அவசரமின்றி
வெண்ணிலவு நகர்ந்து
ஓடை குளம் ஏரி எங்கும்
தன்னைப் பிரதி
எடுத்துக்கொண்டிருக்கிறது
அன்னங்கள் பருகப் பருகத்
தீராநிலவு ஆட்டத்தைத்
தக்கவைத்துக் கொள்கிறது
இருளென்று சொன்னவர்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
வெள்ளை ராத்திரியில்.
…மணிமீ
Apr-26-2024
நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும்
![]() |
பொட்டு வைத்த வட்ட நிலா … மீ.மணிகண்டன் |
பொட்டு வைத்த வட்ட நிலா ... மீ.மணிகண்டன்
"ஏம்மா.. இன்னும் எவ்வளவு தூரம்மா நடக்கணும்..."
"இது ஓட்டல் கடை இல்லைம்மா, காபி, டீ, கலர்த்தண்ணி இருக்கு, ஊருக்குள்ள போனீகன்னா ஐயர் களப்புக் கடை இருக்கு"
இதற்கு மேல் மகளால் பசிதாங்க முடியாது என்றுணர்ந்த லலிதாம்மா, "கலர் குடுங்க.." என்று வாங்கி மகளிடம் நீட்டினாள்.
அரை மயக்கத்தில் தாய் நீட்டியதை வாங்கி வாயில் வைத்தாள் மல்லிகா, பாதிக் கலர் வாயிலும் மீதி வாய் கொள்ளாமல் வெளியேறி அவள் கன்னங்களை நனைத்து கழுத்து வழி இறங்கி ரவிக்கை தாவணியை நனைத்தது. தனக்கு ஒரு டீ வாங்கி குடித்த லலிதாம்மா, மடியில் சொருகியிருந்த சுருக்கிலிருந்து நாணயங்களைத் தேடி கடைக்காரர் கேட்ட விலையைக் கொடுத்துவிட்டு மகளைப் பார்த்துக் கேட்டாள், "நடப்போமாடி".
மல்லிகா சற்றே நிமிர்ந்து கடைக்காரரைப் பார்த்து, "இங்கேருந்து மாணிக்கப்புரம் எவ்வளவு தூரம்?"
"அது சரி ஊருக்கு புதுசா?" என்றார் கடைக்காரர்.
"ஆமா... ஏன் கேக்குறீக?" என்றாள் லலிதாம்மா.
சிறுவன் சரவணனின் துணையோடு வீட்டைத்திறந்து, கொண்டுவந்திருந்த சுமைகளை ஒரு சுவற்றின் ஓரம் வைத்தனர். பெயர்தான் வீடு ஆனால் அது சீமை ஓடுகள் வேய்ந்த ஒற்றை அறைதான், ஒரு ஓரம் சிமெண்ட் மேடை, அடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேடைக்கு அருகே பானை ஒன்று. பானையத் திறந்து பார்த்தாள் மல்லிகா தண்ணீர் நிறையவே இருந்தது, ஆனால் அது எத்தனை நாட்கள் பழையது என்று சொல்ல முடியாது. தற்காலிக தங்குதலுக்கு உகந்த இடம். சரவணனிடம் எங்கே காய்கறிகள் வாங்குவது என்ற விபரம் கேட்டுக்கொண்டாள் லலிதா ஆனால் பொருட்கள் வாங்கிவந்து சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு அவர்களின் வயிற்றுப்பசி அவர்களுக்கு நேரம் தரவில்லை. சரவணனிடமே எங்கே உணவு விடுதி இருக்கிறது என்று வினவ அவனும் தானே வாங்கிவந்து தருகிறேன் என்று சொல்லி இரண்டு தயிர் சாதப் பொட்டலம் வாங்கிவந்து கொடுத்துவிட்டு அவர்களிடம் விடைபெற்றுச்சென்றான். உண்டுமுடித்த இருவரும் மற்றவற்றைப் பிறகு யோசித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வெற்றுத்தரையில் கைகள் தலையணையாக சற்று கண் அயர்ந்தார்கள்.
******
கதவு
தட்டும் ஓசை கேட்டு கதவைத்திருந்தாள் லலிதாம்மா.
"வாங்க போஸ்ட்மேன், உங்களுக்காகத்தான் காத்திருந்தேன், வாங்க உட்காருங்க", என்று சுவற்றோரம் கைகாட்டினாள்.
"ஊருல எங்களப்பத்தி பேசுறாங்களா", கேட்டாள் லலிதாம்மா.
