சனி, 20 ஆகஸ்ட், 2022

காதல் வானிலே ... மீ.மணிகண்டன்

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்ற கதை

சிறுகதைப் போட்டி – 04

போட்டியின் விதிமுறை: 275 வார்த்தைகள்

நாள்: Nov-22-2021

தலைப்பு: காதல் வானிலே...!

சிறுகதை ஆக்கம்: மீ.மணிகண்டன்


நன்றி அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை
காதல் வானிலே ... மீ.மணிகண்டன்
"ஜெயா, எத்தனை தடவை சொல்லுவேன்? பிடிச்ச பிடியிலேயே நின்னா எப்படி?"

"எனக்கும் புரியாம இல்ல வானதி, இன்னிக்கு கடைசி நாள், இதுக்கப்பறம் நாம சந்திப்போமாங்கறதெல்லாம் இறைவனுக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை."

ஜெயராமனின் பலநாள் பிடிவாதத்தை மறுக்கமுடியாமல், தன்னுடைய பேருந்து அடையாள அட்டையை ஜியோமெட்ரி பெட்டியிலிருந்து எடுத்த வானதி, அதிலிருந்து தன்னுடைய பாஸ்போர்ட் அளவு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை, மிகவும் மெதுவாக, ஆரஞ்சுப் பழத்திலிருந்து தோலை உரிப்பதுபோல அட்டையிலிருந்து தனது புகைப்படத்தை பிரித்து எடுத்தாள், ஜெயராமனிடம் நீட்டினாள், "ஜெயா என் போட்டோ உன்கிட்ட இருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது ப்ளீஸ்".

பொழியவும் இயலாமல் சுமக்கவும் முடியாமல் குட்டி மேகமொன்று ஜெயராமனுக்கும் வானதிக்கும் இடையே உலவிக்கொண்டிருக்க, அந்தப் பள்ளிக்கூட வராண்டா அமைதியின் கனத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. வானதி நீட்டிய அவளது புகைப்படத்தை ஜெயராமன் பெற்றுக்கொள்ளும் வேளை, "ஜெயா உன்னோட போட்டோ ஒண்ணுகூட என்கிட்டே இல்லையே?" சற்றே தழுதழுத்தாள். இதை எதிர்பார்க்காத ஜெயராமன், "வானதி, அப்போ இவ்வளவுநாள் நீ மறுக்கல, உன் உதடுமட்டும்தான் மறுத்திருக்கு". தலையைக் குனிந்து மெளனமாக நின்றாள் வானதி. பிரிவுச் சூழலிலும் கொஞ்சம் மகிழ்ச்சித் தருணம் உணர்ந்தான் ஜெயராமன், தானும் அவள்போலவே பேருந்து அடையாள அட்டையிலிருந்த தனது புகைப்படத்தைப் பிரித்தெடுத்து அவளிடம் நீட்டினான். சுற்றி யாரும் இதனைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு படக்கென அவன் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டாள் வானதி.

"ஜெயா யாருக்கும் தெரியவேண்டாம் ப்ளீஸ்".

"வானதி, மேகத்திலிருந்து பொழியுற மழைத்துளிய, மண்ணுல விழுந்ததுக்கப்பறம் யாராலயும் கண்டுபிடிக்க முடியாது, உன்னிடம் நான் பேசிய பொழுதுகள், உன்னுடைய போட்டோ எல்லாமே எண்ணில் விழுந்த மழைத்துளிகள்."

பள்ளிக்கூட வாயிலில் பூத்திருந்த செம்பருத்திப்பூவிலிருந்து, மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சியொன்று விண்ணை நோக்கிப் பறந்துக்கொண்டிருந்தது.

எங்கிருந்தோ வந்த மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சி பால்கனிக்குப் பக்கத்தில் பூத்திருந்த செம்பருத்திப்பூவில் அமர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயராமனை, "என்னங்க நாளைக்கு பெரியவன் வரான்ல, சிவாவுக்கு போன் பண்ணி ரயிலடிக்கு சரியான நேரத்துக்குப் போகச்சொல்லிடுங்க" என்று ஜெயராமனின் நினைவைக் கலைத்தாள் ஜனனி,  டீபாயில் காஃபியை வைத்தவள், "என்னோட பழய பெட்டியெல்லாம் மேல இருந்து எடுத்து அறையை சுத்தம் பண்ணிடுறேன், இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அறைதான், காலேஜ் முடிச்சு வரவனுக்கு தனியறை தேவைப்படும்", சொல்லிக்கொண்டே தனது அறைக்குச்சென்று பரணிலிருந்து பழையபெட்டியை இறக்கினாள் ஜனனி.

பெட்டிக்குள்ளிருந்த பழுப்படைந்த சான்றிதழ்கள், புகைப்படங்களை விலக்கி அந்த ப்ரவுன் நிற ஆட்டோகிராப் புத்தகத்தை கையில் எடுத்தாள். அறைக்குள் ஜெயராமனின் வரவை உணர்ந்தவள் ஆட்டோகிராப் புத்தகத்தை உள்ளே நழுவவிட்டு மற்ற புத்தகங்களை அடுக்கினாள். சற்று நேரத்தில் ஜெயராமன் அறையிலிருந்து வெளியேறியதும், மீண்டு ப்ரவுன் ஆட்டோகிராப் புத்தகத்தை வெளியில் எடுத்தாள், படபடவென பக்ககங்களைப் புரட்டினாள் இதயக்கனம் சற்றே அதிகரித்தது, அவள் புரட்டிய அந்தப்பக்கத்தில் இன்னமும் அந்த மைப்பேனாக் கையெழுத்து நிறம்மாறாமல் இருந்தது.

 மீ.மணிகண்டன்

Comment by the Judge of the competition:





சனி, 13 ஆகஸ்ட், 2022

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

இதயங்கள் இரண்டு பேசிக்கொள்வது காதலா? இருசோடிப் பார்வைகள் சந்தித்துக்கொள்வது காதலா? பார்வையில் பட்டது காதலா? மனத்தைத் தொட்டது காதலா? விடைகாண விழைந்ததன் விளைவு 'இப்படித்தான் மலர்கின்றன ஊதாப்பூக்கள்'. உங்கள் வாசிப்பிற்காகக் கதையின் வரிகள் காத்திருக்கின்றன... உங்கள் கருத்துகளைச் சுவாசிக்க எனது விழிகள் காத்திருக்கின்றன... நன்றி 

சிறுகதையின் தலைப்பு:  இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்

எழுதியவர்: மீ.மணிகண்டன்

"மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்", எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, "நல்ல கனவைக் கலைச்சுட்டியே..., போடா...", மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கவி.

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

கல்லூரி வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சில மாணவர்கள் முதலாண்டு மாணவர்களை, வெற்றுத் தரையில் கொடியேற்றச் சொல்லியும், இரயில் ஓட்டச் சொல்லியும், புற்தரையில் நீச்சல் அடிக்கச் சொல்லியும் ராகிங் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சுடிதார்களையும், தாவணிகளையும் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். இது கல்லூரி ஆரம்ப நாட்களின் கோலாகலம்.

அன்றைய தினம் நண்பர்கள் குழு எதிரே வந்த புதுமுகங்களைக் கமெண்ட் அடித்துக் கொண்டே வகுப்பறைக்குச் சென்றனர், நூலகத்திலிருந்து வெளியே வந்த சேலைகளையும், தாவணிகளையும் சுட்டிக்காட்டிக் கவிதாஞ்சனிடம் ஒவ்வொருவரின் பெயரும் வகுப்பும் சொல்லிக்கொண்டிருந்தான் சேகர், "... அந்தப் பொண்ணு பேரு வந்தனா, B.A. தமிழ், பக்கத்திலிருந்தாளே அவதான் லேகா...", லேகாவின் அழகு யாரையுமே உடன் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு, அவளைக் காணும் காதல் வயப்பட்டவர்களுக்கு பிரம்மனின் கற்பனைக்கு எல்லையே இல்லை என்று கூட நினைக்கத் தூண்டும். அவளைக் கண்டது முதல் கவிக்கு மனம் எதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது. அவள் அழகை அவளிடமே பாராட்ட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

இன்று காலையிலிருந்தே கவியின் மனதில் எதோ ஒரு உறுத்தல், காரணம் காலையில் லேகாவை ஒருவன் பைக்கில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டுச் சென்றான். இந்த நிகழ்ச்சி அவன் மனதை ஏன் சஞ்சலப் படுத்த வேண்டும்?

காலை வகுப்புகள் நிறைவு பெற்று மதிய உணவு வேளை, மாணவர்கள் உணவுக் கூடம் செல்வதும், சிலர் வீட்டிற்குச் செல்வதுமாக கல்லூரி வெளி வளாகம் கலகலப்பாக இருந்தது, கவியும் சேகரும் விடுதி மாணவர்கள் தானே, உணவுக் கூடம் விரைந்தனர். உணவைப் பெற்றுக்கொண்டு இருக்கை தேடி நடந்து வருகையில் அருகில் இருவர் பேசிக் கொள்வது தற்செயலாகக் கவியின் காதுகளில் விழுந்தது, "மச்சான் காலேஜ் டாப் ஃபிகர் அல்ரெடி கமிட்டேட் டா, பார்ட்டி பேரு சிவாவாம்", "அட போடா எவ்வளவோ வேலை இருக்கு... இதைப்போய் மெனக்கட்டு வருத்தப்பட்டு சொல்லுற, ரெகார்ட் சப்மிட் பண்ணிட்டியா...". உரையாடும் வாலிபர்களைக் கடந்து இருக்கையில் உணவுடன் அமர்ந்த கவியின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பது கண்ட சேகர், "என்னடா திடீர்னு டௌன் ஆயிட்ட மாதிரி இருக்கு..." செயற்கையாகப் புன்னகையை வரவழைத்த கவி "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..." என்று சமாளித்தான்.

இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள் ... மீ.மணிகண்டன்

விடுதியின் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் லேகாவும், வந்தனாவும் நிற்பதைக் கவி கவனித்தான், பேருந்தில் இருவரும் கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு ஏறுவதையும் கவனித்தான். அடுத்தநாள் எப்படியும் லேகாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் அவனிருந்தான்.

மதிய உணவு நிறைவேறியதும் முதலாண்டு மாணவர்களைக் கிண்டல் செய்யச் சீனியர்கள் அவர்களின் வகுப்பறைக்குள் நுழைவது ஆரம்ப நாட்களின் கொண்டாட்டம். என்றும் இல்லாமல் புதிதாக கவி தன் கூட்டாளிகளிடம், "டேய் நானும் உங்ககூட ஃபர்ஸ்ட் இயர் சாட்டிங் வரேண்டா...", ஆச்சரியமாய்ப் பார்த்தனர் சகாக்கள், "நல்ல முன்னேற்றம் கவி..., லேட் அஸ் ஸ்டார்ட்... "எல்லோரும் முதலாம் ஆண்டு வகுப்பறைகள் நோக்கி மாடி ஏறினர்... கூட்டத்தோடு கலந்த கவி ... வந்தனாவின் வகுப்பறை நோக்கி நகர்ந்தான்... இதயத் துடிப்பு சற்று அதிகமாகவே லப் டப்பியது... இது புதுசுதான் கவிக்கு... கொஞ்சம் பயம்... யாரும் ஏதேனும் சொல்வார்களோ... சே சே எத்தனையோ பேர் நடமாடிப் பேசிக் களிக்கும் இடத்தில் தன்னை மட்டும் யார் குறை சொல்லப்போகிறார்கள்... தன்னைத் தேற்றிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்து... விழிகளை அங்கும் இங்கும் அலையவிட்டு... அதோ.. அங்கே தனியாக அமர்ந்திருக்கிறாள் வந்தனா.... தயங்கித் தயங்கி மெல்ல அவளிருக்கை அருகே சென்றான்... அந்த வகுப்பறையில் பல மாணவர்கள் அங்கும் இங்கும் கூடிப் பேசிக் கேலி செய்து மகிழ்ந்திருக்கும் தருணத்தில் வந்தனா மட்டும் தனியாகப் புத்தகத்தில் விழிகளைப் படரவிட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது கவிக்கு சற்று சாதகமாகவே இருந்தது... லேகாவைப் பற்றி பேசித் தெரிந்துகொள்ள இதுதான் சரியான தருணம்... இன்னும் சற்று முன்னேறினான் கவி... அருகில் யாரோ வருவது கண்டு புத்தகத்தை புரட்டிய பக்கத்தோடு மேசையில் கவிழ்த்து வைத்து தலையை நிமிர்த்தினாள் வந்தனா, மெல்லிய புன்னகையோடும், நேசம் கலந்த பார்வையோடும் "ஹை..."

