வெள்ளி, 4 அக்டோபர், 2024

மௌனப்பூ ... மீ.மணிகண்டன்


(குறிப்பு:  ஆஸ்டின் ஆம்பல் காலாண்டு மின்னிதழுக்காக எழுதிய கதை. கதை 450 சொற்களுக்குள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு எழுதியதால் இக்கதை சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.  மேலும் விவரணைகளுடனும் நிகழ்வுகளுடனும் இக்கதை புதுப்பிக்கப்படும்.  நன்றி.  மீ.மணிகண்டன்)

மௌனப்பூ ... சிறுகதை ... மீ.மணிகண்டன்

 பூக்கள் நிறைந்த சோலையில் மாயா மௌனம் சுமந்து அமர்ந்திருக்கின்றாள். சென்ற வாரம்வரை ஏழு வரன்கள் வந்து போனார்கள். ஏழாமவன் பெயர் ரகுவரன். எழுவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்தவர்கள் எனினும் மாயாவிற்குத் தந்தது ஒரே பதில், வெவ்வேறு கானகங்களில் முளைத்தாலும் கள்ளியில் முள் நிலையாகத் தோன்றுவதுபோல். மாயாவிற்கு அந்த முள்ளான பதில் முதல்முறை வலித்தது, அடுத்தமுறையும் தொடர்ந்தது, ஏழாவது முறை ஆணியைத் தாங்கிய மரச்சட்டமாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை அவள். அவள் பயிலும் உளவியல் அவளை மானுடத்தின் அணுவசைவுகளைப் புரிந்துகொள்ளச் செய்திருந்தது. இன்னும் ஓராண்டில் அவளின் உளவியல் ஆராய்ச்சி நிறைவேறி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றாள். எனினும் கடந்த இரண்டாண்டுகளிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவளை உளவியல் மேதையாக மாற்றியிருந்தது.

 ரகுவரனிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டபோது 'நான் வளர்க்கும் கறுப்புப் பூனை' என்றான். 'அதில் என்ன சிறப்பு' என வினவினாள். 'இருட்டில் மஞ்சள் ரேகையோடும் அதன் விழிகளை உருட்டி நடக்கும் ஆளுமை பிடிக்கும்' என்றான். பூனை, இருள், இவற்றின் கறுப்பை ரசிப்பவன் தனது புறத்தோல் நிறத்தைப் பொருட்படுத்தமாட்டான் என்று சற்றே சஞ்சலமானாள். ரகுவரனின் நிறைவான பதில், பூனையில் விரும்பிய நிறம் புதிதாக வரும் மனைவியிடம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது.

 தாயின் அரவணைப்பில் தத்தித் தத்தி வளர்ந்த மாயா பட்டப் படிப்பு நிறைவேறியதும் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியேற்றாள். தொடர் முயற்சியில், அயரா உழைப்பில், கணினித்துறையில் மேன்மை கண்டாள். நிறுவனம் அவளைத் தற்காலிகப் பணி விசாவில் அமேரிக்கா அனுப்பியது. தாய் மண்ணின்மீது பாசம் கொண்டவள். அன்னையின் புடவை முந்தானை வாசத்தில் தினமும் காலையில் உற்சாகமாகக் கண் விழித்துக்கொள்ளும் சிசுவைப்போலத் தாய் மண்ணின் தேசியகீதத்தை பூபாளமாக அனுசரிப்பவள் மாயா. தாய் மண் தெய்வம் என்பவளுக்கு அமெரிக்க மண் ஆலயமானது.