அவள் காட்டிய இடத்தில் தரையில் உட்கார்ந்த போஸ்ட்மேன் மாரியப்பன், "அதெல்லாம் இல்லம்மா, அவங்களுக்கு நீங்க யாரு சொந்தமா சொத்தா?"
"ஆமா, இருந்தாலும் எனக்கு ஒரு நெனப்பு, பதினாலு வருசமா இருந்து பழகின ஊரு", என்று சற்றே குரல் தழுதழுத்தாள் லலிதாம்மா.
"நீங்க இருந்தீங்க எங்கயோ போயிட்டீங்க, அதோட அவுங்க உங்கள மறந்திடுவாங்க", என்று எதார்த்த வார்த்தைகள் சொன்னார் போஸ்ட்மேன்.
"முத்தையா ஐயா உங்களுக்கு ரைஸ்மில்லுல வேலை போட்டுக் குடுத்திருவாரு, நீங்க வீடு மட்டும் சீக்கிரம் மாத்திக்குங்க", என்ற போஸ்ட்மனின் வார்த்தைகளுக்கு பதிலுரைத்தாள் லலிதாம்மா, "ஆமா சொன்னாங்க, நானும் வீடு வேணும்னு ரைஸ்மில்லுல கேட்டிருக்கேன், அந்தத்தம்பி கேட்டுச் சொல்லுறதா சொல்லி இருக்கு".
"போன வெள்ளிக்கிழமையே வாத்தியாரைப் பார்த்துப் பேசிட்டேன், இன்னிக்கு மல்லிகாவை கூட்டிட்டுப் போனாப் போதும், எங்க மல்லிகா... கெளம்பிடுச்சா", என்று போஸ்ட்மேன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, பக்கத்துப் பம்பு செட்டிற்க்குக் குளிக்கச் சென்றிருந்த மல்லிகா குளித்து முடித்து ஈரக்கூந்தல் துண்டுடுத்தி, கையில் ஈரத்துணிகளுடனும் வந்துகொண்டிருந்தாள். போஸ்ட்மன் வீட்டினுள் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, "வாங்க அண்ணெ", என்றவள், தொடர்ந்தாள், "அம்மா விடியும் முன்னாடி பம்புசெட்டுக்கு போயிட்டு வந்துடுச்சு நான் கொஞ்சம் லேட்டு", என்று க்ளுக்கேன சின்னச் சிரிப்பை உதிர்த்தாள்.
ஒற்றை அறை வீட்டில் தான் அமர்ந்திருந்தால் மல்லிகா எப்படி உடை மாற்றிக் கிளம்புவாள், நிலைமையை புரிந்துகொண்ட போஸ்ட்மேன், "நான் ரைஸ்மில்லுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன், சீக்கிரம் கிளம்பிடு மல்லிகா", என்று சொல்லிக்கொண்டே மாரியப்பன் எழுந்திரிக்க, "கொஞ்சம் இருங்க இந்தக் காபியை குடிச்சுட்டு போலாம்", என்று காபி தம்பளரை நீட்டினாள் லலிதாம்மா.
காபியை வாங்கிக்கொண்டே வெளியில் கிளம்பினார் போஸ்ட்மேன் மாரியப்பன்.
வேகமாகச்செயல்பட்டாள் மல்லிகா, மகளின் சுறுசுறுப்பைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் லலிதாம்மா, மீண்டும் அந்த ராமர் குருக்களின் நினைப்பு, அப்படி என்ன ரகசியம் அவரிடம் இருக்கிறது, ஆம் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பன்னீர் புரத்தை விட்டு ராயப்பட்டிக்கு வந்ததே இந்த ராமர் குருக்களால்தான் இப்போது மீண்டும் ஒரு இடமாற்றம் அவரை ராயப்பட்டியில் பார்த்ததால்.
பன்னீர் புரத்தில் சிவன் கோவிலில் மடப்பள்ளி வேலைகள் செய்துகொண்டிருந்த நாட்கள், ஒரு நாள் அதி காலை வேலை முடித்து வீட்டிற்குத் திரும்புகையில் மண்டபத்தில் மல்லிகைக்கொடி படர்ந்த அந்தத் தூணோரம் ஒரு குழந்தை! தான் பார்ப்பது கனவா நிஜமா என்று ஒரு முறை கண்களை தேய்த்துக்கொண்டாள் லலிதாம்மா. நிஜம்தான் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை யார் இங்கே பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா? அதுவும் இவ்வளவு அதிகாலையில்... சந்தேகத்துடன்... சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை, உறக்கத்தில் இருந்தது குழந்தை, குழந்தையைப் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு கடிதம் சொருகப்பட்டிருந்தது, எடுத்துப் பிரித்துப் படிக்கத்துவங்கினாள் லலிதாம்மா,
"இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் சக்தியையும் பணவசதியையும் இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை. ஆகவே இறைவனே அந்தப் பொறுப்பை ஏற்கட்டும். கண்ணுக்கு முன்னால் என் குழந்தையை அப்படிப் பார்க்கவும் எனக்கு மனம் இல்லை. குழந்தையை கோவிலுக்கு நேர்ந்து இக்கடிதம் எழுதுகிறேன். குழந்தை வளரும்பொழுது பொட்டுக்கட்டி தேவரடியார் ஆக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தேடவேண்டாம்.