"ஹெலோ..., என் பேரு கவி.... கவிதாஞ்சன்.... ஃபைனல் இயர் தமிழ்...,"

"கேள்விப் பட்டிருக்கேன்..., நல்லாக் கவிதை எழுதி... பரிசெல்லாம் வாங்குவீங்கன்னு... ப்ரோபெஸர் சரவணன் எங்க கிளாஸ்ல இலக்கியம் நடத்தும் பொழுது அப்பப்ப உங்க வரிகள் எடுத்துக்காட்டா சொல்லுவார்... கிரேட்..."

"நன்றி..."

"இப்போ என்ன பண்றீங்க... அதாவது புதுசா எதாவது எழுதறீங்களான்னு கேட்டேன்.."

"ம்.... அப்பப்ப எதாவது மனசில படும் ஆழமான சம்பவங்களை மைய்யப்படுத்தி கொஞ்சம் ஜோடனை செய்து வாசிக்க வசீகரமா இருக்கணும் இல்லையா... அப்படி எழுதுவது உண்டு... ஆனா இப்போ.... சொல்லும்படியான எதுவும் ஆரம்பிக்கல... ஆரம்பிக்கும்போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன்... நீங்கதான் என் வாசகி ஆயிட்டீங்களே.."

சற்றே புன்னகை கூட்டிய வந்தனா, "நான் அப்படி சொல்லலையே..."

"மன்னிக்கணும்... கொஞ்சம் அவசர பட்டுட்டேன்..."

"அடடா... எதுக்கு மன்னிப்பு... நானும் விளையாட்டாத்தான் சொன்னேன்...."

"நன்றி..."

"ஆனா நீங்க ரொம்ப கூச்ச சுபாவம் உடையவர்ன்னு சரவணன் சார் சொல்லுவார்..., கிளாஸ் முடிஞ்சா கான்டீன் இல்லன்னா ஹாஸ்டல்ன்னு இருப்பீங்க வெளில ரொம்ப பாக்க முடியாதுன்னு சொல்லுவார்..."

"அ...ஆமா.... ஆனா இன்னிக்கு எதோ ஒரு வேகம்... அதான் வந்து உங்கள பாத்து பேசலாம்னு..."

"ஓ... என்னைப் பாக்கத்தான் வந்தீங்களா... என்ன உங்களுக்கு முன்னாடியே தெரியுமா... சொல்லுங்க... என்ன பேசணும்..."

"...இல்ல ஒண்ணு ரெண்டு தடவ நீங்க கிளாஸ் விட்டுப் போகும்போது..., லைப்ரரி கிராஸ் பண்ணும்போது.... பஸ்ஸ்டாண்ட்லன்னு... பாத்திருக்கேன்... உங்களையும் உங்ககூட லேகாவையும்... அவ்வளவுதான் மத்தபடி எதுவும் தெரியாது..."

சிறு புன்னகையுடன் வந்தனா, "… பரவால்ல... கவிஞர் காரணமில்லாம வந்திருக்கமாட்டீங்க... சொல்லுங்க..."

"... வந்து.... லேகா உங்க பிரெண்ட் தானே..."

"ஆமா..."

"... அவுங்க இங்க சேர்றதுக்கு முன்னாடி எங்க படிச்சாங்க....?"

வந்தனா எதிர்பாராத கேள்வி. இருந்தும் கவியின் தேடல் என்ன என்று அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது, "கவி... இத நீங்க லேகாவிடமே கேட்கலாமே...."

"..வந்து.... மன்னிக்கணும்... உங்ககிட்டையே இப்போதான் முதன் முறையாய் பேசுறேன்.... பொதுவா பெண்கள்கிட்ட என்ன பேசுறது எப்படிப் பேசுறதுன்னு எனக்குப் பழக்கமில்லை.... தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்குங்க... நான் கிளம்புறேன்..."

"...ஹெலோ... ஹெலோ.... நில்லுங்க கவி.... நீங்க எதுவும் தப்பா கேட்கல... முன் பின் அனுபவமில்லாமல் நீங்க பேச வர்றது என்னன்னு ஓரளவு புரிஞ்சுக்க முடியுது... சொல்லுங்க... நீங்க லேகாவைப் பத்தி தெரிஞ்சுக்கணுமா...?"

பதட்ட நிலையில் மௌனமானான் கவி, "... "

"... பாருங்க கவி, நீங்க ஒரு சிறந்த படைப்பாளி, சரவணன் சார் முதல் தடவை சொல்லும்போதே எனக்கு உங்ககிட்ட என்னை அறிமுகப் படுத்திக்கணும்ன்னு இருந்துச்சு... இப்படி ஒருத்தர்கிட்ட தன்னை அறிமுகப் படுத்திக்கிறதுக்குக் காரணம் அவங்கமேல உள்ள ஒருவித தனித்தன்மைகொண்ட ஈர்ப்பு... அப்படித்தான் நான் பாக்குறேன்... எனக்கு உங்க படைப்புகளின் மேல் ஈர்ப்பு... உங்களை லேகாவின் தனித்தன்மை எதுவோ ஈர்த்திருக்க வேண்டும்..."

"இல்ல... லேகாவிற்கு சிவான்னு ஒருத்தரோட திருமண நிச்சயம் ஆகியிருப்பதா...."

"கவி... லேகா எனக்கு ஒரு கல்லூரித் தோழி... ஜஸ்ட் ஃபிரண்ட்... அவளோட பர்சனல் பகிர்ந்துக்கற அளவுக்கு இன்னும் நெருங்கிப் பழகல.. மேலும் மத்தவுங்க பர்சனல் தெரிஞ்சுக்கறது நாகரிகம் இல்ல... "தன் தலையைக் குனிந்தவள் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை நிமிர்த்தினாள்... படித்துக்கொண்டிருந்த பக்கம் சரிதானா என்று பக்கத்தின் எண்ணைச் சரிபார்த்தாள் விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடர்வதற்கு...

பட்....டென அறைந்ததுபோல் இருந்தது கவிக்கு. அங்கே இன்னும் சற்று நிற்பதற்குக்கூட அவன் மனது அனுமதிக்க வில்லை.

"நான் கிளம்புறேன் வந்தனா.... நான் வந்து பேசினதை மறந்துடுங்க.... மன்னிக்கணும்..." அவனால் இன்னும் வந்தனாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க இயலவில்லை.

ஒரு எதார்த்த மனிதனின் இயல்பு புரிந்தவள் வந்தனா. கவியின் தடுமாற்ற நிலையை உணர்ந்தாள். பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் வயதில் இளமையாக இருந்தாலும் மனதளவில் முதிர்ந்த தெளிவு பெற்றவர்களாகவே இருப்பது உண்டு. அந்த வகையில் வந்தனாவினால் கவியின் மழலைத்தனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

குனிந்த தலையை நிமிர்த்தாமல் புத்தகத்தில் வைத்த கண்களை எடுக்காமல் வந்தனா தொடர்ந்தாள் "கவிஞரே... நீங்க எதுவும் தப்புப் பண்ணல... நம்மளோட முதல் சந்திப்பு இது.... உங்க படைப்புகளை இன்னும் இன்னும் நாம பேச வேண்டியிருக்கு... நீங்க இன்னும் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டியதிருக்கு.... "அவள் சொல்லிக்கொண்டே தொடர.... கவி சின்னப்ப புன்னகை ஒன்றை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு...

"...என் நிலையைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு மகிழ்ச்சி.... நன்றி.... "என்று கூறி தன் கால்ச்சட்டைப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை உருவி நெற்றி முத்துக்களை ஒற்றி மடித்து மீண்டும் கால்ச்சட்டைப் பைக்குள் நுழைத்துக்கொண்டு வகுப்பறை விட்டு வெளியேறினான்... மீண்டும் தன்னை யாரும் பார்த்துவிடவில்லையே... என்று ஒருவித அச்சம்..... விடுவிடுவென தன் வகுப்பறை நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.... இன்னும் இதயத்தின் லப் டப் வேகத்தடைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் பறக்கும் மோட்டார்வாகனமாகப் பறந்துகொண்டிருந்தது.....

பாடங்களைக் கவனிக்க இயலாமல் எங்கேயோ கத்தும் ஒரு பூனைக்குட்டி அவனது சிந்தையைக் களவாடியது... எந்த மரத்திலிருந்து அந்த மைனா தன் துணையை அழைக்கிறது என்று அவனால் சரியாகக் கணிக்க முடிந்தது... முட்டிக்கொண்ட மேகங்கள் முத்துதிர்க்கும் சத்தம் அவனது மூளைக் கோடுகளில் வயலின் வாசித்ததையும் அவனால் உணரமுடிந்தது ஆனால் ஆசிரியர்கள் வந்துபோனதைத் தவிற பாடக்குறிப்புகளை அவனால் கவனிக்க இயலவில்லை. வகுப்புகள் நிறைவடைந்து விடுதி திரும்பிய கவிதாஞ்சன் ஒரு புது உலகத்தைப் பார்ப்பது போல ஒவ்வொன்றையும் பார்த்தான்.... அவனது விடுதி அறை, பொருட்கள், கண்ணாடி, தலைவாரும் சீப்பு, வெளி வராண்டா, மரங்கள், செடிகள், புல்வெளி, மண்தரைகூட இதுவரை மங்கலாகத் தெரிந்து இப்போது பிரகாசமாகத் தோன்றுவதுபோல் ஒரு பிரமை.... இது ஏன் என்று அவன் சற்று கண்ணை மூடிப் பார்த்த பொது அங்கே வந்தனா அவனது இமைத்திரைகளை ஆக்ரமித்து நின்றாள்...!

சன்னல் வெளியில் நிலவு கவியை அழைத்தது... இரவு உறக்கம் தொலைந்தது... அந்த இரவில் அவனது கவிதைக்குள் மலர்ந்து நின்றவள் வந்தனா...

கவிதாஞ்சனை வாட்டிய வட்ட நிலா வந்தனாவின் கனவுகளையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க மறக்கவில்லை... அவளின் கனவில் கவி ஏன் வந்தான் எப்படி வந்தான் என்பதை அவள் அடுத்தமுறை கவியைச் சந்திக்கும்பொழுது எப்படிக் சொல்வது? என்ற சிந்தனை அவளின் உறக்கத்தைக் கலைத்தது.

அடுத்த முறை வந்தனாவிடம் தன் வளரும் படைப்பினைக் கவி பேசப்போவதையும்... அந்தப் படைப்பின் கரு வந்தனா எனச் சொல்லப்போவதையும்... வந்தனாவின் முகம் இதைக்கேட்டு நாணக் கவி எழுதப்போவதையும்... அன்று அந்த சன்னல் வெளி நிலா அறிந்துவைத்திருந்தது...!

...மீ.மணிகண்டன் 

Aug-19-1996

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.


சனி, 30 ஜூலை, 2022

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு:  தலப்பாக்கட்டி சினிமா 

எழுதியவர்: மீ.மணிகண்டன்

பிரகாஷ் டைனிங் டேபிளில் அமர்ந்து மனைவியின் கைவண்ணத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான், "சாம்பார் சாம்பார் மாதிரியே செஞ்சிருக்க, வாவ்"

"இல்லாட்டி அது சாம்பார் இல்லையெங்க"

இடது கை போனில் வாட்ஸாப் நகர்த்த, வலது கை இட்லியைப் பிட்டு சாம்பாரில் பிசைந்து வாய்க்கு கூரியர் செய்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில்... "பிரேமி… காஃபில உப்பு இல்ல..." என்றான்

"என்னது..."

"ஐ மீன்...  காஃபில இனிப்பு இல்ல... சூடும் இல்ல… சப்பு ன்னு இருக்கு..."

"நான் டேபிள்ள காஃபியே வைக்கலியே..."

"வைக்கலியா.... " மொபைல் போனிலிருந்து கவனத்தை குவளைக்குத் திருப்பினான் அது தண்ணீர்க் குவளை, அப்போதுதான் புரிந்தது தான் அருந்தியது தண்ணீர் என்று.... "ஹே... சாரி.... தண்ணியில சுகர் இல்ல...."

