ஞாயிறு, 13 ஜூலை, 2014

கற்றவை பற்றவை

Title given by eluthu.com for a competition
Won first prize in a competition from eluthu.com

கற்றவை பற்றவை - M.Manikandan

பற்றம் கூடிய‌
பள்ளிச் சுவடி
கற்றுக் கூடிய‌
கல்வித் தகுதி
பெற்றுத் தேடிய‌
பெருமை பகுதி.

சுற்றம் ஆடிய‌
சோதனை யூட்டு,
அற்றம் களைய‌
அறிவினை யூட்டுங்
கொற்றம் அதுவே
கொள்வாய் மிகுதி !

அன்னம் ஊட்டிய‌
அன்னை கல்வி !
தன்னம் பிக்கை
தந்தைக் கல்வி !
பொன்னும் பொறுமை
பூமிக் கல்வி !

நட்டவை பூக்கும்
நன்னில மேருழ‌,
சுட்டவை யேறுஞ்
சுண்ணஞ் சுவரெழ‌,
பட்டறி வூட்டும்
படிப்பி னைவாழ !

கற்றவை சலித்து
களையவை நீக்கு.
பெற்றவை உனது
பின்னிவை திரித்துப்
பற்றவை மனதொடு
பதியவை உரமிடு !

ஆக்கம்: மீ.மணிகண்டன்
Won first prize in a competition from eluthu.com

வெள்ளி, 6 ஜூன், 2014

சுற்றி யாவும் சூட்சுமமே ... M.Manikandan

இலக்கணம் சொன்னது தமிழ்
எழுதுகிறேன்
இனிப்பைச்சொன்னது தேன்
சுவைக்கிறேன்

கவிதை சொன்னது மழை
ரசிக்கிறேன்
கதைகள் சொன்னது பழமை
வியக்கிறேன்

வாசம் சொன்னது பூ
சுகிக்கிறேன்
வண்ணம் சொன்னது வானம்
நம்புகிறேன்

நட்பைச் சொன்னது பறவை
நெகிழ்கிறேன்
நடக்கச் சொன்னது நதி
உழைக்கிறேன்

நேசம் சொன்னது நிலம்
திளைக்கிறேன்
நிசத்தைச் சொன்னது தீ
நிமிர்கிறேன்

மென்மை சொன்னது தென்றல்
லயிக்கிறேன்
மயங்கச் சொன்னது இரவு
உறங்குகிறேன்

சேர்க்கை சொன்னது விலங்கு
சிரிக்கிறேன்
சீற்றம் சொன்னது புயல்
சிந்திக்கிறேன்

மதிக்கச் சொன்னார் முன்னோர்
வணங்குகிறேன்
உதிக்கச் சொன்னான் சூரியன்
வாழ்கிறேன்

by M.Manikandan

வியாழன், 5 ஜூன், 2014

கழிவு நீர்க் கடையாலே

எங்க சாமி மனுக் கொடுக்க
எங்க வாழ்கை தொலஞ்சு போச்சு
ஏச்சுப் பொழைக்கும் இனங்க ளுக்கெ
ஏக கால மாகிப் போச்சு

தாலி தந்த கணவனிங்கே
தவிச்ச வாய்க்கு தண்ணிதல்ல‌
கூலி செஞ்ச காசையெல்லாம்
குடும்பத்துக்குத் தருவதில்ல‌

வருத்தமில்ல பிள்ளகுட்டி
வளருவதும் கருத்திலில்ல‌
தெருத் தெருவாத் திரிபவன‌
திருத்த வொரு பேருமில்ல‌

பெத்தவளக் கேட்டாக்கப்
பொறுத்திருந்து போகச்சொன்னா
வித்தையில்ல விடியுமுன்னே
விடைதெரிய வென்றுசொன்னா

அவரவர் பழவினைன்னு
ஆடிச்சொன்னர் பூசாரி
வெவரங் கெட்டவ நான்
வேறயென்ன எதிர்பாக்க‌

தரங்கெட்ட அரசாங்கம்
தம்பட்ட மடிச்சுக்குது
தன்னலமே இல்லையிண்ணு
தைரியமாப் புழுகுது

இட்டிலிய சோத்தத் திண்ணா
ஏழ சனம் ஒசந்துடுமா
பட்டியெல்லாம் டாஸ்மாக்
பல்லிளிச்சுக் கொல்லுதம்மா