இப்படிக்கு
இந்தக்
குழந்தையின் தாய்."
படித்து முடித்த லலிதாம்மாவிற்கு பகீர் என்றது மனது, அறியாத குழந்தையை அப்படி விட மனமில்லை, குழந்தையின் தாயைத் தேடியும் பயன் இல்லை. கடிதத்தை கிழித்து வாயில் இட்டு மென்று விழுங்கினாள். தொண்டை விக்க மின்னலாகச் செயல்பட்டாள் கோயில் குளத்தில் இறங்கி தன் இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகினாள் தண்ணீரால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். மீண்டும் படியேறி மல்லிகைக்கொடியின் தூணோரம் வந்தாள் இன்னும் சூரியன் கோடாகத்தான் தெரிந்தான். வானம் இளம் இருட்டாகவே இருந்தது. யாரும் குழந்தையைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குழந்தையைத் தன் இரு கரங்களாலும் போர்வையோடு தூக்கினாள். எதிர்பாராத விதமாக எதிரில் வந்தார் ராமர் குருக்கள்.
"ஏண்டிம்மா என்ன பண்ணப்போற", என்றார் குருக்கள்.
"சாமி... இந்தக் குழந்தையை நான்... வளர்த்து... ஆளாக்குறனே...", யோசித்து யோசித்து பதிலளித்தாள் லலிதாம்மா.
"கடிதாசியை நானும் வாசிச்சேன். சரி நன்னா வளர்த்துக்கோ, ஆனா வயசு வறச்சே, கடிதாசியில கண்டிருக்கபடி செஞ்சுடு சரிதானே"
அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு குழந்தையோடு நகர்ந்தால் சரி என்கிற நோக்கத்தில், "சரி சாமி", என்று பதிலளித்துவிட்டு, "நான் வரேன்" என்று புறப்பட்டவள் சற்றும் தாமதிக்காமல் பன்னீர் புரத்திலிருந்து புறப்பட்டு ராயப்பட்டிக்கு குடி பெயர்ந்தாள். ராயப்பட்டியைப் பொறுத்தவரை லலிதாம்மாவின் சொந்தக் குழந்தைதான் மல்லிகா.
"அம்மா இந்த பூவை வச்சுவிடு", என்று பூச்சரத்தை தாயிடம் நீட்டி லலிதாம்மாவின் சிந்தனையைக் கலைத்தாள் மல்லிகா.
சற்று நேரத்தில் போஸ்ட்மேன் திரும்பிவர, பச்சைப் பாவாடை ரவிக்கையும் வெளிர்மஞ்சள் தாவணியும் அணிந்து, கூந்தலை மூன்று கால் சடைப் பின்னல் இட்டு மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டிய பூச்சரம் வைத்து சின்னச் செந்தூரப்பொட்டை நுதலில் சிரிக்க வைத்து, "கிளம்பிட்டேன்", என்று புன்னகையோடு வெளியில் வந்தாள் மல்லிகா.
காலியான காபி தம்ளரை லலிதாம்மாவிடம் நீட்டிவிட்டு, "சரிம்மா நாங்க கிளம்பறோம்", என்றார் போஸ்ட்மேன்.
அம்மாவைப் பார்த்து, புதுப் பள்ளிக்கூடத்தில் தன் படிப்பைத் தொடரப் போகும் ஆனந்தத்தில் "போயிட்டு வரேன்மா", என்று வாய்கொள்ளாமல் சிரித்தாள் மல்லிகா. பேரானந்தத்தில், 'சென்றுவா மகளே வென்று வா இனி உனக்கு இருக்கிறது உலகாளும் பொறுப்புகள் நிறைய' என்கிற தோரணையில் கார்வத்துடன் வழியனுப்பிவைத்தாள் லலிதாம்மா.
மீ.மணிகண்டன்
குறிப்பு: 'குடைக்குள்
கங்கா' சிறுகதைத்தொகுப்பில் வெளிவந்த கதை. ஆண்டு 2022