சமயற்கட்டை விட்டு வெளியில் வந்த பிரேமி, "அன்பான கணவரே... என்ன ஆச்சு இன்னிக்கு.. காஃபில உப்பு இல்லங்கறீங்க... தண்ணில சுகர் இல்லங்கறீங்க...."

" ம்.... எல்லாம் இந்த வாட்ஸாப்ப்பால வந்தது... ஓ.கே. காஃபிய ஃபிக்ளாஸ்கில தந்துடு... நான் கொஞ்சம் அவசரமா கிளம்பறேன்...."

"என்ன அவசரமோ...ம்... " சொன்னவள் மெதுவாக புன்னகைத்தபடி தொடர்ந்தாள், "அப்பறம் ஈவினிங் சீக்கிரம் வந்துடுவீங்களா... "

"ஏன் கேட்குற"

"இல்ல.... ரொம்பநாள் ஆச்சு தியேட்டர்க்கு போயி...."

"மை டார்லிங்...இவ்வளவுதானா... இதுக்குப் போயி.. இவ்வளவு யோசனையா....ம்.... நீ சொல்லிட்டா தென் நோ அப்ஜெக்சன்"

"எந்த படம்னு சொன்னீங்க னா.."

"சி... நீ தான் ஆரம்பிச்ச... நீயே டிசைட் பண்ணு.."

"ஓ.கே. கமல் படம்.."

"ஓ.கே.... சரி சரி நான் இப்போ கெளம்பனும் டைம் ஆகுது... ஓ.கே. டார்லிங்...." 

"பை.."

பிரகாஷ் புறப்பட்டு சென்றபின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட் கிளம்பினாள் ப்ரேமி. ஷாப்பிங் முடித்து வீடு திரும்பிய ப்ரேமி பிரகாஷுக்கு போன் செய்தாள், "என்னங்க..."

"என்ன..."

"அது வந்து... கமல் படம் வேண்டாம்"

"வொய்.. "

"வந்து... மார்க்கெட்ல காய் வாங்கும்போது பக்கத்துல பேசிக்கிட்டாங்க புதுசா வந்திருக்க ரஜினி படம் நல்லா இருக்காம்.."

"ஓ.கே. இட்ஸ் யுவர் சாய்ஸ்"

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

போனை வைத்து விட்டு இருக்கையில் துள்ளிகுதிதான் பிரகாஷ் "வாவ் இன்னிக்கு தியேட்டர் போறோம்... ரிட்டர்ன் வரும்போது தலப்பாக்கட்டி... தென் வீட்டில... என்ஜாய்..."

சினிமாவிற்கு கிளம்பும் ஆவலில் சீக்கிரம் வேலைகளை முடிப்பதில் மும்முறமாக இருந்தாள் ப்ரேமி. மாடியில் துணி காயப்போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... கணவனுக்கு போன் டயல் செய்தாள் "ஹலோ.."

"என்ன டார்லிங்.. "

"வந்து மாடில துணி காய போடும்போது செகண்ட் ஃபிளோர் கீதா சொன்னா விஜய் படத்துக்குத்தான் கூட்டம் நிறையுதாம் அதுனால...”

"அதுனால என்ன ரஜினி படம் வேண்டாம்.... இஸ் இட்..."

"ம்..." என்றாள் சற்றே நாணத்தோடு.

"உன் சந்தோஷமே என் சந்தோஷம்..." என்றான் மறுப்பேதும் இல்லாமல் பிரகாஷ்.

"தேங்க்ஸ்ங்க... ம்மா...." என்று உற்சாகம் ஆனாள் ப்ரேமி.

அலுவலகத்தில் பிரகாஷின் மனத்திரையில் ஓடியதெல்லாம் தலப்பாக்கட்டிதான் மற்றபடி எந்தப் படமாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பொருட்டல்ல.

பிரகாஷ் டெஸ்கில் போன் ஒலித்தது... எதிர்முனையில் CEO "பிரகாஷ் இன்னிக்கு சர்பிரைஸ் ஆடிட் இருக்கு... டீம் க்கு தெரியவேண்டாம்... நீங்க ஈவினிங் கொஞ்சம் ஸ்டே பண்ணனும்..." சொல்லிவிட்டு பிரகாஷின் பதில் எதிர்பாராமல் போன் கட் ஆகிவிட்டது. ‘இதென்னடா வம்பாய் போச்சு எப்படி சமாளிப்பது’ என்று பிரகாஷ் மூளைக்கு வேலை கொடுக்கத் துவங்கினான்.

மணி மதியம் இரண்டு முப்பது, பிரகாஷ் மொபைல் போன் ஒலித்தது எடுத்துப் பார்த்தான், பிரேமி..."ம்... என்ன..."

"வந்து... விஜய் படத்துக்கும் வேண்டாம்னு முடிவாகிடுச்சு.."

"நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அப்பறம் முடிவாகிடுச்சுன்னு சொல்றியா... சரி சொல்லு வேற எந்தப் படம்..."

"தல படத்தப்பத்திதான் இப்ப லேடிஸ் பேசிக்கிறாங்க... சோ... அஜித் படம்..."

"ஓ.கே. எனக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் சமாளிக்க வேண்டிய வேலை இருக்கு... நான் இப்போ போனை வைக்கிறேன்... "

"நீங்க உங்க வேலையை பாருங்க... நான் உங்க கிட்ட சொல்லாம எதுவும் செய்வேனா... அதான் உடனுக்குடன் அப்டேட்.."

"ஓ.கே. ஓ.கே. " போனை வைத்துவிட்டு சிந்தனையைத் தீவிரமாக்கினான் பிரகாஷ், எப்படி மாலை சீக்கிரம் வீட்டிற்கு செல்வது... நீண்டநாட்களுக்குப் பிறகு பிரேமி கேட்கிறாள்... இன்று விட்டுவிட்டால் நாளை மாமனார் மாமியார் வந்துவிடுவார்கள்... தனியே படம் பார்க்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு இருக்காது... சிந்தனை தொடர்ந்தது...நடுவில் மத பேதமின்றி தனக்குத் தெரிந்த கடவுளர்களின் பெயர்களையெல்லாம் மனதில் கூட்டி பிரார்த்திக்கொண்டான் பிரகாஷ்... எதிரில் தன் உடன் வேலை செய்யும் விமல் வரவைப் பார்த்ததும்.. "டேய் ஒரு ஹெல்ப்..." என்று அவனிடம் விஷயத்தை சொல்லத் துவங்கினான் ஆனால் CEO இது சர்பிரைஸ் ஆடிட் என்று சொன்னது நினைவிற்கு வரவே..."இல்ல...." சற்று சமாளித்து "சரோ கேபின்ல இருக்காளா..." 

"ஏண்டா IM ல ஆன்லைன்ல காட்டலையா..." என்றான் விமல்.

"எஸ்... மறந்துட்டேன்.... நானே செக் பண்ணிக்கிறேன்..." "கடவுளே... சினிமா... தலப்பாக்கட்டி...." மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது பிரகாஷிற்கு.

டேபிள் போன் ஒலிக்க, அவசரமாக எடுத்தான்," பிரகாஷ் ப்ரோக்ராம் கான்சல்ட்... இன்னிக்கு ஆடிட் இல்ல... பட் எனக்கு ஆன்வல் ஸ்டேட்மென்ட் மட்டும் கொடுத்துட்டுப் போங்க... ஐ நோ இட் ஐஸ் நாட் தட் ஈஸி... பட் ஐ நீட் இட்..." CEO விடமிருந்து வந்த போன் மீண்டும் பிரகாஷின் பதிலுக்குக் காத்திராமல் கட் ஆனது. 

மனதிற்குள் நினைத்துக் கொண்டான் பிரகாஷ் "பாவி மனுஷா ஆடிட் இல்லன்னு சொல்லி பால வார்த்துட்டு கூடவே ஸ்டேட்மென்ட் கேட்டு சுடுதண்ணி ஊத்திட்டியே... அதுக்கு கொறஞ்சது நாலு மணி நேரம் ஆகுமே..." அருகில் காஃபி பிளாஸ்க் பார்வையில் பட்டது... மனைவியின் நினைவும் வந்தது.. "ஆசையாக காத்திருப்பாளே..." என்று நினைத்த பிரகாஷ் சட்டென ஏதோ தெளிவு கிடைத்ததுபோல் விமலின் உதவியை நாடினான்.. "டேய் இதுமட்டும் செய்... ஓவர் டைம் நான் சைன் பண்ணுறேன்.." என்று CEO தன்னிடம் ஒப்படைத்த வேலையை பிரகாஷ் விமலிடம் கைமாற்றினான், ‘ஒரு வழியாக சமாளித்து விட்டோம்’ என்ற மன நிம்மதியில் காஃபியை கோப்பையில் ஊற்றினான் பிரகாஷ்.

மொபைல் போன் ஒலித்தது, எடுத்தான் எதிர்முனையில் ப்ரேமி, "என்ன அடிக்கடி போன் போடுற...."

"இல்ல ஒரு விஷயத்தை சுத்தமா மறந்துட்டேன், நாளைக்கு அப்பா அம்மா வராங்க இல்ல அதுக்காக கெஸ்ட் ரூம் ரெடி பண்ணியிருந்தேன்ல.."

"ஆமா..."

"ஆனா கெஸ்ட் ரூம்க்கு கர்ட்டன் ஆல்டர் பண்ண கொடுத்ததை வாங்க மறந்துட்டேன், ஆனா தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி வாங்கிட்டு வந்துடறேன்.."

"இதைக்கூட என்கிட்டே சொல்லனுமா.."

"அப்டேட்..." என்று சிரித்துக்கொண்டாள் ப்ரேமி.

சின்னச்சின்ன அலுவல்களை முடித்துக்கொண்டே நேரம் எப்போது ஐந்தைத்தொடும் என்று காத்திருந்த பிரகாஷ், கடிகார முட்கள் சரியாக ஐந்தைக் காட்டியதும் விடுவிடுவென பறந்தான்... பார்க்கிங் வந்து கார் ஸ்டார்ட் செய்து பறக்க விட்டான். சாலையும். சரம் சரமாய் மனிதர்களும். சர் சர் என்ற போக்கு வரத்தும் பிரகாஷின் பயணத்தில் பொம்மைகளாய்க் கடந்தன. காரை வீட்டு வாசலில் பார்க் செய்துவிட்டு வேகமாக வாசற்கதவை நாடினான். கதவு பூட்டியிருப்பதுபோலத் தோன்றியது. சந்தேகத்தில் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வெளிக் கதவைத் திறந்தான். உள்ளே வெளிச்சம் இல்லை இருட்டாகவே இருந்தது. விளக்கை பளிச்சிட்டான். "பிரேமி..." கூப்பிட்ட குரலுக்கு பதில் வரவில்லை... ‘ஆல்ட்ரேட் செய்த கர்ட்டன் வங்கச் சென்றவள் இன்னும் வீடு திரும்பவில்லையோ’ என்ற நினைப்பில் நுழைவரை தாண்டி சமயற்கட்டுக்குச் சென்று பார்த்தான் அங்கும் இல்லை.. பின்புறம் பால்கனி வந்தடைந்தான்.. அங்கும் இல்லை... "பிரேமி..." போனை எடுத்து நம்பரை அழுத்தினான்... ரிங் செல்கிறது ஆனால் பதில் இல்லை.. யோசனையில் இருக்கையில் அமர்ந்து போனை எதிர் மேசையில் வைத்தான்… 

டடங்... போன் ஒளிர்ந்தது எடுத்துப் பார்த்தான் பிரேமியிடமிருந்து வாய்ஸ் மெசேஜ்... "என்னங்க நீங்க ரொம்ப பிஸின்னு சொன்னிங்களா அதான் புறப்படும்போது கூட சொல்லல அதான் இப்போ மெசேஜ் பண்றேன்... செகண்ட் ஃபிளோர் கீதா ஆண்லைன்லயே டிக்கட் போட்டுட்டா நாங்க ரெண்டு பெரும் ஊபர் புடிச்சு வந்துட்டோம்... உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு... டேபிள்ல சாப்பாடெல்லாம் வச்சிருக்கேன்... நீங்க எனக்காக எதுவும் வைக்காதீங்க... நீங்க வேணுங்கறத சாப்பிடுங்க... எனக்கு இல்லன்னாக்கூட நான் வந்து உப்மா செஞ்சுக்குவேன்... சரியா... டேக் கேர்..." வாய்ஸ் மெசேஜ் நிறைவானது. தலப்பாக்கட்டி பிரியாணிக்குள்ளிருந்து இரண்டு ஆடுகள் தலையை வெளியே நீட்டியது.!

