வியாழன், 1 ஜனவரி, 2015

கற்பக விநாயகர் ... M.Manikandan

Karpaga Vinayagar Plllaiyarpatti


இரு விகற்ப நேரிசை வெண்பா

வடக்கினைப் பார்த்திருந் தேவர மீவார்
சுடர்மிகு வாழ்வினை நன்றே - குடவரைக்
கோவிலில் கற்பகப் பட்டியில் நம்குலக்    
கோவவர் நற்பிள்ளை யார் 

வடக்கினைப் பார்த்திருந் தேவரும் பக்தர்க்  
குடனருள் வார்த்திடு வார்பார் – குடவரைக்
கோவிலின் நாயகர் கற்பகப் பட்டியின்
கோவெனும் நம்பிள்ளை யார்

by M.Manikandan

நல்வரவு 2015 ... M.Manikandan

இரு விகற்ப நேரிசை வெண்பா

பல்வளம் வேண்டிடும் மானிட ருய்திட
நெல்நிலம் இல்லம் வசதியுடன் – நல்லொளி
மாதவம் பேறெனக் கூறிட வந்திடு
மேதகு வாங்கிலவாண் டே

பம்பரமாய்ச் சுற்றிநி தம்பலர் நொந்திட
மும்முரமா யீட்டும் பெரும்பணம் – நிம்மதிக்கு
சாதக மாகா தெனுமறி வூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே

மூத்தோர் மதியிற் சிறந்தோர்க் குநெல்பல 
பூத்த நிலத்திலு ரிஞ்சிட - மீத்தேனை 
பாதக மாமென புத்தியி லூட்டிடு
மேதகு வாங்கிலவாண் டே 


by M.Manikandan

செவ்வாய், 30 டிசம்பர், 2014

வருக இரண்டாயிரத்துப் பதினைந்து ... M.Manikandan

ஏறுமுகம் கூட்டிவந்து காடுகள் சேர்ந்துயர
ஆறுகுளம் ஏரிநிறை கார்பொழிந்து - சோறுதரும்
மண்வளர்க்க மானுடம் தீட்டிப் பலப்பலவாய்
நன்மைதரட் டும்பதி னைந்து 

*** பல விகற்ப இன்னிசை வெண்பா
*** மீ.மணிகண்டன்  

வாழ்க வளமுடன் 


ஞாயிறு, 28 டிசம்பர், 2014

புறம் பேசும் அகம் பாவம் ... M.Manikandan

சிரிக்காத சிலையொன்றில்
  செதுக்கியவர் குறைகாண்பார்
பழுக்காத காயொன்றில்
  பறித்தவரின் பிழைகாண்பார்

உயராத பயிரொன்றால்
  உழுதவரைப் பழிசொல்வார்
இனிக்காத படைப்பொன்றை
  எழுதியவர் தவறென்பார்

ஒருகல்லும் பிடியாமல்
  ஓங்கவில்லை சுவரென்பார்
மருந்தொன்றும் காணாமல்
  மாறாத பிணியென்பார்.

சலிக்காமல் புறம்பேசி
  சருகாலே சரந்தொடுப்பார்
வலிக்காத நோயதனை
  வருந்தாமல் உட்கொள்வார்.

உடன்பெருகும் நாவார்த்தை
  உவர்ப்பில்லை உமிழுவதால்
கடவுள்தான் கருச்சிதையும்
  கவலையென்ன அவர்க்கதனால்.

by M.Manikandan

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நாளை அது இனிப்பு ... M.Manikandan

இன்றைக்குப் போதுமென
இன்னுமுள்ள மீதமதை
நாளைக்காய் வேண்டுமென
நானிலத்தார் இருத்துகிறார்   

இன்றைக்கே இல்லாதோர்
இன்னுமிங்கு இருக்கின்றார்
நாளையது வரட்டுமென
நாளதனைப் பார்த்திருப்பார்

இருவருக்கும் நாளையென்று
இருக்கிறது நம்பிக்கை
இதுமட்டும் இல்லையெனில்
இனிப்பேது இருப்பதனில்

by M.Manikandan

புதன், 24 டிசம்பர், 2014

கோணல் வரிசை ... M.Manikandan

வானை வாசலென்றும்
வையத்தை வானமென்றும் ...

குப்புறப் படுத்து
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
கோணல் வரிசைப் புள்ளிகளை

எதைத் தொட்டேன்
எதை விட்டேன்
எண்ணிக்கை விட்டுப்போக
இன்னும் இன்னும் ...
எத்தனையோ முறை ...

வீதி பெருக்கி
வெண்ணொளி தெளித்தும்
தொகுத்த கணக்கு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
மூடிய திரைக்குள்
முடித்திடும் முயற்ச்சியில்.

திரை விலகும்
திரும்பவும் படரும்
திருத்தாத வரிசை

கள்ளக் கணக்கென்று
கடிந்துகொண்டுமிருக்கும்
கருவரியாத மாயை
மீண்டும்
குப்புறப் படுத்துக் கொண்டு !


by M.Manikandan

வியாழன், 18 டிசம்பர், 2014

மறந்து போனது மலராக

மறந்து போனது மலராக

மதிவளர்க்கும் என்றெண்ணி
மண்டையில் ஏற்றி  
அதிவிரைவில் அழியுமுன்னே
தாளில் மாற்றி
மதிப்பெண்கள் பெற்றகணம்   
மறையும் கூற்றை  
விதிவெல்லும் செயலேன்றோர்
விளக்கம் சொல்வார்.

பலர்கூட பாராட்டும்
பதக்கம் வாங்கி
சிந்தனையைச் சிதரவிட்டுச்
சிறப்பென் றேங்கி
முந்தானை, முறுக்குமீசை
முனகல் பேசி
விந்தழியும் காமமதில்
விழுந்தே நோவார்  

உணவிருந்தும் உடையிருந்தும்
உறக்கம் போக்கி
பணம்பெருக்கும் தந்திரத்தை 
பழக்கம் ஆக்கி
கணக்கின்றிக் காகிதத்தைக்
கட்டிச் சேர்த்து
பிணக்கழுகுப் பொறித்தேடிப்
பிணைத்தும் கொள்வார்  

உலகமிதை அமுதமென
ஊன்றிப் பேசி
கலகநிறைக் காட்சியிதை
களியென் றாடி  
பலமிதன்று படுத்துவிட  
பயந்தே ஓடி
உலர்ந்து போய் உருக்குலைந்து
உதிர்ந்தே போவார்  


Written by M.Manikandan

பிரபலமான இடுகைகள்