சாதிவாழும் மண்ணிலே
சமுதாய மத்தியிலே
நாதியத்த சனங்களா
நாங்க‌ளுமே மனுசதான்


by M.Mnaikandan

திங்கள், 26 மே, 2014

பெற்றோர்க்குச் சொல்ல வந்தேன் ... M.Manikandan

ஒன்று சொல்லத் தோன்றியதால்
உரைக்க வந்தேங்க‌
நன்று என்றே தோன்றியதால்
நவில வந்தேங்க‌

வென்று வாழும் வாழ்கையது
தேர்வி லில்லீங்க‌
வெள்ளைத் தாள் மதிப்பெண்வெறும்
பார்வை தானுங்க‌

தேர்வெழுதித் தோற்பதொன்றும்
தீர்வு இல்லீங்க‌
தெரிந்து கொண்ட அனுபவமே
தொடர்ந்து வெல்லுங்க‌

தோற்றதனால் பிள்ளைகளை
வெறுப்ப தேனுங்க‌
தோள்கொடுத்து ஊக்கமதை
ஊட்டிப் பாருங்க‌

மறுபடியும் கிளைத்தெழவே
மலர்சி யூட்டுங்க‌
மனமுணர்ந்த மக்களிடம்
மாற்றம் காணுங்க‌

உயர் மதிப்பெண் பெற்றவரும்
உலர்ந்த துவுண்டு
உலர் மதிப்பெண் பெற்றவரும்
உயர்ந்த துவுண்டு

மதிப்பெண் ஒன்றே வாழ்வுயர்த்த‌
மாயையு மில்லை
மதிப்பெண்ணிழந்த காரணமாய்
வீழ்வது மில்லை

எத்தனையோ சாதனைகள்
இன்னும் இருக்க‌
இன்று சின்ன‌ தோல்விக்காக‌
இறுக்க மேனுங்க‌

இன்றிழந்தால் இன்னுமுண்டு
தேர்வு வாய்ப்புங்க‌
இப்படித்தான் வாழ்கையென்று
எழுந்து காட்டுங்க

முன்கோபம் வெறும் உணர்வே
மூட்டை கட்டுங்க‌
முயர்சியினால் முட்டிஎழும்
விதையைக் காட்டுங்க‌

சாதனையின் கதவுகளைச்
சாத்திடா தீங்க‌
சரித்திரமாய் வாழவழி
காட்டி நில்லுங்க !


by M.Manikandan

வெள்ளி, 16 மே, 2014

நேற்றால் இன்று ... M.Manikandan

நாளை என்றொரு
நம்பிக்கை இன்றேல்
நாளும் வாழ்கை
எவ்விதம் நகரும் ?
மாற்றம் இதுவென
மனதில் தோன்ற
மருந்தொன் றுண்டு
என்றே இருந்தால் !

உனக்கதைச் செய்வேன்
எனக்கிதைச் செய்வாய்
உத்திர வாதம்
கையெழு த்தாகும்
உன்கதை என்கதை
செய்தவ னிருக்க
ஊடேயொப் புதல்
செய்திட லாமோ ?

நடப்பது யாவும்
நடத்திய தாலே
நடப்பதை யுணர
முயன்றவ ராரோ
நாளை எதுவென்
றறிந்திடு வாரே
நாளும் நடப்பைப்
பார்த்தி ருப்பாரே !

by M.Manikandan

குரு வாழ்க

குரு வாழ்க - M.Manikandan

குருவாழ்க குருவாழ்க குருவாழ்கவே !
குணம்வாழ குலம்வாழ குருவாழ்கவே !

தருவாகத் தரவந்த திருவாழ்கவே !
தலந்தந்து தனந்தந்த திருவாழ்கவே !

கரஞ்சேர்த்துக் கரைசேர்த்துக் கலமாகினாய்
கடந்தீர்த்துக் கனியீந்துக் காப்பகினாய்

அரணான‌ அன்னைனின் அருளாசியால்
அடிபோற்றும் அடியேனை உடனாக்கியே

எப்போதும் உன்னோடு நானாகவே
எனதான எந்தைனின் எழில்வாழ்கவே !

வளம்வாழ்க நலம்வாழ்க குருவாழ்கவே
வணங்கித் தொழுவேன்னின் தாள்வாழ்கவே !

ஆக்கம்: மீ.மணிகண்டன்


வியாழன், 1 மே, 2014

ஏமாளிப் போராளி

நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர‌
நனைந்திடும் பணியாளி !

பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ர‌ருகுண்டு
பெரும்பே ர‌துபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.

பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர‌.

நால்வர் குடியுயர‌
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !

வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென‌
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !


by M.Manikandan

பிரபலமான இடுகைகள்