 ...மீ.மணிகண்டன்

ஞாயிறு, 24 ஜூலை, 2022

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்

 வணக்கம் அன்பு நண்பர்களே,

மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறிவிடவேண்டும் என்று எண்ணுவது மானுட இயல்பு. எண்ணங்களில் எது உகந்தது எது மாறானது என்று வரையறுக்கும் சக்தி ஒன்று உண்டெனில் அதுவும் மானுடமாகவே அமைந்துவிடுவது உலக நடப்பு. இயல்பையும் நடப்பையும், உறவையும் வயதையும் கொண்டு நான் புனைந்த சிறுகதை 'அத்தனையும் பச்சை நிறம்'. படித்துப்பார்த்துத் தங்களின் கருத்துகளைத் தளத்தில் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

...மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... சிறுகதை ... மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்
கடற்கரை அலைகள் காவியாவின் கொலுசணிந்த பாதங்களை நனைத்து நனைத்து மகிழ்ந்து களித்துக்கொண்டிருந்தன. காவியாவின் மனதில் எப்பொழுதும் தோன்றும் எண்ணம் மறுபடி நிழலாடியது. இந்தக் கடற்கரைக்கு வரும்நேரமெல்லாம் அந்த நினைப்பு தொடர்ந்துவிடும். என்று அந்த ஆசை நிறைவேறுமோ? என்கிற ஏக்கம் சற்றே தலைதூக்கும். 'இந்த அப்பாவிடம் எத்தனை முறை கேட்டுவிட்டேன் எப்பொழுது கேட்டாலும் ஏதாவது ஒரு பதில், மிகவும் சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில்களைத் தந்துவிடுகிறார், என்னாலும் அதற்கு மேல் பேச முடியவில்லை. அப்படி என்ன கேட்டுவிட்டேன், அதோ தெரியும் கப்பலில் ஏறிப் பயணிக்க வேண்டும் அவ்வளவுதான் இது ஒரு பெரிய சவாலா? என்ன... கரையிலிருந்து கப்பல் வரை நடந்துபோக முடியாது... தெரியும், அதற்குத்தான் கரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுமரங்கள் இருக்கின்றனவே, அதில் ஒன்றைச் செலுத்தி கப்பலை எட்டிவிட்டால் பின்னர் கப்பலில் ஏறிவிடலாம் பிறகென்ன ஆனந்தப் பயணம்தான். என்ன எனக்கு மட்டும் பலமிருந்தால் நானே அந்தக் கட்டுமரத்தில் ஒன்றைத்தள்ளிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவேன், எனக்கு அத்தனை பலம் இல்லாத காரணத்தால்தான் அப்பாவை நாடுகிறேன், அவரும் இன்று வேண்டாம், நாளை என்பார், அடுத்த முறை கேட்டால் பயணச்சீட்டு வாங்க வேண்டுமென்பார், மறுமுறை... கப்பல் தரை தட்டிவிட்டதாம் என்பார் இப்படிப் பல காரணங்கள் சொல்லிக்கொண்டே வருகிறார். இந்த பதில்களை அவர் முன்னமே தயார் செய்து வைத்திருப்பாரோ? ', என்று தனக்குள் கூடிவந்த தன் தந்தைமீதான கோபத்தை அணைக்கும் விதமாகக் கடல் நீரைத் தன் இரு கரங்களாலும் அள்ளிப் பருகினாள், உப்பு நாவைத்தாண்டி தொண்டையைத்தொட, க்கு... க்கு... என்று இருமிக்கொண்டு த்து... த்து... எனக் குடித்ததுபோக மீதமிருந்த தண்ணீரை வாயிலிருந்து துப்பினாள். 'ப்ரியா..' என்று அப்பாவின் கோபம் கூடிய குரல் கேட்டதும் சுதாரித்த காவியா, 'ம்... முடிந்தது... இனிப்போகாமல் இருந்தால் ப்ரியா பாவம்', என்று தனக்குள் எண்ணிக்கொண்டு கடல் அலைகளை விட்டுப் பின்வாங்கிப் ப்ரியாவை நாடினாள் காவியா.  

கடற்கரை மணலில் சட்... சட்... சட்... என்று குளம்படிச்சத்தம் கிளப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிய குதிரைகளைப் பார்த்த காவியாவிற்கு குதிரைச்சவாரி செய்ய ஆசை கிளம்பியது, கேட்டால் மட்டும் உடன் ஆசை நிறைவேறிவிடவா போகிறது இருந்தாலும் கேட்டுவைப்போம் என்று தன் தந்தையின் இடது கரத்தைப் பற்றினாள் காவியா, தனது வலது கரத்தை கடலை நோக்கி நீட்டிப் ப்ரியாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த அப்பா காவியாவை கவனித்தார், காவியாவின் பார்வை அங்கிருந்த குதிரையொன்றின் மீது குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு 'என்ன குதிரைச் சவாரி செய்யணுமா?' என்றார், 'அட அப்பா கனிவுடன் கேட்பதைப்பார்த்தால் இன்று நமக்கு குதிரைச்சவாரி ஆசை நிறைவேறிவிடும் போலிருக்கிறதே', என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதே வேளை அப்பா அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பற்றிக்கொண்டு குதிரைக்கு அருகில் நின்ற நபரை அணுகி அவரிடம் சில வார்த்தைகள் பேச அடுத்த சில நொடிகளில் காவியா  குதிரைமீதமர்ந்திருந்தாள், குதிரையின் மேனியைத் தொட்டுப்பார்த்து அதன் பட்டுத்தன்மையை உணர்ந்தபோது விழிகளை உயர்த்தி அதிசயித்தாள், வலுவான தேகமாக இருப்பதை உணர்ந்து வியப்படைந்தாள். 'இங்கிருந்து பார்க்கும்பொழுது உலகம் கொஞ்சம் தாழ்ந்துவிட்டது', என்று தனக்குள் எண்ணி நகைத்துக்கொண்ட காவியா, குதிரையோட்டத்தில் ஏற்பட்ட உடற்குலுங்கலை ஏற்கவும் இயலாமல் விலக்கவும் இயலாமல் வம்படியாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். இதுவரை அவள் உடல் உணர்ந்திராத உணர்வு. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்வழியே வந்துவிடுமோ என்று ஒரு அச்சம் விழிதிறந்தது. கரையில் நின்று குதிரையைக் கண்டபொழுது அவள் எதிர்பார்த்தது வேறு, சவாரியில் அவள் அனுபவிப்பது வேறு, இருந்தாலும் வந்த அச்சம் ஒரு சில நொடிகளில் விடைபெற்று ஆனந்தமாக மாறியது. குதிரையும், கடற்கரையிலிருந்து அந்த யாரோ ஒருவரின் சிலைவரை சென்று திரும்பிவந்து ஒரு வட்டமாகத் தன் பயணத்தை நிறைவேற்றியது.

குதிரையிடமிருந்து விடைபெற்றதும், காவியா தன் மனதில் எழுந்த ஆசையை அப்பாவிடம் கேட்டுப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்தில், 'அப்பா நாமும் ஒரு குதிரை வாங்கலாமா?', 'ம்..ம்..' என்று  சுரத்தில்லாமல் பதிலளித்ததிலிருந்தே காவியா புரிந்துகொண்டாள் இது நடக்காது என்று, 'அப்படி என்ன கடினமாக இருந்துவிடப்போகிறது, கோழி வளர்ப்பது போல நாய் வளர்ப்பது போல குதிரையும் ஒரு பிராணி, இப்படித்தான் அன்றொருநாள் நாய் வளர்ப்பது எப்படி என்று ப்ரியா கம்பியூட்டரில் தேடிப்பார்த்து அறிந்துகொண்டாள், அதேபோல் குதிரை வளர்ப்பையும் கம்பியூட்டரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நம் வீட்டில் பெரிய தோட்டம் இருக்கிறது குதிரை ஓடவும் உலாவவும் நம் வீட்டுத்தோட்டம் நல்ல வசதியானது மேலும் நானும் அவ்வப்பொழுது விரும்பும் வேளைகளில் நம் தோட்டதிலியேயே குதிரைச்சவாரி செய்யலாம்'. என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே மீண்டும் அப்பாவை நோக்கி 'சரியாப்பா?', இந்த முறை அப்பாவின் 'ம்..ம்..' சற்று முரட்டுத்தனமாக இருந்தது கூடவே 'ப்ரியா..' என்ற கூப்பாடு. இது நடக்காது என்று புரிந்துகொண்ட காவியா, 'ப்ரியா மட்டும் நாய் கேட்கலாம் ஆனால் நான் குதிரை கேட்கக்கூடாது, ப்ரியாவிற்கொரு நீதி, எனக்கொரு நீதி, புரியாத அப்பாவிற்கு மகளாய்ப்பிறந்து இன்னும் என்னென்ன சந்திக்கக் காத்திருக்கிறேனோ?' என்று சத்தமில்லாமல் விசனப்பட்டுக்கொண்டாள்.

சட்டென கண்விழித்த காவியாவிற்குத் தான் ஒரு நிலையில்லாத இடத்தில் உறங்கிக்கொண்டிருப்பது புலப்பட்டது நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றில் இருக்கும் தான் கண்விழித்த திசையில் இருள்... வெள்ளை வட்டம்... 'அது என்ன? ஓ நிலா... அப்படியானால் இருட்டிவிட்டதா... அந்தச் சின்னச் சதுர இடைவெளியில் நிலா தெரிகிறதே அப்படியானால் நகர்ந்துகொண்டிருப்பது என்ன? அடடா விமானமா? நான் கேட்டதுபோல அப்பா என்னை விமானத்தில் அழைத்து வருகிறாரா? இது தெரியாமல் உறங்கிவிட்டேனா?' இப்படிப் பல கேள்விகள் மண்ணிலிருந்து விண்ணை நோக்கிப் புறப்பட்ட ராக்கெட்டுகளாய் மனதிலிருந்து புறப்பட்டது , 'போகட்டும் மீதிப் பயணத்தை விழிப்புடன் அனுபவிக்கவேண்டும் என்று எழுந்து அமர்ந்த பொழுது அந்தச் சின்னச் சதுர இடைவெளி சற்றே பெரிதாகியது, நிலா வெளிச்சத்தில் மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது... ஆகாயத்தில் எப்படி மரம்?! அடடா இது விமானம் அல்ல ரயில், மீண்டும் ரயிலில் பயணமா?', புறப்பட்ட ராக்கெட்டுகள் செயலிழந்து கடலை நாடியதுபோல அத்தனை கேள்விகளும் பதிலின்றிக் கரைந்தன. 'நான் ஏற்கனவே இந்த அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் அடுத்த முறை விமானப் பயணம்தான் போகவேண்டுமென்று ஆனால் சமர்த்தாக நான் உறங்கும்வேளையில் என்னை ரயிலில் அழைத்துவந்துவிட்டார்... இருக்கட்டும், இப்போதைக்கு இந்தப் பயணத்தை அனுபவிப்போம்' என்று நன்றாக எழுந்து உட்கார்ந்தாள் காவியா, ஆயா வீட்டுச் சாமியறையில் ஒரு படமிருக்கும் அதில் ஒருவர் தாடிவைத்துக்கொண்டு தலை முடியைக் கொண்டைபோட்டுக்கொண்டு இப்படித்தான் அமர்ந்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டிருப்பார் அதேபோல் அமர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள் ப்ரியா.  'உறங்குபவளுக்கு எதற்கு சன்னலோரம்?' என்ற கேள்வியெழ, ப்ரியாவைத் தட்டியெழுப்பி நகரச்சொல்லிவிட்டுச் சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு நகரும் மரங்களை நிலவொளியில் எண்ணத் துவங்கினாள் காவியா. இரவு நேரம் காற்று சிலுசிலுவென்றிருக்குமே கைகளை வெளியே நீட்டலாமென்று முனைந்த காவியாவின் கரங்களை சன்னலின் கண்ணாடிக் கதவு தடுத்தது. சன்னல் மூடியிருக்கிறது, தான் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவேன் என்றே கதவை அடைத்துவிட்டார்கள் என்ற குட்டிக்கோபத்தின் ஊடே பார்வையை மட்டும் வெளியே செலுத்தினாள். மரங்கள் கடந்துபோனாலும் காவியாவின் எண்ணத்தில் ஏன் விமானத்தில் பயணிக்கவில்லை? என்ற கவலையும் கேள்வியும் அலைமோதியது, அவள் விமானப் பயணம் வேண்டுமென்று சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒருமுறை இப்படியான ரயில் பயணத்தில் இருக்கையின் இடைவெளிகளில் தூசி படிந்திருப்பதைக் கண்டாள், அவற்றைச் சுத்தம் செய்து தூய்மைப்படுத்த எண்ணியவள் அருந்துவதற்காக வைத்திருந்த போத்தல் நீரைச் சிறிது சிறிதாகத் தூசி தெரிந்த இடைவெளிகளில் ஊற்ற அந்த நீர் இருக்கையையும் நனைத்தது, தண்ணீரை ஊற்றிய பின்னர் தன் கரங்களால் இங்குமங்கும் தடவிச் சுத்தம் செய்யத்துவங்கினாள், அதுவரை எங்கோ சென்றிருந்த அப்பா திரும்பிவந்து காவியாவின் செய்கையைப்பார்த்து 'ப்ரியா...' என்று குரலெழுப்பினார், சன்னல் வழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா அதிர்ந்துபோனாள், ஏன்... அருகாமையில் உடன் அமர்ந்து பயணித்த சக பயணிகளும்கூட ஒரு கணம் ஸ்தம்பித்து அப்பாவைத் திரும்பிப்பார்த்தனர். அப்பாவிடம் பெற்ற பாட்டைப் ப்ரியா, காவியா மீது எதிரொலித்தாள். இப்படிச்சிக்கல் வந்துவிட்டது என்று நவீனிடம் பேசிக்கொண்டிருந்தபோது நவீன்தான் சொல்லியிருந்தான் விமானத்தில் பயணித்தால் இதுபேன்ற தொல்லைகள் நேராது காரணம் விமானத்தை மிகவும் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று. நவீனின் மாமாவின் வீடு சிங்கப்பூரில் இருந்தது விடுமுறைக்கு நவீன் அவர்கள் மாமா வீட்டிற்குப் போய் வருவான் அதனால்தான் நவீனுக்கு விமானம் பற்றித்தெரிந்திருந்தது. இப்படியான நினைவுகளில் அடடா மரங்களை எண்ண மறந்துவிட்டோமே என்று மரங்களைத்தேடினாள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் தென்படவில்லை ரயில் பாலத்தின்மீது பயணித்துக்கொண்டிருந்தது பாலத்தின் ஓரங்களைப் பார்க்க சற்று பயமாக இருந்ததால் திரும்பிப் ப்ரியாவைப் பார்த்தாள் ஆயா வீட்டு சாமியறைப் படம் மீண்டும் நினைவில் வந்தது. வெளியே நிசப்தமான இரவு தடக் தடக்கென தாலாட்டும் ரயிலோசை... பிரியாவின் மடிமீது சாய்ந்துகொண்டு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள் காவியா.