 கல்வியோடும் கனத்த சிந்தனையோடும் வலம் வருபவள் மாயா. உழைக்கப் பணி கொடுத்துவிட்டு உறைவிடமாக ஒரு நிரந்தரக் குடியுரிமை தர மறுக்கும் அமெரிக்க அரசியல் அவளுக்கு விந்தை அனுபவம் ஊட்டியது. சில பல ஆண்டுகள் தன் உழைப்பைப் பங்களித்து நாட்டின் பொருளாதாரத்தை மலையென உயர்த்தும் உழைப்பாளிகள் பெறும் பிரதிபலன் கடுகினும் சிறிது என்று வாதிடுவாள். அரசியலை வகுக்கும் மானுடம்தான் எத்தனை குரூரமானது என்று வியந்துகொள்வாள். இவற்றை எண்ணிவிட்டால் சில நாள்கள் நித்திரை விழிநுழையாமல் நையாண்டி செய்யும் நிலைக்கு ஆளாவாள். விளைவு, மனிதர்களைக் கற்றறியும் ஆவலில் உளவியல் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்தாள். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவளின் முனைவர் பட்டப் படிப்பிற்கு அனுமதியளித்தது.

 சமுதாய நிகழ்வுகளைப் போற்றும் சராசரித் தாயின் மகள் மாயா. அன்னையின் சொல்லுக்கு எப்போதும் 'ஆம்' சொல்பவள். தனக்கு வரன் தேடுவதற்கும் ஆமோதித்தாள். அமெரிக்க மண்ணில் வசிப்பவள் என்ற முத்திரையில் நெகிழ்ந்து அவளைப் பெண் பார்க்க வந்தவர்களும் அவளின் புறநிறம் கண்டு புறமுதுகு காட்டினர்.

 மாயாவிற்காக கால ரயில் தன் ஓட்டத்தை நிறுத்தவா போகிறது? கையில் முனைவர் பட்டத்துடன் வந்து நின்றவளுக்கு அன்னை ஒரு ஆசைப் பரிசு கொடுக்கப்போவதாகச் சொன்னாள். மல்லிகையென மாயாவின் விழிகள் பூத்தது. 'உனக்கு நல்ல நேரம் கூடி வருது மாயா?' என்று அன்னை தொடர்ந்தாள். கடந்து சென்ற எழுவரில் மூன்றாமவர் தான் மாயாவைச் சந்தித்து மன்னிப்புக் கோரவேண்டும் என்ற தகவல் வந்ததாகச் சொன்னாள். அன்னையின் மனம் ஆசையில் துள்ளியது, அந்த வரன் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதம் கூறவேண்டும் என்று நேர்ந்துகொண்டது.

மாயாவும் அந்த மூன்றாமவனும் சந்திக்கும் நாள் வந்தது, 'முதலில் உங்களோட டாக்டர் பட்டத்திற்கு என் வாழ்த்துகள்' என்று உரையாடலைத் தொடங்கினான் வந்தவன். 'உங்களைப் பெண் பார்த்துட்டு போன பிறகு உங்க மனசு எவ்வளவு வருத்தப்பட்டிருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. என்னை மன்னிச்சுடுங்க' என்றான். மாயா மௌனம் சுமந்து அமர்ந்திருந்தாள். 'ஏன் எதுவுமே பேசாம உக்காந்திருக்கீங்க?' என்றவனுக்கு பதிலளித்தாள் மாயா, 'என்ன சொல்லணும்?'

'உங்க மனநிலை புரியுது. நீங்க நேரம் எடுத்துக்குங்க மனசு மாறினால் திருமணத்துக்கு சொல்லியனுப்புங்க' என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான். சென்றவன் தன் பெற்றோரிடம் இத்திருமணத்திற்கு எவ்விதமாவது சம்மதம் வாங்க வேண்டி மன்றாடினான். ஏனென்று காரணம் கேட்ட பெற்றோருக்கு பதிலளித்தான், 'எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நான் இந்தத் தற்காலிக விசாவில் திண்டாடுவது. இப்போ அவளிடம் பி எச் டி இருக்கு சீக்கிரம் க்ரீன் கார்ட் வந்துடும்'.

 உளவியல் கற்றவள், தன்னுடன் உரையாடுபவர் உள்ளத்தை உணரும் ஆற்றல் பெற்றவள் மாயா. இன்னும் அதே பூக்கள் நிறைந்த சோலையில் மௌனம் சுமந்து அமர்ந்திருக்கின்றாள். பொருளாசையால் புண்ணாகிப்போன மனித இனம் இது என எண்ணிப் புன்னகை பூக்கிறாள்.

... மீ.மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்