வியாழன், 18 டிசம்பர், 2014

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும்

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும் - M.Manikandan

அருணமலை ஈசனோடு ஆறுபடை நாயகனும்
அருளுவக்க‌ ஆலயமாய் ஆக்கிவைத்த‌ கோட்டையிலே
தருணமிதில் நாமிருந்து தந்தபுகழ் ஏற்றுவதாய்
கருணைமனப் பூர்விகரைக் கைபொருத்திப் போற்றிடுவோம் 1

காடுதனைச் சீர்படுத்திக் கட்டிடக்கலை புகுத்தி
நாடுதனில் கோட்டையென்றே நலமாய்ப் பெயர்படுத்தி
பாடுபட்டு நம்முன்னோர் பகட்டாய் ஆக்கிவைத்த
வீடுதனைச் சந்ததிக்காய் விட்டுக் கொடுத்தாரே     2

கடலரித்துப் போனதுவாம் காவிரிப்பூம் பட்டினத்தில்
உடன‌ழைத்த மன்னருக்காய் ஒன்றிணைந்தே பாண்டிமண்ணில்
மடையுடைத்து மறுபடிநீர் மனையகத்தே புகுந்திடாது
வடிவமைத்தார் படியடுக்கி வாசலது உயரமதில்     3

பட்டண‌‌ வாசலெல்லாம் பதமாய்ப் பதிந்தசிலை
மட்டும்போ தாதென்றே மரத்தினில் சிற்பக்கலை
சிட்டாய் வரலாற்றைச் செதுக்கிய கதவுநிலை
எட்டாக் கற்பனைதான் இந்நாள் ந‌மதுநிலை     4

சனங்கள் வந்தமரச் சதுரச் சமுக்காளமிட்டு
தனங்கள் பெருக்கிவரத் தானங்கள் பூசையிட்டு
தினங்கூடி வாழுதற்கும் திருமணங்கள் செய்தற்குமாய்
மனங்கூடித் திட்டமிட்ட மகத்துவமே பேரில்லம்    5

மொட்டுடன் இலைகொட்டும் முற்றம் வளவென்றும்
இட்டொரு அடுப்பிருக்க இரண்டாங் கட்டிருக்கும்
கட்டிட நுணுக்கமதை கற்றோர் வகுத்தவித‌ம்
கட்டுகள் மூன்றோடே கணக்காய் நான்கிருக்கும்     6

பட்டாலை பத்தி,சடப் பரப்பம்பாய் விரித்திருக்கும்
பட்டியக்கல் நெடுவாசல் பாதிச்சுவர் பளிங்கிருக்கும்
முட்டைப் பூச்சுடனே முழுச்சுவரும் பூசிரிக்கும்
கட்டிய களஞ்சியங்கள் கொட்டிய நெல்பெருக்கும்     7

"எப்பத்தான் வருவாக‌ எம் ஐயா கடல்தாண்டி"
இப்படியாய் மனமேங்க‌ இருப்பாக வரம்வேண்டி
அப்பத்தா ஆயாக்கள் அகத்தே செய்ததவம்
அப்பப்பா அடையாளம் அப்பாவித் தூண்களெலாம்     8

வீதி இரண்டிணைக்கும் விதமாய் அமைந்திருக்கும்
ஆதி நகரத்தார் ஆக்கிய இல்லங்கள்
மேதினி அதிசயிக்க மேலாய்ச் சிறக்க‌ட்டும்
சோதிச் சிவனருளால் சுகமே பெருக்கட்டும்     9

அந்திப் பொழுதெல்லாம் அடுத்தோர் விடியலுக்கே
அந்தப் பழஞ்சொத்தும் ஆக்கிடப் புதுமைக்கே
சிந்தனை தவறவிட்டு சேதார மாக்கவேண்டாம்
முந்திச் செயல்பட்டு முகப்பில்லம் காத்திடுவோம்     10

உதிரம் தந்தசுவர் உதிரவும் விடலாமொ ?
புதினம் மாற்றமென்றே புகழழித் திடலாமோ ?
அதிகம் சொல்லவில்லை அறிந்தது கொஞ்ச‌மதை
பதிகம் எழுதிவந்தேன் பழையது நிலைக்கட்டுமே.        


ஆக்கம்: கல்லல். மீ.மணிகண்டன்

4 கருத்துகள்:

  1. கண்டிப்பாக ஒவ்வொரு நகரத்தாரும் பார்த்து படிக்க வேண்டிய கவிதை என்று சொல்வதை விட பாடம் என்றே சொல்வேன்.. வாழ்த்துக்கள் மணி ... வாழ்க வளமுடன் ...

    பதிலளிநீக்கு
  2. நகரத்தார் வீடுகள், நமது தமிழகக் கட்டிடக் கலையின் பிரதிநிதிகளாகும். பர்மா தேக்கு என்ற மரவகையைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நகரத்தார்களே. அற்புதமான கலை வேலைப்பாடுகளைக் கண்டால் "மரத்திலே கலைவண்ணம் கண்டான்" என்று பாடத்தோன்றும். குறிப்பாக, பொருளாதாரத் தேவை இல்லாத வாரிசுகள், தத்தம் முன்னோரின் மரபு வீடுகளைப் பாதுகாத்து வைத்தால் அதுவே மிகப்பெரிய சமூகத் தொண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. தாங்கள் சொல்வது போல் சில வீடுகள் பராமரிக்கப்படுகின்றன! வாசிப்பில் மகிழ்ந்தேன்! நன்றி!

      நீக்கு