மூடிய விழித்திரைக்குள் பச்சை வண்ணப் பட்டாம்பூச்சிகள் கண்ணாமூச்சி விளையாடின. ஒரு பட்டாம்பூச்சி தன் முதுகில் நட்சத்திரம் ஒன்றைச் சுமந்து மின்னியவண்ணம் பறந்துகொண்டிருந்தது. அதனைக் கண்ட மற்ற பட்டாம்பூச்சிகள் உனக்கெப்படி நட்சத்திரம் கிடைத்ததெனக் கேட்க நட்சத்திரம் சுமந்த பட்டாம்பூச்சி கர்வத்துடன் பதிலளித்தது தனக்கு நிலா என்றொரு நண்பனிருக்கிறான் அவன்தான் கொடுத்தானென்று. இப்போது மற்ற பட்டாம்பூச்சிகள் தங்களுக்கும் நிலவை நண்பனாக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தன. இந்த நாடகங்கள் நிறைவேறும்பொழுது காவியா கண்விழித்து அத்தனை பச்சைப் பட்டாம்பூச்சிகளையும் காணவில்லையே என்று தேடப்போகிறாள், அப்போதும் அப்பா, 'ப்ரியா..' என்று கோபமாகக் குரலெழுப்பப் போகிறார், அப்பாவி அம்மா ப்ரியாவும், அந்தக் கோபத்தை, மகள் காவியாவின் மீது எதிரொலிக்கப் போகிறாள்…!

தரைதட்டிய கப்பலைத் தனியொரு ஆளாகப் பயணிக்க வைப்பதும், ஒன்றரை சென்ட் கொல்லைப்புற நிலப்பரப்பில் குதிரையொன்றை அனல்பறக்க ஓடவிடுவதும், மகிழுந்து, பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் மட்டுமே கடந்து பயணிக்க வாய்ப்புள்ள தூரங்களை விமானத்தில் பயணித்துக் கடப்பதும், கனவில் தோன்றும் பட்டாம்பூச்சிகளைக் கண் முன் தேடிப் பிடிப்பதும், முப்பத்திரெண்டு வயது அப்பாக்களுக்கு வேண்டுமானால் சாத்தியமற்றுப் போகலாம், ஆனால் மூன்று வயது காவியாக்களுக்கு அவைகள் என்றும் சாத்தியமே!

... மீ.மணிகண்டன்

03/31/2022


திங்கள், 18 ஜூலை, 2022

ஐந்தோடு ஒன்று ஏழு ... மீ.மணிகண்டன்

 ஐந்தோடு ஒன்று ஏழு 

ஆன்மிகமும் இயற்கையும் வேறு வேறென எண்ணத்தகுமா? என்று எனக்குள் எழுந்த கேள்விக்கான விடை இந்தச் சிறுகதை, சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம், நிறைவு, திருப்பம் போன்ற சில வரையறை கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டுமே! இந்தப் பதிவு அப்படியான கட்டுப்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும். அப்படியானால் இதனைச் சிறுகதை என்று சொல்லவியலாது, பின்னர் இதனை என்னவென்று சொல்வது? எண்ணத்தின் ஓர் எழுத்துவடிவம் மட்டுமே. படித்துவிட்டுத் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் நான் அறியாதவற்றை மேலும் அறிந்து கொள்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

 ஐந்தோடு ஒன்று ஏழு ... மீ.மணிகண்டன்

உலகப் பந்திலே மனிதனாய்ச் சிந்திப்பது ஆனந்தத்தின் எல்லை அல்ல என்று மரமொன்றின் நிழலில் அமர்ந்து தியானிக்கலானான் ஒருவன். தன்னை மறந்த நிலையில் தாடி, மீசை, தலையில் வளர்ந்த முடி, யாவும் நீண்டு திரிந்ததையும் உணர்தற்கல்லாத முனிவனாகத் தியானத்தில் நிலைத்துக்கிடந்தான். 

உலகம் மனிதச்சிந்தனைக்கு விருந்து என்றும், மனிதனாய்ச் சிந்திப்பது பாக்கியம் என்றும் கருதிய ஒருவன் மரத்தடி வழி கடந்துபோகையில் முனிவரைக்கண்டான். இவரைத் தீண்டிப் பார்த்தால் என்ன என்றெண்ணி முனிவரின் தலைமுடியைத் தொட்டுப் பார்த்தான் முனிவர் அசையவில்லை. தாடியை லேசாக இழுத்தான் முனிவர் விழிக்கவில்லை மீசையின் இரு முனைகளையும் இழுத்து முடிந்து வேடிக்கை பார்த்தான் முனிவர் சற்றும் சாயவில்லை. 

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதச்சிந்தனையில் சிக்குறாத நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயமும், முனிவரைத் தீண்டும் மனிதனைத் தாமும் தீண்டினாலென்ன என்றெண்ணி முதலில் நீர் அவன் மீது மழையாய்ப் பொழிந்தது. "ஏ மழையே என்னைத் தொந்தரவு செய்யாதே... " என்று மழையைப் புறக்கணித்துவிட்டு மனிதன் முனிவரைத் தீண்டுவதில் மும்முரமாக இயங்கினான். 

மழைக்குத் தயங்காத அவனை, நிலம் தன் வேலையைக்காட்டி அவனை ஆட்டிப் பார்ப்போம் என்று சற்றே அவன் நின்றிருந்த இடத்தில் அதிர்வைக் கொடுத்தது. அதிர்வு தனக்கான சோதனை என்றுணராத மனிதன் பூமி அதன் வேலையைச் செய்கிறது என்றெண்ணி சற்றும் கண்டுகொள்ளாமல் இடம் மாற்றி முனிவரின் பின்புறம் சென்று அவரது சடாமுடியைப் பின்னி மரத்தின் ஒருகிளையொடு பிணைத்துக் கொண்டிருந்தான். 

கிளையினோடு முனிவரின் சடாமுடியைப் பிணைத்துக்கொண்டிருந்தபோது கிளைகளின் உராய்வினால் ஏற்பட்ட தீப் பிழம்பு அவனது கைகளைத் தீண்ட அது தான் முனிவரைத்தீண்டுவதால் தீ தனக்களித்த சூடு என்றுணராமால் ஊதி அணைத்து விட்டு சற்றே கைகளை உதறிவிட்டு தீயைப் போக்கித் தனது மானுடச் சிந்தனை சொல்லிக்கொடுத்தபடி முயற்சியில் பின்வாங்காமல் முனிவரின் சடாமுடியைக் கிளையொன்றொடு பிணைத்திருக்கினான். 

காற்று தன் பங்கிற்கு தூசியைக் கிளப்பி மனிதனின் கண்களைத்தீண்டியது மனிதனோ காற்றின் இயல்பு என்றெண்ணி காற்றடித்த திசைக்கு மாற்றுத்திசையில் நின்று தனது கண்களைத் துடைத்துக்கொண்டு முனிவரின் கைகளைத் தூக்கிப் பார்ப்போம் என்றேண்ணி முனிவருக்கு முன்னால் வந்து குனிந்துநின்று அவரது கைகளைத் தொட்டுப் பார்த்தான். 

இந்த மனிதனின் சிந்தனையைத் திசை திருப்புவதற்காக ஈர வானம் பலமாக இடியொன்றை மனிதனின் கண் பார்க்கும் தூரத்தில் இறக்கியது, மின்னலொளி கண்களை சற்று இருட்டாக்க, இடியோசை காதைப் பிளக்க மனிதனுக்கு சற்று நேரம் கண்களும் காதுகளிரண்டும் செயலிழந்து போய்த்திரும்பியது. 

இயற்கை அதன் வேலையைச்செய்கிறது என்றுமட்டும் எண்ணிய மனிதன் தான் முனிவரைச் சீண்டியதால்தான் இந்த விளைவு என்பதனைப் புரிந்துகொள்ளாமல் தனது திருவிளையாடல்களைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். ஐம்பூதங்களும் மனிதனை இயற்கைச் சீற்றம் எனும் பெயரால் வெயில், மழை, புயல், பூகம்பம், இடி, மின்னலென மாற்றி மாற்றி தீண்டிக்கொண்டேயிருந்தது. தியான நிலை என்பது தன் உடலை மறக்கும் நிலை, இயற்கையோடு கலக்கும் நிலை என்ற முனிவரின் நிலையை மனிதனும் புரிந்துகொள்ளவேயில்லை. 

இப்போது மனிதன் முனிவரைச் சோதித்துப் பார்க்கிறானா அல்லது முனிவர் மனிதனைச் சோத்தித்துப் பார்க்கிறாரா ? 

மனிதன் தனக்குத்தானே விளைவுகளைத் தெடிக் கொள்கிறானா அல்லது இயற்கை மனிதனைத் தேடிவந்து தண்டிக்கிறதா ? 

ஐந்தோடு ஒன்று ஏழு என்பது பிழை, இது மனிதனின் கணக்கு. 

ஐந்து பூதங்களோடு மனிதன் ஒன்றாய் ஐக்கியாமானால் பிறக்கும் அறிவு ஏழு, இது முனிவர் கணக்கு. 

... மீ.மணிகண்டன் (மணிமீ) 


வெள்ளி, 1 ஜூலை, 2022

அகம் ... மீ.மணிகண்டன்

 வலஞ்சுழி  இணைய தளத்தில் நானெழுதிய 'அகம்' சிறுகதைக்கு முதற்பரிசு. 

