும், எங்க மல்லிகா... கெளம்பிடுச்சா", என்று போஸ்ட்மேன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, பக்கத்துப் பம்பு செட்டிற்க்குக் குளிக்கச் சென்றிருந்த மல்லிகா குளித்து முடித்து ஈரக்கூந்தல் துண்டுடுத்தி, கையில் ஈரத்துணிகளுடனும் வந்துகொண்டிருந்தாள். போஸ்ட்மன் வீட்டினுள் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, "வாங்க அண்ணெ", என்றவள், தொடர்ந்தாள், "அம்மா விடியும் முன்னாடி பம்புசெட்டுக்கு போயிட்டு வந்துடுச்சு நான் கொஞ்சம் லேட்டு", என்று க்ளுக்கேன சின்னச் சிரிப்பை உதிர்த்தாள்.

ஒற்றை அறை வீட்டில் தான் அமர்ந்திருந்தால் மல்லிகா எப்படி உடை மாற்றிக் கிளம்புவாள், நிலைமையை புரிந்துகொண்ட போஸ்ட்மேன், "நான் ரைஸ்மில்லுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன், சீக்கிரம் கிளம்பிடு மல்லிகா", என்று சொல்லிக்கொண்டே மாரியப்பன் எழுந்திரிக்க, "கொஞ்சம் இருங்க இந்தக் காபியை குடிச்சுட்டு போலாம்", என்று காபி தம்பளரை நீட்டினாள் லலிதாம்மா.

காபியை வாங்கிக்கொண்டே வெளியில் கிளம்பினார் போஸ்ட்மேன் மாரியப்பன்.

வேகமாகச்செயல்பட்டாள் மல்லிகா, மகளின் சுறுசுறுப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் லலிதாம்மா, மீண்டும் அந்த ராமர் குருக்களின் நினைப்பு, அப்படி என்ன ரகசியம் அவரிடம் இருக்கிறது, ஆம் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பன்னீர் புரத்தை விட்டு ராயப்பட்டிக்கு வந்ததே இந்த ராமர் குருக்களால்தான் இப்போது மீண்டும் ஒரு இடமாற்றம் அவரை ராயப்பட்டியில் பார்த்ததால்.

பன்னீர் புரத்தில் சிவன் கோவிலில் மடப்பள்ளி வேலைகள் செய்துகொண்டிருந்த நாட்கள், ஒரு நாள் அதி காலை வேலை முடித்து வீட்டிற்குத் திரும்புகையில் மண்டபத்தில் மல்லிகைக்கொடி படர்ந்த அந்தத் தூணோரம் ஒரு குழந்தை! தான் பார்ப்பது கனவா நிஜமா என்று ஒரு முறை கண்களை தேய்த்துக்கொண்டாள் லலிதாம்மா. நிஜம்தான் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை யார் இங்கே பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா? அதுவும் இவ்வளவு அதிகாலையில்... சந்தேகத்துடன்... சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை, உறக்கத்தில் இருந்தது குழந்தை, குழந்தையைப் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு கடிதம் சொருகப்பட்டிருந்தது, எடுத்துப் பிரித்துப் படிக்கத்துவங்கினாள் லலிதாம்மா,

"இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் சக்தியையும் பணவசதியையும் இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை. ஆகவே இறைவனே அந்தப் பொறுப்பை ஏற்கட்டும். கண்ணுக்கு முன்னால் என் குழந்தையை அப்படிப் பார்க்கவும் எனக்கு மனம் இல்லை. குழந்தையை கோவிலுக்கு நேர்ந்து இக்கடிதம் எழுதுகிறேன். குழந்தை வளரும்பொழுது பொட்டுக்கட்டி தேவரடியார் ஆக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தேடவேண்டாம்.

இப்படிக்கு

இந்தக் குழந்தையின் தாய்."

படித்து முடித்த லலிதாம்மாவிற்கு பகீர் என்றது மனது, அறியாத குழந்தையை அப்படி விட மனமில்லை, குழந்தையின் தாயைத் தேடியும் பயன் இல்லை. கடிதத்தை கிழித்து வாயில் இட்டு மென்று விழுங்கினாள். தொண்டை விக்க மின்னலாகச் செயல்பட்டாள் கோயில் குளத்தில் இறங்கி தன் இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகினாள் தண்ணீரால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மீண்டும் படியேறி மல்லிகைக்கொடியின் தூணோரம் வந்தாள் இன்னும் சூரியன் கோடாகத்தான் தெரிந்தான். வானம் இளம் இருட்டாகவே இருந்தது. யாரும் குழந்தையைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குழந்தையைத் தன் இரு கரங்களாலும் போர்வையோடு தூக்கினாள். எதிர்பாராத விதமாக எதிரில் வந்தார் ராமர் குருக்கள்.

"ஏண்டிம்மா என்ன பண்ணப்போற", என்றார் குருக்கள்.

"சாமி... இந்தக் குழந்தையை நான்... வளர்த்து... ஆளாக்குறனே...", யோசித்து யோசித்து பதிலளித்தாள் லலிதாம்மா.

"கடிதாசியை நானும் வாசிச்சேன். சரி நன்னா வளர்த்துக்கோ, ஆனா வயசு வறச்சே, கடிதாசியில கண்டிருக்கபடி செஞ்சுடு சரிதானே"

அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு குழந்தையோடு நகர்ந்தால் சரி என்கிற நோக்கத்தில், "சரி சாமி", என்று பதிலளித்துவிட்டு, "நான் வரேன்" என்று புறப்பட்டவள் சற்றும் தாமதிக்காமல் பன்னீர் புரத்திலிருந்து புறப்பட்டு ராயப்பட்டிக்கு குடி பெயர்ந்தாள். ராயப்பட்டியைப் பொறுத்தவரை லலிதாம்மாவின் சொந்தக் குழந்தைதான் மல்லிகா.

"அம்மா இந்த பூவை வச்சுவிடு", என்று பூச்சரத்தை தாயிடம் நீட்டி லலிதாம்மாவின் சிந்தனையைக் கலைத்தாள் மல்லிகா.

சற்று நேரத்தில் போஸ்ட்மேன் திரும்பிவர, பச்சைப் பாவாடை ரவிக்கையும் வெளிர்மஞ்சள் தாவணியும் அணிந்து, கூந்தலை மூன்று கால் சடைப் பின்னல் இட்டு மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டிய பூச்சரம் வைத்து சின்னச் செந்தூரப்பொட்டை நுதலில் சிரிக்க வைத்து, "கிளம்பிட்டேன்", என்று புன்னகையோடு வெளியில் வந்தாள் மல்லிகா.

காலியான காபி தம்ளரை லலிதாம்மாவிடம் நீட்டிவிட்டு, "சரிம்மா நாங்க கிளம்பறோம்", என்றார் போஸ்ட்மேன்.

அம்மாவைப் பார்த்து, புதுப் பள்ளிக்கூடத்தில் தன் படிப்பைத் தொடரப் போகும் ஆனந்தத்தில் "போயிட்டு வரேன்மா", என்று வாய்கொள்ளாமல் சிரித்தாள் மல்லிகா. பேரானந்தத்தில், 'சென்றுவா மகளே வென்று வா இனி உனக்கு இருக்கிறது உலகாளும் பொறுப்புகள் நிறைய' என்கிற தோரணையில் கார்வத்துடன் வழியனுப்பிவைத்தாள் லலிதாம்மா.

மீ.மணிகண்டன்

குறிப்பு: 'குடைக்குள் கங்கா' சிறுகதைத்தொகுப்பில் வெளிவந்த கதை. ஆண்டு 2022

பிரபலமான இடுகைகள்