ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மன நிறை வெனும் மழை ... M.Manikandan


கட்டிய மலர்களும்,பறவை களும்,
கன்றுட னசைமரங் களும்,சா ரலும்,
கற்சிலை, கடற்கரை, மலை,மே கமும்,
கண்டினுங் கரைந்திடா தொருதா கமும்…

எண்ணியே மயங்கிடக் கிளிக்கீச் சுகள்,
எங்கினு மொலிக்கமூங் கிலின்பாட் டுகள்,
எப்பொழு துடன்பாணர் களின்மெட் டுகள்,
என்னிலை யிலுந்தளர்ந் திடாக்கா துகள்…

அற்புத மனமகிழ் மழைவா சனை,
அந்திம லரும்புது மலர்வா சனை,
அத்தரும், புனுகுடன் சுகவா சனை,
அன்றியு மதனினும் ஒருயோ சனை…

உன்னத வகையொடப் பளபா யசம்
உப்புட னறுசுவை யுணவா யிரம்
உச்சியு மிரவுமுண் டுமயங் கியும்
உத்தர விடுங்குடல் பசிமே விடும்...

கட்டுடல் மகிழவும் களைப்பா றவும்
கன்னிம ணவாளனும் பரிமா றவும்
கட்டிலும் தலையணை தினம்மா றியும்
கற்றிடக் கலைவளர் வதுநூ தனம்...

இத்தனை பருகியும் நிறையா தது
இன்னுமெ னதேடுதல் குறையா தது
இன்னுமி தெதற்கென உணரா தது
இன்னலே மிகுமினிப் பிழைதா னது

by M.Manikandan

புதன், 3 செப்டம்பர், 2014

யானோ வணிகன்

கற்பனைச்சுருளில்
படம்பிடித்தேன்
காகிதப் பக்கத்தில்
திரையுமிட்டேன்

...விற்பனை கூவியும்
...வேகமில்லை
...வீங்கிக்கிடக்குது
...வீட்டுகுள்ளே...!

உற்சவ மூர்த்தியை
உருவமைத்தேன்
ஊர்வலம் போய்வரத்
தேரமைத்தேன்

...ஊருக்குச் சொல்லியும்
...ஓசையில்லை
...உறங்கிக் கிடக்குது
...ஓலைக்குள்ளே...!

பொய்யும் புரட்டும்
போகும் பாதையில்
பூவும் பொன்னுமே
மூடிக்கிடக்குது

...புல்லர் அறிந்திட
...வில்லையெனிலோ
...போகட்டுமே ஒரு
...தோல்வி இல்லை...!

by M.Manikandan

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ... M.Manikandan

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக் கவிதை
(eluthu.com) மூன்றாம் பரிசு வென்ற படைப்பு
----------------------------------------------------------------------------------

பொன்னிறைக் கூடத னூடே
மின்மினிக் கோலம தாலே
உன்னத வாழ்வதை மேலே
அன்புட னாக்கிடுஞ் சேயே !

செந்நிற மாயொரு வீணை
என்னிலை ஏற்றிடுஞ் சேனை,
நன்னில மீதினில் வானை
புன்னகை யாலுதிர்ப் பானே !

முன்னிரு பாலொளிப் பற்கள்
மின்னிட வான்பிறை வீணே !
கன்னிக ளாயிரு சொற்கள்
கன்னலு மேகெடுந் தானே !

தன்னிரு கைகளில் மண்ணை
பின்னொளித் தாட்டுவான் கண்ணை
முன்வர வேயவ னன்னை
நன்னடை காட்டிடு வானே !

அன்னிய மாகிடும் நாளை
என்வச மாக்கிடும் பாளை !
என்னவன் பூநகை போலே
முன்னிலை வேரெது மேலே !

முன்னுரை ஆகிவந் தானே
நன்னுரை ஆக்கவந் தானே
இன்னுரை வாழ்வது வீழா
தென்றுரைத் தாடிவந் தானே !

பன்னிரு ஆண்டுக ளோடி
பின்னது பூத்தென போடி,
நன்னுல காக்கிட வந்த
என்னரும் பாலனுக் கீடோ !

சொன்னது ஓர்துளி தேனே
இன்னமு தோரடை தானே !
இன்னமு மாக்கிட பேனா
வின்முனை, மைவளம் காணா !

by M.Manikandan


புதன், 6 ஆகஸ்ட், 2014

மழை கா ... M.Manikandan

வான் தரும் மழை நீர்
தா வரம் பெறும் நீர்
தா னென உணர் வீர்
மாண் புடை மனத் தீர்.

by M.Manikandan

செவ்வாய், 29 ஜூலை, 2014

இமையே ... M.Manikandan

இமையே,
மூடித்திறப்பதை மறந்துவிடு
முன்னால் நிர்ப்பது
என்னவள்...!

by M.Manikandan

இது தான் காதலா ... M.Manikandan

காற்றையும் பூவையும்
... நேசிக்கக் கற்றேன்
கடலையும் வானையும்
... வாசிக்கக் கற்றேன்
கவிதை வரிகளை
... யோசிக்கக் கற்றேன்
காரிகை என்னிடம்
... பேசிய தாலே !

by M.Manikandan

வியாழன், 17 ஜூலை, 2014

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-சர்நா கவிதை வாசிப்புப் போட்டி ... M.Manikandan

Title given by eluthu.com for a competition

காரிருள் நீக்க வரும்
கதிரவனின் பூக்கதிரை
காதலிக்க வேண்டுமென
கண் விழித்த காலமது... 10

செல்லக் குஞ்சுகளும்
சிணுங்கிக் கொஞ்சலிட
சிறகடித்துக் குருவிகளும்
இரை தேடிப் பறந்ததென்ன... 19

மெல்லப் பனி முத்தும்
மேனி நனைத் திறங்க
புல்லும் குளித்து நிதம்
புதிதாய்ச் சிரித்ததென்னெ... 30

அறம் செய விரும்பென
அன்றைய தேர்வுக்காய்
அதிகாலை மனனிக்கும்
மழலைக் குரலென்ன... 39

நீர் சொட்டும் மயிர் துவட்டி
நீள் கூந்தல் துண்டு டுத்தி
தலை வாசல் தனைப் பெறுக்கி
தண்ணீர் தெளித்தங்கெ
தாமரைக் கோலமிடும்
தாரகையர் கோலமென்ன... 57

ஓடையில் நீச்சலிட
ஓடி வந்து விழுவதென்ன
ஓரிருவர் சத்தமிட
உதட்டை நான் கடித்ததென்ன... 66

இத்தனை சுகங்களையும்
இன்று மீண்டும் தேடுகிறேன்
இருக்கும் இடம் கண்டு
எவரேனும் சொல்வீரோ... 76

புரியாதவன் புலம்புகிறேன்
என்றுவிட்டுப் போவீரோ.... 80

அழுக்குப் பணம் சுமக்க
அழகனைத்தும் தொலைத்துவிட்டேன்
புழுத்தேடிப் புல் மறந்து
புரியாமல் புறப்பட்டேன் 90

நினைவுப் பூக்களுடன்
கை குலுக்கிக் கிடக்கின்றேன்
நிச்சயம் பூவுலகம்
நிசத்தை திருப்பு மென்று. 100

by M.Manikandan

பிரபலமான இடுகைகள்