வலஞ்சுழி இணையதளத்திற்கு எனது நன்றி மற்றும் கதையை வாசித்துக் கருத்துத்தெரிவித்த அன்பு உள்ளங்கள் யாவர்க்கும் என் நன்றி.

போட்டி அறிவித்த நாள் - April 2022

வெற்றியாளர் அறிவிப்பு நாள் - 26-Jun-2022

சிறுகதையின் தலைப்பு: அகம் 

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

valanchuli . com

அந்த மாமரத்தில் பூக்கள் பூத்த கிளைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தாள். எண்ணச்சொல்லிச் சென்றவன் அவள் கணவன். காலையில் அவன் வெளியே புறப்படும்போது, அவள் தனிமையில் ஏதாவது சிந்தித்துத் தன்னை வருத்திக் கொள்ளக்கூடும் என்று அப்படியொரு பொழுதுபோக்கை அவளுக்குச் சொல்லிச் சென்றான். ஏன் அவள் சிந்தித்து வருந்தவேண்டும்? கடந்த இரண்டு நாட்களாக அவள் எதிர்பார்த்த வீடு அமையவில்லை அவனும் அவளுக்காக எங்கெங்கோ அலைகிறான் ஆனால் கிடைக்கவில்லை. இன்றாவது கிடைத்துவிட்டது என்ற நல்ல செய்தியைக் கொண்டுவருவான் கணவன் என்ற எதிர்பார்ப்போடு இதோ மாம்பூக் கிளைகளை எண்ணிக் கொண்டிருக்கிறாள். வீடு என்பது வெறும் கனவு மட்டுமல்ல அதையும் தாண்டி அவசியம் ஆனது. ஒரு வீட்டில்தான் குடும்பம் நிறைவடைகிறது, தலைமுறை தழைக்கிறது, மழலைகளின் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது, வீடு இல்லையென்றால் குடும்பம் எது? 

இந்தப் பிரபஞ்சம் இயற்கை. இங்கே ஓரறிவு உயிர்கள் தொடங்கி, உயரெண்ணிக்கை அறிவுயிர்கள்வரை எல்லோரும் எதிர்பார்ப்பது அதிகபட்சம் மகிழ்ச்சி என்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். பிற அனைத்தும் 'மகிழ்ச்சி' என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துகொள்கிறது. அவளும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கும் உயிர்களுள் ஒருத்தியாய் இந்த இயற்கையில் இணைந்திருப்பவள். வீடு தேடும் படலம் மட்டும் இல்லாதிருந்திருந்தால் அவள் இந்நேரம் அதிக மகிழ்ச்சியில் இருந்திருப்பாள் பூக்கள் பூத்துக்குலுங்கும் அந்த மாமரத்தைப்போல. ஒவ்வொருநாளும் வீடு தேடிவிட்டு வரும் கணவனிடம் அவள் எதிர்பார்ப்பது ஒற்றை பதில்தான், அது  'கிடைத்துவிட்டது' என்பது, ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்வது எத்தனை கொடுமையானது என்று அவள் இப்போது உணர்கிறாள். தன்னால் இயலவில்லை என்பது அவளுக்கு ஒரு குறையாக இருப்பினும் அந்தக்குறைக்கு இயற்கையும் பொறுப்பு என்று அவள் நம்பினாள். ஏற்கனவே பார்த்துவைத்த வீட்டை அன்று வந்த கடும்புயல் கொண்டு போகுமென்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. அந்தப் புயலில்தான் எத்தனை எத்தனை சேதம்.. அப்பப்பா நினைத்துப் பார்க்கையில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு, ஆடுகள், மாடுகள் என்று எத்தனை உயிரினங்கள்...? எத்தனை மரங்கள்...? மனிதர்களின் சராசரி வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. நினைவுகளின் ஊடே பூக்கிளைகளை எண்ணுவதிலும் அவள் கவனமாக இருந்தாள்.

அகம் ... மீ.மணிகண்டன்

இன்று தன் தொழில் செவ்வனே நிறைவேறியதென்று தன் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஆதவன் புறப்பட்ட காரணத்தால் மேற்கு வானம் சிவப்புடுத்தியிருந்தது. சூரியகாந்திகள் மேற்கில் தன் தலைவனுக்கு விடை கொடுத்துவிட்டுத் தலைவனைப் பிரிந்த சோகத்தில் நின்றன. அலரப் போகும் ஆனந்தத்தில் அரும்பாக அல்லிகள் செழித்து நிமிர்ந்து நின்றன, ஆனால் அவளோ தன் கணவன் இன்னும் திரும்பவில்லையே என்ற கவலை, தன் சிவந்த கண்களில் பளபளக்க, இங்குமங்குமாகத் தலையைத் திருப்பி அவன் வரும் திசைகளை ஆவலோடும், சற்றே படபடப்போடும், கோடிக் கனவுகளோடும் நோக்கினாள்.  பொதுவாக வெளிச்சம் இருக்கும் வேளையிலேயே திரும்புபவன் இன்று இருட்டப் போகும் நேரம் ஆகியும் ஏன் இன்னும் திரும்பவில்லை? என்ற கேள்விக்கொக்கி மனதைத் துளைத்துக்கொண்டிருக்க, அங்கே யாரோ வருவது போல் தெரிகிறதே அது வெறும் தோற்றப்பிழையாக இருந்துவிடாமல் தன் கணவனாக இருக்கவேண்டுமென்று கூர்ந்து கவனித்தாள்... ஏமாற்றமே மிஞ்சியது. பார்த்துப் பார்த்து சோர்வடைந்த கண்கள் சிறிது ஓய்வு கேட்கும் நேரம் அவளுக்குப் பின்புறமாக வந்து நின்று அவளை ஆச்சர்யப்பட வைத்தான் கணவன். அவன் வரவால் அமைதி கொண்டவள், நிம்மதிப் பெருமூச்சாக நாசி விடைக்கக் காற்றை உள்ளிழுத்தாள் பின் வெளியேற்றி நாசியை இயல்பு நிலைக்குத் திருப்பினாள். 'இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா சுவீட்டோடதான் வரணும்' என்று கணவனுக்குக் கட்டளையிடுபவளாக அவள் இல்லை. 'கிடைச்சுதா?' என்பதுதான் அவளின் முதல் வார்த்தையும், ஒரே வார்த்தையும், கேள்வியுமாக இருந்தது. அவன் எந்த ஆரவாரமும் கொள்ளாமல் இல்லை எனும் தோரணையில் தலையை இடம் வலமாகத் திருப்பினான். கணவன் திரும்பவில்லையே என்றிருந்த கவலை நிலைகடந்துபோக இப்பொழுது கணவனைக் காண்கையில் அவளுக்குக் கோபமே மிஞ்சியது, 'இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நமக்காக ஒரு வீடு இல்லையா?', பதில் தரவேண்டிய கட்டாயம் அவனை இப்பொழுது பேச வைத்தது, 'கோபப்படாம நான் சொல்றதக் கொஞ்சம் அமைதியா கேட்பியா?'

'நீ சொல்றதுக்காக நான் பொறுக்க முடியாது... இன்னும் ஒரு நாள்தான் அதுக்குமேல என் கையில எதுவும் இல்ல...'

'இது நல்லா இருக்கே, நானா புயலை வரச்சொன்னேன்? நானா பார்த்து வச்ச வீட்டை துவம்சம் பண்ணிட்டுப் போகச் சொன்னேன்? எதெதுக்குத்தான் நான் பொறுப்பேத்துக்கறது?', என்று சலித்துக்கொண்டான்.

'பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, என் நிலைல இருந்துபார் உனக்குப் புரியும். என்ன செய்யுறது? இயற்கை ஆணை ஒரு மாதிரியும் பெண்ணை வேறமாதிரியுமில்ல படைச்சிருக்கு'. என்று தன்னை நொந்துகொண்டவளின் அருகில் சென்று ஆறுதல் வார்த்தைகள் மொழிந்தான். 

'இப்படி சொன்னா எப்படி... இந்தா மொதல்ல இதைச் சாப்பிடு.. நீ பசியோட இருப்ப', என்று அவளின் பசியாற்ற முனைந்தவன் மீது கோபப்பார்வை ஒன்றைச் செலுத்திவிட்டுத்  தன் தலையைத் திருப்பிக்கொண்டாள்.

‘எப்பவும் சீக்கிரம் வர்ற நான் இன்னிக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதமா வந்தேன்னு நீ கேட்கவே இல்லையே…’

'அதான் வந்துட்டியே... இப்ப நான் கேட்கிறதால ஏதாவது மாறிடப் போகுதா? போ போ... உன் தேவைக்கு நீ எங்க ஊர் சுத்தப் போனியோ? நீ உண்மையாவே வீடு தேடுனியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...'

'பாத்தியா... என்மேலையே உனக்கு சந்தேகமா.. சரி கேளு.. ஒரு வீடு பார்த்தேன் அது இங்க பக்கத்துல இல்ல, சூரியகாந்தித் தோட்டத்துக்கு அந்தப்பக்கம் கொஞ்ச தூரம் போகணும், அதுனாலதான் இவ்வளவு நேரமாச்சு, வீடும் நாம தேடுற மாதிரியான வீடுதான் ஆனாப்பாரு அந்த வீட்டுல நாம எதிர்பார்க்கிற மாதிரி சூழ்நிலை  இல்ல... ' 

இவர்களின் இந்த சலசலப்பைப் புரிந்துகொள்ள மனமில்லாமல் அல்லிகள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. பாதிச் சந்திரன் தடாகத்தில் மிதந்துகொண்டிருந்தது, பனியுடுத்திப் புற்கள் நிமிர்ந்து நின்றது, பாலொளி எங்கும் பரவி இருட்டுக்கு நிலவு நிறம் பூசிக்கொண்டிருந்தது, அவள்  மலர்ந்திருக்கும் அல்லிகளை நோக்கினாள், அந்த அல்லியின் அருகில் அடுத்தநாள் மலரக் காத்திருக்கும் ஒரு புது மொட்டின் மீது தனது பார்வையைப் பதியவைத்து விழித்துக்கொண்டிருந்தாள். அவளை அமைதிப் படுத்தும் முயற்சி முயற்சியாகவே நிற்க அன்று முழுதும் அலைந்த காரணத்தால் அவன் உறங்கிப் போனான். உறங்கிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள், 'எனது கோபம் நியாயமானதுதானே?, நீயும் எனக்காக அலைகிறாய், எனக்கது புரிகிறது, ஆனால் காலத்திடம் அந்தப் புரிதல் இல்லை. எனக்குத் தெரியும் நீ என்மீது கோபம் கொள்ள மாட்டாய், எனது வார்த்தைகளில் வேகம் இருந்தாலும் என் மனதில் உன்னைப் பற்றிய புரிதல் உண்டு என்பது உனக்கும் புரியும்.' விடியும் பொழுது தங்கள் தேவைக்கு ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் உறங்க முன்வந்தாள்.

பின் தூங்கி முன்னெழுந்தவளின் குரல்கேட்டு விழித்துக்கொண்டான், தானே முன்வந்து அவள் பேசியதிலிருந்து அவளின் கோபம் நேற்றே விடைபெற்றுவிட்டதைப் புரிந்துகொண்டு, 'நம்பிக்கையோட இரு இன்னைக்கு கண்டிப்பா வீட்டைக் கண்டுபிடிச்சுட்டு மதியத்துக்குள்ள வறேன்' என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு உற்சாகமாய்ப் புறப்பட்டான்.

நேற்று தென்திசைப் பாதையில் சென்று வந்ததால் இன்று வேறு திசை நாடுவோம் என்று தோன்றவே கிழக்கைத் தேர்வு செய்தான். கீழைத்திசையில் சிறிது தூரம் சென்றான் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தத் தெருவை தூரத்திலிருந்து பார்த்தபொழுது தெருவின் ஓரங்களில் அடசலாக நிறைய மரங்கள் தென்பட்டன 'எப்படி இந்த மரங்கள் புயலுக்குத்தப்பியது?' என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சற்று முன்னோக்கி விரைந்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக செங்கற்கட்டிடங்கள் கண்ணில் பட்டன கட்டிடங்களின் பின்புறமும் மரங்கள்! 'புயலை இந்தத்தெரு புறக்கணித்துவிட்டதோ? இல்லை, புயல் இங்கே வர மறுத்துவிட்டதா? எதுவானால் என்ன நமக்குத்தேவை வீடு' என்று எண்ணிக்கொண்டு கட்டிடங்களில் பார்வையைச் செலுத்தினான். அவனின் உள்ளுணர்வு அந்தத்தெருவில் வீடு கிடைக்குமென்று உறுதியளித்தது. 

