வியாழன், 1 மார்ச், 2018

கவிதையில் சித்திர விசித்திரங்கள்

எனது சித்திரக் கவிதைகள் இடம்பெற்ற புத்தகம். 'கவிதையில் சித்திர விசித்திரங்கள்'. திரு இலந்தை ஐயா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018






உலகமுதல் சித்திரக் கவியரங்காம் 
   உன்னதமாய்ச் சந்தவ சந்தத்திலே 
அலைகடலில் முத்தா டியோரருகேக் 
   கரையோரம் நீந்தியோன் பாக்களிங்கே... 


1. நாற்கால் கோபுர பந்தம்
வஞ்சித்துறை
உந்தனருள்தா மைந்தனருந்த   
சந்தவசந்த நந்தவனத்தே 
பந்தமிணைத்தே செந்தமிழாற்ற
சிந்தனையேற்ற வந்தனைகந்தா 


2. கோமூத்திரி
வண்ணத்துப்பூச்சி நினைப்பு
கிண்ணத்துப்பச்சை நிறப்பூ

3. சிவலிங்க பந்தம்

பல விகற்ப இன்னிசை வெண்பா

கருவுமாகி மெய்யுமாகு கோலங் களேயறவு     
ணர்த்தவ மென்னைநா டீமா வினைய
கலவொ ருவரமே கொண்டேன்பா லன்சீலன்    
வேலவனை நான்வணங் கி

விரிவாக:
கருவாகி உடலாகும் கோலங்கள் அற உணரும் தவம் என்னை நாடியே மாவினை அகல ஒரு வரமே கொண்டேன் பாலன் சீலன் வேலவனை நான் வணங்கி


... மீ.மணிகண்டன் 
Feb-28-2018

செவ்வாய், 9 ஜூன், 2015

வாழ்க வளமுடன்

வயதொன்று கூட்டியது
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு

பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்

பொறுத்தாளும் புத்திகொண்டு  
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்

வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர

குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி


மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்

புதன், 6 மே, 2015

ஆழியிலே ... M.Manikandan

ஆழியிலே முத்தெடுக்க
  ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
  அனுதினமும் உருக்குலைந்தேன்
 நாழிகைகள் நாட்களாக
  நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
  நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை 
  நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
  நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
  கவலைதனை மறந்திடவோ 
கார்திகேயன் அருளையெண்ணி
   காலமிதைக் கடந்திடவோ

--மீ.மணிகண்டன்

06-May-15

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அவர்களுக்கும் காதல் ... M.Manikandan

பூப்பாதக் கொலுசின்
மணியாக வில்லையாம்
கரைந்து போனது
புல் நுனிப் பனித்துளிகள்
*
அடர் கூந்தலுடன்
நட்பு பேண
விழுது வளர்த்தது ஆலம்
*
அந்திப் பூ
செவ்வந்தியானது
அவளுதட்டு முத்தத்தால்
*
அவளின் கரம்பட்ட
அரளிக்கும் காதல்
உள்ளங்கை ரேகை போல
வேர்கள்
*
குடந்தாங்கும்
இடை தாவ முடியாமல்
கொவ்வை கோபத்தைக்
கொப்பளித்தது கனியாய்
*

By M.Manikandan
07-Apr-15

செவ்வாய், 10 மார்ச், 2015

மனித மந்தையில் தொலைந்த மந்திகள் ... M.Manikandan

அந்த மூவரையும்
காணவில்லையே

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள் விலகுகின்றன

மொழிச் சுதந்திரம்
முதிர்ந்து விட்டதாம்
மூச்சிரைக்க முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின் பரிணாமங்கள்
முளைக்கட்டுக் கூடங்களிலேயே

கேள்வி ஞானம்
கிளைத்து விட்டதாம்
சேர்க்கை சரிதங்கள்
செதாரமறக் கேட்டு ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச் சாலையிலேயே

வயது முதிர்ந்ததோ
வறுமை முறித்ததோ 
அழத் தோன்றுகிறது 
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன் 

by M.Manikandan

11-Mar-15

வியாழன், 5 மார்ச், 2015

வான் காணாப் பிறை ... M.Manikandan

உறையும் பனிக்குளிரில் 
ஓடாமல் நான் குளிக்க 
ஒருபானைத் தண்ணீரை  
அடுப்பேற்ற வேண்டாம் 

சிக்குண்ட தலைமுடிக்கு  
நல்லெண்ணெய் வார்த்துபின்னே 
சீகர்க்காய் தேய்த்துமே 
சீர் படுத்திட வேண்டாம் 

சீப்புக் கொண்டு தலை வாரி 
ரெட்டைப் பின்னல் ரிப்பனிட்டு 
சிங்காரம் செய்துமே 
சிரமங்கள் படவேண்டாம் 

உடை தேடி எனக்குடுத்தி 
ஒழுங்காகப் பையடுக்கி 
பள்ளிக்கூடம் செல்வதற்குப்
பாதி வழி வரவேண்டாம் 

கறுப்புப் பொட்டுவைத்தும் 
கற்பூரம் சுற்றி வைத்தும் 
கண்ணேறு கழித்து நீ 
கவலைகள் படவேண்டாம் 

காரத் துவையலோடு 
கறி சமைத்துச் சோறாக்கி 
உடல் வருத்தி நீ எனக்கு 
ஒரு வாய் ஊட்டிடவும் வேண்டாம் 

ஏங்கி நான் அழுகும் 
இன்னல் பொழுதுகளில் 
அருகே நீ இருந்தால் 
அது போதும் ஆறுதலாய் 

அம்மா நீ யாரோ ...... ?


by M.Manikandan
05-May-15

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உறங்கும் சுவைக்கட்டி ... M.Manikandan


சிந்தனையும் மொழியும்
கலவிக்க
எண்ணத்தில் கருவானவள் நான் !

கருவுற்ற சிறு பொழுதுகளில்
கற்பனையால் வளர்க்கப்படும்
சிசு நான் !

எண்ணம் புடைக்க வளர்ந்து
கை விரல் மருத்துவத்தில்
மைக்கருவி ஆயுதத்தால்
பிரசவிக்கப்பட்டு
காகிதத் தொட்டிலில்
தவழ விடப்பட்டது என் பிறப்பு !

அங்கமெங்கும் அடுக்கப்பட்ட
அலங்கார வார்த்தைகளின்
அணிவகுப்பு என் அழகு !

இலக்கணத் தெளிவுகொண்டு
எல்லோரையும் வியக்க வைக்கும்
அறிவு எனது !

எதுகை மோனையோடு
யாப்பு பூசிய என்னை
எடுத்துக் கொஞ்சுபவருக்கு
என்னால் நிழல் தர இயலும் !

இங்கே என்னைப்போல்
நாகரீகம், பொதுவுடைமை
அன்பு, அறிவு,
ஒழுக்கம், உயர்வு என
இன்னும் இன்னும் எத்தனையோ
எங்கள் தோழமைகள் !

எம்மைப் பிரசிவக்க
மும்முரமாக இயங்குவோர்
ஏனோ எடுத்துக் கொஞ்ச
முன் வருவதில்லை.

இப்படித்தான்
பெருக்கிக் கிடக்கிறோம்
எழுதப்பட்ட அனாதைகளாய் !

By M.Manikandan
28-Feb-15

பிரபலமான இடுகைகள்