அவளிடம் சொல்லிச்சென்றதுபோல மதிய வேளை வீடு திரும்பினான், படபடவெனத் தன் மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினான், அவளுக்கும் ஆனந்தம் மனதில் கரைபுரண்டோடியது. எங்கே காலம் தன் ஆசையைப் பொய்யாக்கி விடுமோ என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தவள் இப்போது உற்சாகமாக உல்லாச ராகம் இசைத்தாள். 'சரி சரி கிளம்பு ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது, போனா வராது', என்று அவளை உடனடியாகக் கிளம்பும்படி வற்புறுத்தினான்.

'சரி எவ்வளவு தூரம் போகணும்?' என்று கேட்டவளுக்கு கீழைத்திசையில் அவன் சென்று வந்த தூரத்தை விளக்கினான், தூரத்தை அறிந்துகொண்டபின் 'இது நாம இப்ப இருக்குற இடத்துக்கு பக்கம் தானே? எப்படி இவ்வளவு நாள் உன் கண்ல படாமல் போச்சு?' 

'அதுதான் எனக்கும் புரியல. பக்கத்துல கிடைக்காதுன்னு எதோ நம்பிக்கைல, நான் இன்னிக்குவரை தேடாமல் இருந்திருக்கேன்', அவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு 'முட்டாள் முட்டாள்' என்று திட்டவேண்டும்போல இருந்தது அவளுக்கு இருந்தாலும் அடுத்த கணம் அவனின் வெகுளித்தனத்தை ரசித்தவளாய், 'அங்க சூழ்நிலை எப்படி இருக்கு?', என்று வினா தொடுத்தாள்.

'நாம எதிர்பார்க்கிற மாதிரிதான்..' என்று மகிழ்ச்சி பொங்கப் பாடலாய்ப் பாடி பதிலளித்தான். 

இருவரும் அவன் பார்த்துவந்த வீட்டை நோக்கிப் பயணம் புறப்பட்டனர், வீட்டை அடைவதற்குச் சற்று முன் அவளை நிற்கச்சொன்னான், 'ஏன்?' என்றாள், காரணத்தைச் சொன்னான், 'நல்லாக் கேட்டுக்க நான் வெளியிலே இருந்து அந்த வீட்டுக்காரன வம்புக்கிழுக்கறேன், அவன் வெளியில வந்ததும் சண்டை போட்டுக்கிட்டே தூரமாப் போயிடுறேன், அவனும் என்னுடன் சண்டைபோட்டு வெல்லும் மும்முரத்தில் என்னுடன் வந்துடுவான். நீ அந்த நேரம் வீட்டுக்கு உள்ள போய் அங்க இருக்குற அவங்களோட முட்டையில ஒண்ணை கீழே தள்ளிவிட்டுட்டு உன் முட்டையை இட்டுட்டு சத்தமில்லாம நம்ம இடத்துக்குப் போயிடு, கொஞ்ச நேரம் நான் அந்த வீட்டுக்காரன சமாளிச்சுட்டு பிறகு நம்ம இடத்துக்குத் திரும்பிடறேன்'. என்று தன் சோடிக் குயிலிடம் திட்டத்தை விளக்கிவிட்டு காக்கையிடம் வம்பிழுக்கப் பறந்தது ஆண்குயில்.

… மீ.மணிகண்டன்

புதன், 22 ஜூன், 2022

அந்த மூன்றாவது பயணி... அமானுஷ்ய சிறுகதை

கதையின் தலைப்பு: அந்த மூன்றாவது பயணி...

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல் ஓரமாக அமர்ந்து குளுகுளு காற்றை சுகித்தவாறே இருட்டில் வேடிக்கை பார்க்க முடியாவிட்டாலும் இருட்டையே பார்த்துக்கொண்டு பழைய படப் பாடல்களை தனக்குமட்டுமே கேட்கும் வகையில் பாடிக்கொண்டிருந்தான். மற்ற இரு பயணிகளும் நல்ல உறக்கத்தில். மணியுர் பேருந்து நிலையம் சென்றடைய இன்னும் மூன்று மணிநேரம் ஆகும் இப்போது மணி இரவு 11:35. கண்டக்டர், தனியே ஒரு இருக்கையில் அமர்ந்து பயணசீட்டு வரவுக் கணக்கைப் பார்த்தவண்ணம், நூறு, ஐம்பது, இருபது, பத்து என ரூபாய்த்தாள்களை அடுக்கிக்கொண்டிருந்தார். டிரைவர், சாலையிலிருந்து பார்வையை நகர்த்தவில்லை பேருந்து 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் மரங்கள், கும் இருட்டு, பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் தவிர நிலவு வெளிச்சம் மட்டுமே அந்த சாலைக்குத் துணையாக இருந்தது. பெருந்தினுள்ளும் ஒன்றிரண்டு விளக்குகள் தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.

அந்த மூன்றாவது பயணி ... மீ.மணிகண்டன்
லேசாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒரு விளக்கின் கீழ் இருக்கை ஒன்றில் அமர்ந்து பணத்தை எண்ணி அடுக்கி முடித்த கண்டக்டர், டிரைவர் அருகில் சென்று  சற்று உரையாடலாம் என்ற எண்ணத்தில் எழுந்து நடந்தார், வழியில், விழித்திருக்கும் நவீனைப் பார்த்து "என்ன சார் தூக்கம் வரலையா?", என்றார்.

"இருட்டு நல்லா இருக்கு சார், காத்து குளுகுளுன்னு இதமா இருக்கு, என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்", என்று பதிலளித்தான் நவீன். சிரித்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர். 

டிரைவருக்கு அருகாமையில் அமர்ந்தார் கண்டக்டர். கண்டக்டர் வந்ததைக் கண்ட டிரைவர், "ஏம்பா மாங்குடில நிப்பாட்டி சாப்பிட்டுட்டு போலாமா? மூணு மணி ஆயிடும் மணியூர் போறதுக்கு அதுவரைக்கும் பசி தாக்குப் பிடிக்க முடியாது." என்றார்.

"ஆமா, நானே கேட்கலாம்னுட்டு தான் இருந்தேன், அப்படியே செய்வோம்" என்றார் கண்டக்டர்.

அது ஒரு சாலையோரத்து இரவு உணவு விடுதி அங்கே வேலை பார்க்கும் சிறுவன் ஒருவன் அந்த விடுதியின் முன்னும், சாலை ஓரமாகவும் நின்றுகொண்டு பேருந்தை கைகாட்டி உணவு விடுதியின் அருகாமையில் நிறுத்தும்படி  சைகை காட்டிக்கொண்டிருந்தான். அந்த வழியே போகும் பேருந்துகளை இதுபோல் கைகாட்டி உணவு விடுதிக்கு அழைப்பது அவர்களின் இயல்பான பழக்கம், காரணம், அந்தச் சாலையில் செல்லும் பேருந்து மற்றும் வெகுதூரப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்களை மட்டும் நம்பியே அந்த உணவு விடுதி இயங்கி வருகிறது. அந்த இடத்திலிருந்து மாங்குடி ஊருக்குள் செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் அடையாளத்திற்கு, அந்த உணவுவிடுதியை, பயணிகள், மாங்குடி உணவுவிடுதி என்றே அழைப்பது வழக்கம். 

சிறுவன் காட்டிய திசையில் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். சிறுவன் பெருந்தினுள் எட்டிப் பார்த்தான், "என்ன சார் பாசெஞ்சர் யாரும் இல்லையா?, ஆளில்லாத பஸ்ஸை நிப்பாட்டினேனான்னு ஓனர் என்னை திட்டப்போறாரு?" என்றான்.

"ஏம்பா, இருக்கவுங்கள பார்த்தா பாசெஞ்சரா தெரியலையா?", என்றார் கண்டக்டர்.

"நாங்க சாப்பிடுறதுக்கு காசு கொடுத்துடுவோம்னு சொல்லு தம்பி, ஓனர் திட்டமாட்டார்," என்று சொல்லிக்கொண்டே எஞ்சினை ஆஃப் செய்தார் டிரைவர்.

விடுதி வாயில் அருகில் இருந்த கேசட் கடையிலிருந்து பழைய பாடல் ரம்யமாக ஒலித்துக்கொண்டிருந்தது.  "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்று T.M.S, வாலியின் வரிகளை உணர்ச்சிப்பூர்வமாக பாடிக்கொண்டிருந்தார்.

நவீன் இன்னும் சன்னலோரப் பார்வையை விலக்கவில்லை. மற்ற இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில். கண்டக்டர் நவீனின் அருகில் சென்றார் ஒருவேளை உறங்கினால் எழுப்பவேண்டாம் விழித்திருந்தால் சாப்பிட அழைக்கலாம் என்ற எண்ணத்தில், சற்று நவீனின் முகத்தை உற்று நோக்கினார். அதே நேரம் டிரைவர் கண்டக்டரிடம் "ஏம்பா சீக்கிரம் எறங்குப்பா பசிக்குது". என்றார். "இதோ வந்துட்டேண்ணே பாசெஞ்சர் யாராவது முழிச்சிருந்தா சாப்பிடுறீங்களான்னு கேட்கலாம்னு வந்தேன்". என்றார் கண்டக்டர். 

"சரி சரி சீக்கிரம் கேளு", என்று சொல்லிவிட்டு "இருக்கது ஒன்னு ரெண்டு டிக்கெட், ஒவ்வொருத்தரையும் பக்கத்துல பொய் கேட்கணுமாக்கும்" என்றார் டிரைவர் தனக்குள்.

நவீன் விழித்திருப்பதை உறுதிசெய்துகொண்ட கண்டக்டர் "சார் சாப்பிட வரலியா?" என்று கேட்க, நவீன் உடன் பதிலளித்தான், "சார் எனக்கு பசி இல்ல நீங்க போயிட்டு வாங்க, T.M.S பாட்டு நல்லா இருக்கு நான் இந்த பாட்ட கேட்டுகிட்டு இங்கே இருக்கேன்" என்றான். "அப்ப சரி, ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்" என்று நவீனிடம் சொல்லிவிட்டு, "அண்ணே வந்துட்டேன்", என்று பேருந்தை விட்டு இறங்கி வேகமாக டிரைவர் அருகில் வந்தார் கன்டக்டர்.

விடுதி வாயில் உட்புறம், கல்லாவில், ஓனர் அமர்ந்திருந்தார், டிரைவரையும் கண்டக்டரையும் பார்த்து "வாங்க வாங்க" என்றார். "உள்ள டேபிள் இருக்கா பார் தம்பி" என்று சிறுவனுக்கு கட்டளை இட்டார் ஓனர். 

"என்ன சார் பாசெஞ்சர் இல்லேன்னா தம்பிய திட்டுவீங்களா?, தம்பிய பயமுறுத்தி வச்சிருக்கீங்களே", என்றார் சிரித்துக்கொண்டே டிரைவர் ஓனரிடம். 

"யாரு... பையன் சொன்னானா? அப்படியெல்லாம் பயமுறுத்த மாட்டோம் சார், அவனா அப்படி நினைச்சுக்கிறான்", என்றார் பதிலுக்கு, சிரித்துக்கொண்டே ஓனர். தொடர்ந்து "போங்க பொய் மொத பசிக்கு என்னவேணும்னு பார்த்து சாப்பிடுங்க" என்றார்.

சிறிது நேரத்தில் பசியாறிய கண்டக்டரும் டிரைவரும் கல்லாவின் அருகில் வந்தனர். ஓனரிடம், "பில் கொடுக்கச் சொன்னா தம்பி உங்கள வந்து பார்க்க சொல்றான்" என்றார் கண்டக்டர். 

"ஆமா சார் உங்ககிட்ட எப்ப நான் பணம் வாங்கியிருக்கேன், நீங்க கிளம்புங்க உங்க டூட்டிய பாருங்க" என்றார் ஓனர்.

"பாசெஞ்சர் இருந்தாலும் பரவால்ல... இன்னிக்கு நம்ம வண்டியில பாசெஞ்சரும் இல்லையே, நீங்க பில்லை  கொடுங்க" என்றார் டிரைவர்.

"அடடா அதல்லாம் கணக்கு இல்ல... நீங்க எப்பவும் நம்ம விருந்தாளிதான், கிளம்புங்க, மீண்டும் சிந்திப்போம்" என்றார் ஓனர். ஓனரின் அன்புக்கு அடிபணிந்த டிரைவரும் கண்டக்டரும் விடைபெற்றுக்கொண்டு தங்களின் பேருந்து நோக்கி நடந்தனர்.

"கடலோரம் வாங்கிய காத்து..." என்று வாலியின் வரிகளை காற்றில் கலந்துகொண்டிருந்தார் T.M.S. 

பேருந்தில் ஏறிய டிரைவர் என்ஜினை ஸ்டார்ட் செய்ய, கண்டக்டர் பின் படிக்கட்டு வழியாக ஏறி எல்லா இருக்கைகளையும் நோட்டம் விட்டார். இன்னும் அந்த இருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், நவீன் விழித்துக்கொண்டுதான் இருந்தான். "என்ன சார், சாப்பிடவும் போகல, இறங்கி யூரின் பாஸ் பண்ணக்கூட போன மாதிரித் தெரியல, உக்காந்த இடத்துல அப்படியே இருக்கீங்க", என்று நவீனிடம் பேச்சைத் தொடர்ந்தார் கண்டக்டர். "நான் கிளம்பும்போதே முட்டை பிரியாணி சாப்பிட்டுத்தான் கிளம்பினேன்" என்றான் நவீன்.

டிரைவர் தலைக்குமேல் இருந்த கண்ணாடியைப் பார்த்தார். தனக்குப் பின்னால், கண்டக்டரும் உறங்கும் மற்ற இரண்டு பயனிகளும் தெரிந்தனர். பேசிக்கொண்டே டிரைவரின் அருகாமையில் இருந்த இருக்கை ஒன்றில் வந்தமர்ந்தார் கண்டக்டர். "யாருகிட்டையா பேசுற? நீயா பேசிக்கிட்டு வர்ற? வேப்பிலை அடிக்கணுமா?" என்று கேட்டுச் சிரித்தார் டிரைவர், "பாசெஞ்சர் கிட்டாதான் வேற யார்கிட்ட", என்று பதிலளித்தார் கண்டக்டர். 

பிறை நிலா வானில், பேருந்து சாலையில். நிலவுக்கு பேருந்து துணை பேருந்திற்கு நிலா துணை எனும் புரிதலில் அந்தச் சாலையின் இருட்டு அமைதியாகக் கடந்துகொண்டிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சம் சாலையில் இருக்கும் குண்டு குழிகளைத் தெளிவாகக்காட்ட டிரைவர் இடது வலது என ஸ்டேரிங்கை லாவகமாகத்திருப்பி  பேருந்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.

மணியூரின் எல்லை ஆரம்பம் என்பதை அந்த இருபதடி உயர வளைவு கம்பீரமாக உணர்த்திக்கொண்டிருந்தது. வளைவைக்கடந்ததும், "ஏம்பா கோயில் சைடா போலாமா ரோடு வேலை முடிஞ்சுடுச்சா, ஏதாவது தெரியுமா?" என்று கண்டக்டரிடம் வரிசையாக கேள்விகளைத் தொடுத்தார் டிரைவர். சற்று நேரம் பதில் இல்லை திரும்பிப் பார்த்தார், உறக்கத்திலிருந்தார் கண்டக்டர். 

மணியூர் பேரூந்துநிலையம். மணி 2:50 அதிகாலை. அந்த இரண்டு உணவு விடுதிகள் மற்றும் அந்த மூன்று பெட்டிக்கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பெட்டிக்கடைகளின் முன் அன்றைய நாளிதழ்களைப் பரப்பி எடுத்து சிறு சிறு கட்டுகளாக அடுக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் அந்தந்தக் கடைகளில் வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது கடை உரிமையாளர்களாகவோ இருக்கக்கூடும். பயணிகள் சிலர் ஆங்காங்கே விழித்துக்கொண்டும் சிலர் தங்களின் சுமைகளில் சாய்ந்து உறங்கிக்கொண்டும், அதிகாலை வரப்போகும் தங்களின் பெருந்திற்காகக் காத்திருந்தனர். நிறுத்தம் பார்த்து பேருந்தை நிறுத்தினார் டிரைவர், கண்டக்டரும் விழித்துக்கொண்டார், "கொஞ்சம் கண் அசந்துட்டேன்" என்றார் டிரைவரிடம். "பரவால்ல பாசெஞ்சரை எழுப்பு மணியூர் வந்துடுச்சு", என்றார் டிரைவர். "ஆமா.." என்று கொட்டாவி விட்டுக்கொண்டே சொல்லிவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த இருவரை நோக்கி நடந்தார் கண்டக்டர். எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு பேருந்தின் எல்லா விளக்குகளையும் பிரகாசிக்கச்செய்தார் டிரைவர். 

"சார் எழுந்திருங்க மணியூர் வந்துடுச்சு" என்ற கண்டக்டரின் உரத்த குரலைக்கேட்டுத் தட்டுத்தடுமாறி விழித்துக்கொண்டனர் உறங்கிய இரு பயணிகளும். பாசெஞ்சர்களைப் பின்தொடர்ந்து பின்புறப்படிக்கட்டில் இறங்கினார் கண்டக்டர்.  அவர்கள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு பேருந்தின் விளக்குகளை நிறுத்திவிட்டு டிரைவர் சீட் பக்கத்துக் கதவைத்திறந்துகொண்டு வெளியில் குதித்தார் டிரைவர். பேருந்தின் பின்புறமாகச் சுற்றி டிரைவர் அருகில் வந்தார் கண்டக்டர். இருவரும் அந்த பெட்டிக்கடை நோக்கி நடந்தனர்.

"அண்ணே, அந்த 12ம் நம்பர் சீட்ல இருந்தவர் எங்க இறங்கினார் ணே... நான் நல்லாத்தூங்கிட்டேன் போல கவனிக்கல", என்று கேட்டார் கண்டக்டர்.

"என்னப்பா சொல்ற... மாங்குடில கெளப்புன வண்டி எங்கயும் நிக்கல... ரெண்டுபேர நீதானே இப்போ இறக்கிவிட்ட" என்றார் டிரைவர்.

"இல்லண்ணே மாங்குடில கூட நாம சாப்பிடுறதுக்கு இறங்கினோம் ஆனா அவர் பசிக்கலன்னு சொல்லிட்டு பஸ்லையே இருந்தாரே... அவரு" என்றார் கண்டக்டர்.

"யோவ்... என்ன கனவா? மாங்குடிக்கு முன்னால அரியானூர்ல இருந்தே ரெண்டு பாசெஞ்சர்தான்.." என்றார் டிரைவர்.

சற்றே அதிர்ந்த கண்டக்டர், திரும்பி பேருந்தை நோக்கி நடந்தார். "எதுக்கு இப்போ பஸ்ஸுக்கு போறே?" என்று கேட்டார் டிரைவர்.

"நில்லுங்கண்ணே, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நான் அவர்கிட்டதான் பேசிக்கிட்டு வந்தேன், வேற சீட்ல படுத்து தூங்குறாரான்னு பார்த்துட்டு வறேன்", என்று விரைந்தார் கண்டக்டர்.

பேருந்தின் பின் படிக்கட்டு வழியே ஏறி சற்று நேரத்தில் முன் படிக்கட்டு வழியே இறங்கினார் கண்டக்டர். 

"என்னாயா... தூங்குறாரா உன் பாசேஞ்சர்?" என்று நையாண்டியாகச் சிரித்தார் டிரைவர்.

சற்றே முகம் வேர்த்திருந்தது கண்டக்டருக்கு. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, "பஸ்ல யாரும் இல்லண்ணே" என்றார் மெதுவாக. சொன்னவர் தொடர்ந்து, "அண்ணே டீ சாப்பிடுவோமோ?" என்றார்.

"ஓ... போலாமே, போய் மொத முகத்த கழுவு தூக்கம் போகும்." என்றார் டிரைவர். அந்தச் சிறிய உணவு விடுதி நோக்கி நடையைத்திருப்பினர் கண்டக்டரும் டிரைவரும். டீக்கடையில் இருந்த ஆடியோ செட் வழியாக T.M.S.

"கண்ணே கனியே முத்தே மணியே... என்று கண்ணதாசன் வரிகளை ரகசிய போலீஸ் 115க்காக அழைத்துக்கொண்டிருந்தார்."

"தலைவா, சூடா ஒரு மால்டோவா, ஒரு டீ" என்றார் டிரைவர் கடைக்காரிடம். "உள்ளே உட்காருங்க சார், கொண்டுவந்து தாரேன்" என்று உள்ளே இருக்கை காட்டி இருவரையும் இருக்கச்சொன்னார் கடைக்காரர். டிரைவர் ஒரு இருக்கையில் அமர்ந்தார். "அண்ணே மொகத்தைக் கழுவிட்டு வந்துடறேன்", என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு, கடைக்காரரிடம், "முகங்கழுவ தண்ணி தறீங்களா", என்று கேட்டார் கண்டக்டர். 

"இதோ டாப் இருக்கு, இங்க கழுவிக்குங்க", என்று கடையின் வெளிப்புறத்தில் தண்ணீர் வரும் குழாய் இருந்த திசை நோக்கிக் கைகாட்டினார் கடைக்காரர்.

முகத்தைக் கழுவும் அதேநேரம் கடைக்கிறார் அங்கு யாருடனோ பேசிக்கொண்டிருந்தது கண்டக்டரின் காதுகளில் சுத்தமாக ஒலித்தது.

"என்ன தலைவா, எவ்வளவு புதுப் பாட்டு வந்திருக்கு, இன்னும் நீ T.M.S. பாட்டையே மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு இருக்க", என்றவரின் கேள்விக்கு பதிலளித்தார் கடைக்காரர், "நான் இங்க பாட்டு போடுறதே என் பையனுக்காகத்தான், சுனாமி அன்னிக்கு என் பையன்தான் கடைல இருந்தான், கடைய சாத்திட்டு வீட்டுக்கு வந்துடுவான்னு நினைச்சோம், அடுத்தநாள் காலைல தண்ணி வடியுற வரைக்கும் அவன் வீட்டுக்கு வரல, சரி கடைல எங்கயாவது இருப்பான்னு வந்து பார்த்தோம் ஆனா கடை திறந்திருந்துச்சு, மத்த கடைங்க மாதிரியே நம்ம கடையிலையும் பொருளெல்லாம் தண்ணில அடிச்சுக்கிட்டு போயிடுச்சு, பையன தேட ஆரம்பிச்சோம் ஒரு நாள் ரெண்டுநாள் போயி வாரம் ஆச்சு, மாதம் ஆச்சு, இப்போ வருஷங்கள் போயிடுச்சு. இருந்தாலும் T.M.S. பாட்ட கேட்டு எம்புள்ள திரும்பி வருவான்னு மனசு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கு".

அடுத்த கேள்வியை தொடுத்தார் அந்த நபர், "ஓ... உங்க பையனுக்கு பழைய பாட்டுதான் பிடிக்குமா?"

"அவன் மாடர்னா இருக்கணும்னு 'நவீன்'னு பேர் வச்சேன், ஆனா அவனுக்கு ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரெண்டு விஷயம்தான், ஒன்னு T.M.S. பாட்டு இன்னொன்னு முட்டை பிரியாணி". என்ற கடைக்காரரின் வார்த்தைகளை உள்வாங்கிய கண்டக்டருக்கு சடக்கென பேருந்தில் நடந்த உரையாடல்கள் மின்னலாய் வந்துபோனது.

முகத்தைத் துடைத்துக்கொண்டு டிரைவரை நோக்கி வேகமாக விரைந்தார் கண்டக்டர். கடைக்காரர் மால்டோவையும் டீயையும் டிரைவரின் முன், மேசைமீது வைத்தார். டிரைவரின் அருகில் வந்து அமர்ந்த கண்டக்டர், "அண்ணே விடிஞ்சதும் கெளம்புறதுக்கு முன்னாடி எனக்கு வேப்பிலை அடிக்கணும், இங்க பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்கண்ணே", என்றார் முகத்தில் முத்து முத்தாய் வெளியேறிய வியர்வையைத் துடைத்துக்கொன்டே.

மீ.மணிகண்டன்


பிரபலமான இடுகைகள்